19

குழப்பம், அதற்கான தீர்வை கண்டுபிடித்து சரியாக்கி விட்டால் அங்கே இன்னொரு குழப்பத்திற்கு அவசியம் கிடையாது. குழப்பம் சந்தேகமாக உருமாறும் போது அங்கே பல யூகங்களுக்கு உயிர் கிடைக்கும். அர்த்தமற்ற யூகங்கள் நிம்மதியான வாழ்விற்கு உலை வைக்கும்.

சில நாட்களாகவே ஐஸ்வர்ய நந்தினி குழம்பித் தவித்தாள். மற்ற விஷயத்தைப் போல இந்த விஷயத்தையும் கணவனிடம் வாய்விட்டு கேட்டிருந்தால் ஒருவேளை அவளது குழப்பம் தீர்ந்திருந்திருக்கலாம். அவளது பிறவி பலவீனமா அல்லது விதியா தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவளது யூகப்படியே விட்டு விட்டாள். எப்போதுமே மனைவியின் முக வாட்டத்தை கண்டு அதுதான் உலகின் முக்கிய விஷயம் போல துடித்து அதை தீர்ப்பதையெல்லாம் ஆதியிடம் கிடையாது.

உனக்கு ஏதாவது ஒன்று வேண்டுமா கடவுள் வாய் கொடுத்திருக்கிறார் நீயே வாய் திறந்து கேட்டு பெற்றுக் கொள். இதுவே அவனது கொள்கை. ஐசு முகம் வாட்டமாய் இருப்பதை அவன் கவனித்தாலும், அவளே வாய் திறந்து அவளது மன குழப்பத்தை சொல்லும் வரை அவன் மௌனமாகவே இருந்தான். அவனது மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினான். அமுதன் அவரது நண்பர்கள் நான்கைந்து பேரோடு சில நாட்களாகவே ஆன்மீக சுற்றுலா செல்லலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தார்.

மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுத்துச் செல்ல இதுவே சரியான நேரம். அனுபவசாலியான அவருக்கு உடல் அளவில் இவர்கள் இருவரும் சேர்ந்தாலும் கூட ஏதோ ஒன்று அவர்களுக்கு ஒட்டாமல் இருப்பதை அறிந்து கொண்டார். ஒரு தனிமை அவர்களின் ஊடலை சரி செய்து விடும். எனவே சில நாட்களாகவே திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆன்மீக பயணத்தை உடனே மேற்கொண்டார் அமுதன்.

காலையிலிருந்து வீட்டு வேலைகளை முடித்து நடன பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தால் அமுதனோடு இனிமையாக நேரம் கழியும். இந்த வேளைகளில் அவர்களுடன் ஆதியும் சேர்ந்து கொள்வான். பழைய கதைகள், கேரம், அமுதன் அவரது வாழ்வில் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சுவையான நிகழ்ச்சிகளை பற்றி  நகைச்சுவையாக பேசுவார். அதையெல்லாம் கேட்கும் போது நேரம் போவதே தெரியாது ஐசுக்கு.

அமுதன் ஒரு புத்தக விரும்பி என்பதால் அவர் படித்த விஷயங்களைப் பற்றியும் அதைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்து சேகரித்த தகவல்களைப் பற்றியும் விவாதிப்பார். அமுதன் இருந்ததால் வீட்டில் நேரம் போவதே தெரியாது ஐசுக்கு. அமுதன் ஆன்மீகப் பயணத்திற்கு கிளம்பி ஒரு வாரம் ஆகிவிட்டது.

பொதுவாக புது திருமணம் செய்த தம்பதிகள் என்றால் இம்மாதிரி தனிமை கிடைப்பது அரிது. கிடைக்கும் அரிய தனிமையில் அவர்கள் மூன்றாம் பாலை பற்றி அக்குவேர் ஆணிவேராக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கோ அப்படி ஒரு விஷயம் இருப்பதை  அடியோடு மறந்த நிலையில் இருந்தான் ஆதித்த கரிகாலன்.

நடனப் போட்டியில் ஐசு கவனம் சிதறாமல் பங்கு பெற அப்போது தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அதன் பிறகு நடனப்பள்ளி திறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். இப்போது அனைத்து முடிந்த சுமூகமாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு ஆணால் மூன்று மாதங்களைத் தாண்டிய நிலையிலும் கட்டிய மனைவியை, அதும் இளமையான மனைவியை பக்கத்தில் வைத்து அமைதியாக இருக்க முடிகிறது?

அவளே அவனை நெருங்கவும் கூச்சமாக இருந்தது. அவளோடு எப்போதும் போல் பேசினான். அவளை தினம் நடனப் பள்ளியில் இறக்கி விடுவது மீண்டும் மாலை வீட்டுக்கு ஏற்றி வருவது எல்லாம் அவன் தான். இத்தனைக்கும் அவளுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து லைசென்ஸ் எடுக்க வகுப்பில் சேர்த்திருந்தான்.

வீட்டில் அடைந்து கிடைக்காமல் அவளோடு எங்கேனும் வெளியே செல்வான். ஜன நெருக்கடி அவனுக்கு ஆகாது. ஆதலால் ஜன நெருக்கடி இல்லாத அமைதியான இடத்திற்கே அவளை அழைத்து செல்வான். ஏதேதோ பேசுவானே தவிர அவனது கடந்த காலத்தை பற்றி மறந்தும் அவளிடம் மூச்சு விட மாட்டான். அது கூட அவளுக்கு குறையாக தான் இருந்தது.

கதைகளிலும் படங்களிலும் பார்த்து அவள் தெரிந்து கொண்ட காதல் அனைத்துமே, சப்ரைஸ் என்ற பெயரில் அடிக்கடி ஏதாவது பரிசு கொடுப்பது, அவளுக்கு போக்கு கட்டி எங்காவது வெளியே அழைத்து செல்வது, ரகசிய டின்னர்கள், பாத் டப் முழுவதும் ரோஜாக்கள் நிறைந்த ரொமான்டிக் குளியல், கபோர்ட்டை திறந்தால் உள்ளே புது புடவையோ நகையோ ஏதாவது அவள் உபயோகிக்கும் பொருட்கள், குளித்து முடித்து வெளியே வரும்போது மெத்தையில் பொட்டலம், சமைக்கும் போது பின்னால் இருந்து கட்டி பிடிப்பது, வெளியே சென்றாலும் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்புவது,

செல்ல சண்டைகள், ஊடல்,அதன் பிறகான கூடல் இவைகள் தான் ஐஸ்வர்ய நந்தினி படத்திலும் கதைகளிலும் படிக்கும் காதல். இதில் ஒன்றைக் கூட இதுவரை திருமணமாகி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ஆதித்த கரிகாலன் செய்யவில்லை.

ஒருவேளை அவனுக்கு தன் மீது அன்பு இல்லையோ? அப்படியும் அவளால் நினைக்க முடியவில்லை. அவளுக்காக அவன் செய்த காரியம்  சிறியது அல்ல. இன்று ஐஸ்வர்ய நந்தினி யார் தயவையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்பதற்கு அட்சரமிட்டவன் அவன். வைரத்தை பட்டை தீட்டுவது போல அவளது திறமையை பட்டை தீட்டி வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவன் அவன். மனக்கண் முன் அவள் கையில் வைத்திருந்த தராசு இரண்டு பக்கமும் ஆடியது.

மனக்குழப்பத்தின் நடுவே அவள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாறுதலுக்காக அம்மா வீட்டிற்கு சென்று வந்தால் நலமாக இருக்கும் என எண்ணினாள். அதற்கு முக்கிய காரணம் ஈஸ்வரன் இரண்டு நாள் உறவினர் கல்யாணத்திற்கு தஞ்சாவூர் சென்றிருந்தார். அவர் இல்லாததால் அம்மாவிடம் மனம் விட்டு பேசலாம்.

நடனப் பள்ளியிலிருந்து அப்படியே அம்மா வீட்டிற்கு கிளம்பி விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. மகள் தனியாக வருவதை கண்டதும் நர்மதாவுக்கு ஒரே வியப்பு. திருமணம் ஆகியதில் இருந்தே அவள் இங்கே வந்தால் அட்டைப்போல ஒட்டிக்கொண்டு ஆதியும் உடன் வருவான்.முதலில் ஆதி ஈஸ்வரனிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை கண்டு நர்மதாவுக்கும் மனம் வேதனையாக இருந்தது. ஆனால் தன் கணவர், பெற்ற மகளுக்கு செய்யும் அநீதிக்கு இறைவன் தண்டனை தருவதாக நினைத்து மனதை தேற்றிக் கொண்டார். ஈஸ்வரனிடம் மட்டும் சிறப்பு சலுகைகளோடு நடந்து கொள்ளும் ஆதி, நர்மதாவிடம் மிகவும் மரியாதையோடும் பணிவன்புடன் நடந்து கொள்வான்.

நர்மதா சமைத்துக் கொடுக்கும் உணவுகளை ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி விடுவான். அப்போதெல்லாம் ஐசுவே சொல்லுவாள். வீட்டில் அவள் சமையலை ஒரு நாள் கூட அவன் இவ்வாறு புகழ்ந்தது கிடையாது என. புகழ்ந்தது மட்டுமல்ல சற்றும் கூச்சமே இல்லாமல் அத்தை இன்னும் கொஞ்சம் வைங்க. அந்த வெள்ளையா என்னமோ இருக்க அத வைங்க. அத்தை நீங்க அன்னைக்கு அந்த டிஷ் செஞ்சுருந்திங்க செம்மையா இருந்துச்சு. எனக்கு திரும்பவும் செஞ்சு கொடுங்க. இப்படி உரிமையாக அவரிடம் கேட்டு நர்மதாவை மகிழ்ச்சி அடைய செய்வான் ஆதி.

” ஐசு என்னடி தனியா வந்து இருக்க? மாப்பிள்ளை எங்க”

” ஏன் நான் தனியா வரக்கூடாதா”

” இல்ல இத்தனை மாசம் மாப்பிள்ளை கூட தான் வந்த. அதான் கேட்டேன்”

” சும்மா உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன் நீ தான் அப்பா ஊர்ல இல்லைன்னு சொன்ன. “

” அதான் தைரியம் வந்துருச்சு. உங்க அப்பா இருந்திருந்தா நீ தனியா இங்கே வந்து இருப்பியா?” மகளை வரவேற்று அவளுக்கு குடிக்க பழச்சாறு கொடுத்தார் நர்மதா.

” நானே உன்ன பாக்க வரலாம்னு இருந்தேன். உனக்கு தான் சுஜி  பிஸ்கட்னா ரொம்ப பிடிக்குமே. நேத்து தான் செய்தேன். சாயங்காலம் போல எடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன். நீயே வந்துட்ட” மகளுக்குப் பிடித்த பிஸ்கட்டை தட்டில் எடுத்து வைத்தார் நர்மதா.

ஆசையாக சுஜி பிஸ்கட்டை வாயில் வைக்கும் சமயம்” என் வாழ்க்கையை கெடுத்துட்டு உனக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்குதா? ” வாய்வுக்கும் கையிக்கும் இடையே சுஜி பிஸ்கட் அந்தரத்தில் நின்றது. ஐசு திடுக்கிட்டு திரும்பி பார்க்க அங்கே அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள் குழலி.

அவள் கூறிய வார்த்தை ஐசுவுக்கு சுத்தமாய் புரியவில்லை. நர்மதா கோபமாய் ” குழலி, நீ யார் கிட்ட பேசுறேன்னு உனக்கு தெரியுதா? என் பொண்ணு என்ன உன் வாழ்க்கையை கெடுத்தா? நீதான் என் பையனோட மனசு புரிஞ்சுக்காம அவன போட்டு பாடா படுத்துற?”

“ஓ ஏன் சொல்ல மாட்டீங்க. நீங்க பெத்த பொண்ண விட்டுக் கொடுப்பீங்களா? நான் யாரோ தானா உங்களுக்கு? உங்க பிள்ளையே என் மனச புரிஞ்சுக்காம என்ன கஷ்டப்படுத்தும் போது நீங்க எல்லாம் எம்மாத்திரம்” நர்மதாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்தப் பெண் திடீரென இங்கே வந்து நின்று இம்மாதிரி சத்தம் போடுவாள் என அவர் எதிர்பார்க்கவில்லை.

கார்த்தி வீட்டில் இருந்தாலாவது குழலியை சமாதானம் செய்வான். இப்போது அவனும் வீட்டில் இல்லை.ஐசுவுக்கு ஏறக்குறைய குழலியுடைய கோபம் புரிந்தது. நர்மதா தினமும் அவளோடு போனில் பேசும் போது வீட்டில் நடக்கும் கூத்தை பற்றி குறையோடு கூறுவார். தன் அண்ணனின் குணத்திற்கு எப்படிப்பட்ட பெண்ணா என ஐசுவும் வருந்துவாள். கூடவே இம்மாதிரி பெண்ணை ஆதி காதலித்தான் என நினைக்கும் போது அவள் மனம் வேறு எதையோ யோசிக்க ஆரம்பித்து விடும்.

நர்மதா செய்த எந்த சமாதானங்களையும் குழலி ஏற்றுக் கொள்வதாக இல்லை. வாயில் வந்ததை எல்லாம் பேசினாள். ஐசு அவள் பேசுவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அபாண்டமான குற்றச்சாட்டுகளை தாங்கி சிறு வயதிலிருந்து அவளது உள்ளம் மறுத்துவிட்டது. இப்போதும் குழலி பேசுவதை கேட்டு நர்மதா தான் அவளை அதட்டிக் கொண்டிருந்தார்.

“ச்சே என்ன பொண்ணுமா நீ? இன்னும் நீ இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வாழவே வரல. என் பொண்ண பார்த்து என்னென்ன பேச்சு பேசுற. நீ எல்லாம் ஒரு குடும்பத்து பொண்ணா? என் பையன் வாழ்க்கைய விட்டு தயவு செஞ்சு போயிடு. நீ போற குடும்பம் கண்டிப்பா விளங்காது. போயிருமா இங்க நிக்காத. ஒரு நேரம் போல ஒரு நேரம் நான் அமைதியா இருக்க மாட்டேன்.

இன்னொரு வார்த்தை நீங்க என் பொண்ண பத்தி பேசினா அது நல்லா இருக்காது. ஒழுங்கா உன் வீட்டுக்கு போய் சேரு.” நர்மதாவின் இந்த பேச்சை குழலியின் ஆவேசத்தை கிளறி விட்டது.

” போறேன் போகாம இங்க சோறு சாப்பிடவா வந்தேன்.ஹேய் உனக்கு என்ன மனசுல உலக அழகினு நினைப்பா? ஆதிய எப்படியோ வளச்சிப் போட்டு கல்யாணம் பண்ணிட்டதா மமதைல இருக்கியா?அவன் ஒன்னும்  என்ன தூக்கி போடுல. நான் தான் அவன தூக்கி போட்டேன்.

என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணி இருந்தா அஞ்சு வருஷம் வேற எவளையும் திரும்பி பாக்காம இருந்திருப்பான். இப்ப கூட நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் உன்னை தூக்கி வீசிட்டு என் கூட வந்துடுவான்.. ஆதியோட ஜாதகத்தை பார்த்து தான் கல்யாணம் பண்ணியா.அவனோட ஜாதகத்துல ரெண்டு பொண்டாட்டி யோகம் இருக்கு. ஒரு தாலி உன் கழுத்துல இருக்கு. இன்னொரு தாலி?” ஐசு அமைதியாக நின்று கொண்டிருந்தாலும் அவளது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

குழலி தேவையில்லாத வன்மத்தை எல்லாம் அவள் மீது கொட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். ஆசையாக தாய் வீடு வந்த மகள், கண்ணீரோடு நிற்பதை கண்ட பெற்ற உள்ளம் துடித்தது. அதைவிட அவள் சொல்லி சென்ற ஜாதகம் நர்மதா வயிற்றை கலக்கியது. அவர்கள் திருமணத்தின் போது ஜாதகம் பார்க்கலாம் எனது நர்மதா சொல்லியதற்கு ஈஸ்வரன் அவரை கேவலமாக கிழி கிழியென கிழித்து விட்டார்.

இருந்தும் நர்மதா நச்சரிக்க, பார்த்து விட்டதாக சொன்னார். அவருடைய பேச்சை எந்த அளவுக்கு நம்புவது?

” அம்மா.. எனக்கும் அவருக்கும் நீங்க ஜாதகம் பார்த்தீங்களா”

” ஏம்மா பேசாம நிக்குற? ஜாதகம் பார்த்தியா இல்லையா? “

” நான் பாக்கல ஐசு.. உங்க அப்பா தான் அவரே போய் பார்த்தாரு. நான் கேட்டதுக்கு பொருத்தம்லாம் பக்காவா பொருந்தி இருக்குன்னு சொன்னாரு.”

” அம்மா எனக்கு கொஞ்ச நாளாவே மனசே சரியில்ல. என்னால இதுக்கு மேல நிம்மதியா இருக்க முடியாது. நீ உடனே என் கூடவா. நாம நம்மளோட ஃபேமிலி ஜோசியர் கிட்ட இது பத்தி என்னன்னு கேட்போம். என் புருஷனோட ஜாதகம் உன்கிட்ட இருக்கு தானே” நல்ல வேலையாக இருவரின் ஜாதகமும் நர்மதா வீட்டில் இருந்தது.