மகிழ்ச்சி, நம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்கு அழுகை  வரும் போலிருந்தது. 

பிடித்திருந்த அவளின் கையை சுண்டி இழுத்து அவளை தன்னை நோக்கி ஓரடி முன்னேறி வரச் செய்தான். 

அவள் அவனது முகத்தை காண்பதும் வேறு பக்கம் பார்த்து விட்டு மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையால் முகாமிடுவதுமாக இருந்தாள். 

“நாம சின்ன பசங்களா மிது, கல்யாணத்துக்கெல்லாம் நிறைய வருஷம் இருக்கா?” எனக் கேட்டான். 

“ஆமாம், இப்போ கையை விடுங்க” என்றாள். 

சின்ன புன்னகையுடன் இருவரும் விலகிக் கொண்டார்கள். 

அடுத்த பத்து நிமிடங்களில் சென்னை செல்ல பேருந்தில் டிக்கெட் போட்டு விட்டான். 

“நீ லீவ் முடிஞ்சு காலேஜ் வந்தப்புறம் மீட் பண்ணலாம்தானே?” என அவன் கேட்கவும் சம்மதம் சொன்னாள். 

வாசுகியுடன் இவளை சமாதானம் செய்து வைத்து இருவரையும் இயல்பாக பேசிக் கொள்ள வைத்தான். 

அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என சொல்லி அன்றே கிளம்பியும் விட்டான். இந்தப் பக்கம் எப்போது வந்தாலும் நம் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என அன்புக்கட்டளை போட்டார் பாட்டி. பசுபதியே காரெடுத்து  அவனை தஞ்சையில் விட்டு வந்தார். 

அடுத்த நாள் மதியத்தில் வினோதினி வந்து விட்டார். நல்ல வேளையாக ஜீவா சென்று விட்டான் என நிம்மதி அடைந்தாள் மிதுன்யா. ஆனால் சின்ன மகளை அடிக்கடி ஏதோ யோசனையாக பார்த்தார். 

ஒரு வாரத்தில் அவளது தோழிகள் கிளம்பிய பிறகுதான் என்னம்மா என விசாரித்தாள் மிதுன்யா. 

வினோதினியின் அண்ணன் மகள் பெங்களூரில் படிக்கிறாள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பையனை விரும்புகிறாளாம், வீட்டில் யாருக்கும் சம்மதம் இல்லையாம், அவளது மனதை மாற்ற முயற்சி செய்கிறார்களாம், அவளோ மிகுந்த பிடிவாதமாக இருக்கிறாளாம். இதனால் தான் இவரது அம்மாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உடம்புக்கு முடியாமல் போய் விட்டதாம். 

 “நல்ல பையன்னா அத்தாச்சி விருப்ப படி கல்யாணம் செஞ்சு வைக்கலாமே ம்மா” என்றாள் மிதுன்யா. 

சுள் என மகளின் தொடையில் அடித்தவர், “பெத்தவங்க எங்களுக்கு தெரியாதா என்ன செய்யணும்னு? உன்கிட்ட  என்ன செய்யலாம்னு யோசனை கேட்டு ஒன்னும் இத சொல்லலை, என் அண்ணன் பொண்ணு மாதிரி பெத்தவங்களுக்கு துரோகம் பண்ணிடாதன்னு சொல்லத்தான் இத சொல்றேன்” என்றார். 

மிதுன்யா அம்மாவை முறைத்தாள். இன்னொரு முறை படிப்பை தவிர உனக்கு வேறு சிந்தனையே இருக்க கூடாது என கட்டளையாக சொல்லி சென்றார் அவர். 

அப்பா பாட்டிக்கெல்லாம் ஜீவாவை பிடித்திருக்கிறது, சொந்தம் எனும் போது வேற்று ஆள் என கூட பெரியவர்கள் யோசிக்க மாட்டார்கள், அப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னால் மாட்டேன் என எப்படியும் சொல்ல மாட்டார் என உறுதியாக நம்பினாள் மிதுன்யா. 

ஜீவா சென்னை வந்தடைந்த போது கோபிகாவும் வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார். 

தன்னிடமிருக்கும் சாவியை கொண்டுதான் வீட்டை திறக்க வேண்டும் என நினைத்திருந்தவன் வீடு உள் பக்கமாக தாளிட பட்டிருக்கவுமே அம்மா வந்து விட்டதை புரிந்து மலர்ந்தான். 

அழைப்பு மணி ஓசை கேட்டு கதவு திறந்த கோபிகா விரைந்து வந்து மகனின் கையை பற்றிக் கொண்டு சிரித்தார். 

இவனுக்கு அம்மா என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பத்தைந்து வயதான அவரின் தோற்றமோ முப்பதுகளில் இருப்பது போலவே இருந்தது. 

“உன் ஃப்ரெண்ட் ஊருக்கு போயிட்டு நாளைக்குத்தான் ரிட்டர்ன்னு சொல்லியிருந்த, நைட் பேசினப்போ கூட இன்னிக்கு வர்றதா சொல்லலையேடா? என்ன சமைக்க சொல்லட்டும், இடியாப்பம் ஓகேவா உனக்கு?”  பட படவென பேசினார். 

“சாப்பாடு என்னன்னாலும் ஓகே, எங்கேயும் கிளம்பாம என் கூடவே நீ இருந்தா டபுள் ஓகே” என்றான். 

“நீ வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லை, திடீர்னு கூடவே இருன்னா எப்படிடா?” என்றார். 

“நீயும் கூட இன்னிக்கு சென்னை வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லமா. நான் இங்க தனியா இருக்கிறது நினைச்சு நீ ஃபீல் பண்ண வேணாம்னுதான்  வர்றத சொல்லலை. என்ன இப்போ உனக்கு வேலையிருக்கு போகணும் அதானே, போ” என சொல்லி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான். 

உடனே பங்கஜ்க்கு அழைத்து ஜீவா வந்து விட்டதை சொல்லி தன்னால் இன்று வர முடியாது, சமாளித்து கொள்ள முடியுமா என கேட்டார். சரி என்ற பதிலை பெற்றுக் கொண்டு அவர் திரும்ப, அம்மாவை அப்படியே தூக்கியிருந்தான் ஜீவா. 

அவனது தலையில் செல்லமாக கொட்டி தன்னை இறக்கி விட செய்தார். வீட்டு டிரைவர் ரங்கசாமியின் மனைவி சரோஜாதான் அங்கே சமையல் செய்பவர்.  பல வருடங்களாக இங்கு வேலை செய்கின்றனர். கோபிகா இல்லாத போது கூட ஜீவா இங்கு வந்தால் சரோஜா வந்து சமைத்து விட்டு செல்வார். 

அட தம்பி வந்திட்டியா நீ? நெத்திலி மீன் கொழம்பு, நெய் மீன் வறுவல், இறால் தொக்கு, என்ன சொல்ற?” எனக் கேட்டார் சரோஜா

கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன்,  “ஃபைனல்  டச்சா உங்க ஸ்பெஷல் மசாலா ஆம்லட் வேணும் சரோம்மாஎன்றான்

சரோஜாவும் கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு, என்ன வாங்கி வர வேண்டும் என கணவருக்கு சொல்ல ஆரம்பித்தார்

மகனின் தலை முடியை அளந்த கோபிகா, “உன் ஃப்ரெண்ட் வீட்ல சூப்பரா விருந்து சாப்பிட்டதா சொன்ன, சும்மா சொன்னியாடா?”எனக் கேட்டார்

ம்ம்நல்லா சாப்பிட்டேன், இன்னிக்கு சரோம்மா செய்றது உனக்கு பிடிச்சதும்மா. ரிலாக்ஸா நாம சாப்பிடலாம்என்றான்

ரொம்ப குஷியா இருக்கிறது போல இருக்கேஎன்னடா விஷயம்?”

அப்படியா! இருக்கும் இருக்கும், ஆனா இப்போதைக்கு உங்கிட்ட சொல்றதுக்கு இல்ல

தேர்வு நன்றாக எழுதிய சந்தோஷம் என்றால் கூட இவ்வளவு நாட்கள் கழித்தா இப்படி உற்சாகம் கொள்கிறான் என நினைத்த கோபிகாவுக்கு மகன் யாரையும் விரும்புகிறானோ என தோன்றியது. அப்படியாக இருந்தால் மகனின் தேர்வு சிறப்பானதாகவே இருக்கும் என நினைத்தார்அதை விட அவருக்கு இவனது விருப்பத்தை விட வேறு எதுவுமே பெரிதில்லை.

அவரது அன்றாட வேண்டுதலே மகனின் வாழ்க்கை தன்னுடையது போல இல்லாமல் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான்

இவன் விரும்பும் பெண்ணின் வீட்டில் தன்னை பற்றி விசாரிக்கும் போதுஎன நினைத்தவரின் முகம் ஒரு நொடி சுருங்கியது. ஜீவாவின் அப்பா இறந்து விட்டார் என்பதை தாண்டி என்ன பெரிதாக விசாரிக்க போகிறார்கள் என தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டார்

என்ன விஷயமென உடனே சொல் என மகனை கட்டாயப் படுத்தாமல் அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டார்

காலை உணவு முடிந்து இருவருமாக சேர்ந்து டிவியில் நகைச்சுவை காட்சிகள் கொண்ட தொகுப்பை பார்த்தார்கள். பின் மகனுக்கு எண்ணெய் தேய்த்து வெயிலில் அமர வைத்து விட்டார்

அவன் குளித்து வரவும் அவனுக்கு திருநீறு இடப் போனார். அவன் முறைக்க, “தண்ணிய உறிஞ்சும் இந்த விபூதி, ஜலதோஷம் பிடிக்காதுடா, வீட்லதானே இருக்க”  எனக் கேட்டுக் கொண்டே நெற்றி நிறைய நன்றாக பட்டை போட்டு விட்டார்.  

மதிய உணவு இரண்டு வாய் தன் கையால் அவனுக்கு ஊட்டி விட்டார், அவன் ஊட்டி விட்டதை ஆசையாக சாப்பிட்டார். தன் வீட்டுக்கும் உணவு எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பி விட்டார் சரோஜா

அம்மா அவரது பணி பற்றியும் மகன் அவனது கல்லூரி பற்றியும் என கதைகள் பேசினார்கள்

கோபிகா தேநீர் போட செல்லும் போதும் அவருடனே நின்று கொண்டான். சிறு பிள்ளையாக இருக்கும் போதே பெற்றோரிடம் இவனை விட்டு விட்டாரே, எப்போதாவது இவன் இங்கு வரும் போதோ அல்லது இவர் அங்கு செல்லும் போதோ இப்படித்தான் இவரை சுற்றி சுற்றியே வருவான்

ஆரம்ப நாட்களில் அழுது கொண்டே சுற்றுவான். அம்மா ஊருக்கு புறப்பட போகிறாள் என தெரிந்தால் அவரது இடுப்பை சுற்றி வளைத்து கட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுவான்

நாட்கள் போக போக அழுவதில்லை என்றாலும் அம்மா எப்போது என்னை விட்டு செல்வாளோ என்ற பயம் அவனது பிஞ்சு முகத்தில் நன்றாகவே தெரியும்.

 கோபிகாவின் தந்தைக்கு நிறைய உடல் உபாதைகள் இருந்தன, சென்னையில் தான் இல்லாத நேரம் அப்பாவுக்கு முடியாமல் போய் விட்டால் சிரமம் என்பதால் பெற்றோரை அவருடன் அழைத்துக் கொள்ள முடியவில்லை

கோபிகாவின் தம்பி மதுரையில் தொழில் தொடங்கியிருந்த நேரம், ஆகவே அவராலும் சென்னைக்கு வர இயலாது. வேறு வழியின்றிதான் மகனை தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. மகனை பிரிந்து செல்லும் சமயங்களில் இவருக்கும் மனம் கசிந்துருகத்தான் செய்யும், ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார்

இன்னும் சின்ன புள்ள கணக்கா எம்பின்னாலேயே சுத்துறியேடாஎன செல்லமாக சலித்துக் கொண்டார் கோபிகா

ஏன் சுத்தினா என்ன இப்போ, என்ன பிரச்சனை உனக்கு?”

நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வந்திட்டா கோச்சுப்பா” 

அப்டி கோச்சுக்காத பொண்ணா பார்த்துக்கலாம்” 

என்னடா சொல்ற, இன்னுமா பார்க்காம இருக்க?” எனக் கேட்டவரின் கன்னங்களை கிள்ளி செல்லம் கொஞ்சியவன், “போட்டு வாங்குறியா கோபி? என்கிட்ட வேலைக்கு ஆகாதுஎன்றான். மகன் காதலில் விழுந்து விட்டான் என உறுதி செய்து கொண்டவரும் அந்த பேச்சை அத்தோடு விட்டு விட்டார்

ரிசல்ட் வந்ததும் அடுத்த பிளான் என்னடா?” என கேட்டார்

உன் ஆசைக்கு இன்ஜினியரிங் படிச்சாச்சி, இனி என் ஆசைப்படிதான் ம்மாஎன்றான்

மகனை பார்த்து சம்மதமாக சிரித்தார்

 மாலையில் கடைக்கு சென்றனர், மகனுக்கு நிறைய ஆடைகள் எடுத்துக் கொடுத்தார் கோபிகா.

இரவில் தானே அம்மாவுக்கு தோசை ஊற்றி கொடுத்தான். பிரிந்திருந்த நாட்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டு அந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் இருவரும்