Advertisement

கம் கணபதயே நம:

சந்திப்பிழை

அத்தியாயம் 1

“வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா மேடம்?”, என்று அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் ஆள் கேட்கவும், அவளது வீட்டினுள் ஒரு முறை சென்று பார்த்தாள், நறுமுகை.

வெளியே வந்து, “இல்ல, நீங்க கிளம்பலாம், சாவி கைல வச்சுக்கோங்க, நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா அதே மாதிரி அரேன்ஜ் பண்ணிடுங்க, அப்பா அங்க கீழ் வீட்லதான் இருக்கார், ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க”, என்றாள்.

“ஓகே மேம்”, என்று விட்டு டைனிங் டேபிள், இருக்கைகள், சோஃபா,  மற்றும் மரச்சாமான்கள் அனைத்தையும் வண்டியின் ஓட்டத்தின் போது உடையாமல் இருக்க நேர்த்தியாக வண்டியின் சட்டத்தோடு கட்டி வைத்து இருந்தனர். ஒரு முறை அந்த ட்ரக்-கினைப் பார்த்தவள் பொருட்கள் சேதமுற வாய்ப்பில்லை என்று மனம் திருப்தியுற செல்லலாம் என்பதுபோல அவர்களைப் பார்த்து தலையசைக்க, மூன்று பேர் கொண்ட அந்த பேக்கர்ஸ் & மூவர்ஸ் குழுவோடு அந்த பெரிய ட்ரக் கிளம்பியது.

மெல்ல நடந்து காலியாக இருந்த வீட்டின் உள்ளே வந்தாள், இவளது சம்பாத்தியத்தில் மட்டுமாக வாங்கிய வீடு. முதல் முறையாக இந்த வீட்டைப் பார்த்ததும் விலையை பற்றிக் கூட பேசி முடிவு செய்யாமல், நிச்சயமாக வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தது நினைவு வந்தது. அது மட்டுமா? இன்னும் பசுமையான நினைவுகள் இந்த வீட்டில் ஏராளம். எண்ணி நான்கரை வருடத்தில் வீட்டின் மொத்த கடனையும் அடைத்து சொந்தம் ஆக்கிக் கொண்ட அவளது வசிப்பிடம்.

வழுவழுவென இருந்த சுவற்றைத் தொட்டுப் பார்த்தபடியே, ‘ஹ்ம்ம். இந்த உள்வேலைப்பாடெல்லாம் சசியினுடையது, ரசனையாக பார்த்துப் பார்த்து சில பல இன்டீரியர் டெக்கரேடர்களை அழைத்து இன்ச் இஞ்சாக இழைத்த ஹால், பால்ஸ் சீலிங், மாடுலர் கிச்சன், படுக்கையறை ஒரு மினி தேவலோகம் போல ஒரு ஒயர் கூட வெளியே தெரியாதவாறு சுவரோடு நேர்த்தியாக பொருந்தியிருந்த ஹோம் தியேட்டர் அறைகலன்கள், அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட வீட்டின் விலையில் பாதி செலவானது’.

‘சசிதான் கொடுத்தான், வேண்டாம் என்றபோது இது அவனது வசதிக்கு செய்வது அதனால் அவன்தான் கொடுக்க வேண்டும் என்று பெருந்தன்மையாக கூறினான். அப்போது பெருந்தன்மையாகத்தான் தோன்றியது, இப்போது எல்லாவற்றுக்கும் வாடகை கொடுத்திருக்கிறான், என்றேனும் பார்த்தால் மொத்தமாக அவன் முகத்தில் விசிறியடிக்க வேண்டும், நல்ல வேளையாக அவன் மனக்கணக்கு புரியாது போனாலும்,  அவனின் செலவுக் கணக்கு தெரியும்’, விரக்தியாக சிரித்தவள், தொடர்ந்து ‘இதைத்தான் தந்தை விற்றுவிட சொல்கிறார். இந்த வீட்டை விற்றுவிட்டால் இவளது நிலை மாறுமாம், அம்மாவின் பேதைமை’.

‘நான் மாறினால் அல்லவா என் நிலை மாறும்? செங்கல்லும், சிமெண்டும் பூசி கட்டிய இந்த கட்டடம் என் தலையெழுத்தை மாற்றி விடுமா என்ன? இந்த பிரதீப் பெற்றவர்களுக்கும் மேல். மொத்தமாக இந்தியாவை விட்டு வந்துவிடு. ஆஸ்திரேலியாவிலேயே வேலை வாங்கித்தருகிறேன், நிரந்தரமாக இங்கே இருந்துவிடலாம் என்கிறான். நவநீத் கருத்தும் அஃதே, ஆனால் என்ன நவநீத் இருப்பது கனடாவில், அங்கே அழைக்கிறான்’.

‘ஆண்கள்தான் காதலுக்கு நினைவுச் சின்னம் வைக்க வேண்டுமா? இது இந்த நறுமுகையின் காதல் சின்னம், ஆனால் என்ன, என் காதல்தான் பொய்த்துப்போனது. இல்லை இல்லை காதலன் பொய்த்துப்போனான், ஹ்ம். எப்படியோ போகட்டும் எனக்கு என் வித்யுத் இருக்கிறான்’, என்ற பெருமூச்சு அவளிடம் எழுந்தது.

படுக்கையறைக்கு சென்று சுற்றி பார்த்தவள், வார்ட் ரோப் திறந்தாள். துணிகள் ஏதுமின்றி காலியாக இருந்தது, எதிரில் மார்கரில் வரையப்பட்ட ஹார்ட்-டும், அதனுள் எழுதியிருந்த  ‘LUV IV’, போட்டு பற்களை காண்பிக்கும் ஒரு பொம்மையும் பளிச்சென தெரிந்தது. இது அவன் வரைந்தது.

ஒரு பிறந்தநாளின்போது அலமாரியில் ஹாங்கரில் தொங்கி கொண்டிருந்த அனைத்து உடைகளையும் மறைத்து வைத்து, வார்டு ரோப் திறந்ததும் அவள் கண் பார்வையில் படும்படி இதய சின்னம் வரைந்து அதில் LUV IV வரைந்திருந்தான். குளித்து விட்டுவந்து பாத் ரோபுடன் அலமாரி திறக்க, பளிச்சென்ற ஃப்ளோரோசென்ட்  சிகப்பில் சசி வரைந்து வைத்திருந்ததைப் பார்த்து திருதிருவென முழிக்க, அவளை பின்னாலிருந்து அணைத்து, “ஸர்ப்ரைஸ்”, என்று விதவிதமான ஆடைகளாக பரிசளித்தது, அதன் பின் கேண்டில் லைட் டின்னர், மறக்க முடியாத அன்றைய இரவு, அதன் பின் தொடர்ந்த அந்த நாட்கள்..  பழைய நினைவுகளின் தாக்கத்தை தாங்க முடியாமல் நறுமுகை சிறிது நேரம் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டாள். இப்படி இருந்தவன்தான் என்ன தைரியம் இருந்தால் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பான்?

‘சமூகத்தையும் பெற்றவர்களையும் பொருட்டாக எண்ணாததன் விளைவு, அவனது பேச்சு’, என்று நினைத்ததும் மூடியிருந்த கண்களில் நீர் திரையிட ஆரம்பித்தது. சீ.. ச்சீ.. அவன் பேசியதற்காக அழுவதா? அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து? தன்னைத் தானே திட்டிக் கொண்ட நறுமுகை, பின் ஒருவாறாக மனதை சமன் செய்து, கைப்பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்தி வீட்டினைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள். அது வரிசையாக டூயூப்லக்ஸ் வீடுகள் அமைந்த காலனி. (gated community)

போன் அடித்தது, விரல் அனிச்சையாக தொடுதிரையின் பச்சையை அமுக்க, “அம்மா கிளம்பியாச்சா?”, மகன் வித்யுத்தின் குரல் மத்தாப்பாய் சிதற, நறுமுகையின் முகம் தானாகவே புன்னகை பூசியது.

“ஆமாடா, கிளம்பிட்டேன், காலைல வந்துடுவேன், பாட்டி என்ன பண்றாங்க?”

“மதிம்மா தூங்கிட்டு இருக்காங்க, ரங்கப்பா கிட்ட தரட்டா?”,

“யா, கொடு கண்ணா”, என்றதும் பேசி கைமாறியது தெரிந்தது.

“சொல்லு வல்லி, வீட்டை காலி பண்ணிட்டயா?”, அப்பா.

“ம்ம்.”

“விளம்பரம் கொடுத்துட்டியா?”

“இல்லப்பா, இங்க பக்கத்து வீட்டுக்காரங்க பொண்ணு கல்யாணம் அடுத்த மாசம் வச்சிருக்காங்க, அதுக்கு நம்ம வீட்டை யூஸ் பண்ணிக்கறேன்னு சொன்னாங்க, மாஸ்டர் பெட் ரூம் மட்டும் லாக் பண்ணிட்டு வர்றேன், அவங்களே கார்ப்பொரேட் கெஸ்ட் ஹௌஸா வாடகைக்கு இல்லன்னா லீஸ்க்கு ஏற்பாடு பண்றதா சொன்னாங்கப்பா”

“இனிமே அங்க போகப் போறதில்லைங்கும் போது அந்த வீடு எதுக்கும்மா?”

“…………”

” சரி பாத்து பத்தரமா வா, கார்ல வர்ற, யார் லிஃப்ட் கேட்டாலும் நிறுத்தாம வா, கால் ட்ரைவர் வச்சுக்கன்னு  சொன்னாலும் கேக்கமாட்டேங்கிற”

“நா பத்தரமா வந்துடுவேன்ப்பா, அம்மாக்கு மெடிசன் கொடுத்துடீங்க போல? நேரமே தூங்கிட்டாங்க”

“ஆமா, வலி இருந்ததுன்னு சொன்னா, அதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே மாத்திரை குடுத்து படுக்க வச்சிட்டேன்”

“ம்ம் சரிப்பா, அப்பறம் இங்க இருந்த திங்ஸ் எல்லாத்தையும் பேக்கர்ஸ் எடுத்திட்டு வருவாங்க, விடிகாலைல வந்துடுவாங்க, நான் பெருளை செக் பண்ணிட்டு அவங்களுக்கு செட்டில் பண்றதா சொல்லி இருக்கேன், மாடி சாவி அவங்க கிட்ட கொடுத்திருக்கேன், அவங்களே அரேன்ஜ் பண்ணிடுவாங்க, நீங்க முழிச்சிட்டு இருக்க வேணாம்”

“ம். சரி வல்லி நேர்ல பேசிக்கலாம் வா”, என்று தொடர்பை துண்டித்தார் ரங்கப்பா என்று வித்யுத் அழைக்கும் ரங்கேஸ்வரன், நகைமுகைவல்லியின் (நறுமுகை) அப்பா, மதிமா என்று அழைக்கப்பெறுபவர், மதிநாயகி.. ரங்கேஸ்வரரின் மனைவி, நறுமுகையின் அன்னை, மிக சமீபத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர், ஏற்கனவே இருந்த இதயக்கோளாறும் சேர்ந்துகொள்ள இப்போது அவரது பெரும்பாலான நேரம் படுக்கையில்.

ரங்கப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியை தனது நண்பருடன் சேர்ந்து நடத்தி வந்தார். சென்ற வருடத்தில் அந்த நண்பரின் மனைவி இறந்துவிட, நண்பரது மகள் தன்னோடு வந்து இருக்குமாறு அவரை பட்னாவிற்கு அழைத்து சென்று விட்டாள். எனவே, அப்பள்ளியின் முழுப் பொறுப்பும் ரங்கேஸ்வருடையதாகியது. பேரன் வித்யுத் அங்குதான் மூன்றாம் வகுப்பில் படிக்கிறான்.

இன்றைய சூழலில் பெரியவர்களால் வித்யுத்தை பார்த்துக் கொள்ள முடியாதென்பதால், நறுமுகையின் ஜாகை திருச்சிக்கு மாற்றலாகிறது. இருவாரத்திற்கு முன் வரை சென்னையை விட்டு அசையவே முடியாது என்றிருந்தவள், அன்னையின் உடல் நிலை கருத்தில் கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பெற்றவர்களையம் பிள்ளையையும் கண் பார்வையில் வைத்துக்கொள்ள முடிவெடுத்து, இதோ பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாள் அவளது சொந்த ஊரான திருச்சியை நோக்கி.

வீட்டை விட்டு வெளியே வந்த நறுமுகை, இரண்டு வீடு தள்ளி குடியிருந்த தம்பதிகளிடம் சாவியைக் கொடுக்க, அவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.

கதவைத்திறந்த ஆன்ட்டி, “யாரு வல்லியா? வா வா”, என்றார்.

“இல்ல ஆண்ட்டி கிளப்பிட்டேன், சொல்லிட்டு சாவி கொடுத்துட்டு போலாம்னுதான் வந்தேன்”, என்ற நறுமுகையின் கைப்பிடித்து கூடத்திற்கு கூட்டி வந்து..

“அதெல்லாம் சொல்ல கூடாது, பெரிய உபகாரம் பண்ற, ஒரு வா காப்பியாவது குடிச்சிட்டு தான் போணும்”, என்றார் அந்த ஆண்ட்டி.

மறுக்க வழியின்றி, இருக்கையில் அமர்ந்தவள், “இதுல என்ன ஆன்ட்டி இருக்கு?, வீடு சும்மா பூட்டி கிடக்க போகுது, உங்களுக்கு யூஸ் ஆகலாமில்லையா?”

“இப்படி எத்தனை பேருக்கு தோணும் சொல்லு?, உன்கிட்ட கேக்கறதுக்கு முன்னாடி இதோ மூணாவது வீட்ல இருக்கறவகிட்ட ஒரு பெட் ரூம் கூட இல்ல, ஹாலை மட்டும் எங்க கெஸ்ட் வந்தா தூங்கறதுக்கு யூஸ்  பண்ணிக்கறேன்-ன்னு கேட்டேன், அதுக்கு ‘இல்ல எங்க பிரைவசி டிஸ்டர்ப் ஆகும்’-ன்னு நாசூக்கா மாட்டேன்னுட்டாங்க. இத்தனைக்கும் சொன்னவ எதோ சின்னஞசிறுசா இருந்தா பரவால்ல, அவங்க பேரனுக்கு கல்யாணம் பண்ற வயசு. வர வர மக்க மனுஷங்களோட சேர்ந்து அட்ஜஸ்ட் பண்ணணும்கிற மென்டாலிட்டி குறைஞ்சிட்டே வருது, வெறுமே விர்ச்சுவல் லைஃப்-ல தான் காலம் போறது”, பெரிய லெக்சர் கொடுத்து காஃபி தயாரிக்க அடுக்களை சென்றார்.

“அவ சொல்றத காதுல வாங்காதம்மா, படபடன்னு பேசிடுவா, சும்மா பாத்ததையும் கேட்டதையும் வச்சு முடிவுக்கு வந்துடுவா. மனசுல பட்டதைப் பட்டுனு சொல்லிடவும் செய்வா, அவ பேச்சை பெரிசா எடுத்துக்காத, அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுத்தான் தெரியும்”, என்றார் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அங்கிள்.

அதற்கு பதிலாக மெல்ல நறுமுகை முறுவலித்தாள். “என் பையன் friend ஒருத்தனுக்கு வீடு தேவைன்னு சொல்லிட்டு இருந்தான், இப்போ பொண்ணு கல்யாணத்துக்கு அந்த பையன் வருவானாம், அப்படியே உன் வீட்டைக் காட்டி பிடிச்சிருந்தா, பேசி முடிச்சிடறேன்மா”, என்றார்.

“ஓகே அங்கிள், நீங்க பாத்து எதுவும் பண்ணுங்க”

“வால்யுபில் திங்ஸ் எதையும் வச்சிட்டு போகலையே? எல்லாம் சரியா பாத்துட்டியா?”

“முடிஞ்ச வரைக்கும் ஷிஃப்ட் பண்ணிட்டேன் அங்கிள், மத்ததெல்லாம் என்னோட மாஸ்டர்  பெட் ரூம் போட்டு லாக் பண்ணிட்டேன்”

அதற்குள் ஆன்ட்டி காபியோடு வந்தார். “நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ  கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே கண்டிப்பா வந்துடனும்”, என்று அன்புக் கட்டளை இட,

“பாக்கறேன் ஆன்ட்டி, அம்மா உடம்பு எப்படி இருக்குன்னு பாத்துட்டு, வர ட்ரை பண்றேன்”, காஃபியை குடித்து அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்.

காரை எடுத்துக் கொண்டு அந்த கேட்டட் காலனியின் ஆர்ச் வளைவை கடக்கும்போது, நறுமுகைக்கு இதயத்தில் முணுக் கென்ற வலி வந்தது.

Advertisement