அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.  

வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டிக் கொண்டார். எவ்வளவு மறைத்தாலும் பெற்ற தாய்க்கு மகளின் உண்மையான உணர்வு தெரிய வரத்தானே செய்யும். 

அப்படி தெரிந்து கொண்ட அருந்ததியின் அம்மா விஜயலட்சுமி தன் உறவுக்கார பையனை மகள் மணம் செய்திருந்தால் நன்றாக வாழ்ந்திருப்பாள், நீ சரியான இடமாக பார்க்கவில்லை என செல்வநாயகத்தை குறை பேச ஆரம்பித்தார். 

எப்போதாவது பேசிக் கொண்டிருந்தவர் அடிக்கடி பேச ஆரம்பித்தார். அதை முன்னிட்டு அவருக்கும் மங்கம்மாவுக்கும் சண்டை வரத் துவங்கியது. செல்வநாயகத்துக்கும் குற்ற உணர்ச்சியாக இருக்க, தன் மனைவியைத்தான் அமைதி காக்க சொல்வார். 

வெளியூர் வியாபாரத்தை பாலச்சந்திரன்தான் கவனித்து வந்தார். வேலை நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்வார். சில சமயங்களில் வாரக் கணக்கில் வீட்டுக்கு வராமலே இருப்பார். அருந்ததியுடன் பேசுவதே வெகுவாக குறைந்து விட்டது. 

அன்புக்கு ஒன்பது வயது நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான் சந்திரனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிற விஷயம் கசிந்தது. விசாரிக்கையில் அது உண்மைதான், சென்னையில் யாரோ நடிகையுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிய வந்தது. 

வெகுண்ட செல்வநாயகம் பஞ்சாயத்தை கூட்டி விட்டார். வீட்டிலேயே வைத்து பேசிக் கொள்ளலாம் என தான் சொன்னதை கேளாமல் குடும்ப மானத்தை வாங்கி விட்டார் என செல்வநாயகம் மீது சந்திரனின் அப்பாவுக்கு மிகுந்த கோவம். 

நிறைய சண்டை நடந்தது. சந்திரன் நிரந்தரமாகவே வீட்டை விட்டு சென்று விட்டார். 

செல்வநாயகமும் பசுபதியும் அருந்ததியை தங்களோடு வரச் சொன்னார்கள். அப்போது பசுபதிக்கு திருமணம் முடிந்து லாவண்யாவும் கையில் இருந்தாள். 

“எம் மகனை திரும்ப உன்கிட்ட கொண்டு வந்து சேக்கிறது என் பொறுப்பு, அவன் வரலைனா கொன்னு போட்டு எம் பேரனை நல்லா வாழ வைப்பேன். நீ என் வூட்டு மருமக, இங்கதான் இருக்கணும்” என அருந்ததியிடம் சொன்னார் அவரின் மாமனார்.

என்ன முடிவெடுக்கவென தெரியாமல் திணறினார் அருந்ததி. 

விஜயலட்சுமிக்கோ தன் மகள் புகுந்த வீட்டில் இருப்பதுதான் நல்லது என தோன்றியது. செல்வ நாயகத்தின் மீதான கோவம், மங்கம்மாவுடன் அடிக்கடி நடக்கும் சண்டை, வேறொரு பெண் வாழ வந்த வீட்டில் தன் பெண் வாழா வெட்டியாக நலமுடன் மரியாதையுடன் வாழ முடியுமா, தன் பேரனுக்கு அவன் அப்பா வழியில் கிடைக்கும் ஆஸ்தி இல்லாமல் போகுமே என பலவற்றையும் யோசித்தவர் அருந்ததியை புகுந்த வீட்டிலேயே இருக்க வைத்து விட்டார். 

அப்படி செய்ததில் செல்வநாயகத்துக்கு கோபம். வீடு வந்த பின் அண்ணியை கோபித்துக் கொண்டார், அன்றே ‘இந்த வீட்டில் இருக்க மாட்டேன், என் கணவர் பங்கு சொத்தை பிரித்துக் கொடு’ என தகராறு செய்தார் விஜயலட்சுமி. 

அண்ணியின் செயலில் செல்வநாயகத்துக்கு அதிர்ச்சிதான் என்றாலும் முடியாது என சொல்லவில்லை, அவகாசம் கேட்டார். அண்ணன் மகளின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டிய கடமை இருக்கிறதே, அதைத்தான் முதன்மையாக பார்த்தார். 

சந்திரனை ஊரோடு அழைத்து வருவது பற்றி அருந்ததியின் மாமனாரிடம் பேசினார். பஞ்சாயத்து வரை கூட்டிச் சென்ற உன் உதவி இனி எனக்கு தேவையில்லை, என் குடும்ப விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன், நீ வெளியே போ என அவமானம் செய்து விட்டார் அந்த பெரியவர். 

 தகப்பன் இல்லாத குறை தெரியாமல் தன்னை வளர்த்த தன் சிற்றப்பனை தன் மாமனார் இப்படி அவமரியாதை செய்ததை அருந்ததியாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதே சமயம் மாமனாரின் தயவில்தான் தனக்கும் தன் மகனுக்குமான வாழ்க்கை இருக்கிறது என நம்பிய அவரால் எதுவும் பேசவும் முடியவில்லை. 

என்ன நடந்தாலும் மகளின் வாழ்க்கை பற்றிய அக்கறை செல்வநாயகத்துக்கு இருக்கத்தான் செய்தது. 

உங்கள் மகனை அழைத்து வருகிறேன் என சொன்னதோடு சரி, எதுவும் மெனெக்கெடவே இல்லை நீங்கள் என அருந்ததியின் மாமனாரிடம் கேள்வி கேட்டார்.

 சந்திரனின் அப்பாவும் மகனை இங்கு வரச் செய்ய அவராலான முயற்சிகளை செய்து கொண்டுதான் இருந்தார். ஆனால் அதிகாரமாக தன்னை நோக்கி வரும் நாயகத்தின்  கேள்வியை அவர் ரசிக்கவில்லை. எனவே விளக்கம் ஏதும் சொல்லாமல் எடக்கு முடக்காக பேசினார். 

சந்திரனுக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள், அவர்களுக்கும் திருமணமாகி அனைவருமே ஒரே வீட்டில்தான் இருந்தனர். அந்த வீட்டின் மூன்று மருமகள்கள் இருக்கையில் நாயகத்தின் கண்களுக்கு தன் அண்ணன் மகள் மட்டுமே களையிழந்து சோர்வாக இருப்பதாக பட்டது.  அது உண்மையும் கூடத்தான். 

கணவர் இன்னொருத்தியுடன் வாழும் போது எந்த பெண்தான் மகிழ்ச்சியாக இருப்பாள்.  அது புரியாமல் அருந்ததியை அதிகமாக வேலை வாங்குகிறார்கள் எனதான் நாயகம் நினைத்துக்கொண்டார். 

தன் அண்ணன் மகளை வீட்டோடு வேலைக்காரி ஆக்கி விடுவார்களோ என்ற பயத்தில் நிம்மதியை இழந்த நாயகம் யாருக்கும் தெரியாமல் மகளை சந்தித்தார். 

 “நம்ம வீட்டுக்கு வந்திடும்மா, உனக்கு சேர வேண்டியதை கொடுத்தா அது போதும் நீயும் பேரனும் பொழச்சிக்க. பக்கத்துல நான் இருக்கேன், உன் தம்பி இருக்கான், வந்திடும்மா” என பேசிப் பார்த்தார். 

பசுபதி மணந்து வந்திருக்கும் பெண் பெரிய குடும்பத்தை சேர்ந்தவள், யார்தான் வீட்டோடு ஒரு பெண்  அவளது மகனோடு வசிப்பதை ஏற்றுக் கொள்வார்கள்,  பின்னாளில் ஏதாவது பிரச்சனையாகும் என்றெல்லாம் யோசித்த அருந்ததி சித்தப்பாவுடன் செல்ல மறுத்து விட்டார். அதில் நாயகத்துக்கு மிகுந்த அதிருப்தி மற்றும் வருத்தம். 

சந்திரனின் அப்பாவை அவரது செக்கு ஆலையில் சந்தித்தவர், உங்கள் பையனுக்கு சேர வேண்டியதை பேரன் பெயருக்கு மாற்றி வைத்து விடுங்கள், பெரியவர்கள் நாம் நன்றாக இருக்கையிலேயே செய்து விட்டால்தான் சரியாக இருக்கும் என எடுத்து சொன்னார். 

சந்திரனின் அப்பாவுக்கும் அதே நினைப்புதான், இருந்த போதிலும் நாயகத்தை பிடிக்காத காரணத்தால் வேறு எப்படியோ பேசி விட்டார். 

கோவம் கொண்ட நாயகம் என் மகளை ஏமாற்ற பார்க்கிறாயா, கோர்ட் கேஸ் ஆகி விடும் என அங்கிருந்த ஊழியர்களின் முன்னிலையிலேயே சொல்லி விட்டார். 

தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமியை மூளை சலவை செய்து, என் கணவரின் சொத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்ற பார்க்கிறார் என  நாயகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்து பஞ்சாயத்தில் நிறுத்தி விட்டார். 

“அந்த நேரம் உன் தாத்தா பட்ட வேதனையை சொல்லி மாளாது” என பேத்தியிடம் கதை சொல்லிக் கொண்டிருந்த மங்கம்மா பாட்டி இப்போது கண்ணீர் விட்டார். 

பாட்டி தேற சில நிமிடங்கள் அவகாசம் கொடுத்த மிதுன்யா, “மிச்சத்தையும் சொல்லு அப்பயி” என்றாள். 

“என்னத்த சொல்ல,  அந்த விசயலச்சுமி சொத்தை வாங்கி வித்துட்டு மவ வீட்டோடு போயிட்டா. உன் அத்தைக்காரியோட மன்மத புருஷனை ஒரு வழியா ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தாங்க. வந்தும் என்னத்த அவளை வாழ வச்சான்? குடி குடின்னு நெதமும் குடிச்சு அறுந்து தொங்கின கரண்ட் கம்பில கால வச்சு செத்து போயிட்டான். படுபாவி… அருமையா வளத்த எங்க பொண்ணை கட்டி ஏமாத்திட்டு வேறொருத்தி கூட வாழ்ந்து புள்ளையும் பெத்தானே… அவனுக்கெல்லாம் நல்ல சாவு வந்தாதான்  ஆச்சர்யம்!” என புலம்பினார் பாட்டி. 

“என்ன அப்பயி, அவருக்கு இன்னொரு பையனும் இருந்தானா?”

“பெறகென்ன? எப்படித்தான் குடும்பம் கலைக்கிற வேலைய செய்றாளுவளோ! கல்யாணம் ஆனவனுக்கு புள்ளையை பெத்த அவளெல்லாம்  நல்ல பொம்பளையா இருந்திருப்பா?” 

“திட்டுறத விட்டுட்டு மேல சொல்லு அப்பயி!” 

 “அருந்ததி புருஷன் செத்தப்போ துக்கம் விசாரிக்க போன எங்கள மண்ணை அள்ளி கொட்டி சாபம் விட்டு பேசினா அந்த விசயா. அத்தோட அந்த உறவே போச்சுடியம்மா. அந்த விசயா இருக்க வூட்டுல நம்ம லாவண்யாவை எப்படி கொடுக்கிறதுன்னுதான் அவங்க ஆசைக்கு மசிய மாட்டேங்குறார் உன் தாத்தா” என சொல்லி பெருமூச்சு விட்டார் மங்கம்மா. 

பாட்டி சொன்ன கதையின் மூலமாக மிதுவுக்கு வேறெதுவோ சந்தேகம் வந்தது. நானும் அம்மாவும் முன் ஒருமுறை ஒரு திருமணத்துக்கு சென்றோமே, யார் அவர்கள், நமக்கு எப்படி முறை என விசாரித்தாள்.

“அந்தக் கிழவன் அதான் டி … அருந்ததி மாமனார் செத்து போகவும் துக்கம் சொல்லி விட்ருந்தாங்க. இவ்ளோ நடந்தும் மவ மேல உள்ள பாசம் மட்டும் வுட்டு போகல உன் தாத்தாவுக்கு.  என்னையும் கூட்டிகிட்டு உன் தாத்தா அங்க போயிட்டு வந்தாரு. அந்த விசயா மட்டும் எங்கள பார்த்து மூஞ்ச திருப்பிகிட்டா, இன்னும் கிண்ணுன்னு எப்படி இருக்கா தெரியுமா?”

“அவங்க எப்படியோ இருக்கட்டும், முழுசா சொல்லு அப்பயி”

“அந்த துக்கத்துக்கு நாங்க போனதிலேருந்து அங்க ஏதாவது விஷேஷம்னா முறையா அழைக்கிறாங்க. ‘உன் அண்ணிக்காரி மொறைச்சுக்கிட்டு திரியையில, நாம என்ன குறைஞ்சு போயிட்டோம்னு  எல்லாத்துக்கும் ஓடணும்’னு நான் சத்தம் போட்டேன். நம்மளும் இறங்கி போக வேணாம்,  அழைச்சவங்கள அவமானமும் செய்யக் கூடாதுன்னுதான் உன் அம்மா அங்க நடக்கிற விஷேஷத்துக்கு எல்லாம் போயிட்டு வருவா”

“அந்தக் கல்யாணத்துக்கு நாங்க போனோமே அவங்க…”

“சந்திரனோட அண்ணன் மக கல்யாணத்துக்குத்தான் நீங்க போனீங்க” என்றார் பாட்டி. 

“அங்க அருந்ததி அத்தையும் வந்திருந்தாங்களா?”

“அவ எப்படி வருவா? வெக்கம் மானம் இல்லாதவன் என்னமோ பெருசா காசு கொடுத்து உதவிட்டான்னு கல்யாண பத்திரிக்கையில  அவ பேரையுமில்ல போட்டுட்டான். முறை செய்யணும்னுதான் உன் அம்மாவே போனா. மானங்கெட்ட பய அவன்” திட்டினார் பாட்டி. 

சந்திரனின் அப்பா நன்றாக இருக்கும் போதே அவரது மூன்று மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்து விட்டார். சந்திரனுக்கு உரியதை அவரது பெயரில் எழுதாமல் பேரனுக்கு சேரும் படியே எழுதி விட்டார். அருந்ததி நல்ல வாழ்க்கை வாழவில்லை என்ற ஆதங்கம் அவருக்கும் இருந்ததால் அந்த மருமகளுக்கென  தனியாக ஒரு பங்கு கொடுத்து விட்டார். 

அதில் மற்ற இரு மகன்களுக்கும் அப்பாவின் மீது வருத்தம். 

சந்திரனின் அண்ணன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து உழைக்கவும் தெரியாமல் வாழ்ந்து கெட்டவர் என்ற நிலைக்கு வந்து விட்டார். 

அவரது மகளின் திருமணத்துக்கு சந்திரனின் இரண்டாவது மனைவி பண உதவி செய்த காரணத்தால் அழைப்பிதழில் அவரின் பெயரையும் போட்டு மற்ற சொந்தங்களை பகைத்துக் கொண்டார். 

“உன்கிட்ட கதை பேசி பேசி கால் மரத்து போச்சு” என சொல்லி கால்களை நீவி விட்டுக் கொண்டார் மங்கம்மா பாட்டி. 

அதன் பின் அவர் பேசியதோ அங்கிருந்து அவர்கள் கிளம்பி வீடு வந்ததோ எதுவுமே மிதுவின் கவனத்தில் பதியவே இல்லை. 

அன்று அம்மாவுடன் திருமணத்திற்கு சென்ற போது முகவரிக்காக கல்யாண பத்திரிக்கையை எடுத்து சென்றது நினைவிற்கு வந்தது. பழைய தினசரி, அழைப்பிதழ்கள் வைத்திருக்கும் இடத்தில் ஆராய்ந்து பார்த்து அவள் தேடிய அழைப்பிதழையும் கண்டு பிடித்து விட்டாள் மிதுன்யா. 

பெண் வீட்டினரின் பெயர்கள் போடப் பட்டிருந்ததில் கோபிகா, ஜீவநந்தன் எனவும் பெயர்கள் போடப் பட்டிருந்தன. 

கையில் ஆதாரம் இருக்கையில் இப்படி இருக்காது என எப்படி அவளால் சிந்திக்க முடியும்.

உண்மையை ஜீரணிக்க முடியாமல் மிதுன்யாவுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.