கொஞ்சும் காதல் சாரல் -28

அத்தியாயம் -28

சொத்தில் பங்கு கேட்டு பஞ்சாயத்து  கூட்டலாமா என பெரியப்பா கேட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஜீவா. 

 “பெரியப்பா… நீங்க கேட்டுகிட்டதால உங்க மேல உள்ள மரியாதைல இங்க தங்கியிருக்கேன், மத்த படி அவரை நாலு பேர் மத்தியில அவமானம் பண்ணணுங்கிறது என்னோட நோக்கம் கிடையாது” என உறுதியாக சொல்லி விட்டான் ஜீவா.

சரி சரி என அவனை சமாதானம் செய்தார் சங்கரன். வண்டியும் ஸ்டார்ட் ஆகி விட அங்கிருந்து புறப்பட்டனர். 

வீடு வந்த அன்பு மனைவியை போய் பார்த்தான். லாவண்யா, தான் நன்றாக இருப்பதாகவும் கொஞ்சம் போல நடமாட விடுங்கள் எனவும் கெஞ்சலாக கேட்டாள். அவளுக்கு கோயிலில் வேண்டுதல் இருக்கிறதாம், திருவிழா சமயத்தில் நேரில் சென்று வழிபாடு செய்ய பிரியப் பட்டாள். மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு பார்க்கலாம் என்றான். 

“ஹ்ம்ம்… அப்போ சீக்கிரம் டாக்டர்கிட்ட கேளுங்க, உங்க முகம் ஏன் என்னவோ போல இருக்கு?” என விசாரித்தாள் லாவண்யா. 

ஒன்றுமில்லை என்றவன் சாப்பிட்டு விட்டு எண்ணெய் ஆலைக்கு கிளம்புகிறேன், நீ ஓய்வெடு என சொல்லி சாப்பிடுமிடம் சென்றான். 

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மிது இவனை கண்டதும் தலை குனிந்து கொண்டாள். அவனது கூர் பார்வையால்  அவளால் சாப்பிடவே முடியவில்லை, எழுந்து கை கழுவிக் கொண்டவள் சமையலறையில் போய் நின்று கொண்டாள். 

“சூடா தோசை போட்டுட்டு இருக்கேன், என்ன நீ அதுக்குள்ள கை கழுவிட்ட?” எனக் கேட்டார் அருந்ததி. 

தனக்கு போதும் என்றவள் மாமா வந்திருப்பதாக சொன்னாள். சூடான தோசைகளை அவனுக்கு பரிமாறும் படி சொன்னார் அருந்ததி. நீங்கள் போங்கள் , நான் தோசை ஊற்றுகிறேன் என அங்கேயே நின்று கொண்டாள் மிது. 

அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டே மகனை கவனிக்க சென்றார் அருந்ததி. சாப்பிடும் நோக்கமே இல்லாமல் ஏதோ சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் அன்பு. 

அருந்ததி பரிமாற போக வேண்டாம், பசியே இல்லை என்றான். 

“பந்தக்கால் போடணும்னு வெள்ளன எந்திரிச்சு குளிச்சு வெறும் வயித்தோடவே போன, அதெப்படி பசிக்காம இருக்கும்?” என அதட்டினார் அருந்ததி. தன்னால்தான் சாப்பிட மறுக்கிறாரோ என நினைத்து எட்டிப் பார்த்தாள் மிது. 

விஜயா அங்கே இல்லாததை உறுதி செய்து கொண்ட அன்பு கோயிலில் நடந்ததை அம்மாவிடம் கூறினான். 

“உன் பெரியப்பாவுக்கு என்னமோ ஆகிடுச்சு, விட்டுட்டு வேலைய பாரு தம்பி, சாப்பிடாம போனா ஆச்சா? நீ சாப்பிடலைன்னு லாவண்யாவுக்கு தெரிஞ்சா என்ன கவனிக்கிறீங்கன்னு என்னையில்ல திட்டுவா” என மருமகளை பேச்சின் உள் இழுத்து மகனுக்கு பரிமாறினார். 

ஒரு வாய் சாப்பிட்டவன், சாப்பிட முடியவில்லை, லாவண்யாவிடம் சொல்ல வேண்டாம் என கூறி வெளியில் சென்று விட்டான். 

பார்த்திருந்த மிதுவுக்கும் என்னவோ போலானது. மகன் பட்டினியாக இருக்க, அருந்ததிக்கும் ஆகாரம் உட்கொள்ள மனமில்லை. சாப்பிடுங்கள் என வற்புறுத்தி பார்த்த மிது, அக்காவை அழைக்கிறேன் என மிரட்டி எப்படியோ அவரை சாப்பிட வைத்தாள். 

அன்பு அவனது சிறு வயதில் தந்தையில்லாமல் பட்ட வேதனைகளை மிதுவிடம் பகிர்ந்தார் அருந்ததி. 

“அந்த பையனை பார்க்க பார்க்க இவனுக்கு சங்கடமா இருக்காதா? வேணும்னேதான் இந்த பெரிய மாமா இப்படி பண்றார், அந்த பையனையும்தான் சொல்றேன், இத்தனை வருஷம் இல்லாத உறவு இப்ப என்ன வந்து ஆடுது? என் மகன் நிம்மதிய கெடுக்கன்னே இங்க வந்து குதிச்சிருக்கான். பாரு வெறும் வயித்தோட போயிட்டான் எம்புள்ள” என புலம்பினார் அருந்ததி. 

சாப்பாட்டை கொண்டு போய் கொடுத்து வரலாம் என மிது யோசனை சொல்லவும் சரியென்றார் அருந்ததி. 

கோயிலுக்கு சென்று வருகிறோம் என லாவண்யாவிடம் சொல்லி விட்டு வீட்டிலிருந்து கிளம்பினார்கள். 

அன்பு தன்னை முறைத்துக் கொண்டே இருந்தால் மேலும் மேலும் பிரச்சனைதான் வளரும் என பயந்த ஜீவா, அவனிடம் பேசி சரி செய்ய நினைத்தான். அன்பு எங்கு இருப்பான் என பக்கத்து வீட்டில் விசாரித்துக் கொண்டு பெரியப்பாவிற்கு தெரியாமல் கிளம்பி விட்டான். 

 தன் அத்தையை காரில் அழைத்துக் கொண்டு சென்ற மிது, ஆலைக்கு உள்ளே வராமல் வெளியிலேயே இருப்பதாக சொல்லவும், என்னவென விசாரிக்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டே மகனை காண சென்றார் அருந்ததி. 

அம்மாவே நேரில் வரவும் உருகிப் போன அன்பு மறுக்காமல் சாப்பிட்டான். மிது உள்ளே வரவில்லையே, உங்களுக்குள் எதுவும் சண்டையா என அவர் கேட்கவும் அவனாலும் மனதிற்குள்ளேயே வைத்திருக்க முடியவில்லை. 

“அவன் இந்த ஊருக்கு எதுக்கு வந்திருக்கான்னு நினைக்கிற? இவளை பார்க்கத்தான்” என்றான் அன்பு. 

அருந்ததிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னடா சொல்ற நீ?” என்றார். 

“அதான் ம்மா, பெரியப்பா வீட்டு விருந்தாளி, அவனும் சென்னைதானே? ரெண்டுக்கும் எப்படி பழக்கம் வந்துச்சோ? இவனை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நான் பார்த்த ஹரிய வேணாம்னு சொல்லிருக்கா” என அன்பு சொல்லவும் நம்ப மறுத்த அருந்ததி ‘இது உன் கற்பனை!’ என அவனையே குற்றம் சொன்னார். 

“சீக்கிரம் தெரியத்தானே போகுது!” என்றதோடு அவன் நிறுத்திக் கொண்டான். 

ஜீவாவும் அங்கு வர, காரிலிருந்து இறங்கினாள் மிது. 

“ஹேய் மிதுக்குட்டி, இங்க என்ன பண்ற?” என உற்சாகமாக கேட்டான் ஜீவா. 

“அத நான்தான் கேட்கணும் ஜீவா. காலைல கோயில்ல வச்சு மாமாவை கோவப்படுத்தினது போதாதுன்னு இங்க வேற வந்திருக்கீங்களா?” என கோவப்பட்டாள் மிது. 

“நான் எதுவும் செய்யல மிது, பெரியப்பாதான்…”

“ம்ம்ம்… அவர் என்ன செஞ்சாலும் சொன்னாலும் பார்த்திட்டே நிப்பீங்களா? எப்போலேருந்து எடுப்பார் கைப்பிள்ளை ஆனீங்க நீங்க?” 

“அப்படின்னா?”

“ஜீவா! அப்படின்னா சுய சிந்தனை இல்லாம அடுத்தவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிறது நடந்துக்கிறது” 

“அது உன் ஒருத்திகிட்டதான் அப்டி!” 

“ஆஹா நம்பிட்டேன்! உங்கப்பாவால உங்களை விட அன்பு மாமா நிறைய அஃபெக்ட் ஆகியிருக்கார்னு நீங்களே உங்க வாயால  சொல்லியிருக்கீங்கதானே?”

“இப்பவும் அத இல்லைனு சொல்லலையே மிது”

“அந்த சங்கரன் மாமாக்கும் அன்பு மாமாக்கும் வேற பிரச்சனை, அவங்களுக்குள்ள டெர்ம்ஸ் சரியில்லை. உங்களை பார்த்தா மாமாக்கு கோவம் வர்றது இயல்பு, அவருக்கு புரிய வைக்கிறது விட்டுட்டு உங்க பெரியப்பா வலைல சிக்கி அன்பு மாமாவை இன்னும் கோவமாக்கி விடுறீங்க, இது நல்லதுக்கில்ல”

“நீ பாட்டுக்கும் எம்மேல கம்ப்ளைண்ட் சொல்லாத” 

“நல்லா கண்ண தொறந்து பாருங்க ஜீவா. அன்பு மாமாவை அவமான படுத்தறதுதான் உங்க பெரியப்பாவோட நோக்கம். அதுக்காக உங்களை யூஸ் பண்ணிக்கிறார்” 

“அப்படிலாம் என்னை அவர் யூஸ் பண்ணிக்க முடியாது. கொஞ்ச நேரம் முன்னாடி கூட சொத்துல பங்கு கேட்கலாமான்னு கேட்டார் என்கிட்ட, அதென்ன…ஹஹான்… பஞ்சாயத்து கூட்டலாமான்னு கேட்டார். அதெல்லாம் முடியாதுன்னு அடிச்சி சொல்லிட்டேன்” என்றான் ஜீவா. 

“ஏன் கூட்டித்தான் பாரேன்” என்ற அன்புவின் குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். 

அன்பு கிண்டலான பார்வையோடும் அருந்ததி திகைப்போடும் நின்றிருந்தார்கள். 

“நான் சொன்னப்போ நம்பலைல மா நீ, பார்த்துகிட்டியா இப்போ?” எனக் கேட்டான் அன்பு. 

அத்தையின் குற்றம் சுமந்தும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் மிது. 

“நான் பேசி புரிய வைக்கத்தான் இங்க வந்தேன். நிஜமா உங்க யாரையும் ஹர்ட் பண்ணணும்னு நான் நினைக்கவே இல்லை. மார்னிங் பெரியப்பா அப்டி பேசினத்துக்கு ஸாரி, உங்களை குறைச்சு காட்டணும்னு அன்னதானத்துக்கு பணம் கொடுக்கல.  என்னை விட வயசுல பெரியவர் நீங்க, இந்த ஊர்லேயும் நீங்கதான் பெரியாள், உங்களுக்கான மரியாதை…” ஜீவா சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்து என்பது போல கை காட்டினான் அன்பு. 

“நான் யாரு என்னன்னு நீ சொல்லித்தான் எனக்கு தெரியணும்னு இல்லை. முடிஞ்சா பஞ்சாயத்தை கூட்டு, கோர்ட்டுக்கு கூட போடா. எங்கப்பாக்கு யார் வாரிசுன்னு லீகலா தெரிஞ்சுக்கலாம். வந்திட்டான்…” என்றான் அன்பு. 

வெளிப்படையாக சொல்லா விட்டாலும் ஜீவாவின் பிறப்பை கேலி செய்வது போலிருந்தது அன்பு பேசிய தொனி. நிச்சயமாக ஜீவாவின் மனது காயப்பட்டு விட்டது. 

“விடு அன்பு, எதுவும் பேச வேணாம்” என மகனிடம் சொன்னார் அருந்ததி. 

“இவர் ஸாரி கேட்கத்தான் வந்திருக்கார் மாமா. பேச பிடிக்கலைனா பேச வேணாம், இப்படி பேசாதீங்க” என்றாள் மிது. 

“உன்கிட்ட நான் பேசவே இல்லை, அமைதியா நில்லு!” என அவளிடம் கோவப்பட்டான் அன்பு. 

“நீங்க இவரை பேசுறது தப்பா இருந்தா கேட்கத்தான் செய்வேன் மாமா” என சற்று சத்தமாகவே சொன்னாள் மிது. 

“அமைதியா இரேன் டி!” மகனின் கோவத்தை பற்றி அறிந்த அருந்ததி மிதுவை அடக்கப் பார்த்தார். 

“அத உங்க பையன்கிட்ட சொல்லுங்க த்தை!” என்றாள் மிது. 

இருவரும் உரிமையாகத்தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் அன்புவின் பார்வையில் மிது தன் அம்மாவுக்கு மரியாதை தராமல் குரல் உயர்த்துகிறாள் என்றே பட்டது. 

“ஏய்! லாவண்யா தங்கச்சியா போயிட்ட, இல்லைனா…” என மிரட்டலாக சொன்னான் அன்பு. 

“இல்லைனா என்ன பண்ணிடுவீங்க?” என அவளும் பதிலுக்கு கேட்டாள். 

“குடும்பம் கலைக்கிற பொம்பளைக்கு பொறந்தவனுக்காக என்னையும் என் அம்மாவையும் எதிர்த்து பேசுவியா நீ!” என அதட்டினான் அன்பு. 

“திரும்ப திரும்ப தப்பா பேசாதீங்க மாமா. உங்க மனசாட்சிக்கு தெரியும் உண்மை, தெரியலைன்னா அத்தைகிட்ட கேளுங்க, அவங்க சொல்வாங்க உண்மையை.  குடும்பம் கலைக்கிறவங்களா ஜீவாவோட அம்மா? அவங்களும் அத்தை மாதிரிதான் உங்கப்பாகிட்ட ஏமாந்து போனாங்க”  என்றாள் மிது. 

அருந்ததிக்கு இப்படியான விவாதம் அறவே பிடிக்கவில்லை. பழைய வடுக்களை கீறி விடப்படுவது போல உணர்ந்தார். 

உள்ளே வேலை செய்த சிலர் எட்டிப் பார்த்து விட்டு அன்புவின் முறைப்பை கண்டு அஞ்சி மீண்டும் உள்ளே சென்று விட்டனர்.  

அன்புவும் மிதுவும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே போனார்கள். மிதுவை பேச வேண்டாம் என சொல்லி அவளின் கையை பிடித்து இழுத்தான் ஜீவா. 

“என் ஊருடா இது, எனக்குன்னு மரியாதை இருக்கு, ஒழுங்கு மரியாதையா அவ கையை விடு!” என அதட்டினான் அன்பு