மணியிடம் எல்லாம் பகிர்ந்து கொண்டான். பங்கஜ் கேட்ட போது மட்டும் மிது இன்னும் கோவத்தில்தான் இருக்கிறாள் என சொல்லி வைத்தான். எதிர்காலத்தில் தன்னை எதற்காகவும் அவர் நிர்பந்திக்க கூடாது என்பதால் அவ்வாறு சொல்லி வைத்தான்.
தன்னால்தான் அவர்களுக்குள் பிரச்சனை என பயந்து போன பங்கஜும் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, மிதுவை சமாதானம் செய்து அவளோடுதான் நீ சென்னை வர வேண்டும் என கூறி விட்டார்.
ஒரே பேத்தி என்பதால் காதணி விழாவை சிறப்பாக செய்ய ஆசைப்பட்டார் சங்கரன். அன்றாட செலவுகளுக்கே சற்று சிரமப் படும் நிலை அவருடையது. ஆகவே கடன் பெற முயன்றார். பெரியம்மா மூலமாக விஷயத்தை அறிந்து கொண்ட ஜீவா உரிமையாக கோவப்பட்டான்.
“பேருக்காக என்னை மாமான்னு நிறுத்த நினைக்கிறீங்களா பெரியப்பா? இல்லை நிஜமா என்னை உறவா பார்க்குறீங்களா?” என ரோஷமாக அவன் கேட்கவும் பதறி விட்டார் சங்கரன்.
அனைத்தும் நான் செய்வேன் என தீர்மானமாக அவன் சொல்ல, மறு பேச்சின்றி ஏற்கவும் செய்தார்.
மிதுவிடம் தனிமையில், “உன் நெனப்பு என்னன்னு தெரியும் எனக்கு, நல்லது கெட்டது தெரியாம இருக்க நீ, மனச மாத்திக்க, இல்லைன்னாலும் எப்படியும் நடக்க விட மாட்டேன், உனக்குத்தான் கஷ்டம்” என எச்சரிக்கை போல சொல்லியிருந்தான் அன்பு.
பதிலுக்கு அவள் எதிர்த்து எதுவும் பேசவில்லை. அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக அப்பா சொல்லியிருக்கும் போது எதற்காக இவரின் கோவத்தை நான் தூண்ட வேண்டும் என அமைதியாகவே இருந்து விட்டாள்.
ஜீவாவுக்கு பெரிதாக வேலைகள் இல்லையே, ஆகவே பெரியப்பா, பெரியம்மா இருவரும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் அவன்தான் டிவிஎஸ் பைக்கின் டிரைவர்.
அன்று கோயில் திருவிழாவுக்கு பந்தக்கால் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். சங்கரன் விழா கமிட்டியின் உறுப்பினர், ஆகவே அவரும் கிளம்பினார்.
அன்பு வருவான் என்பதால் ஜீவா பெரியப்பாவுடன் வரத் தயங்கினான். அவர் விடவில்லை, “எவன் என்ன சொல்றான்னு பார்க்கிறேன் நான்!” என மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சொன்னவர் ஜீவாவையும் அழைத்துக் கொண்டுதான் கோயிலுக்கு சென்றார்.
ஜீவாவை கண்டதுமே அங்கிருந்த அன்பு விரைப்பாக நின்றான். அவனது சித்தப்பா பிரகாசம், “சும்மா சும்மா அண்ணனை கோச்சுக்க முடியாது அன்பு, உனக்குத்தான் அவரை பத்தி தெரியுமே, நாம பேச பேசத்தான் வீம்புக்குன்னே ஏதாவது செய்வார். அந்த பய அவர் வீட்டுக்கு வந்த யாரோ விருந்தாளின்னு நினைச்சிக்க. கோயில் காரியம் சுமூகமா நடக்கணும், அமைதியா இரு அன்பு” என எடுத்து சொன்னார்.
மற்ற ஊர் பெரியவர்களுக்கும் அதுதான் எண்ணம். கோயில் நிகழ்ச்சிகளில் பிரச்சனை என்றால் தெய்வக் குற்றம் ஆகி விடும் என கருதினார்கள்.
தான் தலையெடுத்த பிறகு தன் பேச்சை கேட்டு நடந்த அனைவருமே இப்போது தனக்கு எடுத்து சொல்கிறார்கள் என்ற கோவம் அன்புவுக்கு. ஆனாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.
பந்தக்கால் நடப் பட்டது. தன்னை அழைத்து என்ன செய்ய சொன்னாலும் ஜீவாவையும் அழைத்து செய்ய வைத்தார் சங்கரன்.
அவன் தயங்கினாலும், “வா வா வந்து செய்யு, ஏன் சாமி அருளு சிலருக்குதான் கிடைக்கணுமா? இந்த ஊரை சேர்ந்த எந்தம்பி பாலசந்திரன் பையன் நீ, இதெல்லாம் செய்ய உனக்கும் உரிமை இருக்கு” என வெண்கல தொண்டையில் பறை சாற்றினார் சங்கரன்.
அன்புவின் தாடையும் முஷ்டியும் இறுகிப் போயின. ‘எதற்கு இந்த வேண்டாத வேலை இவருக்கு?’ என நினைக்காதவர்கள் யாருமில்லை. ஏதாவது எதிர்த்து சொன்னால் ஆவேசத்தில் என்ன செய்வாரோ என்ற பயத்தில் யாரும் வாய் திறக்கவில்லை.
திருவிழா ஆரம்பித்த நாளிலிருந்து முடியும் வரை கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் நபர்கள் சாப்பிடுவார்கள். ஆகவே பெரிய திட்டத்தில் செய்யப்படும்.
எளிய மக்கள் பத்து ரூபாயும் கொடுப்பார்கள், முடிந்தவர்கள் பத்தாயிரம் கூட வழங்குவார்கள்.
ரசீது போட்டுக் கொடுப்பவர்களிடம் “எவ்வளவு கொடுக்கணும்ங்க?” எனக் கேட்டான் ஜீவா.
அன்புவை குளிர்விக்க ஜீவாவை மட்டம் தட்ட எண்ணினார்கள் அவர்கள். ஆகவே, “லட்ச ரூபா கொடுக்கணும் தம்பி” என கிண்டலாக சொன்னார்கள்.
“எலேய் யாருகிட்ட பேசுறேன்னு நெனப்பு வச்சுக்க, சங்கரன் தம்பி மவன்டா அவன். நீ என்னடா எம்புட்டு கொடுக்கணும்னு ரூலு போடுறது? மனசார எட்டணா கொடுத்தாலும் அது தானம்தான். மருவாதியா இருந்துக்க!” என எச்சரித்தார் சங்கரன்.
“அப்ப முடிஞ்சத கொடுக்கணும், பெரிய சமீந்தார் மாதிரி எதுக்கு கேள்வி கேட்டுகிட்டு?” என்றான் ரசீது போடுபவன்.
“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் என் தம்பி மவன் இந்த ஊர்ல பெரிய தலைக்கட்டுதான். எங்கப்பாருதான் நியாயம் தப்பி ஒரு குடும்பத்துக்கே அம்புட்டையும் அள்ளி கொடுத்திட்டு போயிட்டாரு, அவர் கொடுக்காட்டா கூட கோடீஸ்வரன்டா என் தம்பி மவன்” என்றார் சங்கரன்.
“பெரியப்பா வேணாம்” என அவருக்கு மட்டும் கேட்கும் படி கெஞ்சினான் ஜீவா.
“அவ்ளோதான் உங்களுக்கு மரியாதை!” என முறுக்கிக் கொண்டு வந்தான் அன்பு. அவரை தடுத்து நிறுத்தினார் பிரகாசம். மற்ற பெரியவர்கள் சமரசம் பேசினார்கள். ஒரு வழியாக அவ்விடம் அமைதியானது.
இணைய வழியாக பணம் செலுத்தலாமா என கேட்டறிந்து கொண்ட ஜீவா பணம் செலுத்தி விட்டு, “செக் பண்ணிக்கோங்க” என்றான்.
பண வரவை சோதித்தவன் வாய் பிளந்து, “லட்ச ரூபாயா?” என வியப்பாக கேட்டான்.
“ஆமாங்க, ஒருத்தர் வயிறு நிறைக்கிறது விட வேற என்ன நல்ல காரியம் இருக்க முடியும் சொல்லுங்க?” என புன்னகையுடன் கேட்டான் ஜீவா.
சங்கரன் பெரியப்பா தன் மீசையை கெத்தாக முறுக்கி விட்டுக் கொண்டு ஊர் பெரியவர்களை மிதப்பாக பார்த்தார்.
“இந்த வருஷம் அன்னதானதுக்கு என் சார்புல ரெண்டு லட்சம் எழுதிக்கடா” என்றான் அன்பு.
“பெரியப்பா நாம கிளம்பலாம்” என்றான் ஜீவா.
“ஹஹ! போலாம்டா, மனசு வந்து முதல்ல செஞ்சுவன் நீதான் டா, உன்னை பார்த்து உனக்கு ஈடாகுனும்னோ இல்லை உன்னை விட உசரனும்னோ வேற எவனும் செஞ்சா நீ குறைஞ்சு போயிடுவியா என்ன?” என சத்தமாக கேட்ட சங்கரன், ஜீவாவின் மார்பில் தட்டி, “உனக்கு நிகர் நீதான் டா, வேற எவனும் இல்லை!” என சொன்ன பிறகே அவனோடு கிளம்பினார்.
“எடுத்தோனே லட்ச ரூபாயை கொடுத்திட்டானே, பெரியாளா இருப்பான் போல” என மற்றவர்கள் சிலாகித்து பேசிக் கொண்டது வேறு அன்புவை காய வைத்தது.
அன்பு அன்னதானத்திற்கு என இதற்கு முன் இப்படி பெருந்தொகை கொடுத்தது கிடையாது என்றாலும் வேறு வேறு வகையில் ஊரின் நன்மைக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்தான். இன்று ஜீவாவை தூக்கி வைத்து பேசுவதை அவனால் பொறுக்க முடியவில்லை.
வழியில் டி வி எஸ் ஏதோ கோளாறு செய்ய என்னவென பார்த்துக் கொண்டிருந்தனர் ஜீவா, சங்கரன் இருவரும்.
அவர்களை நோக்கி வந்த அன்பு பைக்கின் வேகத்தைக் குறைத்து அவர்களை ஏளனமாக பார்த்துக் கொண்டே சென்றான்.
“பார்த்தியா ஜீவா அவன் எகத்தாளத்த? அந்த பயல எப்படியாவது அடக்கணும். உனக்கும் உங்கப்பன் சொத்துல உரிமை இருக்கு, பங்கு கேட்டு பஞ்சாயத்து கூட்டினா என்ன?” எனக் கேட்டார் சங்கரன்.