13

அமுதன் எவ்வளவோ ஆதித்த கரிகாலனிடம் சொல்லி பார்த்து விட்டார். ஐசுவை கூட்டிக்கொண்டு எங்காவது வெளிநாடு சென்று வரச் சொல்லி. அந்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான் ஆதி. கார் ரேஸை தவிர அதில் வந்த கோடிக்கணக்கான வருமானத்தில், பல தொழில்களில் முதலீடுகள், பங்குதாரராக இருந்தான். ரேஸ் இல்லாத ஓய்வு நாட்களில், தொழில் விஷயத்தில் கவனம் செலுத்துவான்.

வாழ்க்கையே அவனுக்கு வெறுமையாக இருக்கும் போது இந்த திருமணம் அவனே அறியாமல் எடுத்த முடிவு. எதையோ யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தான் ஆதி. உயிரும் உணர்வும் உள்ள மனுஷி ஒருத்தியை திருமணம் செய்து அழைத்து வந்திருப்பது அவனது நினைவலைகளில் அவ்வப்போது நீந்தி கொண்டிருந்தாலும் அதை தெரிந்தே உதாசனப்படுத்தினான். திருமணமாகி இரண்டு வாரங்கள் கடந்த போதும் அவர்களது உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

மறைமுகமான குத்தல்கள், அந்த குத்தல்களில் அவன் காட்டிய அக்கறைகள், அமுதனின் அன்பான அணுகுமுறை, அமுதன் சேகரித்து வைத்திருந்த பல அரிய புத்தகங்கள், மாலையில் அவரோடு தோட்ட வேலையில் ஈடுபடுவது, விதவிதமான உணவுகளை சமைத்து மாமனாரை அசத்துவது, அவரோடு அமர்ந்து அவர் கூறும் பழைய கதைகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருப்பது, மாமியாரின் பழைய புடவைகளை  நகைகளை பத்திரமாக துவைத்து துடைத்து அழகாய் அடுக்கி வைப்பது,கேரம் விளையாடுவது, இரவென்றால் அமுதன் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு படுத்திருப்பார். அவரது கால்களை மென்மையாக பிடித்து விடுவது. இப்படியே சென்று கொண்டிருந்தது ஐசுவின் வாழ்க்கை.

அன்று அமாவாசை. அமுதன் காலையிலேயே கோவிலுக்கு சென்று விட்டார். ஒரு அமாவாசை தினத்தன்று தான் அமுதனின் மனைவி இறந்தார். அந்த நாள் முழுக்க வீட்டிற்க்கே வராமல் கோவிலிலேயே அமர்ந்திருப்பார் அமுதன். ஆதி கூட அந்த நாள் வெளியே எங்கும் சொல்லாமல் வீட்டிற்குள் அடைகாப்பான். இந்த விஷயம் எதுவும் ஐசுக்கு தெரியவில்லை.மாமனார் சாதாரணமாக கோவிலுக்கு சென்று இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தாள். அதிசயத்திலும் அதிசயமாக இன்று விரைவாக எழுந்து அமர்ந்து கொண்டிருந்த கணவனை பார்த்தும் எதுவும் கேட்கவில்லை அவள்.

காலை உணவை பம்பரமாக தயாரித்துக் கொண்டிருந்த சமயம், வீட்டின் அழைப்பு மணி அடித்தது. எடுத்து காதில் வைத்த ஆதி ம்ம்ம் என்றான். அவர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் கேட் வாயிலில் நிற்கும் காவலாளி அவர்களை உள்ளே அனுப்பலாமா என்று வீட்டிற்கு அழைத்து கேட்பார். அமுதனோ அல்ல ஆதியோ  உள்ளே வரச் சொன்னால் மட்டுமே அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிப்பார். இவ்வளவு காலையில் யார் வந்திருப்பார்கள்? அதைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் காலை உணவை தயாரிப்பதில் கவனம் செலுத்தினாள் ஐசு.

ஆனால் சற்று நேரத்திலேயே அவசரமாக தாளிப்பதை கூட தள்ளி போட்டுவிட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள். அங்கே அவள் கேட்ட குரல் குழலியுடையது.

” ஹாய் ஆதி.. குட் மார்னிங்” சாதாரணமாக பேசிக் கொண்டே வீட்டில் உள்ளே வந்தாள் குழலி.. அவளை வா என்றோ அமர் என்றோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ஆதி. கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்த்தலாக அமர்ந்திருந்தாள். அவசரமாக ஓடி வந்த ஐசுவின் மேல் அவன் பார்வை ஒரு வினாடி பட்டு தெரித்தது..

அவன் சொல்லாவிட்டால் என்ன என்பது போல சட்டமாக சோபாவில் அமர்ந்து விட்டாள் குழலி.

” எனக்கு தெரியும் ஆதி நீ என்கிட்ட பேச மாட்ட. ஆனா நான் உன்கிட்ட பேசணும்.”

அவள் தனிமையில் பேச விரும்புவதைப் போல அங்கே நின்றிருந்த ஐசுவை ஒரு பார்வை பார்த்தாள்.. அவளது பார்வைக்கு ஐசு பயந்து திரும்பவும் சமையல் அறைக்கு செல்ல போனாள்.

“ஐஸ்..”

ஆதியின் குரல் அவளை நிறுத்தியது.

” இங்க வா”

அவன் அருகே சென்றான்.

” இப்படி உட்காரு”

அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் அவன் அருகில் அமர்ந்தாள்.

” இது உன்னோட வீடு. உன் வீட்டுக்கு ஆள் வந்துருந்தா அவங்க தான் நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோனு நெனச்சு பயப்படணும். நீ என்னமோ அவங்க இந்த வீட்டு ஓனர் மாதிரி நினைச்சுக்கிட்டு, ஒரு பார்வை பார்த்ததும் பயந்து ஓடுற. நாளைக்கு திருடன் வந்தாலும் இப்படித்தான் பயந்து ஓடிப்போய் ஒளிஞ்சுக்குவியா? “

சூடாக கேட்டான் ஆதி.

அவளுக்கு குழலியை பார்த்ததும் கை கால் நடுங்கி விட்டது. இந்த ஆதி வேறு மேலும் நடுக்கத்தை ஏற்படுத்தும் படி பேச வியர்த்து கொட்ட ஆரம்பித்து விட்டது அவளுக்கு. குழலி, ஆதித் தன்னை அவமதிப்பதை கண்டு உள்ளுக்குள் பொங்கினாள்.

” நான் சுத்தி வளச்சி பேச விரும்பல ஆதி. எனக்கு நல்லா தெரியும்.. உன் மனசுல இருந்து எனக்கான இடத்த யாராலும் புடிக்க முடியாது.நீ எதுக்கு இவள கல்யாணம் பண்ணி இருக்க? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?

இந்த வீட்டு வாசல்ல கால் வைக்கிற முன்னாடி வரைக்கும் இந்த மாதிரி கேள்வி தான் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா இப்போ உங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் அப்படி கேட்க எனக்கு வாய் வரல.

இவ முகர கட்டைக்கு எல்லாம் உன் மாதிரி ஒருத்தன் தான் சரிப்பட்டு வரும். கண்டிப்பா இப்ப இல்லனாலும் எப்பவாவது ஒரு தடவை அந்த வீணா போன கார் ரேஸ்ல நீ சாக தான் போற. இருக்கப் போறது இன்னும் எத்தனை நாளோ? நீ கொஞ்ச நாள் குடும்பம் நடத்த ஒரு பொண்ணு போதாதா? கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கணும் இல்ல?

உன் கூட பழகி, உன்ன உயிரா லவ் பண்ண உரிமையில சொல்றேன், சீக்கிரமா அந்த பொண்ணுக்கு ஒரு பிள்ளைய கொடுத்திரு. நீ இல்லாட்டியும் உன் பிள்ளையாச்சும் அவ கூட இருக்கும். சாகப் போறேன்னு தெரிஞ்சே ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணா கெடுத்துட்டனு நெனச்சேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு நீ வாழ்க்கை கொடுத்திருக்க. கல்யாணமே கனவா நினைக்கிற பொண்ணுக்கு, கொஞ்ச நாள்ல சாகுற புருஷன் கிடைச்சா  என்ன? எப்படியோ கல்யாணம் ஆனா சரிதான்.

சரி ஆதி. நான் சொல்றத சொல்லிட்டேன். அப்போ நான் கிளம்புறேன்”

அவள் பேசிய வார்த்தைகளை கேட்டு சிலையாய் அதிர்ந்து விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. நாளும் கிழமையும் அதுவுமாய் வீட்டு படியேறி வந்து அபசகுனமாய் பேசி சொல்பவளை அடித்து துரத்தாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் ஆதித்த கரிகாலன். முன்னாள் காதலி என்றால் வாய்க்கு வந்தபடி பேசலாமா?அப்படி என்றால் அவளால் ஏற்படும் தாக்கம் இன்னும் இவனுள் இருக்கிறதா?

ஐசுவே அறியாமல் அவளது வலக்கரம் மேலே உயர்ந்து தாலியை இறுக்கமாக பற்றி கொண்டது. குழலி சென்று விட்டாள். அவள் சென்று பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் தன் நிலையிலிருந்து மாற்றம் இல்லாமல் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி. கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. ஆதி அவள் பக்கத்தில் கற்சிலைப் போல அமர்ந்து இருந்தான்.

“ஐஸ் இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருக்க போற?போ போயி சமையல கவனி. இன்னிக்கு அமாவாசை அப்பா எப்பவும் சைவம் தான் சாப்பிடுவாரு. அவருக்கு ஏதாச்சும் சைவமா பண்ணிடு. எனக்கும் இன்னைக்கு நான் வெஜ் சாப்பிடற மூடல. சோ எனக்கும் சேர்த்து சைவமா பண்ணிடு.”

காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு கண்மூடி சோபாவில் சாய்ந்து விட்டான் ஆதித்த கரிகாலன்.

முதன்முறையாக அவனை மிகுந்த வெறுப்போடு பார்த்தாள் ஐஸ்வர்ய நந்தினி. கட்டிய மனைவியை வீடு ஏறி வந்து ஒருவள் வாய்க்கு வந்தபடி பேசி செல்கிறாள். அவளை ஏனென்று கேட்க துப்பு இல்லை. கண் மூடி படுக்கை கேட்கிறதா? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல ஐசுவின் பொறுமை காற்றில் பறந்தது.

அவன் முன்பு எழுத நின்ற ஐசு கோபமாக அவனது காதில் மாட்டிருந்த ஹெட் ஃபோன்களை பிடித்து இழுத்தாள்.ஆதி அமைதியாக அவளை பார்க்க

” நீங்க எல்லாம் ஒரு மனுஷனா? உங்களுக்கெல்லாம் சூடு சொரணை ஒண்ணுமே இல்லையா? வெக்கமா இல்ல? வீடு ஏறி வந்து ஒருத்தி நீங்க செத்துப் போயிடுவீங்கன்னு சொல்றா. என்ன பத்தி நீங்க தாலி கட்டுன பொண்டாட்டி பத்தி கேவலமா பேசுறா.நம்ம அந்தரங்கத்தை அவ  நடு வீட்டில வச்சு அசிங்கமா பேசுறா. எல்லாத்தையும் கேட்டுட்டு வாய மூடிட்டு உட்கார்ந்து இருக்கீங்க.

ஏன் ஆதி இப்படி இருக்கீங்க? உங்க முன்னாள் காதலினா வாய் தான அடச்சுக்குமா? அவ மேல இவளோ லவ் வச்சிருக்க நீங்க எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிங்க? மொதக்கொண்டு ஏன் ஆதி என்ன நீங்க கல்யாணம் பண்ணிங்க? எதுக்காக என்ன சூஸ் பண்ணீங்க? நான் உங்ககிட்ட வந்து வாழ்க்கை பிச்சை கேட்டேனா? என் வாழ்க்கையை பாழாக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நீங்க கோடீஸ்வரனா இருந்துட்டு போங்க. உங்க பணம் என் கால் தூசிக்கும் கீழே.

அதுக்காக என் வாழ்க்கைய வீணாக உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுக்கு கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஒரு ரெண்டு வார்த்தை என்கிட்ட அன்பா பேசி இருப்பீங்களா? என்ன ஒரு மனுஷியா மதிச்சிருப்பீங்களா? உங்களுக்கு என்ன தான் வேணும்? உங்களுக்கு என்னதான் பிரச்சனை? வாய தொறந்து பேசுங்க ஆதி. நான் இவ்ளோ நேரம் உங்கள கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன் நீங்க ஏன் பேசாம இருக்கீங்க. நீங்க மனுஷனா இல்ல பொனமா?? “

ஆத்திரத்தில் அவள் உடல் நடுங்கியது. கையாளகாத தனத்தில் உதடுகள் துடித்தது. கண்ணீர் கோழைத்தனத்தின் அடையாளமாய் கன்னங்களில் வழிந்தது. இதயத்தில் யாரோ கத்தியை வைத்து குத்தி குத்தி விளையாடுவதை போல இருந்தது. அளவுக்கு மீறிய மன அழுத்தத்தில் மூக்கிலிருந்து உதிரமே வலிய ஆரம்பித்து விட்டது ஐசுவுக்கு. நிற்கவே திராணியற்று வேரருந்த மரம் போல தரையில் சாய்ந்து விட்டாள்.

மயக்கம் கூட வராமல், விழுந்தவள் எழுந்திருக்க மனமில்லாமல் மானம் மரியாதை அனைத்தையும் துறந்து கத்தி கதறி அழ ஆரம்பித்தாள் ஐஸ்வர்ய நந்தினி.

ஆதி அமர்ந்திருந்த நிலையில் ஒருவித மாற்றம் கூட இல்லாமல் அவளைக் கண் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐஸ் நான் செத்துருவேன்னு நீ நினைக்கிறியா? அவ சொல்லிட்டு போன மாதிரி கார் ரேஸ்ல நான் செத்துருவேன்னு நினைக்கிறாயா?”

தரையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தவள் ஆவேசமாக நிமிர்ந்து

“ச்சீ வாய கழுவுங்க. இது என்ன வாயா  இல்ல சாக்கடையா? உங்க யாருக்கும் வாயில நல்லதே வராதா? நீங்க வேணும்னா இந்த தாலிய ஒரு ஆபரணமா பாக்கலாம். ஆனா எனக்கு இந்த தாலி ஒரு ஆபரணம் கிடையாது.

என் உடம்புல ஒரு உறுப்பு மாதிரி இந்த தாலி. அவ்வளவு சீக்கிரத்துல இது என்ன விட்டு இறங்காது. இந்த பிரபஞ்சம் எப்படி உண்மையானதோ அதே மாதிரி இந்த தாலி மேல நான் வச்சிருக்கற மதிப்பு அவ்ளோ உண்மையானது.

நீங்க கார் ரேஸ்ல கலந்துக்கோங்க. இல்ல வானத்துல பறந்து சாகசம் செய்யுங்க. அப்படி இல்லனா கிளியோபட்ரா மாதிரி உடம்பு பூரா விஷ பாம்புகள விட்டு கடிக்க வையுங்க. நான் நம்புறேன். என் புருஷன் உயிருக்கு எந்த ஆபத்து வராது. நான் தீர்க்க சுமங்கலியா இருப்பேன்.. ” ஐஸ்வர்ய நந்தினி வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை ஆதித்த கரிகாலன் எதிர்பார்க்கவில்லை.

தொடரும்.