ஜீவாவுக்கும் மிதுன்யாவுக்கும் பெரிய சண்டை. கடந்த வாரம் நடந்த நடன நிகழ்ச்சியில் ஷாலினியோடு அவன் ஆடியிருந்ததுதான் காரணம். தேர்வு செய்திருந்த டூயட் பாடலுக்கு ஏற்றது போலதான் இருந்தது நடனம். சிறந்த நடனமாக கூட அவர்களுடையதுதான் தேர்வு செய்யப் பட்டிருந்தது.
நடனத்தின் போது ஜீவாவுக்கும் ஷாலினிக்கும் இடையில் இருந்த அந்த நெருக்கம் அதீதம்தான். அவர்களுக்கு என தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பிலேயே நடனம் இயக்கித் தர மாஸ்டர் ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார். அவர் அமைத்த நடனத்தைதான் அவர்கள் ஆடியிருந்தனர்.
இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரியில் எங்களுக்கும் காதல் வந்து விட்டது என்றெல்லாம் பேசியிருந்தனர் நடுவர்கள். நிகழ்ச்சி ஒளிபரப்ப படுவதற்கு முன்பே இவர்களின் நடனத்தைதான் அதிகமாக விளம்பரம் செய்திருந்தனர். அப்போதிலிருந்தே மிதுவுக்கு என்னவோ போலிருந்தது.
இந்த வார நிகழ்ச்சியை பார்க்க கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தாள், உடனிருந்த தோழிகள் விட்டால்தானே? பார்க்கும் போதே அவளது உள்ளம் எரிவது போலிருந்தது, போதாத குறைக்கு தோழிகள் வேறு, “ஜீவா உன்னை கழட்டி விட்டுட்டு அந்த ஷாலினி கூடவே மிங்கிள் ஆக போறாரு போல” என கிண்டல் செய்வதாக நினைத்து அவளை இன்னும் தூண்டி விட்டனர்.
கிராமத்தில் வளர்ந்த மிதுன்யாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு சாதாரண பெண்ணுக்குமே தான் விரும்புவனை இன்னொரு பெண்ணுடன் இத்தனை நெருக்கமாக காண இயலாதுதான்.
ஏன் கோபிகாவே, “என்னடா இது?” என மகனை கடிந்து கொண்டார்.
“எல்லாமே ஒரு அளவுக்குத்தான் ஜீவா, ஓவரா போனா அதோட அழகு சிதைஞ்சு போயிடும்”
“ம்மா!”
“ஒட்டி உரசி ஆடினாதான் ரெண்டு பேருக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லாருக்கும்னு யாருடா சொன்னா? ஆடுற ரெண்டு பேருக்கும் இடைல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும், எமோஷன்ஸ் பார்வைல கொண்டு வரணும், சொல்ல வர்றத பாடி லாங்குவேஜ்ல கூட கன்வே பண்ணணும், ஒரு நல்ல டான்ஸ் பார்க்கிறவங்களுக்கு கதை சொல்லும். இத பார்த்தா… பார்க்கிறவங்களுக்கு என்னடா தோணும்?”
நடனம் அமைத்த போதே ஜீவாவுக்கும் இதில் உடன்பாடு இல்லைதான், ஷாலினி இதுதான் பிரமாதமாக இருக்கும் என்றாள். பெண்ணே ஆட தயாராக இருக்கும் போது உனக்கென்ன பிரச்சனை என மாஸ்டர் கேட்டது அவனது ஈகோவை சீண்டியிருக்க, அவர் சொன்ன படியே ஆடி விட்டான்.
இனி பார்த்துக் கொள்கிறேன் என அம்மாவிடம் சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான். எப்படியும் மிது அவளாக அழைக்க மாட்டாள் என தெரிந்து அவனே அழைத்தான். கொதித்துக் கொண்டிருந்தவள் இவனை காயப்படுத்தி விட்டாள். ஏற்கனவே மனக்கிலேசத்தில் இருந்தவனும் பதிலுக்கு அவளை காயப்படுத்தினான்.
நான்கு நாட்களாக இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லை.
அடுத்த வாரம் ஒளி பரப்பாக இருக்கிற நிகழ்ச்சி ஏற்கனவே எடுத்து முடித்திருந்தனர். அதை இவனால் மாற்றி அமைக்க முடியாதே, இப்போது பயிற்சி செய்து கொண்டிருந்த நடனத்தின் அமைப்பில்தான் அவனால் தலையிட முடிந்தது. மாஸ்டருக்கும் அவனுக்கும் சண்டை.
இந்த இரண்டு வாரங்களிலேயே ஜீவாவுக்கு ரசிகர்கள் உருவாகியிருந்தார்கள், ஆகவே அவனை இழக்க சேனல் விரும்பவில்லை. அவனுக்கான மாஸ்டரை மாற்றம் செய்து தருவதாக சொன்னார்கள். தானே பார்த்துக் கொள்கிறேன் என ஜீவா சொல்ல, அதற்கு சேனல் ஒத்துக் கொள்ளவில்லை.
அந்த புதிய மாஸ்டர் உனக்கு விருப்பமில்லாத நடன அசைவுகள் வைக்க மாட்டேன் என உறுதி அளித்திருக்க, அவனும் சரியென விட்டான்.
நான்கு நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் சண்டையை தீர்க்க நினைத்து முதலில் ஜீவாவே ‘ஸாரி’ என கேட்டு செய்தி அனுப்பி வைத்தான். மிதுவும் இப்படி இவனுடன் பேசாமல் இருந்தது இல்லையே, அவனாக இறங்கி வரவும் அவள் அழைத்து விட்டாள்.
இனி இப்படி நெருக்கமாக ஆட மாட்டேன் என உறுதி சொன்னான் ஜீவா. அவளும் சரி என்றாள். முதல் நாளிரவு உறங்காதது, இன்றைய பகலிலும் மாஸ்டர் மாறிய விவகாரம் என அசதியாக இருந்தவன் இந்த வாரம் வரப் போகிற நிகழ்ச்சி ஏற்கனவே எடுக்க பட்டது என்பதை பற்றி அவளிடம் சொல்லவில்லை.
மிதுவுக்கு முக்கியமான டெஸ்ட் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அதிகமாக வேறு விஷயங்கள் பேசிக் கொள்ளவில்லை.
ஞாயிறு இரவு ஜீவா மீண்டும் ஷாலினியுடன் நெருங்கி ஆடியதை பார்த்தவளுக்கு கோவம் உச்சத்தில் ஏறியது.
சற்று முன்னர்தான் “ஜீவா இனிமே அப்படி ஆட மாட்டார், என்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கார்” என ஜம்பமாக தன் தோழிகளிடம் சொல்லியிருந்தாள்.
அவர்களின் கிண்டல் கச்சேரியை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பொய்யான காரணம் ஒன்றை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி விட்டாள். பிரயாணத்தின் போது ஜீவாவின் அழைப்புகளை ஏற்காமல் நிராகரித்தாள். வீடு போனவள் கைப்பேசியை அணைத்தும் வைத்து விட்டாள்.
வீட்டினரை மிகவும் மிஸ் செய்ததாகவும் விடுதி உணவு பிடிக்கவே இல்லை எனவும் மிது கூறவும், பசுபதிக்கு உருகிப் போய் விட்டது. கல்லூரிக்கு அழைத்து மகளுக்கு விடுப்பு சொல்லி விட்டார்.
மிதுவிடம் விளக்கம் சொல்லி விட நினைத்து வாசுகியிடம் உதவி கேட்டான் ஜீவா.
“சிட்டியில பொறந்து வளர்ந்த என்னாலேயே என் பாய் ஃபிரண்ட் இப்படி டான்ஸ் ஆடினா ஈஸியா எடுத்துக்க முடியாது, நீங்க ஆடுறதே அவளுக்கு பிடிக்கல, இப்படி ஆடினா கண்டிப்பா கோவம் வரும்தானே? ஏன் இப்படி பண்றீங்க?” எனக் கேட்டாள் வாசுகி.
வாசுகிக்கு விளக்கம் சொன்னவன் எப்படியாவது மிதுவை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டான். அப்போதுதான் அவள் ஊருக்கு சென்ற விவரத்தை சொன்னாள்.
வாசுகி விடுதியில் இருப்பவள் இல்லையே, ஆகவே மற்ற தோழிகள் மிதுவை கிண்டல் செய்ததை நேரில் கண்டிருக்கவில்லை அவள், ஆனாலும் கேள்வி பட்டிருந்தாள், அதையும் ஜீவாவிடம் சொன்னாள்.
இந்த விஷயம் மிதுவை அதிகமாக பாதிக்க செய்திருப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு எப்படி அவளை சமாதானம் செய்வது என்றுதான் புரியவில்லை.
தாத்தா செல்வநாயகத்தின் ஒன்று விட்ட அண்ணனின் மகன் அவரை காண வந்திருந்தார். மிதுவுக்கு அவரை அவளது சிறு வயதில் எப்போதோ பார்த்ததாக நினைவு. லாவண்யாவுக்கு வரன் பார்ப்பது கேள்விபட்டு அது சம்மந்தமாக பேசுவதற்காக வந்திருந்தார் அவர்.
வீட்டு பெரியவர்கள்தான் பேசிக் கொண்டனர். வந்திருந்தவர் யாரோ ஒரு பையனை பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பேச்சு தாத்தாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவரது முகத்தை பார்த்தாலே தெரிந்தது.
“எங்க வீட்டு பொண்ண கொடுக்க நாங்க பிரிய படலை, மேல மேல பேச்சை வளக்காத” என சற்றே கோவமாக தாத்தா சொல்வது உள் அறையில் இருந்த சகோதரிகள் இருவருக்கும் கேட்டது.
“என்னக்கா யாரு இவரு?” என விசாரித்தாள் மிதுன்யா.
“ரெண்டு மாசம் முன்னாடி அம்மா அப்பா நான் மூனு பேரும் தாத்தாவோட ஒன்னு விட்ட தங்கச்சியோட மக வயித்து பேரனோட…” என லாவண்யா சொல்ல, கையெடுத்து கும்பிட்டாள் மிது.
“சரி சரி, சொந்தத்துல ஒரு கல்யாணத்துக்கு நாங்க போயிருந்தோம். போட்டோக்காரன் என்னையும் போட்டோ எடுத்து வச்சிருக்கான். அந்த கல்யாண ஆல்பத்துல நானும் இருக்கேன். இது எப்படி அவன் கண்ணுல பட்டுச்சோ…”
“எவன் கண்ணுலக்கா?”
“தெரியலைடி, யாரோ…” என அசுவாரஷ்யமாக சொன்னாள் லாவண்யா.
அன்பு என்பவன்தான் அவன். அவனது கண்ணில் லாவண்யாவின் புகைப்படம் பட, முதல் பார்வையிலேயே அவனுக்கு இவளை பிடித்தும் போய் விட்டது. யாரென விசாரித்து தெரிந்து கொண்டவன், இவளை கல்யாணம் செய்து கொள்ள பிரியப் படும் செய்தியை அவனது வீட்டிலும் சொல்லியிருக்கிறான்.
இவளை பெண் கேட்டு தூது வந்து கொண்டிருக்கின்றனர், தாத்தாவோ என் பேத்தியை அந்த குடும்பத்துக்கு தர மாட்டேன் என பிடிவாதம் செய்கிறார்.
இன்று வந்திருப்பவர் லாவண்யாவை அன்புக்கு கட்டி வைக்க சொல்லி சிபாரிசு செய்ய வந்திருக்கும் மூன்றாவது ஆள். இதற்கு முன்னரும் இருவர் வந்து பேசி சென்றிருந்தனர்.
“எனக்கு கல்யாணம்னாதான் உனக்கு சொல்வாங்க, இதையெல்லாம் சின்ன புள்ள உன்கிட்ட என்ன சொல்றது?” என அதட்டிய லாவண்யா, “என்கிட்டயே எதையும் சொல்றது இல்லையாம், இதுல இவகிட்ட சொல்லலைனு கேட்குறா” என புலம்பினாள்.
தான் நினைத்து வந்ததில் வெற்றி பெற இயலாமல் தொங்கிய முகத்தோடு சென்று விட்டார் அந்த மனிதர்.
“உனக்கு என்ன ஏதுன்னு தெளிவா தெரியணும் அதானே, நான் கண்டுபிடிச்சி சொல்றேன்” என அக்காவிடம் சொன்ன மிது, அன்று மாலையே பாட்டியை தோட்டத்து வீட்டுக்கு கடத்தி சென்று விட்டாள்.
செல்வநாயகத்துக்கு உடன் பிறந்த மூத்த சகோதரர் அருமைநாயகம் என்பவர் இருந்தாராம். இருவரும் அத்தனை ஒற்றுமையாக பாசமாக இருப்பார்களாம். நாயகத்தின் அண்ணனுக்கு திருமணம் முடிந்து அவர்தான் மங்கம்மாவை பெண் பார்த்து தம்பிக்கு கட்டி வைத்தாராம்.
திருமணத்துக்கு பின்னரும் கூட ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருந்தனர். திடீரென நெஞ்சுவலி வந்து அருமைநாயகம் இறந்து விட்டார். அண்ணனின் மகள் அருந்ததியை தன் மகளை போலதான் வளர்த்திருக்கிறார் செல்வநாயகம்.
அருந்ததிக்கு திருமண வயது வரவும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். நல்ல வரனாக இவர் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்க, தன் உறவுக்கார பையனை பார்க்கலாம் என்றிருக்கிறார் அருந்ததியின் அம்மா விஜயலட்சுமி.
அந்த பையன் வசதியாக இல்லாத காரணத்தால் வேண்டாம் என மறுத்து விட்டவர் அடுத்த இரண்டே மாதங்களில் பாலச்சந்திரன் என்பவரை அண்ணன் மகளுக்கு மாப்பிள்ளையாக மாற்றினார்.
பாலச்சந்திரனும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்தான், எண்ணெய் வியாபாரம்தான் அவர்களின் குடும்பத் தொழில். வெளியூர், வெளி மாநிலங்கள் என பெரிய அளவிலான வியாபாரம்.
வசதி, குடும்ப பாரம்பரியம், மாப்பிள்ளையின் தோற்றம் என எல்லா வகையிலும் சிறப்பான பையனை பார்த்து அருந்ததிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டேன் என மார் தட்டிக் கொண்டார் செல்வநாயகம்.
அருந்ததியை பாலச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை, அவரது வீட்டில் அது கட்டாய கல்யாணம், இருவருக்குள்ளும் ஒத்து வரவில்லை. இருவருமே அந்த திருமணத்தை வெற்றி பெற செய்ய முயன்றனர். கடமைக்காக ஏதோ வாழவும் செய்தனர்.