7

இயல்பாகவே திருமணமான பெண்கள் முதலிரவு அறைக்குள் நுழையும் போது இருக்கும் பதற்றமோ, பயமோ, எதிர்பார்ப்போ இப்படி எதுவும் இல்லாமல் குழம்பிய இதயத்தோடு அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அவளைப் பொறுத்தவரை இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதாவது அவளைப் பெற்றவரால் முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு வந்திருந்த அவள் வயதை ஒத்த பெண்கள் கூட சிலர் பொறாமையாக பேசிக் கொண்டார்கள். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் நடிகை வரை ஆதித்த கரிகாலன் கூட டேட்டிங் செய்திருக்கிறார்கள் என்றும் சிலர் படுகை வரை சென்றிருக்கிறார்கள் என்றும் இவளது காது படப் பேசினார்கள். மேலும் குழலியோடு நடக்கவிருந்த அவனது திருமணத்தை பற்றி இப்பொழுது மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்துப் பேசினார்கள்.

தன்னை சுற்றி அவர்கள் பேசுவதை எல்லாம், செவித்திறன் இருந்தும் கேளாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி. இனி யார் என்ன பேசி என்ன ஆகப் போகிறது?  இவ்வளவு தூரம் வந்த பிறகு அவளால் இனி என்ன செய்ய முடியும்?

திருமணமும் முடிந்து குழலி அவள் பெற்றோரோடு மணமேடையில் வந்து வாழ்த்து தெரிவித்த போது, ஆதியின் கண்கள் அவளை உணர்ச்சி துடைத்துப் பார்த்தது. குழலியின் கண்கள் ஐசுவை வன்மதோடு பார்த்தது. ஆனால் இவர்கள் இருவரையும் ஐசு புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். கடமைக்காக கூட ஆதித்த கரிகாலன் அவனுக்கு தெரிந்தவர்களை இவளிடம் அறிமுகப்படுத்தவில்லை. அவர்களே அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தி அவர்கள் பெருமையை பறைசாற்றி, அவளிடம் வாழ்த்து தெரிவித்து சென்றார்கள்.

முதலிரவு, ஆதித்த கரிகாலன் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதியாக அறைக்குள் நுழைந்தவள் பால் சொம்போடு அவன் அருகே சென்றாள். மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்தி அவளை பார்த்தான். ஐஸ்வர்ய நந்தினி பால் சொம்பை அருகில் இருந்த மேஜை மீது வைத்தாள்.

அடுத்து அவன் அமர சொல்லுவான் என்று அவள் எதிர்பார்க்க” ஆமா கேட்கணும்னு நினைச்சேன் உன் பேர் என்ன” இப்படிக் கேட்டு அவளது இதயத்துடிப்பை எகிர வைத்தான்.

” பேரு கூட தெரியாமயா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” எதிர் கேள்வி கேட்டாள் ஐசு.

“ஆமா. உன் பேரு எனக்கு அவசியம் இல்லை. அதான் நான் அத தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டல. நான் நெனச்ச மாதிரி இப்போ நீ என் பொண்டாட்டி ஆயிட்ட. சரி சொல்லு உன் பேர் என்ன” மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றான்.

” ஐஸ்வர்ய நந்தினி”..

” எம்மாடி எவ்வளவு நீட்டு பேரு.. ஓகே ஐஸ் எவ்வளவு நேரம் இப்படி நிக்க போற? நின்ன ஊர்ல இருந்து வந்தியா?” இன்னமும் அவன் வாயிலிருந்து உட்கார் என்னும் வார்த்தை வரவில்லை. அந்த ஒரு வார்த்தையை தாண்டி அவன் என்னென்னமோ பேசிக் கொண்டிருந்தான். இவனை எதிர்பார்த்தால் இந்த இரவு முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்பது ஐஸ்வர்ய நந்தினி மூளைக்கு புரிந்தது.

மெத்தையில் அமர்ந்தாள் ஒரு ஓரத்தில். ஆதி எழுந்து மெத்தையில் நடுவில் அமர்ந்தான்.

” சரி சொம்புல என்ன எடுத்துட்டு வந்த பாலா?” அவனை புரியாத பார்வை பார்த்தாள் ஐசு. முதலிரவு அறைக்குள் பால் எடுத்து வராமல் வேறு எதை எடுத்து வருவார்கள்?

” ஏன் அப்படி பாக்குற? ஒரு மனுஷன் எத்தனை தடவைதான் பால் குடிக்கிறது? மொதத்தான பால் பழம் சாப்பிடுங்கன்னு ஒரு குண்டான் பால வாயில ஊத்தி விட்டாங்க. எனக்கு வேணாம் நீ எடுத்து குடி. “

” இல்ல நீங்க கொஞ்சம்” திக்கி திணறி கூறினாள்.

” எனக்கு வேணாம் ஐஸ். நீயே குடி ஆனா கண்டிப்பா குடிக்கணும். காலைல என் அப்பா அந்த பால் சொம்ப பாப்பாரு. அது தழும்ப தழும்ப அப்படியே இருந்தா அவருக்கு மனசு கஷ்டமா இருக்கும். எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நீயும் படுத்துக்கோ” அவளது பதிலை எதிர்பார்க்காமல் மெத்தையில் பாதி இடத்தை ஆக்கிரமித்து படுத்து விட்டான் ஆதித்த கரிகாலன்.

தான் பயந்து வந்தது போல அவன் அவ்வளவு மோசமானவன் கிடையாது என்பதால் சற்று நிம்மதியோடு அந்த பால் மொத்தத்தையும் குடித்துவிட்டு தானும் சமதாய் படுத்துக் கொண்டாள் ஐஸ்வர்ய நந்தினி.

மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாய் விடிந்தது. சாரலாய் தன் முகத்தில் தண்ணீர் தெளித்த உணர்வில் கண் விழித்தான் ஆதித்த கரிகாலன். எப்போதும் அவனை அழுது வடிந்து கொண்டே எழுப்பும் அமுதன் அங்கில்லை. அதற்கு மாறாக ஊதா நிற சுடிதார் அணிந்து தலைக்கு குளித்து நீண்ட கூந்தலை துண்டால் அடித்து உலர வைத்துக் கொண்டிருந்தாள் ஐசு.

துப்பட்டா ஒரு ஓரத்தில் கிடந்தது. ஏழு மணி அளவில் இளஞ்சூரியன் பெரிய ஜன்னல்களை தாண்டி உள்ளே வரும் அழகினை ரசித்துக் கொண்டே அவள் தலைத் துவட்டிக் கொண்டிருந்தாள். நேற்று முழுவதும் குடிக்காமல் இருந்ததின் பயன் இப்பொழுதுதான் முழுதாக அவளை பார்க்கிறான் ஆதி. செல்வகுமாரி திருமணத்திலும், இவர்களது திருமணத்திலும்  ஒப்பனையாளரின் கை வண்ணத்தில் முகப்பருக்கள் மறைந்து பளபளக்கும் முகத்தோடு அழகாய் காட்சியளித்தாள் ஐசு.

இப்பொழுது குளித்து முடித்து ஒப்பனையற்ற முகத்தோடு, அவளை முழுவதுமாக பார்க்கிறான்.

” நீ எத்தனை கிலோ இருப்ப?” திடீரென்று கேட்டாலும் குரலின் படக்கென்று திரும்பி பார்த்தாள் ஐசு.

” என்ன பேந்த பேந்த முழிக்கிற?  நீ எத்தனை கிலோ இருப்ப? ஒரு முப்பது கிலோ இருப்பியா?” அளவுக்கு மீறிய தனது ஒல்லியான உடல்வாகை அவன் கேலி செய்கிறான் என்று உள்ளுக்குள் வாடியவள் வெளியே சற்று ரோஷத்தோடு

” முப்பதைஞ்சு”என்றாள்.

படுத்துக்கொண்டே கால் மேல் கால் போட்டுக்கொண்டு

” பரவாயில்லையே அஞ்சு கிலோ கூடயா இருக்க நான் சொன்னதோட. உங்கப்பன் வாய் இந்தியால இருந்து இங்கிலாந்து வரைக்கும் போயிட்டு வருது. வீட்ல உனக்கு சோறு வாங்கி போட மாட்டாரா? இல்ல இந்த பொண்ணுங்க டயட்னு பேர் சொல்லி தின்னாம உடம்பை சைஸ் ஜீரோவா வச்சிருக்காங்களே  அந்த மாதிரி நீ ஏதாச்சும் டயட்ல இருக்கியா?”

“ம்ஹ்ம்” தலையாட்டினாள் ஐசு.

” மணி என்ன ஆகுது”

” காலையில ஏழு மணி”

“வாட்? இப்பதான் ஏழா? ரொம்ப சீக்கிரம் எந்திரிச்சுருக்கேன். அதாவது நீதான் என்னை எழுப்பி விட்டுருக்க”

“ஐயோ ம்ஹ்ம்”..

” நீதான். உன் தலை முடியில
இருந்து வந்த தண்ணீ என் முகத்துல பட்டு என் தூக்கத்தை வாயில போட்டுருச்சு. உனக்கு ஒன்னு தெரியுமா ஐஸ். எனக்கு தூங்கும் போது எழுப்பினாலே பிடிக்காது. அதுவும் எங்கப்பா அமுதன் எந்நேரமும் கண்ணுல தண்ணி வச்சுட்டே தான் என்ன எழுப்புவாரு. இன்னிக்கு உன்னால அந்த கொடுமையிலருந்து நான் தப்பிச்சிட்டேன்.

அந்த ஒரே ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன். இனிமே இப்படி பண்ண”

“ம்ஹ்ம்” வேகமாக தலையாடியது அவளுக்கு. அதற்கு மேல் ஈரமான கூந்தலை காய வைக்க மனம் வராமல், அவசரமாக இரு பக்கமும் சிறிது முடியை எடுத்து கிளிப்புக்குள் அடக்கி, பழக்க தோஷமாக கருப்பு பொட்டை எடுத்துவிட்டு,  பின் தலையில் அடித்து கொண்டே, சிவப்பு பொட்டை கண்ணாடி பார்க்காமல் நெற்றியில் ஒட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

கண்ணாடியே பார்க்காமல் ஒரு பெண் இவ்வளவு நேரம் இருந்தது அதிசயமாக பட்டது ஆதிக்கு. எப்போதுமே ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்திரிப்பவள் நேற்று திருமண அலைச்சலில் அசந்து உறங்கி விட்டாள். அவளது வீட்டில் என்றால் ஈஸ்வரன் இந்நேரம் ஆயிரம் முறை அவளை பீடை பீடை என்று கரித்துக் கொண்டிருப்பார்.

முதல் நாளே இப்படியா மாமனார் என்ன கூறுவாரோ என பயத்தோடு கீழே இறங்கி செல்ல, வாசல் கதவு திறந்திருந்தது. வேகமாக அங்கே சென்று பார்த்த  ஐசு அதிர்ச்சியில் நின்று விட்டாள். காரணம் அமுதன் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஐசு காலில் அணிந்திருந்த கொலுசின் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அமுதன் முகம் மலர்ந்தது.”ஐசு வாடா மா.. ஏன் இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்ச? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே? ஒரு பத்து பதினொரு மணி வரைக்கும் தூங்கி இருந்தா அலுப்பு இருந்து இருக்காது தானே.?”

பதினொன்றா? இது மட்டுமே ஈஸ்வரன் காதில் விழுந்தால் அவளை கூறு போட்டு விடுவார்.” இல்ல மாமா எப்பவுமே அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிச்சிடுவேன். நேத்து கல்யாணம் அலைச்சல். அதான் கொஞ்சம் லேட்டா. நீங்க குடுங்க மாமா நான் போடுறேன் கோலம்”

” அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானே காலைல எந்திரிச்சு சாமி விளக்கு ஏத்தி, பூஜை பண்ணிட்டு சமையல் வேலைய கவனிச்சு இருப்பேன். எப்பவும் பூஜை பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் சமையலை கவனிக்கனும்னு உங்க அத்தை சொல்லி இருக்கா. இன்னைக்கு நீ இந்த வீட்டுக்கு வந்து மொத நாள். நீ பூஜை பண்ணா நம்ம வீட்டுக்கு மகாலட்சுமியே வந்த மாதிரி.

மாமா பூஜை அறையில பூவு எல்லாம் பறிச்சு வச்சிருக்கேன்.தண்ணி மாத்திட்டேன். நீ போய் பூஜை பண்றது மட்டும்தான் பாக்கி. பூஜை முடிஞ்சோன்ன  உனக்கு என்ன வேணும்னு சொல்லு மாமா சொடக்கு போடுற நேரத்துல செஞ்சு கொடுக்கிறேன்”

” இல்ல மாமா நானே சமைக்கிறேன்.” அவசரமாக மறுத்தாள் ஐஸ்வர்ய நந்தினி.

“அடேய் மாமா நல்லா சமைப்பேன் டா. சாப்பிட்டு பாத்து சொல்லு.” இதற்குள் அவரை நெருங்கி இருந்த ஐசு மீதி கோலத்தை தானே போட கை நீட்டினாள்.

“வேணா டா. உன் அத்தை இருந்த வரைக்கும் தினம் வாசத் தெளிச்சு கோலம் போடுவா. அவ போனதுக்கு அப்புறம் எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு நாள் கூட இத நான் தவற விட்டதில்ல. அது என்னமோ தெரியல காலைல எந்திரிச்சு வாச தெளிச்சு கோலம் போட்டா அந்தப் படியில் உட்கார்ந்து உங்க அத்தை என்ன பாக்குற மாதிரியே இருக்கும். அன்னைக்கு பூரா மனசுக்கு ஆறுதலா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். நீ போடா. போய் பூஜை பண்ணு. நான் இதை முடிச்சுட்டு சமையல் வேலைய பார்க்கிறேன்.” அவரை அதிசயமாக பார்த்தாள் ஐசு.

பூஜை முடிந்து ஐசு சமையல் அறைக்கு வருவதற்குள் ஒரு அடுக்கு இட்லி வெந்து கொண்டிருந்தது..”ஐசு சொல்லுடா உனக்கு என்ன சட்னி ரொம்ப பிடிக்கும்? இல்ல சாம்பார் செய்யவா? நெய் தோசை உனக்கு செஞ்சு தரவா? சொல்லுமா உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்? பிரிட்ஜில மாவு கூட இருக்கு. சப்பாத்தி பூரி கூட போட்டுக்கலாம்” அவர் சொல்லிக் கொண்டே போக கண்ணைக் கரித்து விட்டது ஐசுக்கு.

தொடரும்.