ஐஸ்வர்ய நந்தினி வழக்கம் போல நடனம் ஆடும் போது அவளது கனவுலகிற்குள் சென்று விட்டாள். எப்போதும் அந்த உலகத்தில் அவள் மட்டுமே சஞ்சரிப்பாள். இப்போதெல்லாம் அவள் மட்டுமில்லாமல் ஆதித்த கரிகாலனும் அந்த உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
அவளது முகத்தில் காணப்பட்ட நவரசமும் நடனத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களை கை தட்டவும் மறந்து பிரமிக்க வைத்தது. கொடி இடை வளைந்து, கண்களில் காந்தம் தேக்கி, ஐஸ்வர்ய நந்தினி தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள் அவளுக்காக அவளது கணவன் பரிசளித்த நடனப் பள்ளியில். அவளை சுற்றிலும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள் அவளது நடனப் பள்ளியில் நடனம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள்.
அன்று அவளை இந்த கட்டடத்திற்கு அழைத்து வந்து இன்ப அதிர்ச்சியாக இதை நடன பள்ளிக்கு அவளுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்தான் ஆதித்த கரிகாலன். முதலில் அதை வன்மையாக மறுத்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அவளது சொந்த உழைப்பில் ஒரு நடனப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அவளது வாழ்நாள் கனவு என்று கூட சொல்லலாம். கணவனாக இருந்தாலும் அவனது பணத்தில் உடல் நோகாமல் பரிசை வாங்கிக் கொள்ள அவளுக்கு மனம் கேட்கவில்லை.
முதலில் ஆதி கேட்ட கேள்விக்கு பதில் கூற மறுத்தாலும் பின் அவன் தொடர்ந்து வற்புறுத்த ஒரு வழியாக தன் மனதில் நினைப்பதை சொல்லி விட்டாள். சிறு புன்னகையோடு அவளை அதற்கு மேல் வற்புறுத்தாமல் கடந்து சென்றவன் அடுத்த இரண்டு நாட்களில் அவளிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்தான்.
“ஐஸ் டெல்லியில டான்ஸ் கிராண்ட் மாஸ்டர் காம்படேஷன் நடக்குது. உனக்கு தெரியுமா..”
“ம்ம்ம்”
” நீ ஏன் அதுல கலந்துக்கல”
“வேணா ஆதி.. அங்க பெரிய பெரிய டான்சர்ஸ் எல்லாம் வருவாங்க. ரொம்ப டஃபா இருக்கும்.”
பூச்செடிகளை சீர்படுத்திக் கொண்டு அவள் பேசிக் கொண்டிருக்க அவள் முன்பு வந்து கைகட்டி அவளின் கண்களை மட்டுமே பார்த்தான் ஆதித்த கரிகாலன். ஐசுவின் கைகள் வேலை நிறுத்தம் செய்தது..
” காம்பெடிஷன் ரொம்ப கஷ்டமா இருக்குறது தான் உன்னோட ரீசன்னா”
அவனது கூறிய பார்வையில் ஐசுவின் தலை தானாக தொங்கியது.
” சரியான ரீசன் என்ன தெரியுமா.. உன்னோட முகத்தை எல்லார் முன்னாடியும் காட்ட உனக்கே பயம். எங்க யாராச்சும் ஏதாச்சும் சொல்லிருவாங்கன்னு உனக்கு பயம். சொன்னா சொல்லிட்டு போகட்டும். அவங்க வாய் அவங்களுக்கு பேசுற உரிமை இருக்கு. அத கேட்கிற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு. உரிமை இல்லாத பேச்சை நீ ஏன் கேக்குற..மீறி காதுல விழுந்தா அதை இக்னோர் பண்ணிட்டு போ.
ஐஸ் நல்லா டான்ஸ் ஆடறவங்களுக்கு பாட தெரியாது. நல்ல பாட்டு பாடுறவங்களுக்கு ஆட தெரியாது. நல்லா படிக்கிறவங்களுக்கு எழுத வராது. நல்லா எழுதறவங்களுக்கு வரைய வராது. யாரோ சிலருக்கு மட்டும் தான் எல்லாத்துலயும் ஆர்வமும் அத செய்யறதுக்கு திறமையும் இருக்கும்.
கடவுள் உனக்கு கொடுத்த திறமைய நீ ஏன் வெளிய கொண்டு வர மாட்ற.. அன்னைக்கு நீ கேட்டியே நான் ஏன் கார் ரேஸ் சூஸ் பண்ணினேன். ஐஸ் உயிர் போனா மயிரா போச்சு. ஆனா நான் ஆசைப்பட்டத செய்யறப்போ அதுல ஜெயிக்கிறப்போ ஒரு சந்தோஷம் வரும் பாரு அந்த நொடி இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி. உனக்கு டான்ஸ் தான் உயிர்னு எனக்கு தெரியும். யார் என்ன சொன்னா என்ன..நான் உன்ன நம்புறேன்.
என்னோட ஐஸ் ஜெயிக்கிறா ஜெயிக்கல அதெல்லாம் மேட்டர் இல்ல. அவ தைரியமா இந்த உலகத்த ஃபேஸ் பண்ண போறா. யார் என்ன சொன்னாலும் அத கண்டுக்காம அவளுக்கு பிடிச்சது செய்யப் போறா. என்ன சொல்ற ஐஸ்”
அவன் இவ்வளவு தைரியம் கொடுத்த பிறகு அதை மீறுவாளா ஐஸ்வர்ய நந்தினி. அந்தப் போட்டிக்கு ஆன்லைன் வழியே பெயர் பதிவு செய்தாள்..இந்தியா முழுவதும் நிறைய போட்டியாளர்கள் பதிவு செய்திருந்தார்கள். சோலோவாகவும் ஆடலாம் குழுவாகவும் ஆடலாம். ஆனால் இறுதியாக டெல்லியில் நடக்கும் போட்டியில் ஐவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
குழுவாக இருந்தாலுமே, தங்கள் குழுவில் ஒரே ஒரு நடன கலைஞரை மட்டுமே அவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஐஸ்வர்ய நந்தினிக்கு துணை யாரும் தேவையில்லை.அவள் சோலோவாக இதில் கலந்து கொண்டாள். முதல் கட்ட போட்டி சென்னையில் நடைபெற்றது. அமுதனுக்கு மட்டும் ஐசு இதில் கலந்து கொள்வது தெரியும். நர்மதாவுக்கு கூட அவள் சொல்லவில்லை.
ஆதி முகத்தில் ஸ்காப் அணிந்து அவளோடு சென்றிருந்தான். பதற்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு
” உன்னால முடியும் ஐஸ். அங்க யாருமே இல்லன்னு நினைச்சுக்கோ. உன் உலகத்துல நீ ஆடு”
அவன் சொல்லியது போலவே ஆட ஆரம்பித்தவள் அவளது உலகத்திற்குள் சென்று விட்டாள். முதல் கட்டத்தில் 250 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அடுத்த கட்டத்தில் நூறு பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
மூன்றாவது சுற்றில் ஐம்பது பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள். நான்காவது சுற்றில் 25 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள். சுற்றுக்கள் கூட போட்டியும் கடினமாகியது. இரண்டு மாதத்தில் ஐந்து சுற்றுகள் முடிவடைந்திருந்தது.மொத்தம் ஏழு சுற்றுகள். இன்னும் இரண்டே சுற்றில் இறுதி நேரடி போட்டிக்கு முடிவாக போகும் நபர் யார் என்று தெரிந்துவிடும்.
வீட்டில் அமுதனும் ஆதியும் ஐசுவுக்கு பக்க பலமாக இருந்தார்கள். முதல் சுற்றில் தேறியதும் நர்மதாவுக்கு விஷயத்தை கூறினாள் ஐசு. நர்மதா மூலம் விஷயம் ஈஸ்வரனுக்கு எட்டியது. ஏற்கனவே குழலி, கார்த்தி திருமணத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருந்தது. நாளாக நாளாக குழலியின் பிடிவாத குணம் கார்த்திக்கு பயத்தை கொடுத்தது.
எதற்கெடுத்தாலும் சண்டை, கைபேசியில் சண்டை போட்டது காணாது என கார்த்தி வீட்டிற்கே வந்து கண்டமேனிக்கு சண்டை போட்டாள் குழலி. ஈஸ்வரன் கூட திருமணமாகாமல் இப்படி உரிமையாக வந்து சண்டை போடும் அவளை நைச்சியமாக பேசி இம்மாதிரி செய்ய வேண்டாம் என கூறினார். அவரையே வாயா போயா என ஒருமையில் அழைத்து விட்டாள். திருமணமே நடக்குமா எனும் நிலையில் வந்து நின்று விட்டது இப்போது.
செல்வகுமாரி அவளுண்டு அவள் கணவன் உண்டு என்று வீட்டு பக்கமே தலை வைத்தும் படுக்காத அளவிலிருந்தாள்.
பிள்ளைகள் பிரச்சனை தலைக்கு மேல் இருக்க ஐசு நடனப் போட்டியில் கலந்து கொள்வது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல இருந்தது ஈஸ்வரனுக்கு. நர்மதாவை அழைத்துக் கொண்டு அமுதன் வீட்டிற்கு சென்றார்.
அமுதனும் ஆதியும் வெளியே சென்றிருந்தார்கள். ஐசு மட்டும் பெற்றோர்களை வரவேற்றாள். காலையிலிருந்து அவளது மனம் சொல்லிக் கொண்டிருந்தது இன்று ஏதோ சம்பவம் நடக்கப்போவதை.. ஆதியும் அமுதனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட ஈஸ்வரன் வார்த்தைகளால் ஐசுவை குத்தி கூறு போட ஆரம்பித்தார். நர்மதாவால் கூட அவரை அடக்க முடியவில்லை.
” உன்ன கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சா ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்ற மாதிரி உன்னோட சதுராட்டத்த இங்க வந்து ஆடுற. அவன் ஒரு பைத்தியக்காரன் கால ஒடச்சு உன்ன மூளையில உட்கார வைக்காம கொண்டு போயி போட்டியில சேர்த்துருக்கிறான். ஏன் இப்ப இருக்குற சொத்து பத்தாதா அவனுக்கு.. உன்ன ரெக்கார்ட் டான்ஸ் ஆட வச்சு அதுலயும் காசு பார்க்க நினைக்கிறானா..”
அவரின் வார்த்தைகள் தடுக்க ஐசு காதை பொத்திக் கொண்டாள்.நர்மதா எந்த பக்கம் பேசுவது என தெரியாமல் திண்டாடும் வேளை
” இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசினா, அது அவளோட அப்பாவா இருந்தாலும் நாக்க வெட்டிடுவேன்”
ஈஸ்வரனுக்கு பின்னால் இருந்து ஒழித்தது ஆதியின் கடினமான குரல். அந்தக் குரலிலிருந்தே அவன் எந்த அளவிற்கு கோபமாய் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
” இல்ல மாப்ள நான் என்ன சொல்ல வர்றேன்னா”
” தயவு செஞ்சு கிளம்பிடுங்க மாமா. நீங்க லோயரா இருக்கலாம். பாயிண்ட் புடிச்சு பேசறது உங்க பழக்கமா இருக்கலாம். அதெல்லாம் கோர்ட்ல வச்சுக்கோங்க. இது ஆதித்த கரிகாலனோட வீடு. இங்க நான் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும். நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வரணும் நீங்க என் வீட்டுக்கு வரணும். கண்டிப்பா ஒருத்தவங்க முகத்தை ஒருத்தவங்க பார்த்து தான் ஆகணும். இப்ப வார்த்தை தடிச்சா உறவே இல்லாம போயிரும். அதனால தான் சொல்றேன் இப்போ கிளம்புங்க.
என் பொண்டாட்டி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ கண்டிப்பா இதுல வின் பண்ணுவா. காம்பெடிஷன் முடிஞ்ச உடனே அவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். போயிட்டு வாங்க”
அதற்கு மேல் அவனை எதிர்த்துப் பேசவோ அங்கே நிற்கவோ ஈஸ்வரனுக்கு மனமில்லாமல் நர்மதாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
ஆதி அவள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து ஐசுவே அதிர்ந்து போனாள். இதுவரை தனது கனவுக்காக ஆடிய ஐசு தன் கணவனின் கௌரவத்திற்காக இதில் ஜெயிக்க வேண்டுமென இன்னும் அதிகமான முயற்சிகள் செய்தாள்.
ஐந்தாவது சுற்று நடைபெற்றது. பத்து பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. சற்று பதற்றத்தோடு ஆறாவது சுற்றி நடைபெற போட்டிக்கு முன்பே படியில் வழுக்கி விழுந்து காலில் நல்ல அடி. அமுதன் எவ்வளவோ சொல்லி விட்டார் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென. நல்லவேளை அந்த நேரம் பார்த்து வீட்டில் ஆதி இல்லை. எனவே கணவனுக்கு தெரியக்கூடாது என மாமனாரிடம் சத்தியமாகி கொண்டு வலியை பொருட்படுத்தாமல் ஆறாவது சுற்றில் கலந்து பத்து பேரில் ஒருவராக தமிழ்நாட்டை முன்னிட்டு இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாள் ஐஸ்வர்ய நந்தினி.
இறுதிப் போட்டிக்கு ஆதி அவளோடு டெல்லி வருவான் என ஐசு எதிர்பார்க்க அவனோ தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி விட்டான். இறுதியில் அமுதன் மட்டுமே அவளோடு டெல்லி சென்றார். மற்ற மாநிலங்களில் இருந்து ஐசுவையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே போட்டியில் பங்கு பெற்றார்கள். இறுதிப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள்.
இறுதியில் ஐசு தனது பதற்றத்தை அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு பரதத்தோடு வெஸ்டர்ன் பிரேக் டான்ஸ் கலந்து தனது திறமையை வெளிப்படுத்தினாள்.போட்டி முடிவை அறிவிப்பதற்குள் வியர்த்து வடிந்து விட்டது அவளுக்கு.
போட்டி முடிவை அறிவிக்கும் நேரம் வந்தது. எந்த ஐஸ்வர்ய நந்தினி தனது முகத்தை பொதுவெளியில் காட்ட கூட பயந்து கொண்டிருந்தாளோ அதே ஐஸ்வர்ய நந்தினி தான் டான்ஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டியின் வெற்றியாளர். அமுதனுக்கு கண்களில் கண்ணீரே வழிந்து விட்டது. ஐஸ்வர்ய நந்தினிக்கு இருப்பே கொள்ளவில்லை. காரணம் அவளுக்கு அந்தப் பட்டத்தைச் சூட்டி பரிசை வழங்கியது வேறு யாரும் இல்லை நடன புயல் பிரபுதேவா அவர்களே.
பேச சொல்லி அவளிடம் ஒலிபெருக்கியை கொடுக்க வார்த்தைக்கு பதிலாக அவளின் கண்களில் கண்ணீரே வழிந்தது.இறுதியில் கண்ணீரை கட்டுப்படுத்தி அனைவருக்கும் நன்றி சொல்லி
” நான் வெறும் ஐஸ்வர்ய நந்தினி கிடையாது. மிஸஸ் ஆதித்த கரிகாலன்.”
இதை சொல்லும் போதே அவளது முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அரங்கமே அவளுக்காக கைதட்ட அரங்கத்தின் நடுவே முகத்தில் ஸ்காப் அணிந்து நின்று கொண்டிருந்தான் ஆதித்த கரிகாலன்.
மெல்லமாய் மேடையிலிருந்து இறங்கியவள் அவனை நோக்கி ஓடி வர
” மிஸ்ஸஸ் ஆதித்த கரிகாலன்.. நீங்க வின் பண்ணிட்டீங்க”
அழகான பூங்கத்தை அவள் முன்பு நீட்டினான் ஆதி.
அந்தப் போட்டியினால் பெயர் மட்டுமல்ல, பரிசுத்தொகையாக பத்து லட்சத்தை பெற்றாள் ஐஸ்வர்ய நந்தினி. முன் பணமாக அந்த பத்து லட்சத்தை ஆதியிடம் கொடுத்து, நடனப் பள்ளியை தொடங்க சம்மதித்தாள். வேலைகள் துரிதமாகி நடனப் பள்ளியை திறக்கும் நாளும் நெருங்கியது.
ஈஸ்வரனுக்கும் அழைப்பு இருந்தது. நர்மதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஈஸ்வரனுக்கும் ஐசு குறித்து நிறைய பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. வெளியே சிறந்த தகப்பனாக மகளைப் பற்றி பெருமை பேசிக் கொண்டார்.
பாடல் முடிந்ததும் மாணவர்களின் கைத்தட்டலில், தனது கனவுலகில் இருந்து வெளியே வந்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அன்றைய கிளாஸ் முடிந்து வீட்டிற்கு வர ஆதிக்கு அழைத்தாள்.அவனுக்காக காத்திருந்த நேரங்களில் அவளது மனம் ஒன்றை எண்ணியது. திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் நடனப் போட்டிக்காக அவள் தயாராகிக் கொண்டிருக்க,அவளின் கவனம் சிதறக்கூடாது என்பதால் அடுத்து வந்த இரண்டு மாதங்களும் ஒரு கணவனாக அவளை அவன் நெருங்கவே இல்லை.
போட்டி முடிந்த பிறகும், நடனப் பள்ளியை ஆரம்பிக்கும் வேலை, அது இது என அவர்களுக்குள் தாம்பத்தியம் நடந்தே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அவளுக்கு அதைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்க, அவனும் ஏன் எதுவும் கேட்காமல் இருக்கிறான்? உண்மையில் அவளது கனவை நிறைவேற்றுவதற்காக இந்த சிற்றின்பத்தை விட்டுக் கொடுத்திருக்கிறானா? அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா? தேவையில்லாததை யோசித்து இருக்கும் இன்பத்தை சிலருக்கு எடுத்துக் கொள்வார்கள்.
அந்த சிலரில் ஐஸ்வர்ய நந்தினி மட்டும் விதிவிலக்கா என்ன?