கொஞ்சும் காதல் சாரல் -6

அத்தியாயம் -6

மிதுன்யா விடுமுறை முடிந்து சென்னைக்கு வந்து விட்டாள். ஜீவாவும் இப்போது சென்னையில் அவனது அம்மாவுடன்தான் தங்கியிருக்கிறான். 

தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நண்பர்கள் சிலர் வேலை தேடவென சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இவனது நெருங்கிய நண்பன் மாசிலாமணி மதுரையில் குக்கிராமத்தை சேர்ந்தவன், அவனுக்கு வெளியில் அறை எடுக்கவெல்லாம் சிரமம் என்பதால் ஊரிலேயேதான் இருந்தான். அவனை சென்னைக்கு வரவழைத்து தன் வீட்டிலேயே தங்க வைத்திருந்தான் ஜீவா. 

அவ்வப்போது மற்ற நண்பர்களையும் வீட்டுக்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். 

இப்போது மிதுன்யாவிடம் புதிய கைப்பேசி இருக்க, காதலர்கள் இருவருக்கும் பேசிக் கொள்ள தடையேதும் இல்லை.

பேசியது போதும் நேரிலும் சந்தித்துக் கொள்ளலாம் என மிதுன்யாவை வெளியில் அழைத்தான். அவளும் ஒத்துக் கொண்டாள். சந்திப்புக்கான இடமாக கேஃபே ஒன்றை தேர்வு செய்தனர். 

உற்சாகமாக சென்ற ஜீவா, தோழிகள் புடை சூழ வந்த மிதுன்யாவை கண்டு மனதுக்குள்ளேயே அலறி விட்டான். வாசுகி, தீபாவை தவிர இன்னும் இரு பெண்கள் மதுரையில் கலை விழாவின் போது இவனை நேரில் பார்த்திருக்கிறார்கள், மற்றவர்களும் பார்க்க ஆசை பட்டதால் அழைத்து வந்தாளாம். 

காதலை சொல்லிக் கொண்ட பிறகு முதல் நேரடி சந்திப்பு, இப்படி சொதப்பி வைப்பாளா என நினைத்துக் கொண்டவனால் அனைவரின் முன்னிலையில் அவளை எதுவும் சொல்லக்கூட முடியவில்லை. 

மிதுன்யாவிடம் இவனால் தனிப்பட்ட முறையில் எதுவுமே பேச முடியவில்லை, மற்றவர்கள் விட்டால்தானே? 

அந்த சந்திப்பு முடியவும் கைப்பேசி வாயிலாக அவளை கடிந்து கொண்டான். 

அவள் முகத்தை தூக்கிக் கொள்வது அவளை பார்க்காமலேயே அவனுக்கு புரியவும் அவனே சமாதானமும் செய்து வைத்தான். 

அடுத்த முறை கோயில் ஒன்றுக்கு வர சொல்லியிருந்தான். முன்னர் போல பெரும் படை இல்லா விட்டாலும் இப்போதும் மூவருடன் சேர்ந்துதான் வந்திருந்தாள். 

வந்தவர்களுக்கு பிரசாத லட்டு வாங்கிக் கொடுத்தான். ‘வராதவர்களுக்கும் சேர்த்து வாங்கித் தாங்க பிரதர்’ என உரிமையாக சொல்லி இன்னும் வாங்கிக் கொண்டாள் ஒருத்தி. 

இவர்களை அனுப்பி வைத்து விட்டு மிதுன்யாவை பீச்சுக்கு கடத்தி செல்ல திட்டம் போட்டான். சமயம் பார்த்து அவளிடம் ரகசியமாக சொல்லவும் செய்தான். 

ஹையோ ஜீவா! நாங்க எல்லாருமே உங்கள மீட் பண்ணிட்டு பீச் போகத்தான் பிளான் பண்ணியிருக்கோம்” என்றாள். 

“சென்னைல ஒரு பீச்தான் இருக்கா, எங்க பிளான் போட்டீங்களோ அங்க மத்தவங்க போகட்டும், நாம வேற பீச் போலாம்” என்றான். 

அவள் தயங்க, கண்களால் கெஞ்சியே சம்மதம் வாங்கி விட்டான். மற்ற தோழிகளும் கிண்டல் செய்து விட்டு புறப்பட்டு விட்டனர். 

திருவான்மியூர் பீச் வரை உற்சாகமான பைக் பயணம். இறங்கியதுமே அவன் அவளது கை பிடித்துக்கொள்ள, அவள் வெட்கப்பட்டு விலக நினைக்க, அவன் விடாமல் போக என இனிமையாக நகர்ந்தன நொடிகள். 

“அவனவன் லவ் சொன்ன அடுத்த நாளே வெளியூர் வெளிநாடுன்னு எங்கெங்கேயோ போறாங்க, உன்னை ஒரு பீச்க்கு தனியா அழைச்சிட்டு வர்றதுக்குள்ள… ஏன் மிது உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட மட்டும் இப்படி ஒரு வில்லத்தனம்?” 

“என் கூட தனியா பேசணும் பேசணும்னு துடிச்சிட்டு இருந்தீங்களே, என் ஃப்ரெண்ட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தானா?” 

“அதானே, நாம வேற பேசலாம். சொல்லு மிது என் கூட இப்படி நடந்து வர்றது எப்படி இருக்கு?”

“எனக்கு சொல்லத் தெரியலை, ஆனா ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள். 

ஐந்து நிமிடங்கள் கூட அவளுடன் அவன் சேர்ந்து நடந்திருக்கவில்லை. இவளுடன் கோயிலுக்கு வராத மற்ற தோழிகள் இங்கு வந்திருப்பார்கள் போலும், அடையாளம் கண்டு கொண்டு இவர்களிடமே வந்து விட்டனர். 

ஆசையாக இவன் ஏதோ இவளிடம் சொல்ல வாய் திறப்பதற்குள், “ஹே மிது, இங்கதான் இருக்கியா? எப்போடி வந்த, உன்னை பார்க்கவே இல்லை நாங்க” என்றாள் தீபா. 

கடலின் இரைச்சலை விட அதிகமாக இருந்தது ஜீவாவின் மன ஓல இரைச்சல்.

பிறகென்னவந்தவர்களுக்கு கடலை, ஐஸ்க்ரீம், மாங்காய் தேங்காய் சுண்டல் வாங்கிக் கொடுத்தே களைத்துப் போய் விட்டான் ஜீவா. 

இப்படியா அவர்களால் எங்கேயுமே தனியாக சந்திக்க முடியவில்லை. 

இருவருக்கும் தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. முந்தைய ஆண்டை விட நல்ல விழுக்காடு பெற்றிருந்தாள் மிதுன்யா, ஜீவாவோ அனைத்திலும் டிஸ்டிங்ஷனோடு தேர்ச்சி பெற்றிருந்தான். 

 இந்த மகிழ்ச்சியை கொண்டாடலாம், தனியாக வா என ஜீவா சொல்ல, “அதெல்லாம் சரியா வராது, ரெண்டு வருஷமா ஃபிரெண்ட்ஸ்லாம் சேர்ந்துதான் வெளில போயிட்டு இருக்கோம், திடீர்னு எப்படி என் ஃப்ரெண்ட்ஸை அவாய்ட்  பண்றது? அப்புறம் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க, அதான் ஃபோன்ல பேசிக்கிறோமே, பின்ன என்ன தனிமையில வேற பேசணும்” என சொல்லி விட்டாள். 

“நீ தனியா வந்தா என்னை பார்க்க வா, இல்லைனா வராத” என சொல்லி விட அவனுக்கு நாக்கு துடித்தாலும், அவள் வருத்தப்படுவாள் என கருதி கோவத்தை அடக்கிக் கொண்டான். 

பின் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையாமலேயே இருந்தது.

மாசிலாமணிக்கு நல்லதொரு வேலை கிடைக்க தனக்கு தெரிந்தவர் மூலமாக உதவி செய்தார் கோபிகா. எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் நம் வீட்டிலேயே தங்கிக் கொள் எனவும் சொன்னார். இதற்கு மேல் இங்கு இருந்தால் நன்றாக இருக்காது, கண்டிப்பாக அடிக்கடி வந்து செல்கிறேன் என சொல்லி வெளியேறத்தான் பார்த்தான் மணி. 

நண்பனின் சங்கடத்தை புரிந்து கொண்ட ஜீவா அவனே வீடு பார்த்து, வீட்டுக்கான அட்வான்ஸ் பணத்தையும் அவனே செலுத்தி நண்பனை குடி வைத்தான். இப்போதும் மணிக்கு சங்கடம்தானே, ஆகவே இயலாமையோடு பார்த்தான். 

“கடனா இருக்கட்டும் டா, உனக்கு முடியறப்போ கொடு, கண்டிப்பா வாங்கிக்கிறேன், போதுமா?” என சொல்லி அந்த சங்கடத்தையும் அகலச் செய்தான் ஜீவா. 

நெருங்கிய நண்பர்களுக்குள் என்ன பெரிய நன்றி? ஆனால் கோபிகா செய்தது பெரிய விஷயம்தானே, ஆகவே அவரிடம் மனமார நன்றி சொன்னான். 

“இந்த உதவிகளாலதான் உலகமே இயங்குது மணி. நான் கஷ்ட படுற காலத்துல எனக்கு உதவி செஞ்சவங்க இருக்காங்க, அவங்களுக்கு திரும்ப என்னால எதுவுமே செய்ய முடிஞ்சது இல்லை, அவங்க எதிர்பார்க்கவும் இல்லை. என் கண் முன்னாடி உனக்கு ஒன்னு தேவைப்படும் போது அதை எங்களால செய்ய முடியுதுன்னா அதுவே எங்களுக்கு சந்தோஷம். நீயும் நல்ல நிலைக்கு வந்து யாருக்காவது உதவி செய்யும் போது என் மனநிலை உனக்கு புரியும்” என்றார். 

மணியின் மனதில் கோபிகா மிகவும் உயர்ந்து நின்றார். “உங்க மகனையும் உங்களை போலவே நல்லா வளர்த்திருக்கீங்கம்மா” ஜீவாவின் தோளை பிடித்துக்கொண்டு சொன்னான். 

“டேய் இவங்க எங்கடா என்னை வளர்த்தாங்க, என்னை மதுரைல விட்டுட்டு சென்னைல இருந்தாங்க” என்றான் ஜீவா. 

“ஆமாம் துரை தாந்தோந்தியா வளர்ந்தவர். இத்தோட நிக்கட்டும் உங்க வளர்ச்சி, இதுக்கு மேல வளர்ந்தா உன் சைசுக்கு பேண்ட் ஷர்ட் வாங்க கஷ்டம் ஆகிடும்” என மகனை கிண்டல் செய்தார் கோபிகா.

“நீங்க நார்மல் ஹைட் மா, இவன் நல்ல உயரம், இவன் இவனோட அப்பா மாதிரியா? அவர் நல்ல உயரமோ?” எனக் கேட்டு விட்ட மணி, பின் ஏன் இப்படி கேட்டோம் என விழித்தான். 

கோபிகாவோ வெகு இயல்பாக ஆமாம் என சொல்லி விட்டு சென்றார். 

“அம்மா தப்பா எடுத்துக்க மாட்டாங்க, விடுடா” என்றான் ஜீவா. 

“உன் அப்பா பத்தி பேசுறது இல்லைனு நீ சொல்லியிருக்க, நினைவில்லாம பேசிட்டேன் டா, ஸாரி” என்றான் மணி. 

பரவாயில்லை விடு என ஜீவா சொல்ல, உன் அப்பா பற்றி தெரிந்து கொள்ள, குறைந்த பட்சம் அவரது புகைப்படத்தையாவது பார்க்க உனக்கு ஆசை இல்லையா எனக் கேட்டான் மணி. 

“ஒரு வேளை அப்பாங்கிற கேரக்டரோட பழக சான்ஸ் இருந்து அப்புறம் அவர் இல்லாம போயிருந்தா ரொம்ப ஏங்கி போயிருப்பேனா இருக்கும். எனக்கு எல்லாமே அம்மாதான், அவங்கள கஷ்ட படுற விஷயத்தை பத்தி ஏன் பேசணும் சொல்லு?” எனக் கேட்ட நண்பனை கட்டியணைத்து பின் விட்டான் மணி. 

ஒரு நாள் தோழிகளுடன் மால் ஒன்றில் உள்ள திரையரங்கம் வந்திருந்தாள் மிதுன்யா. படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவளுக்கு அழைத்து விட்டான் ஜீவா. தானும் மாலில் இருப்பதாக சொன்னவன் அவளை வெளியில் வரச் சொன்னான். 

“விளையாடாதீங்க,  என்னன்னு சொல்லிட்டு வெளில வர்றது?” ஆசையிருந்தாலும் தோழிகளின் கிண்டலுக்கு பயந்து செல்லத் தயங்கினாள். 

“செம மொக்கை படம் மிது அது, உன்னை காப்பாத்தத்தான் அங்கேருந்து வர சொல்றேன்” என்றான் காலையிலேயே முதல் காட்சியை பார்த்து விட்ட ஜீவா.  

“பரவாயில்லை, காசு கொடுத்து டிக்கெட் எடுத்தாச்சு, அத வேஸ்ட் பண்ண விரும்பல” என அவள் சொல்லவும் செல்லக் கோபத்துடன் கைப்பேசியை வைத்து விட்டான்.