எந்நேரமும் கூடவே இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கொடுக்காமல் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டு அந்த விஷயத்தில் ஜீவாவுக்கு நிம்மதியை கொடுத்தாள்.
பங்கஜ் கொடுத்த அறிவுரை படி வேலை விஷயங்கள் அனைத்தையும் மனைவியிடம் சொல்வதில்லை ஜீவா. என்ன தேவையோ அதை மட்டும் சொல்கிறான், அவளுக்கு பிடிக்காத எதையும் செய்யாமல் தவிர்த்துக் கொள்கிறான்.
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்க அதை கண்காணிக்க அன்பு சென்றான். தானும் வருகிறேன் என ஜீவா சொல்ல மறுக்கவில்லை அன்பு. அவர்களின் மனைவிகளும் வருகிறோம் என்றனர்.
பிள்ளைகளை தான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி அனுப்பி வைத்தார் அருந்ததி. அன்புவின் காரை ஜீவா ஓட்ட நால்வரும் சென்றனர்.
“பூச்சி எதையும் உள்ள விட்ராத மிதுக்குட்டி” என மனைவியிடம் கிசு கிசுத்தான் ஜீவா.
“என் தங்கச்சி பரவாயில்லை, ஜீவா ஓட்டி எடுத்திடுவான்” என சொல்லி எழப் பார்த்தாள் அவள்.
“ஏன் உனக்கு வாயில்ல, அதுக்காகலாம் போக முடியாது” என்றவன் மனைவியை மீண்டும் படுக்க வைத்து விட்டான். சில நிமிடங்களில் அவளே உறக்கம் வரவில்லை என சொல்லவும்தான் அவளை விட்டான்.
அங்கே மேடையில் ஊர் இளைஞர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான் ஜீவா. இப்போது அவனும் ஒரு பிரபலம் அல்லவா? அவனை கண்ட உடனேயே மேடைக்கு இழுத்து சென்று விட்டனர்.
கணவன் ஆடுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் மிது.
அங்கு வந்த அன்பு, “நீயும் போயி ஆடுறதுதானே?” என கிண்டல் செய்தான்.
“ஆடினா என்ன தருவீங்களாம்?” எனக் கேட்டாள் மிது.
“சும்மான்னு இருங்க, வேணும்னே ஆடிட்டு சொத்த எழுதி வாங்கிட போறா” என்றாள் லாவண்யா.
“ஹை அக்காவே நல்ல ஐடியா தர்றாளே!” என்றாள் மிது.
அதற்குள் ஆடி முடித்து இறங்கி வந்து விட்டான் ஜீவா. இரண்டு மணி நேரம் அங்கிருந்தனர், பின் பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்ற ஜீவா, அவர்களை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் இங்கேயே வந்து விட்டான்.
அங்கே நிகழும் சிறு சிறு பிரச்சனைகளை அன்பு சமளிக்கும் போதெல்லாம் ஜீவாவும் உடன் நின்று கொண்டான்.
அண்ணனின் பெரிய மகளை தூக்கிக் கொண்ட ஜீவா, அந்த பாடலை பாடிக் காண்பித்து “நீ சொல்லுடா பட்டு, சாங் எப்படி இருந்தது?” எனக் கேட்டான்.
“சூப்பர் சித்தப்பா!” என அவள் அழகாக சொல்ல, இறக்கி விட்டவன் பாடலை கைப்பேசியில் ஒலிக்க செய்து அண்ணன் மகளோடு ஆடினான்.
அவர்கள் ஆடுவதை பார்த்த அன்புவின் மடியிலிருந்த அவனது இரண்டாவது மகளும் அவர்களிடம் சென்றாள். மிதுவின் மகள் மட்டும் சும்மா இருப்பாளா? அப்பா வேறு யாரின் கையை பிடித்தாலும் முகம் சுருக்கி அழ ஆரம்பித்து விடுவாளே, இப்போதும் உதடுகளை பிதுக்கிக் கொண்டு அப்பாவிடம் சென்றாள்.
தன் மகளை கையில் தூக்கிக் கொண்டு அண்ணன் மகள்கள் கற்றுத் தருவதை ஆடினான் ஜீவா. கை தட்டிக் கொண்டிருந்த பாட்டியை வம்படியாக இழுத்து வைத்து அவரோடும் ஒரு டூயட் ஆடினான். அப்போதும் அவனது மகள் அவனது கையில்தான்.
தன் கணவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதில் மங்கம்மா பாட்டிக்கு அத்தனை வெட்கம். மஞ்சள் பூசியிருந்த அவரது முகம் குங்குமமாக சிவந்து போயிருந்தது.
பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவே சிரித்தார். பசுபதி, வினோதினி, அருந்ததி மூவரும் வேடிக்கை போல பார்த்திருந்தனர். அவர்களின் மனம் நிறைந்தே கிடந்தது.
“ஆடினா சொத்து வேணும்ன்னு கேட்டல்ல? போ இப்ப போய் ஆடு” என மிதுவை வம்பிழுத்தான் அன்பு.
சுடிதார் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்ட மிது, “பத்திரத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க மாமா” என சொல்லி குழந்தைகளுடன் ஆட ஆரம்பித்தாள். ஹர்ஷினி பாப்பா சிரித்துக்கொண்டே தந்தையிடமிருந்து இறங்கி விட்டாள்.
பெரியப்பா கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம் ஹர்ஷினியை ஈர்க்க அவனிடம் சென்றாள் குழந்தை. அந்த விலை உயர்ந்த கைக் கடிகாரத்தை கழட்டி தம்பி மகளிடம் கொடுத்து விட்டான் அன்பு. அதை காட்டி மழலையில் ஏதோ சொல்லி சிரித்தாள் குழந்தை.
“என்ன சாமி சொல்றீங்க? என்ன இது பிடிக்கலையா? வேற வேணுமா?” எனக் கேட்டுக் கொண்டே குழந்தையை மடியில் அமர வைத்துக்கொண்டான் அன்பு. அவளும் இப்போது பதிவிசாக பெரியப்பாவிடமே இருந்து கொண்டாள். கணவன் மடியிலிருந்த குழந்தையின் கன்னங்களை பிடித்துக்கொண்டு கொஞ்சினாள் லாவண்யா.
“சும்மான்னு இரு பாப்பா, கவனம் மாறிச்சுன்னா திரும்ப அவ அப்பன்கிட்ட ஓடிடுவா” என்றான் அன்பு.
“நீங்களும் ஜீவாவும் அம்மா செல்லம்தானே, குடும்ப ஜீன் படி இல்லாம உங்க பசங்கலாம் அப்பா பின்னாடி சுத்துதுங்க” என்றாள் லாவண்யா.
“விடுடி எங்களுக்கு கிடைக்காம போனது எங்க புள்ளைங்களுக்கு கிடைச்சிட்டு போகட்டும்” என கணவன் சொன்னதில் லாவண்யாவின் முகம் மாறியது. பின் அவனே, “எல்லாம் அதுக அம்மாங்களை கொண்டு இருக்குதுங்க” என சொல்லி பேச்சை மாற்றி விட்டான்.
குழந்தைகளை ஒவ்வொன்றாக தூக்கி வைத்து ஆடிய ஜீவா, மனைவியையும் தூக்கி விட்டான். மிது வெட்கப்பட்டு அவனது மார்பில் முகம் மறைக்க, ஒரு ஆட்டம் போட்டு விட்டுத்தான் அவளை இறக்கி விட்டான் ஜீவா.
“உன்னை ஆட சொன்னா அவன் இடுப்ப ஒடைச்சு விடுற நீ, இங்க வா போட்டியில தோத்துப் போனதால வந்து தோப்புக்கரணம் போடு, மன்னிச்சி விட்டிடுறேன் உன்னை” என்றான் அன்பு.
“அதெல்லாம் அவ தோத்து போகல ண்ணா, இப்ப ஆடுவா” என்ற ஜீவா மனைவியின் கை பிடித்துக்கொண்டு தானும் ஆடி அவளையும் ஆட வைத்தான். பார்த்திருந்த வாண்டுகள் இரண்டும் கை தட்டி சிரித்தனர்.
“பார்த்தியா பாப்பா, விட்டா ரெண்டும் இங்க ஒரு சினிமாவே காட்டுவாங்க” என மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அன்பு. அவனது தலையில் ஏதோ தூசு தென்பட அதை தட்டி விட்ட லாவண்யா, “நீங்கதான் உசுப்பி விட்டீங்க? இல்லைனா அவன் மட்டும்தான் ஆடியிருப்பான்” என்றாள்.
மனைவியுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த ஜீவாவின் கண்களில் காதல் வழிந்தது.
மனைவியிடம் அவர்களை கண்களால் சுட்டிக் காட்டி கிண்டலாக சிரித்தான் அன்பு.
“நீங்க ரொம்ப ஒழுங்கு” என கணவனை அதட்டினாள் லாவண்யா.
மிதுவின் அருகில் வசமிழந்த ஜீவா அவளது முகத்தை ஆசையாக பார்த்தான். கணவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட மிது, “ஜீவா!” என அதட்டி கண்களை உருட்டினாள்.