ஆதலால் மிதுவுக்கும் சென்னை புறப்படுவது வரை இங்கேயே இருக்கும் படியானது.

கிளம்புவதற்கு முன் மிதுவின் அறையில் அவளிடம் பேசினார்கள் அவளின் பெற்றோர்.

இந்த ஊரில் திருவிழா துவங்கி விட்டால் அன்பு மிகவும் பிஸியாக இருப்பான். அதற்குள் வீட்டில் தாத்தா பாட்டியிடம் விஷயத்தை மெல்ல சொல்லி வைக்கிறோம், திருவிழாவுக்கு பின் அன்புவிடமும் பேசி விடலாம்.

திருமணம் முடிந்ததை யாரிடமும் சொல்ல முடியாது, நீங்களும் பதிவுத் திருமணமே செய்திருப்பதால் நம் முக்கிய சொந்தங்ளை அழைத்து கோயிலில் வைத்து எளிமையாக தாலி கட்டி திருமணம் செய்து விடலாம், அதுவரை பிரச்சனை ஏதும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார் பசுபதி.

மிதுவும் சரியென தலையாட்டிக் கொண்டாள்.

அவளிடம் கடு கடுவென இருந்த வினோதினி, “அப்படியே ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி மண்டைய ஆட்டாத, நீ பண்ணி வச்ச காரியத்தால எங்க நிம்மதிதான் போகுது. உனக்கு லவ் பண்ண வேற ஆளுதான் கிடைக்கலியா?” என கோவப்பட்டார்.

சலுகையாக அப்பாவின் கையை பிடித்துக்கொண்ட மிது பாவமாக அவரை பார்த்தாள்.

“இப்படித்தான் செய்ய போறோம்னு முடிவாகிடுச்சுன்னா அத நல்ல விதமாவே செய்யலாம் வினோ. நம்ம பொண்ணு இவ” என மகளுக்காக பரிந்தார் பசுபதி.

“எப்படிங்க உங்களுக்கு மனசு வருது, இவ செஞ்ச காரியம் எனக்கு ஆறவே ஆறாது. என்ன குறை வச்சோம் நாம? ஒரு வேளை பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சு கொடுத்ததால வந்த துணிச்சலோ? காதலிச்சாலும் நம்மகிட்டதானே வந்து சொல்லணும், கல்யாணம் பண்ணியே ஆகணும்னாலும்… என்னை விடுங்க, உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம், அட… பண்ணிக்கிட்டு கூட சொல்லலையே இவ… எம்பொண்ணா இப்படி பண்ணிட்டான்னுதான் இப்பவும் என் மனசு அடிச்சுக்குது. என் வளர்ப்புதான் சரியில்லை…” என அரற்றி கண்ணீர் விட்டார் வினோதினி.

இப்போது மிதுவுக்கும் அழுகை வந்தது.

“இங்க பாரு வினோ, பாப்பா பண்ணினது தப்புதான், இத ஏத்துக்க உனக்கு நாளாகும். ‘தப்பு பண்ணிட்ட, அதனால் தண்டனை அனுபவி’ன்னு சொல்ல நம்ம யாரோ இல்லை. தப்பே பண்ணினாலும் அத சரி செஞ்சு தர வேண்டிய கடமை நமக்கிருக்கு, புலம்பி என்னாக போகுது? பாப்பா சந்தோஷமா வாழ்ந்தா இந்த வருத்தமெல்லாம் தானா மறைஞ்சு போகும்” என்றார் பசுபதி.

தந்தையின் பேச்சில் குற்ற உணர்ச்சி மேலிட, “ஸாரிப்பா ஸாரிம்மா…” என அழுது கொண்டே சொன்னாள் மிது.

மகளின் அழுகையில் வினோதினியும் அமைதியாகி விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் மகளுடனே இருந்து அவள் தெளியும் வரை காத்திருந்தனர்.

வெயில் நன்றாக தாழ்ந்து விட்டது. மகளின் முகத்தை கழுவிக் கொள்ள செய்து இன்னோரு முறை மஞ்சள் பத்து போட்டு விட்டார் வினோதினி. அறைக்குள்ளேயே இருக்காமல் அக்காவுடன் இரு என்றனர்.

காரில் ஏறும் முன் நினைவு வந்தவராக மிதுவிடம், “ஜீவா தம்பிய சங்கரன்கிட்டேருந்து தள்ளி இருக்க சொல்லு, அவர் கூட இருந்தா அன்பு ரொம்ப கோவ படுவான், புரியுதா?” என்றார் பசுபதி.

“எனக்காகத்தான் இங்க வந்தார்ப்பா, நான் சொன்னா கேட்டுக்குவார்” என உறுதி அளித்து பெற்றோரை அனுப்பி வைத்தாள் மிது.

ஆனால் அவள் நினைத்தவாறு ஜீவா அன்று ஊருலிருந்து புறப்படவில்லை, பெரியப்பா விருப்பப்படி இங்கு தங்கப் போகிறேன் என அவன் சொல்லவும் திகைத்து விட்டாள்.

அன்பு மாமாவுக்கு தலை குனிவு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் உன் பெரியப்பாவின் திட்டம், குழந்தைக்கு மாமா செய்ய வேண்டிய முறையை நீ செய்தால் அவரின் கோவக் கனலில் பெட்ரோல் ஊற்றியதற்கு சமம், அவ்வாறு செய்தால் அப்பாவும் கோவித்துக் கொள்வார் என எடுத்து சொன்னாள் மிது.

என் அம்மா மீது தவறில்லை என்பதை முழுமையாக நம்பியவர் என் பெரியப்பா, என்னை இங்கு இருக்க செய்வதில் அவரின் திட்டம் என்னவென எனக்கு தெரியாது, ஆனால் தாய்மாமா முறை செய்ய வேண்டும் என என்னிடம் அவர் கேட்கும் போது மறுப்பது முறையல்ல, உன் மாமா அவரிடம் இறங்கி வராமல் வீம்பு காட்டப் போய்தான் இப்படியாகிறது, தயவுசெய்து என்னை புரிந்து கொள் என்றான் ஜீவா.

உண்மையிலேயே மிதுவுக்கு எந்தப் பக்கம் பேசுவது என தெரியவில்லை. அதை அவனிடமே சொன்னாள்.

“கன்ஃபியூஸ் ஆகாத மிது, நம்மளால எதுவும் முடியாதப்போ நடக்கிறத அது பாட்டுக்கும் விட்ரனும், நல்லதே நடக்கும்னு முழுசா நம்பனும், அதுவா அந்த ஃப்ளோலேயே எல்லா பிராப்லமும் சால்வ் ஆகிடும்” என்றான் அவன்.

“அப்படித்தான் நினைச்சிக்கணும், வேற வழி? ஆனா ஒன்னு ஜீவா, மாமாவை பொறுத்தவரை நாம லவ்வர்ஸ், ஊரை பொறுத்த வரை நாம நம்மளுக்கு யாரோ, அப்பா நமக்கு கல்யாணம் செய்து வைக்கிற வரை ஒழுங்கா இருக்கணும்” என கட்டுப்பாடு விதித்தாள் மிது. அவனும் ஒத்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலையிலேயே சங்கரனின் மகள் சாந்தா அவளது மகள் மற்றும் கணவரோடு வந்து சேர்ந்தாள். ஜீவாவின் வரவை சொல்லி சங்கரன்தான் அவர்களை வரவழைத்திருந்தது.

அன்பு அண்ணனை ஏன் பகைத்துக் கொள்கிறார் அப்பா, அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும் என கணவனிடம் சொல்லித்தான் புறப்பட்டிருந்தாள் சாந்தா. வழியில் அன்புவை காண நேரிடவும் சிநேகிதமாக சிரித்தான் சாந்தாவின் கணவன்.

சங்கரன் மீதுள்ள கோவத்தில் அவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டு விட்டான் அன்பு. அதில் சாந்தாவுக்கு ஏகப்பட்ட மன வருத்தம். சின்னதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், சொந்த தங்கையாக நினைத்திருந்தால்  தங்கையின் கணவனிடம் இப்படி முகம் திருப்ப தோன்றுமா? வித்தியாசம் இருக்க போய்தானே இந்த அலட்சியம்? அப்பா செய்வதில் தவறே இல்லை என நினைத்துக்கொண்டாள்.

அதற்கு தகுந்தது போல வீடு வந்தவுடன் அக்கா என அன்பாக அழைத்தான் ஜீவா. “உங்களை மாமான்னுதானே கூப்பிடணும்?” என இன்முகத்தோடு சாந்தாவின் கணவனிடம் கேட்டு முறை வைத்து உரிமையாக பேசினான். குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சினான், வாங்கி வந்திருந்த பரிசுகளை கொடுத்தான்.

ஜீவாவிடம் இயல்பாகவே இருக்கும் வசீகரமும் அவனது தன்மையான பேச்சும் அவர்களை கவர்ந்தது. தன் திருமணத்தின் போது உதவி செய்தவரின் மகன் என்பதில் கூடுதல் பாசம் சேரவும் அவனை ஏற்றுக் கொண்டு விட்டாள் சாந்தா. தன் கணவனையும் ஏற்றுக்கொள்ள செய்து விட்டாள்.

தங்கள் மகளுக்கு காதணி விழாவுக்காக சங்கரன் குறித்த தேதிக்கு ஒப்புதல் வழங்கி விட்டே அவர்கள் புறப்பட்டனர்.

சங்கரன் கண்டிப்போடு பேசுகிறார், வேகமாக கோவம் வருகிறது, மரியாதை எதிர் பார்க்கிறார் ஆனால் நியாயமாக யோசிக்கிறார், அன்பு காட்டுவதில் குறை வைப்பதில்லை. பக்கா கிராமத்து மனிதராக இருந்தார். இது ஜீவாவுக்கு பிடித்திருந்தது.

இப்போது மிதுவின் அப்பாவோடு அம்மாவும் தன்னை ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தான் ஜீவா.