“அதெப்படி யூஸ் ஆகும், நீங்க என்ன இந்த கிராமத்துலயா வேலை பார்க்க போறீங்க?”
“ஆனா கிராமத்து பொண்ணதான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அப்பப்ப மாமியார் வீட்டுக்கு வரும் போது என் வைஃப் மசாலா அரைச்சா இப்டி இப்டி அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என்றான்.
அவனை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவுக்கு வெட்கமும் இனிய சங்கடமும் அவளை போர்த்திக் கொண்டன.
“எங்க ஊர் பக்கம்லாம் வீட்டு மாப்ளகிட்ட வேலை வாங்க மாட்டாங்க, உட்கார வச்சு ராஜ மரியாதையோட கவனிப்பாங்க. அதனால சிரம படாம கையை எடுங்க” அவனை நிமிர்ந்து நோக்காமலே சொன்னாள்.
“யாருக்கு வேணும் ராஜ மரியாதை? ராஜாவா இருக்கிறத விட மனசுக்கு புடிச்ச வைஃப்க்கு சேவகனா இருக்கத்தான் ஆசை படுறேன்” என்றான்.
மிதுன்யாவின் செவ்விதழ்கள் சிரிப்பில் துடித்தன. தாழ்ந்திருந்த கண்களோ காதல் மயக்கத்தில் கிறங்கின.
காலையில் அவன் கண்ட அவளின் பதட்ட முகம் அவனை பாடாய் படுத்தியிருக்க, இப்போது காணும் இந்த மலர்ந்த முகம் அவனது இமைகளை வேலை நிறுத்தம் செய்ய வைத்திருந்தன.
தங்கை எங்கே என தேடினாள் லாவண்யா. அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் அம்மி அரைக்கும் இடம் தெரியாது.
“மசாலா ரெடி பண்ணதானே போனா? எவ்ளோ நேரம் ஆகுது பாரு, மிக்சில அரைச்சுக்கலாம்னு சொன்னா இந்த அப்பயி கேட்குதா?” என சொல்லி எழ முனைந்தாள் லாவண்யா.
தோழியை காப்பாற்ற தான் செல்வதாக முந்திக் கொண்டு எழுந்து சென்றாள் வாசுகி.
வீட்டு வேலைகள் அனைத்தும் சொல்லித் தந்துதான் வளர்த்திருந்தார் வினோதினி. ஆனாலும் மிதுன்யாவுக்கு அடிக்கடி செய்து பழக்கம் இல்லாத காரணத்தால் மசாலா கீழே கொஞ்சம் போல சிந்தியிருந்தது.
அங்கே வந்த வாசுகி, “நல்லாருக்கே கதை. என் அயித்தான வேலை வாங்குறதும் இல்லாம குழம்ப கெடுக்கணும்னு மசாலாவ மண்ணுல போட்டு புரட்டுறியாடி?” எனக் கேட்டாள். அத்தோடு நிறுத்தாமல், “நீங்க எந்திரிங்க அத்தான்” என சொல்லிக் கொண்டே ஜீவாவை எழுப்ப முனைந்தாள்.
தோழி வசமாக தனியே மாட்டிக் கொள்ளவும் அம்மியை அப்படியே விட்டு விட்டு எழுந்த மிதுன்யா, ஜீவாவை தொடப் போன வாசுகியின் கையை கெட்டியாக பிடித்து, “மண்ணோடு புரட்டின மசாலாவை உன் வாய்ல வச்சி திணிக்க போறேன் பார்த்துக்க” என்றாள்.
“நீ என்ன பண்றேன்னு உனக்கு தெரியலை?” கோவப்பட்டாள் மிதுன்யா.
“என்ன பண்ணினேன், நீதான் உன் ஆளு இல்லைனு சொல்லிட்டீல்ல, அப்புறம் என்ன?” என வாசுகியும் இடக்காக கேட்டாள்.
மிதுன்யா பதில் தராமல் மருக, ஜீவா ஒரு புன்சிரிப்போடு பார்த்திருந்தான்.
“அத்தான் என் அன்பு அத்தான்… எந்திரிச்சு வாங்க அத்தான், நாம அப்பாலக்கா நடப்போம் அத்தான். யார் தொல்லையும் இல்லாம ஜாலியா பேசிட்டே நடக்கலாம் அத்தான்” என்றாள் வாசுகி.
“ஹையோ போதும் வாசுகி, மிதுக்கு கோவம் வரும், வேணாம்” என்றான் ஜீவா.
“வரட்டுமே, நான் இப்படி பேசக்கூடாதுன்னா உங்களை பார்த்து ‘ஆமாம் என் ஆளுதான் இவரு’ன்னு ஒழுங்கா இவளை என்கிட்ட ஒத்துக்க சொல்லுங்க” என்றாள் வாசுகி.
வாசுகியின் கையை உதறிய மிதுன்யா மசாலாவை வழித்து கிண்ணத்தில் வைத்து விட்டு பர பரவென அம்மியை கழுவி விட்டாள்.
“ஹஹா… இந்த தாட்பூட் கோவமெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது. ஒன்னு இவர பத்தின உன் நினைப்பை ஓபனா ஒத்துக்க, இல்லைனா…” என்ற வாசுகி, ஜீவாவை பார்த்து “அத்தா…ன்…” என ராகம் போட்டாள்.
கடுப்பில் வேக வேகமாக மிதுன்யா தண்ணீரை அம்மியிலிருந்து வழித்து விட, ஜீவாவின் கண்ணில் தெறித்து விட்டது.
எரிச்சலில் அவன் முனக, உதவ வந்தாள் மிதுன்யா.
“மசாலா அரைச்ச உன் கையை வச்சா அவருக்கு இன்னும் எரியும், நீ தள்ளு” என்ற வாசுகி அவளே சுத்தமான தண்ணீர் கொடுத்து அவன் கண்ணை சுத்தம் செய்ய உதவினாள். பின் சரியாகி விட்டதா என அவனது கண்ணை விரித்து பார்த்து சோதித்தாள். அப்பட்டமான உதவி மட்டுமே.
ஆனால் அவர்களின் அந்த நெருக்கத்தை மிதுன்யாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மசாலாவை எடுத்துக் கொண்டு விடு விடுவென அங்கிருந்து சென்று விட்டாள்.
எனக்கு உதவி செய்வதாக நினைத்து அவளை மிகவும் கோவம் கொள்ள செய்கிறாய், இத்தோடு விட்டு விடு என அவனும் வாசுகியிடம் சொல்லிப் பார்த்தான்தான். அவள்தான் கேட்பதாக இல்லை.
பாட்டிக்கு அடுப்பு ஊத உதவுகிறேன் என ஊதாங்குழல் வைத்து ஊதி ஜீவாவின் முகமெல்லாம் கரியானது. அதை துடைத்து விடுகிறேன் என வாசுகி செயல் பட, இந்த முறை நாசூக்காக மறுத்து விட்டான் ஜீவா.
“ஐயைய… தம்பி வெக்க படுது” என கிண்டல் செய்தார் வேலை செய்யும் அக்கா.
“என்ன தம்பி இப்படி சொல்லிப்புட்டீங்க, புஸ்ஸுனு போச்சுதே” என்றார் அந்த அக்கா. பாட்டியும் அப்படியா என விசாரித்தார்.
ஆமாம் என தெளிவாக சொன்னவன், “வாசுகியும் என்னை பிரதராதான் பார்க்கிறா, வேணும்னே சும்மா உங்ககிட்டலாம் விளையாடுறா” என வாசுகியை பற்றியும் யாரும் தவறாக நினைக்காத படி சொன்னான்.
“அதெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன், நீங்கதான் என் அத்தான்…” என வாசுகி சொன்ன விதமே, இது விளையாட்டுதான் என அனைவரையும் புரிந்து கொள்ள செய்தது.
“போதும்மா தெய்வமே! பொத்தான் வச்ச சட்டை கூட போட்டுக்கல நான், அதனால அத்தான் சொல்லாத” என்றான் டி ஷர்ட் அணிந்திருந்த ஜீவா.
“என் அத்தானுக்கு பொத்தான் வச்ச சட்டை நாலு பார்சல்” என அதற்கும் வம்பு செய்தாள் வாசுகி.
“அடி பிசாசே! நீ ஆடுற ஆட்டத்துல இந்நேரம் குழம்பு சட்டி கவுந்து உன் கால்ல விழுந்திருக்கும். ஆத்தா வச்ச கோழி குழம்ப ஒரு பிடி பிடிக்க நினைச்ச என் ஆசைல மண் அள்ளி போட பார்த்தியே” என்றாள் தீபா.
“போடி கழுத புலி! என் கால் வெந்து போறது பிரச்சனை இல்லை உனக்கு, இருடி மொத்த குழம்பையும் உன் தலையில கொட்டி கவுக்கிறேன்” என்றாள் வாசுகி.
“யம்மாடி, என் தங்கச்சி எவ்ளோ பதிவுசுன்னு நினைக்க வச்சிட்டீங்களே!” என்றாள் லாவண்யா.
“யாரு இவளா? ஊமை குசும்பி இவ. அப்படிலாம் நம்பிடாதீங்க உங்க உடன்பிறப்பை” என்ற வாசுகி, “அத்தான் நீங்களே சொல்லுங்க, இவ பதிவுசா?” என ஜீவாவிடம் கேட்டாள்.
“அந்த தம்பிக்கு என் பேத்திய பத்தி என்னடிம்மா தெரியும்?” எனக் கேட்டார் பாட்டி.
“என் அத்தானுக்கு தெரியாத விஷயமே இல்லை. மூஞ்ச பார்த்தே ஆள் எப்படின்னு மோப்பம் புடிச்சிடுவார். சொல்லுங்க அத்தான் என் ஃ ப்ரெண்ட் ஆளு எப்படி, நல்லவளா… இல்லை… ரொம்ப நல்லவளா?” வம்பாக பேசினாள் வாசுகி.
“இவ வாய ஏதாவது கொடுத்து அடைங்களேன் பாட்டி, உங்களுக்கு புண்ணியமா போகும்” என்றான் ஜீவா.
கோழி வறுவலை தட்டில் வைத்து கொடுத்து சற்று நேரம் வாசுகியின் வாய்க்கு வேறு வேலை கொடுத்தார் பாட்டி.
ஜீவாவை முகத்தை கழுவிக் கொள்ள சொன்ன பாட்டி, மிதுன்யாவை “தம்பிக்கு துண்டு எடுத்திட்டு வந்து கொடு” என ஏவினார்.
பக்கவாட்டில் இருந்த தண்ணீர் குழாயில் ஜீவா முகம் கழுவிக் கொண்டிருக்க, துண்டோடு வந்தாள் மிதுன்யா. நெற்றி ஓரம் இன்னும் கரி ஒட்டிக் கொண்டிருக்க, சரியாக கழுவும் படி சொன்னாள்.
அவன் மீண்டும் கழுவியும் கரி அகலவில்லை. அவளும் மீண்டும் சொன்னாள். இருந்தால் இருந்து விட்டு போகிறது என்றான்.
“பார்க்க நல்லா இல்லை” என்றவள் தண்ணீரில் கையை நனைத்து அவளே அவனது நெற்றியோரத்தை துடைத்து விட்டாள். சில நொடி நேர தொடுகையில் அவன் அமைதியாகி விட்டான். அவளுக்கும் பேச்சு வரவில்லை. சங்கடத்தோடு துண்டை நீட்டினாள்.
“வாசுகி கிண்டல் செய்றது சரியில்லைதான். ஆனா எனக்குமே தெரியணும் மிது. நான் இவ்ளோ தூரம் உன்னை தேடி வந்ததுல அர்த்தம் இருக்கா?” எனக் கேட்டான்.
பதில் தராமல் அவனை கோவமாக பார்த்துக் கொண்டே சென்று விட்டாள்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியாமல் குழம்பினான் ஜீவா.