மிதுன்யா சென்னைக்கு வந்த பிறகும் கூட ஜீவாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவனை தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள். அவள் அறிந்து கொண்ட உண்மை அவளது நிம்மதியை முற்றிலுமாக அவளிடமிருந்து பறித்திருந்தது.
கல்லூரி, விடுதி என இரண்டு இடங்களை தவிர வெளியே செல்வதே இல்லை. ஆகையால் இவளை நேரில் சந்திக்கலாம் என்ற ஜீவாவின் எண்ணமும் நிறைவேறவில்லை.
வாசுகி வந்து தோழியை கடிந்து கொண்டாள். ஏற்கனவே எடுக்க பட்ட நிகழ்ச்சி அது, இனி ஜீவா அப்படி ஷாலினியுடன் நெருங்கி நடனமாட மாட்டார் என விளக்கம் சொன்னாள்.
மிதுன்யாவின் அமைதியை அலட்சியமாக நினைத்த வாசுகி, “என்னடி என்ன… இவ்ளோ சைலிடிஷா இருக்க நீ? இத காரணமாக்கி அவரை கழட்டி விட நினைக்கிறியோ?” என கடுமையான தொனியில் கேட்டாள்.
கோவம் கொண்ட மிதுன்யா தன் அமைதிக்கான காரணத்தை அவளிடம் சொல்லி விட்டாள்.
“இப்படியெல்லாம் உறவு இருக்குன்னு இப்போதான் எனக்கு தெரியும். அருந்ததி அத்தை அவங்க பையன் மேல எல்லாம் என் தாத்தாவுக்கு ரொம்ப பிரியமாம், அவங்க வீட்டுக்கே என் அக்காவை தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எங்க காதலை எப்படி ஒத்துப்பாங்க?” சீறிய மிதுன்யா தலையில் கை வைத்துக் கொண்டாள்.
தோழி சொன்னதை கிரகிக்கவே வாசுகிக்கு நேரம் தேவைப்பட்டது. அவளது கண்ணோட்டத்தில் எப்படி பார்த்தாலும் இந்த காதல் வெற்றி பெறுவது சிக்கலே.
“என்னதான் செய்யலாம்னு இருக்க?” ஒரு வித பயத்தோடு கேட்டாள் வாசுகி.
“தெரியலை வாசு, நிஜமா தெரியலை” என்ற மிதுன்யா குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“ஜீவாகிட்ட சொல்லலாமே மிது?”
“எப்படி சொல்வேன் வாசு? அவருக்கு தெரியக் கூடாதுன்னுதானே இத்தனை வருஷமா அவரோட அம்மா இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லவே இல்லை, எப்படி தாங்குவார் இந்த உண்மையை?”
“இந்த உண்மை தெரியாம அவரால என்ன செய்ய முடியும்? உன் லவ் பத்தி உன் வீட்ல சொல்லும் போது அவங்களே கண்டுபிடிச்சிட மாட்டாங்களா?” என வாசு கேட்கவும், அவளின் அழுகை பெருகியது.
“டைம் எடுத்துக்க மிது, நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்து மெதுவா ஜீவாகிட்ட சொல்லிடு. உன் ஒருத்தியால இத ஹேண்டில் பண்ணவே முடியாது” என்ற வாசுகி, மேலும் சில நிமிடங்கள் அவளுக்கு ஆறுதலாக பேசி, அவளின் அழுகையை நிறுத்தி விட்டு கிளம்பி விட்டாள்.
அந்த வார இறுதியில் ஒளி பரப்பான நடன நிகழ்ச்சியில் ஜீவா ஷாலினியுடன் நெருக்கத்தை தவிர்த்து அதே சமயம் பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பாக ஆடியிருந்தான்.
ஆனால் என்ன… சிறந்த நடனமாக அவர்களுடையது தேர்வாகியிருக்கவில்லை. அதைப் பற்றி ஜீவாவும் கவலை கொள்ளவில்லை, ஷாலினிதான் ஜீவாவை குறையாக சொன்னாள். அவளையும் அவன் கண்டுகொள்ளவில்லை.
இப்போது அவனது சிந்தையெல்லாம் மிதுன்யா மட்டுமே. அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி எதற்கும் பதில் அனுப்பவில்லை மிது. வாய்ஸ் நோட்களுக்கும் எந்த பதிலும் இல்லை.
‘இவ்ளோ நாளா என்கிட்ட பேசாம என்னை அவாய்ட் பண்றது கொஞ்சமும் சரியில்லை மிது, என்ன சொல்லியும் உன்னோட இந்த செயலை நீ நியாய படுத்த முடியாது. நாளைக்கு ஈவ்னிங் கஃபேல வெயிட் பண்ணுவேன், நீ மட்டும் வரலைனா… ம்ஹூம் சொல்ல மாட்டேன் என்ன செய்றேன்னு நீயே தெரிஞ்சுப்ப’ என சற்று மிரட்டும் தொனியிலேயே வாய்ஸ் நோட் அனுப்பி வைத்திருந்தான்.
என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என நினைத்து அமைதி காத்தாள் மிது. இப்படி அவளுக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன், நீயும் உன் தோழிக்கு எடுத்து சொல் என வாசுகிக்கு தகவல் சொல்லியிருந்தான் ஜீவா.
“என்னடி செய்யலாம்னு இருக்க?” என வாசுகி கேட்டதற்கு, “எதுவும் செய்ய போறது இல்லை” என்றாள் மிது.
“நானும் நல்லா யோசிச்சிட்டேன், எத்தனை வருஷம் ஆனாலும் உங்க லவ் சக்ஸஸ் ஆக ரெண்டே வழிதான்” என்றாள் வாசுகி.
என்னவென மிது பார்க்க, “உன் வீட்ல உண்மை தெரிஞ்சு, உன்னை வீட்டுக்குள்ள போட்டு அடைச்சு, அதுக்காக ஜீவா அங்க வந்து அவங்க கூட சண்டை போட்டு, அங்கேருந்து உன்னை அழைச்சிட்டு வந்து மேரேஜ் பண்ணிக்கிறது, இல்லைனா இந்த ட்ராமாலாம் வேணாம்னு உன் வீட்ல சொல்லாமலே நீயே ஜீவாவை மேரேஜ் பண்ணிக்கிறது” என்றாள் வாசுகி.
“ரெண்டுமே நடக்காது”
“அப்ப உங்க மேரேஜும் நடக்காது”
“ஹ்ம்ம்… நான் ஜீவாவை விட்டு பிரிய போறேன் வாசு” என மிது சொல்லவும் அதிர்ந்து போனாள் வாசுகி.
“கஃபேல மீட் பண்ண வர்றேன்னு அவர்கிட்ட சொல்லிடு” என்ற மிது, அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு வார கால பிரிவுக்கு பின் காதலர்கள் இருவரும் அந்த கஃபேயில் சந்தித்துக் கொண்டனர்.
தன்னை இப்படி தவிக்க விட்டாளே என ஜீவாவுக்கு அவள் மேல் கோவம்தான் என்றாலும் அவளை நேரில் பார்க்கையில் அவனால் கோவப்பட முடியவில்லை. தன் கண்களை தவிர்த்து விட்டு மேசையை பார்த்துக் கொண்டிருந்த மிதுவின் கையை பற்றிக் கொண்டான்.
“இனி உன்னை கஷ்ட படுத்தற மாதிரி இருக்காது மிது என் டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ். போதும் இத்தோட உன் மௌன விரதத்தை ஸ்டாப் பண்ணு” என்றான்.
“நமக்குள்ள ஒத்துப் போகும்னு தோணல ஜீவா” என மெல்லிய குரலில் சொன்னாள்.
“இந்த ஒரு விஷயத்தை வச்சு நீயே முடிவு பண்ணாத. அப்படி ஒத்து போகலைனா கூட என்ன இப்போ? ஒத்துப் போறவங்க ஒன்னா வாழறதுல என்ன சுவாரஷ்யம் இருக்கு?”
“தினம் தினம் கோவம், சண்டை, ஸ்ட்ரெஸ்னு என்னால வாழ முடியாது”
“அப்படித்தான் நம்ம லைஃப் இருக்க போகுதுனு நீயா கற்பனை செய்ற”
“இல்லை, நாம ஒன்னு சேர்ந்தா நான் சொல்றதுதான் நடக்கும். ரெண்டு பேருக்குமே கஷ்டம்” என அவள் சொல்ல, அவளின் கையை விட்டவன், “என்ன சொல்ல வர்ற?” எனக் கேட்டான்.
“இப்போ கஷ்டமா இருந்தாலும் ஃப்யூச்சர்ல நிம்மதியா இருப்போம். நாம… நாம…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
என்ன சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஜீவாவுக்கு கோவம் வந்தாலும், அதைக் காட்டக் கூடிய தருணம் இதுவல்ல என்பதை உணர்ந்து நிதானம் காத்தான்.
“நீங்க உங்க வழில போங்க ஜீவா, இனி உங்கள ஸ்டாப் பண்ண உங்க கூட நான் கிடையாது. இனிமே நாம மீட் பண்ணிக்க வேணாம்” என சொல்லி எழப் போனாள்.
“உட்கார் மிது” சத்தமில்லாமல் அவன் அதட்டல் போடவும் மிரண்டு போனவளாக அமர்ந்து விட்டாள்.
“எப்படி மிது உன்னால இப்படி சொல்ல முடிஞ்சது?” என அவன் கேட்கவும், அழுகையை அடக்க மிகுந்த சிரமப்பட்டாள்.
இருவருக்கும் பருக ஏதோ பானம் வரவழைத்தான். மறுக்க முடியாமல் பருகினாள்.
என்ன சொல்ல வருகிறான் என புரியாமல் விழித்தாள் அவள்.
“சீக்கிரமே புரியும் மிது” என மட்டும் சொன்னான்.
அதன் பின் அவனாக அவளுக்கு அழைக்கவில்லை. ஒரு வேளை ‘பிரியலாம்’ என தான் எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டானோ என நினைத்த அவளும் அவனை தொடர்பு கொள்ளவில்லை.
மிதுன்யாவால் அத்தனை எளிதாக நாட்களை கடக்க முடியவில்லை. போக போக சரியாகும் என தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டே உள்ளுக்குள் குமைந்தாள்.
இனி தனக்கும் ஜீவாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவளது மனம் ஏற்க மறுத்தது. பல நேரங்களில் ‘இது முட்டாள்தனமான முடிவு, காலம் ஒன்றும் கடந்து விடவில்லை, ஜீவாவிடம் உடனே பேசு’ என உள்ளம் கட்டளை போட்டது.
தான் அவனை நெருங்கினால் அவன் பலத்த மனக் காயம் அடைவான், அவனது இத்தனை வருட நிம்மதியான வாழ்க்கை தன்னால் சிதைந்து போகும் என்ற பயம் அவனை சந்திக்க விடாமல் அவளை தடுத்துக் கொண்டே இருந்தது.
அந்த வாரத்துக்கான நடன நிகழ்ச்சியை மிது பார்க்கவில்லை. ஜீவா நன்றாக ஆடினான் என தோழிகள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டாள்.
இருவருக்குள்ளும் சண்டை என மற்றவர்கள் நினைத்திருக்க, வாசுகியோ பிரிந்தே விட்டார்கள் என கவலைபட்டாள்.
அதற்கடுத்த வார நடன நிகழ்ச்சியில் கயிறு கட்டி அந்தரத்தில் ஆடுவது போன்ற காட்சியில் கீழே விழுந்து விட்டான் ஜீவா. கையில் நல்ல அடி, நடனத்தை தொடர இயலாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டதை காண்பித்தார்கள்.