கொஞ்சும் காதல் சாரல் -29

அத்தியாயம் -29

அப்பாவையும் அம்மாவையும் அமர வைத்து நிதானமாக மிதுவின் விஷயத்தை பற்றி தெரிவித்து விட்டார் பசுபதி. அதெப்படி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள்? அதுவும் நமக்கு ஆகாத பையனை என பொங்கினார் செல்வநாயகம்.

மங்கம்மாவுக்கும் இதில் விருப்பமில்லை என்ற போதும் கணவரை போல குதிக்கவில்லை.  பேத்தி நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவருக்கு அன்பு இதற்கு ஒத்து வர வேண்டும் என்ற கவலை மட்டும்தான்.

திருமண விஷயம் வெளியில் தெரியாமல் நாமே நடத்தி வைப்பது போல முறையாக, எளிமையாக கோயிலில் தாலி கட்ட வைக்கலாம் என்ற பசுபதியின் யோசனையை ஆமோதிக்கவும் செய்தார் மங்கம்மா.

இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என கோவப்பட்டு எழுந்து சென்று விட்டார் செல்வநாயகம். எதிர்பார்த்ததுதான் என்பதால் பசுபதியும் அதீதமாக அதிர்ச்சி அடையவில்லை.

தன்னிடம் அத்தை ஏதாவது விசாரிப்பார் என எதிர்பார்த்து ஏமாந்து போன மிது அவளாகவே அத்தையை தேடிக் கொண்டு சென்றாள்.

சாதாரணமாக பேசிக் கொண்டே போனவரின் கையை பிடித்த மிது, “நீங்க ரொம்பவே அழுத்தம் அத்தை!” என்றாள்.

“உன்னை விடவா?” எனக் கேட்டார் அருந்ததி.

அவள் முறைக்க, அவளின் காதை திருகியவர், “இவ்ளோ ஆகியும் நீயா சொல்லலை, நானாதான் தெரிஞ்சுக்கிட்டேன், அப்பவே முடிவு பண்ணிட்டேன், சொல்லுன்னு எதையும் உன்கிட்ட கேட்கவே கூடாதுன்னு” என்றார்.

“வலிக்கிற மாதிரியே காத பிடிக்கல நீங்க” என அவள் சொல்லவும், அவளின் காதை விட்டவர் அவளை அதிருப்தியாக பார்த்தார். அவள் பாவமாக பார்த்தாள்.

“இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சதே இல்லை, ஹ்ம்ம்… என் தம்பிக்கு தெரியுமா விஷயம்?” என விசாரித்தார்.

மிது தலையாட்ட, “என்ன சொன்னான்?” எனக் கேட்டார்.

“என்னை புரிஞ்சவர் எங்கப்பா, என் விருப்பத்தை அவர் மதிக்கிறார்” என்றாள் அவள்.

“அப்புறம் நான் என்ன சொல்ல கெடக்கு?” என்றார் அருந்ததி.

“இப்படி சொன்னா எப்படி? உங்க பையனை நீங்கதானே சரி கட்டணும்?” என்றவள் அவரின் முகத்தையே பார்த்திருந்தாள்.

பசுபதி சம்மதித்து விட்டார் என்றால் எல்லாம் விசாரித்துதான் இருப்பார் என நம்பினார் அருந்ததி.

தன்னுடைய மண வாழ்க்கை சரியில்லாமல் போனதிலிருந்தே அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப துணையை தேர்வு செய்ய விட வேண்டும், அந்த துணை நல்லவரா என தெரிந்தால் போதும்,  மற்ற எதையும் பார்க்க தேவையில்லை என நினைப்பவர். அதனால்தான் தன் மகன் லாவண்யா மீது ஆசை படுகிறான் என அறிந்ததும் அதை நடத்தி வைக்க முயற்சி செய்தார்.

இப்போதும் மிது ஜீவாவை தேர்வு செய்திருக்க, அவர்கள் இருவரை தவிர மூன்றாம் நபரின் காரணங்களை சுட்டிக் காட்டி அதற்கு தடை போடுவது சரியல்ல என்ற புரிதலோடு இருந்தார்.

“அன்புகிட்ட நான் பேசினாலும் ஒத்துப்பான்னு உத்திரவாதம் தர முடியாது மிது, உனக்காக பேசுறேன், உன் அக்காட்டேயும் சொல்லு” என்றார் அவர்.

“கோவமா அத்தை?” எனக் கேட்டாள்.

“இல்லடா, பிரச்சனை ஏதும் இல்லாம உன் கல்யாணம் நல்ல படியா நடக்குமான்னு யோசனை” என்றார்.

“உங்க பையனை…” ஏதோ சொல்ல வந்தாள் மிது.

“என்னடி பேச்சு இது? நீயும் அவன்கிட்ட வரம்பு மீறிதான் பேசின, அதுக்காக மாமான்னு சொல்லாம இப்படி சொல்லுவியா?” என அதட்டினார்.

“மாமாகிட்ட பேசுங்க” என சின்ன குரலில் சொல்லி வெளியேறி விட்டாள் மிது.

கோயில் வேலைகள், தொழில், கர்ப்பவதியான மனைவியை கவனிப்பது என அன்புவின் நேரம் பறந்து கொண்டிருந்தது. ஆகவே அருந்ததியால் மகனிடம் ஆற அமர மிது, ஜீவா பற்றி பேச முடியவில்லை.

அக்காவிடம் சொல்ல மிதுவுக்கு தயக்கமில்லை, ஆனால் அவள் ஏதாவது  உணர்ச்சி வயப்பட்டு அதனால் அவளது உடம்புக்கு முடியாமல் போகுமோ என அஞ்சி சொல்லாமல் இருந்தாள்.

கையில் என்னடா காயம் என பெரியப்பா கேட்டதற்கு பைக்கிலிருந்து விழுந்து விட்டேன் என சொல்லியிருந்தான் ஜீவா. கோயில் காரியங்கள் அனைத்திலும் அவனை பங்கு கொள்ளும்படி செய்தார் அவர். அவன் மறுத்தாலும் தெய்வக் காரியம் முடியாதுன்னு சொல்லக்கூடாது என்றார்.

அன்புவையும் அவனது தீவிர விசுவாசிகளையும் தவிர மற்ற கோயில் நிர்வாகிகளுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் ஜீவாவுடன் பழக பழக அவனை பிடித்துப் போய் விட்டது. ஆகவே அவனுடன் இணக்கமாகவே நடந்து கொண்டனர்.

அன்புவுடன் எந்த மோதலும் வராமல் கவனமாக பார்த்துக் கொண்டான் ஜீவா. பெரியப்பா இடக்காக ஏதாவது பேச ஆரம்பித்தால் அவரை சமாளிக்க கற்றிருந்தான். கோயில் காரியங்களில் கலகம் ஏற்படும் படி நடந்து கொள்வது நல்லதுக்கல்ல என பெரியம்மாவை கொண்டு மிரட்டி வைத்திருந்தான்.

ஜீவாவை காண நேரிடும் போதெல்லாம்  அன்புவுக்கு அர்த்தமே இல்லாத கோவமும் நெருடலும் ஏற்படுகிறதுதான். மிதுவின் பாராமுகம் ஜீவாவிடம் எந்த கடுமையும் காட்டாமல் இருக்க வைத்தது. ஆம், மிது அன்புவை வெளிப்படையாகவே தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்.

லாவண்யாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும்  கடினமில்லாமலும் அலட்டிக் கொள்ளாமலும் வேலைகள் செய்யலாம் எனவும் மருத்துவர் கூறியிருந்தார்.

ஆகவே கோயிலுக்கு அழைத்து சென்று வரலாம் என முடிவு செய்தான் அன்பு. காலையில் கூட்டமாக இருக்கும் என்பதால் முன் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு புறப்பட்டனர்.

கோயிலில் அரச்சனை சீட்டு வழங்கும் இடத்தில் ஜீவாதான் இருந்தான். அவனை கண்டதுமே லாவண்யாவுக்கு அடையாளம் தெரிந்து விட்டது.

சீட்டு வாங்க போகாமல் வேறு யாரை அனுப்பலாம் என பார்த்தான் அன்பு. அவனது மனம் புரிந்தவராக சீட்டு வாங்கி வரும்படி மிதுவிடம் சொன்னார் அருந்ததி.

“நிம்மதியா சாமி கும்பிட முடியுதா, வந்திட்டான் இங்கேயும்” என முணு முணுத்தார் விஜயா.

“கோயில்மா இது, நமக்கு மட்டும்தான் இங்க வர உரிமையா? வீட்லேருந்து கிளம்பும் போதே வாய தொறக்க கூடாதுன்னு சொல்லித்தானே உன்னை அழைச்சிட்டு வந்தேன்?” என அருந்ததி தன் அம்மாவை சின்ன குரலில் அதட்டினார்.

மோவாயை தோளில் இடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டார் விஜயா.

மிது தன்னிடம் வரவும் கண்கள் பள பளக்க சிரித்தான் ஜீவா. இருவரும் ஏதோ பேசிக் கொண்டனர். அவன் சீட்டு கிழித்து கொடுத்து விட்டு பணம் வாங்க மறுத்தான். அவள் ஏதோ திட்டுவது போல் தெரிந்தது, அவனது வாலட்டில் இருந்து பணம் எடுத்து மேசை டிராயரில் போட்டுக் கொண்டு சிரித்தான்.

“இதென்னடா இவகிட்ட வம்பு செய்றான் போலடா அந்த பய” என பொங்கினார் விஜயா.

“சும்மா இரும்மா நீ!” என அதட்டினார் அருந்ததி.

“எதுக்குடா என்னை அடக்குறா உன் அம்மா? நீயும் பார்த்துகிட்டு சும்மா நிக்கிறியே” என பேரனிடம் கோவப்பட்டார் விஜயா.

தன் மனைவியை பார்த்தான் அன்பு.

“இவனை எங்களுக்கு முன்னாடியே தெரியும்ங்க, மிது ஃப்ரெண்டோட கஸின்தான் இந்தப் பையன். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கான்” என்றாள் லாவண்யா.

“என்னது உன் அப்பனுக்கு தெரிஞ்சவனா? அப்ப இந்த சங்கரன் மாதிரிதான் பசுபதியும் அவன் அப்பாவும் இந்த பயலுக்கு இடம் கொடுத்து வச்சிருக்காங்களா?” என கோவப்பட்டார் விஜயா.

“அப்படிலாம் இல்லைங்க, ஜீவா யாருன்னு அப்ப யாருக்குமே தெரியாது” வேகமாக கணவனிடம் சொன்னாள் லாவண்யா.

“சரி சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என மருமகளை அமைதியாக இருக்க வைத்தார் அருந்ததி.