ஜீவாவும் அவளின் கையை விட்டான். ஆனால் அப்படியே விடாமல் வேண்டுமென்றே அவனது கையை பிடித்துக்கொண்டாள் மிது.

“அவனை விட்டு தள்ளிப் போ மிது, நீ ஆசை படறது எப்பவும் நடக்காது” என்றான் அன்பு. 

 

“நான் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு என் அப்பாம்மாதான்  சொல்லணும் மாமா” என்றாள் மிது. 

ஜீவாவின் முன்னிலையில் அசிங்க பட்டது போல உணர்ந்த அன்பு தன்னிலை இழந்து விட்டான். 

“வயசுப் பொண்ணு இப்படி அடுத்தவங்க முன்னாடி அவன் கையை புடிச்சிட்டு நிக்கிறயே, வெட்கமா இல்லை உனக்கு?” என இரைந்தான் அன்பு. 

மிதுவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதைக் கண்ட ஜீவாவுக்கு அன்புவின் மீது கோவமானது. 

மனதளவில் தளர்ந்து போயிருந்த அருந்ததி இனியும் இங்கிருக்க வேண்டாம் என கருதி நடக்க ஆரம்பித்தார். மிதுவின் கண்ணீரில் குற்ற உணர்வு மேலிட அமைதியாகி விட்ட அன்பு அம்மாவை கவனிக்கவில்லை. 

“ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோவம்? நீங்களும் லவ் மேரேஜ்தான பண்ணிக்கிட்டீங்க? என்னங்க பெரிய தப்பு பண்ணிட்டான்னு இவளை இப்படி அழ விடுறீங்க?” எனக் கேட்டான் ஜீவா. 

“எல்லாம் உன்னாலதான், நீ எங்கள விட்டு தள்ளிப்போ, ஊர் பக்கம் தலை வைக்காத, எல்லாம் சரியாகிடும், போயித் தொலைடா!” என்றான் அன்பு. 

“சொல்றத புரிஞ்சுக்காம இப்படி பேசினா என்ன அர்த்தம்?” என சலிப்பாக சொன்னான் ஜீவா. 

“ஏய் சொன்னா புரியாது உனக்கு? உங்கம்மாவால எங்கம்மா அழுதாங்க, இப்ப என் நிம்மதிய கெடுக்க நீ வந்திருக்கியா?” என சீறினான் அன்பு. 

“உங்களுக்கு உங்கம்மா எப்படியோ அப்படித்தான் எனக்கும் என் அம்மா. எல்லாத்துக்கும் பொறுமையா போக மாட்டேன், நான் கிளம்புறேன், எப்பவும் என் அம்மா பத்தி பேசாதீங்க” என உணர்ச்சி வசப் பட்டு பேசினான் ஜீவா. 

இன்னும் கூச்சல் குறையாததால் திரும்பி பார்த்தார் அருந்ததி. 

“என் அம்மாவும் உன் அம்மாவும் ஒன்னா டா? உன்னை யாரு இங்க வர சொன்னது, எதுக்கு வந்த இங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஜீவாவை முரட்டுத் தனமாக அங்கிருந்து தள்ளினான் அன்பு. 

ஜீவாவுக்கும் கோவம் வர திமிறிக் கொண்டு நின்றான். மிது ஒருத்தியால் அவர்களை தடுக்க முடியவில்லை. இயந்திரங்களின் ஒலியால் உள்ளிருந்தவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. அருந்ததி வேகமாக இவர்களை நோக்கி வந்தார். 

அன்புவின் பெயரை சொல்லி அழைத்து, அவனை விலகும் படி சத்தமிட்டார். அம்மாவின் பேச்சுக்கு அடிபணிய மறுத்து ஜீவாவுடன் மல்லுக்கு நின்றான் அன்பு. 

வேறு வழியில்லாமல், “ஜீவா… உன்னைத்தாப்பா ஜீவா! நீ நிறுத்துப்பா, தள்ளி போ அவன்கிட்டருந்து, நான் சொல்றத கேளுப்பா, சண்டை போடாத ஜீவா” என ஜீவாவிடம் மன்றாடினார் அருந்ததி. 

அவரின் சொல்லுக்கு பணிந்த ஜீவா தன் கைகளை தளர்த்தி விட்டான். அவனது பார்வை அருந்ததியிடம் இருந்தது. 

சட்டென அவனுக்கு அவனது அம்மாவின் நினைவுகள், கண்கள் கலங்க அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது கலங்கிய முகமும் அந்த பார்வையும் அருந்ததியை என்னவோ செய்தது. 

இப்போது அன்பு, ஜீவாவின் சட்டையை பற்றி தர தரவென இழுத்துக் கொண்டு சென்றான். அவனது இழுப்புக்கு  போனாலும் ஜீவாவின் பார்வை மட்டும் அருந்ததியிடத்தில்தான் இருந்தது. 

மிதுவும் அருந்ததியும் அன்புவை தடுக்க ஓடிச் சென்றார்கள். பலம் கொண்ட மட்டும் ஜீவாவை தள்ளினான் அன்பு. எதிர்த்து நிற்காததால் எளிதாக கீழே விழுந்தான் ஜீவா. அங்கிருந்த முட் செடிகள் அவனது கைகளில் சிராய்ப்புகளை ஏற்படுத்தியது. 

“என்ன பண்ணிட்டான் பாரேன், அந்த புள்ள விழுந்திட்டானே!” என பதறிய அருந்ததி, ஜீவாவின் அருகில்  முட்டி போட்டு அமர்ந்தார். ஜீவாவை மடியில் தாங்கிக் கொண்ட மிது, அவன் கைகளை பார்த்து விட்டு அழுதாள். 

ஜீவாவின் வலது கையில் நல்ல சிராய்ப்பு, குருதி வழிந்தது. தன் புடவை முந்தானையால் இரத்தம் வருமிடத்தில் அழுத்திப் பிடித்த அருந்ததி அன்புவை பார்த்து, “போடா இங்கேருந்து!” என சீறினார். 

அம்மாவின் கோவத்தில் ஸ்தம்பித்து போனான் அன்பு. 

ஜீவாவை எழுப்பி அழைத்து சென்று காரில் அமர வைத்தாள் மிது. கதவு திறந்திருக்க,  வெளிப்பக்கமாக கால்களை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவா. 

முன் பகுதியில் இருந்த முதலுதவி பெட்டி தந்தார் அருந்ததி. அவனது காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டாள்  மிது. 

“வேற எங்கேயும் அடி இல்லையேப்பா?” என விசாரித்தார் அருந்ததி. இல்லை என தலையாட்டினான் ஜீவா. 

“அவர் தள்ளினா அப்படியே போய் விழுவீங்களா?” என கடிந்து கொண்டாள் மிது. 

“அடியே இப்பதான் ஓஞ்சு போயிருக்கு, ஏதாவது பேசி திரும்ப தூண்டி விடாதடி!” என மிதுவை அதட்டினார்  அருந்ததி. 

“உங்க புள்ளைகிட்ட மட்டும் ஏதும் சொல்லிடாதீங்க” என்றாள் மிது. 

“கேட்குற நிலையிலயா இருக்கான் அவன்? திரும்ப சண்டை வந்தா நீதான் மத்திசம் பண்ணனும் பார்த்துக்க!” என்றார் அருந்ததி. 

“நீங்க சண்டை போடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்கல்ல? பிராமிஸ் சண்டைக்கு போக மாட்டேன், கவலை படாதீங்க” என்ற ஜீவாவை கூர்ந்து பார்த்தார் அருந்ததி. 

ஜீவாவின் கண்கள் அருந்ததிக்கு அவனது அப்பாவை நினைவு படுத்தின. ஜீவாவை நெருக்கமாக பார்க்கும் போது அம்மாவை போன்ற உணர்வுதான் அன்புவுக்கும். அதனால்தான் அவன் மீது அப்படியொரு ஆத்திரம். 

அருந்ததிக்கு வார்த்தையால் சொல்ல முடியாத நிலை. 

ஒரு காலத்தில் யாரின் அன்புக்காக காத்துக் கிடந்து, ஏமாந்து போய், இறுதியில் துரோகத்தை பரிசாக பெற்றுக் கொண்டாரோ அவரின் கண்கள். இன்று அந்த கண்கள் தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தன்னை அன்பாக ஊடுருவி பார்க்கின்றன. 

பேச்சிழந்து நின்ற அருந்ததி காற்றின் வேகம் கூடியதில் சுயம் பெற்றார். “அவன் கொஞ்சம் முரடன், கெட்டவன் இல்லப்பா. அவன் சின்ன வயசு அவ்ளோ நல்லதா அமையல, அந்தக் கோவம் இன்னும் அவனுக்குள்ள இருக்கு. இடம் தெரியாம உன்கிட்ட காட்டிட்டான்…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அடுத்து அவர் மன்னிப்புதான் கேட்க போகிறார் என்பதை கணித்து அவரின் வாயை பட்டும் படாமல் தன் கையால் மூடினான் ஜீவா. 

அருந்ததி, ஜீவா இருவரின் பார்வைகளும் நேர்க் கோட்டில் இருந்தன. 

“யாரோட தப்புக்கும் யாரும் பொறுப்பாக மாட்டாங்க” என்றான் ஜீவா. 

அவர் அவனையே பார்த்திருக்க, “உங்க ஹஸ்பண்ட் பண்ணின தப்புக்கு என் அம்மா காரணமில்லை” என்றான் ஜீவா. ஒத்துக் கொள்வதாக தலையாட்டினார் அவர். 

“முடிஞ்சா அவருக்கு புரிய வைங்க” என சொல்லி தன் கையை அகற்றிக் கொண்டான். 

அருந்ததி அவனைப் பார்த்து மிகவும் மெலிதாக புன்னகை செய்தார். 

“தப்பே செய்தாலும் எந்த அம்மாவும் பசங்ககிட்ட ஸாரி கேட்க தேவையில்லை” என்றவன் குரலை செருமிக் கொண்டு, “பசங்களுக்காக யார்கிட்டேயும் ஸாரி கேட்க தேவையில்லை” என தான் சொன்ன வாக்கியத்தை திருத்திக் கொண்டான். 

அசந்து போய் விட்டார் அருந்ததி. அவனது இருப்பு தன்னை தொந்தரவு செய்யும் எனதான் நினைத்திருந்தார், இப்போதும் தொந்தரவு செய்கிறான், ஆனால் நேர்மறையான தொந்தரவு. 

என்ன தோன்றியதோ ஆசீர்வதிப்பது போல தன் கையை அவனது தலையில் வைத்து அழுத்திக் கொடுத்து விட்டு தான் பெற்ற மகனிடம் சென்றார் அருந்ததி. 

“என்ன ஜீவா நடக்குது இங்க?” என புலன் விசாரணை செய்தாள் மிது. 

“செல்வி பெரியம்மா, இதோ இவங்க இப்படி யார் அக்கறை காட்டினாலும் எனக்கு என் அம்மா செய்ற மாதிரியே இருக்கு மிது. அம்மா என் கூடத்தான் இருக்காங்க” என்றான் ஜீவா. 

“அடடா! சரியான அம்மா கோண்டு!” என சொல்லி அவனது சிகையை கலைத்து விட்டாள் மிது. 

ஆலையின் உள்ளே செல்லாமல் இவ்வளவு நேரம்  வெளியேதான் நின்றிருந்தான் அன்பு. ஜீவாவிடம் செல்லவில்லையே தவிர, தன் அம்மா அவனிடம் இணக்கமாக பேசியதையும் இறுதியாக தலையில் கை வைத்து ஆசி வழங்கியதையும் பார்த்தேதான் இருந்தான். உள்ளுக்குள் அம்மாவின் மீது நல்ல கோவமும் கூட. 

“கோவம் வந்தா தலை கால் புரிய மாட்டேங்குது உனக்கு!” என குறையாக சொல்லிக் கொண்டே மகனின் அருகில் வந்து நின்றார் அருந்ததி. 

“எதுக்கும்மா வந்த இங்க? போ அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் விருந்து வை” என முறுக்கிக் கொண்டான் அன்பு. 

“ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்லி நீயா அவன் அம்மாவை தப்பா புரிஞ்சுகிட்ட போல. என்னை மாதிரியே அவன் அம்மாவும் ஏமாந்து போனவங்கதான். இனிமே அவங்கள தப்பா பேசக்கூடாது. உள்ள போய் ஒழுங்கா வேலைய பாரு. இன்னோரு தடவ அவன்கிட்ட வம்பு பண்ணினதா தெரிஞ்சுது…” என மிரட்டினார் அருந்ததி. 

கண்கள் இடுங்க அம்மாவை பார்த்தான் அன்பு. 

“என் பேச்சை கேட்கலைனா என் தம்பி வீட்டுக்கு போயிடுவேன் பார்த்துக்க!” என எச்சரிக்கையாக சொல்லி விட்டு அகன்றார் அவர். 

ஜீவா டி வி எஸ்ஸில் ஏறிக் கொண்டான். கிளம்புவதற்கு முன் அருந்ததியிடம் விடை பெறுவது போல தலையசைத்தான். அவனது கண்கள் அவரின் மனதை கசக்கினாலும் மறுத்தலிப்பாக அவரும் தலையசைத்தார். 

மிதுவிடம் கையசைத்தான். தன் அத்தையை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அவளும் கை அசைத்தாள். அருந்ததி கண்டும் காணாதது போல இருந்து கொண்டார். 

ஜீவா சென்றதும் மிதுவும் அருந்ததியும் காரில் ஏறிக் கொண்டனர். அருந்ததி தன் மகனை பார்க்க, அவன் விரைப்பாக நின்றிருந்தான். 

“மதியானம் சாப்பிட நேரத்துக்கு வீட்டுக்கு வாடா” என்றார் அருந்ததி. மிது அவன் பக்கமே திரும்பாமல் உர் என முகத்தை வைத்திருந்தாள். அவளை அப்படி பார்க்க அன்புவுக்கு சங்கடமாகி விட்டது. 

கார் சென்றதும் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே அங்கேயே நின்றிருந்தான் அன்பு. பின் ஆட்களை கொண்டு அங்கிருந்த முட் செடிகளை களைய சொன்னான். 

“எவ்ளோ வெட்டிப் போட்டாலும் திரும்ப வந்திடுது ண்ணா” என்றான் வேலை செய்யும் பையன். 

“வருஷக் கணக்கா வேரோடிப் போன முள்ளு, அடியோட எப்படிடா மறையும்?” எனக் கேட்ட அன்பு உள்ளே சென்று விட்டான். 

“வேரோடதான வெட்டி எரியுறோம், அண்ணன் என்ன சொல்லிட்டு போறாரு?” என புரியாமல் விழித்தான் அந்தப் பையன்.