கொஞ்சும் காதல் சாரல் – 3

அத்தியாயம் – 3

கைப்பேசி வாயிலாக ஒரு ஆரோக்கியமான  உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தனர் ஜீவநந்தன், மிதுன்யா இருவரும். 

அழைப்புகள் வரை கூட முன்னேறி செல்லவில்லை, யார் முன்னெடுப்பது என்ற தயக்கத்தோடு உரையாடல் அளவில் மட்டுமே நிறுத்திக் கொண்டனர். 

இருவரும் பேசிக் கொண்ட வரையில் எந்த வகையில் எப்படி உறவு என இருவராலுமே அதை சரி வர புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஜீவாவின் அம்மா கோபிகாவுக்கு காதல் திருமணம், இவனுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே இவனது தந்தை இறந்து விட்டார். ஜீவாவை தன்னுடன் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்ட கோபிகா குழந்தையாக இருக்கும் போதே அவனை தன் பெற்றோர் பொறுப்பில் விட்டு விட்டார். 

சென்ற ஆண்டுதான் அவனது தாத்தா இறந்திருக்க பாட்டியுடன் இவன் மதுரையிலேயே இருக்கிறான். கல்லூரி படிப்பு முடியவும் சென்னைக்கு வந்து விடுவானாம். மதுரையில் இவன் வசிக்கும் வீட்டின் அருகில் இவனது மாமா, அதாவது கோபிகாவின் தம்பி  குடும்பத்தோடு வசிப்பதால் எந்த உதவியென்றாலும் செய்வார்களாம். 

அம்மா உடன் இல்லாமல் வளர்ந்தவனா என அவளுக்கு அவன் மீது இரக்கம் எழுந்தது. அப்படியென்ன வேலை செய்கிறார் உங்கள் அம்மா என விசாரித்தாள். 

கோபிகா அவரது  இளம் வயதில் திரைப்பட பாடல்களில் பின்னணி நடனம் ஆடுபவராக இருந்திருக்கிறார். பின்னர் பிரபலமான நடன ஆசிரியரிடம் உதவியாளராக பணி புரியத் தொடங்கி இப்போது வரை அவரிடம்தான் வேலை செய்கிறாராம். 

‘நடன இயக்குனர் பங்கஜ்’  என அம்மா வேலை செய்யும் நபரின் பெயரை இவன் சொல்லவுமே இவளுக்கு பெரிய வியப்பு. நல்ல பிரபலமானவர் அவர். 

‘சினிமால சம்பந்த பட்டவங்களா ஆன்ட்டி?’ என உரையாடலின் போது கேட்கவும் செய்தாள். 

‘அதனால என்ன, அதுவும் ஒரு தொழில்தான், ஹஸ்பண்ட் இல்லாம தனியா ஒரு பொண்ணா அம்மா என்னை வளர்த்திருக்காங்க.  சென்னைல சொந்தமா வீடு இருக்கு அவங்களுக்கு, என் மாமா கூட ரொம்ப கஷ்டத்துல இருந்தார், அவர் முன்னேறவும் அம்மாதான் ஹெல்ப் பண்ணினாங்க, என் தாத்தா பாட்டி பொறுப்பு கூட முழுக்க முழுக்க அம்மாதான். என் அம்மா எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்’ என பதில் சொன்னான் அவன். 

அவன் சொன்னவற்றை வைத்து அவளுக்கும் அவனது அம்மாவின் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.

சினிமா சம்பந்தமான வேலை என்றாலே ஏன் தவறாக நினைக்க வேண்டும் என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாலும் தன் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என யோசித்தவளுக்கு கலக்கமாகத்தான் இருந்தது. 

ஆனால் அவளது மனம் என்னவோ ஜீவாவின் திசையிலேயே ஈரக்கப் பட்டது, அவளால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு அவன் மீது சென்று விட்டது அவளது உள்ளம். 

வாய் மொழியாக கூட அவர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை, தங்களுக்குள் என்ன இருக்கிறது என இருவருமே தெளிந்தறிந்திருக்க கூட இல்லை. திரும்பி வர இயலாத தூரம் இல்லையே, இப்போதே என்ன ஏதென ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் தோன்றவில்லை. 

அந்த வயதுக்கே உரிய ஆர்வம், ஆவல், ஆசை, ஈர்ப்பு எல்லாமே நன்றாக வேலை செய்தது. காற்றலைவரிசைக் கற்றைகளால் அவர்கள் பிணைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

அவனுடன் உரையாடுவதை தொடர்ந்து கொண்டேதான் இருந்தாள் மிதுன்யா.

பொறியியலில் இருவரும் ஒரே பிரிவு பாடத்தைத்தான் படித்தனர். ஆகவே இவளுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அவனிடம் கேட்பாள். குறுஞ்செய்திகள் வழியே சரிவர விளக்க முடியாத காரணத்தால் அவளுக்கு அழைத்து விட்டான். அப்படித்தான் பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.  

இவர்கள் சந்தித்துக் கொண்ட திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை மிதுன்யாவுக்கு மாமா முறை, தான் அவர் வழி உறவா அவரது மனைவி வழி உறவா என ஜீவாவுக்கு சரியாக தெரியவில்லை. 

அவன் அவனது அம்மாவுடன் சென்னையில் இருந்த ஒரு சமயத்தில் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் அவர். அவரை ‘உனக்கு பெரியப்பா’ எனதான் மகனுக்கு உறவுமுறை சொல்லியிருக்கிறார் கோபிகா. 

அந்த நாளில் தவிர்க்க இயலாத வெளியூர் பயணம் இருப்பதாக கோபிகா சொல்லவும் ஜீவாவையாவது அனுப்பி வைக்க வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார் அந்த பெரியப்பா. 

ஜீவாவும் முந்திக் கொண்டு தான் செல்வதாக சொல்லவும் கோபிகாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

“உங்களால போக முடியலை, அவருக்கு நாம வரணும்னு அவ்ளோ ஆசை. உண்மையா கூப்பிடுறார், நமக்கு மாமா குடும்பத்தை விட்டா வேற சொந்தமே இல்லையேம்மா. போலாம்னு தோணிச்சு, அதான் உங்ககிட்ட கூட கேட்காம வர்றேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன். போயிட்டு வரவா?” பெரியப்பா சென்ற பின் தன்னிடம் இப்படி கேட்ட மகனை வாஞ்சையாக பார்த்துக் கொண்டே சம்மதமாக தலையசைத்து விட்டார் கோபிகா. 

அப்போது கூட எப்படி நமக்கு இவர் உறவு, அப்பாவை பற்றி சொல்லுங்கள் என எதுவுமே கேட்டிருக்கவில்லை ஜீவா.  தன்னை புரிந்த,  தன் மீது அன்பும் மரியாதையும் கொண்ட, தன் வாழ்வின் ஆதாரமான  மகனை நினைத்து அத்தனை அக மகிழ்ந்து போனார் கோபிகா. 

அப்பாவை பற்றிய விஷயங்கள் அம்மாவின் மனதை வெகுவாக பாதிக்க செய்யும் என்பதால் தானும் தன் வீட்டினரும் பெரிதாக  அப்பா மற்றும் அவரது குடும்பம் குறித்து அம்மாவிடம் பேசுவதில்லை என மிதுன்யாவிடம் சொல்லியிருந்தான் ஜீவா. 

அவனுக்கு விவரம் வந்த பின் தன் தாத்தா, பாட்டி, மாமா போன்றோர்களிடம் அப்பாவை பற்றி  கேட்டிருக்கிறான்தான். 

‘அல்பாயுசுல போயிட்டார் உன் அப்பா, அத பத்தி என்னத்தடா சொல்றது?’ என்பதாக மட்டுமே இருக்கும் அவர்களின் பதில். அவரின் புகைப்படம் கூட கைவசம் எதுவுமில்லை எனதான் சொல்லியிருக்கிறார்கள். அப்பாவின் முகமறியா பிள்ளை அவன். 

தன் கேள்வி தன் சுற்றத்தாரை  சங்கட படுத்துகிறது என்ற புரிதல் அப்போதே அவனுள் வந்து விட்டது.  ஆகவே அப்பாவை பற்றிய கேள்விகளுக்கு சிறு வயதிலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.

மிதுன்யாவும் தன் வீட்டினர் மூலமாக  ஏதாவது விவரம் கிடைக்குமா என விசாரிக்க முயன்றாள். ஜீவாவை பற்றி நேரடியாக சொல்ல முடியாதே, ஆகவே “கல்யாணத்துக்கு போனோமே, அந்த மாமா எப்படி நமக்கு உறவு?” என மட்டுமே கேட்க முடிந்தது. 

“அது பற்றி உனக்கு எதுக்கு?” என சந்தேக பார்வையோடு கேள்வி எழ, அத்தோடு அந்த விசாரணைக்கு அவளும் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.  

ஜீவாவுக்கு இறுதி வருட தேர்வு முடிந்து விட்டது. அவனது அம்மா வெளியூரில் இருப்பதால் இன்னும் அவன் மதுரையில்தான் இருந்தான். அடுத்து அவளுக்கும் தேர்வு தொடங்க இருந்தது. 

நல்ல படிப்பாளியாக இருப்பான் போல, அதை விட மற்றவருக்கு புரிய வைக்கவும் தெரிந்தது. முதலில் சாதாரண அழைப்பில் மிதுவுக்கு படிப்பித்தவன் பின் காணொளி அழைப்பில் சொல்லித்தர ஆரம்பித்தான். அவளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டத்தட்ட இணைய வழி டியூஷன் ஆகி விட்டது. 

அவளோடு சேர்ந்து அவனும் கண் விழித்தான். காலையில் நேரத்துக்கு எழுப்பி விட்டான். தேர்வு முடித்து விட்டு மதியம் அறைக்கு வருபவளுக்கு கேட்க இனிமையான பாடல்களை அனுப்பி வைப்பான். கேட்டுக் கொண்டே உறங்கி எழுவாள். 

“காதுல ஹெட்செட் போட்டுக்கிட்டு ஃபோனையே பார்த்திட்டு இருக்க, ஜஸ்ட் பாஸாவது ஆகிடுவியா?” என அறைத் தோழிகள் கிண்டல் செய்தாலும் கண்டு கொள்வதில்லை.  

உண்மையில் அவளாக படித்திருந்தால் கூட இவ்வளவு படித்திருக்க மாட்டாள். 

இந்த முறை தேர்வுகள் எல்லாம் சிறப்பாக செய்திருந்தாள். அந்த மகிழ்ச்சியோடு ஊருக்கு கிளம்பினாள்.  

வீடு வந்தவுடன் அவனுக்கு ‘ஹாய்’ என ஒரு செய்தி அனுப்பினாள். ஏதாவது பதில் வருமா அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு வழியாக அவன் பார்த்ததற்கான அறிகுறி வந்தது.  

என்னவானது ஏன் பகலிலேயே பதில் இல்லை, எல்லாம் ஓகேவா என செய்தி அனுப்பினாள். அவன் பார்த்து விட்டாலும் பதிலே இல்லை. கைப்பேசியை கையிலேயே வைத்துக் கொண்டு திரிந்தாள். என்னவோ ஏதோ என மனம் பதட்டம் கொள்ள ஆரம்பித்தது. 

சார்ஜ் முடிந்து கைப்பேசி அணைந்து போகவும் அதை சார்ஜில் போட்டு விட்டு படுத்தவள் அவளையறியாமல் உறங்கி விட்டாள். காலையில் எழுந்து பார்க்கையில் கைப்பேசி வேலை செய்யவில்லை. 

சார்ஜிலேயே போட்டு வைத்திருந்ததால் ஏதோ கோளாறாகி விட்டது. அவளும் லாவண்யாவும் அவர்களுக்கு தெரிந்த வகையில் முயன்று பார்த்து விட்டனர். அந்த கைப்பேசிக்கு ஆயுள் அவ்வளவுதான் என புரிந்தது.