16

ஐஸ்வர்ய நந்தினி மட்டுமே அன்று தன் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு, ஆதித்த கரிகாலனை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டாள்.. அவளுக்கு அது அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் ஆதி அவளைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவளது விருப்பு வெறுப்புகள்.ஆசைகள் கனவுகள், இப்படி எதை பற்றியும் அவளிடம் வாய் திறக்கவில்லை ஆதி.

காலையிலிருந்து விரதம் இருக்கிறாள் ஐசு. அமுதன் மருமகளை எட்டிப் பார்த்துவிட்டு அவளுக்காக பழச்சாறு எடுத்து வரச் சென்றார். அன்று, ஆதி அவளைப் பற்றி அவன் மனதில் நினைப்பதை சொல்லிய பிறகு காற்றுக்கும் இடமில்லாத அளவு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் ஐசு. அவளுக்கே அந்த நொடி ஆச்சரியமாக இருந்தது. எந்த முகப்பருவை கண்டு அவளை அனைவரும் ஒதுக்கி வைத்தார்களோ, அந்த முகப்பருவையே மையமாகக் கொண்டு அதன் மேல் மையல் வைத்து, இந்த நாட்டின் பெருமதிப்பிற்குரியவன் அவளை நாடி வந்து திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.

சற்று நேரம் அவனது அழைப்பில் அமைதியாக ஐசு இருக்க

“ஐஸ் என்ன தூங்கிட்டியா”

“ம்ஹும்”

“அப்றம் கனவு காணுறியா”

“ம்ஹும்”

” சரி நீ எதையும் வாய தொறந்து சொல்ல போறதில்ல. “

அவளை தனக்குள் பொத்தி வைத்தவன்

“ஐஸ் நீ இவ்வளவு ஒல்லியா இருக்கிறது எனக்கு எவ்வளவு வசதி தெரியுமா? “

அவன் தன்னை பரிகசிக்கிறான் என்று நினைத்தவள் வேகமாக அவனது அணைப்பிலிருந்து விலகினாள்.

“ஹேய் என்னாச்சு?”

“ஏன் அப்டி சொல்றிங்க?”

” அதுவா..நீ இவ்வளவு ஒல்லியா இருக்கிறதுனால எவ்ளோ அழகா என் கைக்குள்ள இருக்க. ஒரு ஆம்பளைக்கு இதை விட வேற என்ன வேணும் ஐஸ். அவன் கைக்குள்ள இருக்கிற மாதிரி ஒரு பொண்டாட்டி. அதுக்கு அர்த்தம் அவன் கட்டுப்பாட்டுல இருக்கிற பொண்டாட்டின்னு கிடையாது. அவனோட ரெண்டு கைக்குள்ள அடங்குற ஒரு பொண்டாட்டியா இருக்கணும். நீ முப்பத்தஞ்சு கிலோல இருக்குறது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா..

நிறைய பேர் ஒல்லி ஆகணும்னு சாப்பிடாம நாக்க கட்டி போடுறாங்க. கண்ட மெடிசன் குடிக்கிறாங்க. வயித்த பட்டினி போடுறாங்க. உடல்வாகு நமக்கு இயற்கை கொடுத்தது. குண்டோ ஒல்லியோ நீ சந்தோஷமா இருக்கியா அதான் மேட்டர். சொல்லு ஐஸ் நீ சந்தோஷமா இருக்கியா.. ஒல்லியா இருந்தாலும் குண்டா இருந்தாலும் நீ ஹெல்தியா இருந்தா அது தான் சந்தோஷம்.”

“ம்ம்ம்” மீண்டும் அவனை கட்டிக் கொண்டாள் ஐஸ்வர்ய நந்தினி. ஆண்மையின் வலிமையை அவளிடம் காட்டாமல் மென்மையாக அவளை ஆட்கொண்டான் ஆதித்ய கரிகாலன். கூடல் முடிந்து அது தந்த சுக மயக்கத்தில் இருந்தவள் அடுத்து அவன் கூறிய வார்த்தையில் விதிர்விதித்துப் போனாள்.

“ஐஸ் இன்னும் டூ வீக்ஸ்ல நான் கார் ரேஸ்ல கலந்துக்க  போறேன். நீயும் என் கூட வரியா..கார் ரேஸ் ஜப்பான்ல நடக்குது.”

ஐசுவின் உடல் அவளை அறியாமல் நடுங்கியது. காலையில் குழலி உதிர்த்த கடுஞ்சொற்கள் அவளது செவியில் அலை பாய்ந்தது.

அப்போது வீர வசனம் பேசினாலும், அந்த வார்த்தைகள் அவளது மனதை ரணப்படுத்தியது உண்மையே.

“என்ன ஐஸ், நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் சொல்ல மாட்ற”

” இல்ல.. நீங்க போயிட்டு வாங்க. இங்க மாமா தனியா இருப்பாரு”

” அவரெல்லாம் தனியா ஜாலியா இருப்பாரு. நீ பேசாம கிளம்பி என்கூட வா. ரேஸ் முடிஞ்சதும் ஜாலியா ஊர சுத்தி பாத்துட்டு வரலாம்”..

” ஏங்க நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களா”

” என்ன ஐஸ்? “

” உங்களுக்கு ரேஸ் ஓட்டும் போது பயமா இல்லையா.. உங்களுக்கு எப்படி இது மேல இன்ட்ரஸ்ட் வந்துச்சு”

” சின்ன வயசுல இருந்து எனக்கு வேகம்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்ச சினிமா ஸ்டார் கூட சூப்பர் ஸ்டார் தான். ஏன்னு கேளு. அவரோட ஆக்டிங் ஸ்டைல் இது எல்லாத்தையும் தாண்டி அவரோட ஸ்பீட் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லாத்துலயும் ஒரு வேகம் இருக்கணும் ஐஸ். யாராலயும் எட்டி பிடிக்க முடியாத ஒரு வேகம்.”

” அதுக்கு நிறைய வழி இருக்கே..இதுல உயிருக்கு ஆபத்துன்னு உங்களுக்கு தெரியும் தானே”

“நெவெர் பெயின் நெவெர் கெயின்.. நீ இதைக் கேள்விப்பட்டதில்லையா.. ஐஸ் நம்மளோட ஹார்ட் வொர்க் எல்லாத்துலயும் போடணும். ஹார்ட் வொர்க் இருந்தா,உனக்கு நீ செய்ற வேலை மேல நம்பிக்கை இருந்தா, கண்டிப்பா நீ தான் அதுல  ஜித்து. உன்ன அடிச்சுக்க இந்த உலகத்தில ஆளே இல்ல”

அவளுக்கு பிடித்தமான கார் ரேஸை பற்றி இன்னும் பல தகவல்கள் அவளுக்கு பரிமாறினான்.

இம்மாதிரி ரேசில் கலந்து கொண்டு பலர் தங்களது இன்னுயிரைத் துறந்திருக்கிறார்கள். சிலர் அதில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். மரணம் எதில் தான் இல்லை..தடுக்கி விழுந்தவனும் இறக்கிறான்.. மலையிலிருந்து விழுந்தவனும் பிழைக்கிறான். மரணத்தை கண்டு அஞ்சாமல் தங்களது கனவில் முழுமூச்சாய் இறங்கி அதற்கான வேலைகளை செய்து, திறமை தகுதியை வளர்த்து கடினப்பட்டு தங்களது கனவை அடைகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் தன்னுடைய கணவனும் ஒருவன் என்பதை ஐஸ்வர்ய நந்தினி, அவனது பேச்சின் மூலம் உணர்ந்து கொண்டாள். அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் ரேசின் மீது வைத்திருக்கும் அளப்பரியா மோகம் வெளிப்பட்டது. வேகம் என்பது அவன் உயிரில் கலந்து விட்ட ஒன்றாய் மாறிவிட்டது. அவளுடைய தேவையற்ற பயத்தை சொல்லி அவனுடைய இதயத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்த ஐசு விரும்பவில்லை.

அவள் நம்பினாள். ஆதித்ய கரிகாலனை முழுவதுமாய் நம்பினாள். அவன் அவளை வற்புறுத்தி ஜப்பான் அழைத்தபோதும் வர மறுத்துவிட்டாள். இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவதாக கூறியவன் கிளம்பிச் சென்ற, அடுத்த நிமிடத்திலிருந்து பூஜையறையே தஞ்சமென கிடந்தாள் ஐசு.

அவளது பயம் அமுதனுக்கு புரிந்தது. விரதம் இருந்து தன் கணவனின் உயிருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். அவனது கனவு அவனது நம்பிக்கை அப்படியென்றால் அவனது உயிர் மட்டுமே இவளது நம்பிக்கை. வீட்டிலிருந்த கிளம்பும்போது மலர்ந்த முகத்தோடு அவனுக்கு வாழ்த்து கூறிய அனுப்பி வைத்திருந்தாள் ஐசு.

“ஐஸ் நான் திரும்பி வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”

ஆதித்ய கரிகாலன் பொதுவாக பேசும் போது சிரிக்க மாட்டான். அவனிடம் புன்சிரிப்பு கூட எட்டிப் பார்க்காது. சிரிக்காமலேயே காமெடி செய்வான். அடக்கமாக வாய் பொத்தி சிரிக்கும் ஐசு கூட இப்போதெல்லாம் அவன் செய்யும் டார்க் காமெடி கண்டு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

உரிமையாக அவன் கொஞ்சி பேசும் தருணம் கூட

” கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே கொஞ்சினா என்னவாம்” கேட்டிருக்கிறாள்.

” என்ன பாக்க சிடுமூஞ்சி மாதிரியா இருக்கு..என்னன்னு தெரியல. எனக்கு சிரிப்பே வரமாட்டுது. ரொமான்ஸ் பண்ற நேரத்துல சிரிப்பு ரொம்ப அவசியமா என்ன”

அவனது அறிவுபூர்வமான கேள்வியை கண்டு அடுத்த கேள்வி கேட்க அவளுக்கு வாய் வராது.

இரண்டு நாட்களும் அமுதனின் வற்புறுத்தலால் மட்டுமே பழச்சாறை அருந்தினாள் ஐசு. ஆதி அவளுக்கு தெரியப்படுத்தவே தேவை இல்லை. அவன் ஆசியா அளவில் நடந்த கார் ரேஸில் வென்று மீண்டும் நாட்டிற்கு பெருமை சேர்த்தது தலைப்பு செய்தியாக மாறியது. ஆதி தாயகம் திரும்பி விட்டான் என்பதை அவனது மேனேஜர் காலையில் தெரிவித்தார். ஐசுவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்த இரண்டு நாள் பிரிவு அவளது மனதை தெள்ளத்தெளிவாய் எடுத்துக்காட்டியது.

அவன் வேண்டுமானால் அவளிடம் வாய் திறந்து எதையும் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் சொல்லத்தான் போகிறாள் அவளது காதலை. ஆம் ஐஸ்வர்ய நந்தினி மனதில் ஆழமாய் இடம் பிடித்து விட்டான் ஆதித்த கரிகாலன். அவன் இல்லாத இரண்டு நாள் தனிமை அவளை கொல்லாமல் கொன்றது. சிரித்தாலும் சிறுமூஞ்சியாக இருந்தாலும் அவள் அருகில் அவன் வேண்டும்.

அவனுக்காக பார்த்து பார்த்து சமையல் செய்தாள் ஐசு. அமுதனுக்கு மருமகளை பார்த்து ஒரே சிரிப்பாக இருந்தது. காலையிலிருந்து அவரின் உயிரை வாங்கி விட்டாள். ஆதிக்கு என்ன பிடிக்கும், எந்த பக்குவத்தில் அந்த உணவினை செய்ய வேண்டும், இப்படி ஏகப்பட்ட கேள்விகள். நொடிக்கு ஒரு தடவை அவள் சமையலறையில் இருந்து ஹாலுக்கு நடந்து வருவதால் அமுதன் சமையலறையில் சென்று அமர்ந்து விட்டார்.

சமைத்து அசத்தி முடித்து மாமனாரும் மருமகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது வீடு வந்து சேர்ந்தான் ஆதித்த கரிகாலன். அவனை வாசலுக்கே ஓடிச் சென்று வரவேற்றாள்.

“இருங்க இருங்க அங்கேயே நில்லுங்க”

” எதுக்கு ஐஸ் என்ன வாசற்படியில நிக்க வைக்கிற” சற்று சலிப்பாக கேட்டான் ஆதி.

ஐசு அவனுக்கு ஆர்த்தி எடுத்த பிறகே உள்ளே அனுமதித்தாள். உணவு வேலை ஆர்ப்பாட்டமாக முடிந்ததும், அமுதன் சற்று நேரம் ஆதியிடம் பேசிவிட்டு இளையவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றார். ஆதி சற்று நேரம் ஓய்வெடுப்பான் என்று எதிர்பார்த்தால் அவனோ ஐசுவை கிளம்ப சொல்லி வெளியே அழைத்து சென்றான்.

மத்தியானமே நல்ல மழை. மழையில் டிரைவ் செய்வது மனதிற்கு ஆறுதலாக இருந்தது அவளுக்கு.

“ஏங்க”

“ஐஸ்.. எனக்கு பேர் இல்லையா.. எதுக்கு எப்ப பார்த்தாலும் ஏங்க நோங்கன்னு கூப்பிட்டுருக்க”

” உங்க பேர் சொல்லி கூப்பிடவா”

“கூப்பிடு..”

” ஆனா எல்லாரும் உங்க பேர் சொல்லி தானே கூப்பிடுறாங்க”

“அடியே லூசு பொண்டாட்டி, சொல்லி கூப்பிட தான  பேரே இருக்கு”

” நானும் அதே பேர்ல எப்படி கூப்பிடுறது”

ஆதி அவளை திரும்பிப் பார்த்தான்.  அவனை பிரித்தியேகமாக  அழைக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. அதனை உணர்ந்து கொண்டவன்

” மாமா அத்தான் செல்லம், இப்படி நிறைய இருக்கே உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு”..

ஐசு சற்று பயந்து கொண்டே

” குழலி எப்படி கூப்பிடுவாங்க”

“ஆதி”..

தனக்குள் பலவாறாக  அவனது செல்லப் பெயரை சொல்லிப் பார்த்தாள் ஐசு. ஒன்று கூட அவள் மனதிற்கு நெருக்கமாய் இல்லை. அவள் இப்படியே யோசித்துக் கொண்டிருக்க ஆதி ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினான். ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு எதற்காக வந்து வண்டியை நிறுத்தினான் என்பதைப் போல அவன் முகத்தை பார்த்தாள் ஐசு.

“இறங்கு ஐஸ்..”

அவளின் கையைப் பிடித்து அந்த கட்டிடத்தின் உள்ளே அழைத்துச் சென்றான் ஆதி. உள்ளே சென்று பார்த்தபோது சுற்றிலும் கண்ணாடி சுவர்கள். அதைப் பார்த்ததும் புரிந்து விட்டது அவளுக்கு அது ஒரு நடனப்பள்ளி. ஐஸ்வர்ய நந்தினி அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க

“என்னோட சர்ப்ரைஸ் உனக்கு பிடிச்சிருக்கா ஐஸ்?..

அவளது விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவன். அவன் சொல்லாமலேயே அவளது கனவை நிறைவேற்றி விட்டான். புன்னகை காதல் அன்பு அத்தனையும் தாண்டி அங்கே ஒரே ஒரு உணர்வு மட்டுமே ஐசுவை ஆட்கொணர்ந்தது. அந்த உணர்வு அவளது கண்களில் வழிந்த கண்ணீர்.