நேரமாகியும் மனைவியும் மகளும் மாடியிலிருந்து வராமல் போக மீண்டும் வினோதினிக்கு அழைக்கப் போனார் பசுபதி. தான் போய் பார்த்து வருவதாக எழுந்தான் அன்பு.
அம்மாவும் மகளும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்களோ, தான் சொன்னதை மறந்து விட்டு இப்போதே மகளிடம் விசாரணை போடுகிறாளோ மனைவி என்றெல்லாம் யோசித்த பசுபதி, மருமகனை தடுத்து விட்டு அவரே மாடி ஏறினார்.
அறைக்குள் ஜீவாவை கண்டு விட்டு அதிர்ந்து போயிருந்த வினோதினிக்கு பேச்சே வரவில்லை. தனக்கு அடி பட்டு விட்டதால் தன்னை பார்க்க வந்ததாகவும் இவனது வரவை யாருக்கும் தெரியாமல் மறைக்க அறைக்குள் விட்டதாகவும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள் மிது.
“ஏற்கனவே உன் கல்யாண விஷயம் எல்லாருக்கும் தெரியும் போது மூஞ்ச எங்க போய் வச்சிக்கிறதுனு தெரியலை, இப்ப இப்படி இவரை உன் ரூம்ல பார்த்தா… ஹையோ நான் என்ன பண்ணுவேன்!” என புலம்பினார் வினோதினி.
அப்போது பசுபதி கதவை தட்ட, மூவரும் பதட்டமானர்கள். மனைவி மற்றும் மகளின் பெயரை சொல்லி அவர் அழைக்கவும்தான் தெளிந்த வினோதினி, கதவை பாதி திறந்தார். கணவர் மட்டுமே நிற்பது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு அவரை உள்ளே இழுத்து கதவை அடைத்தார்.
“சீக்கிரமா வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்னு சொன்னேன்ல, என்ன பண்ணிட்டு இருக்க நீ? மிதுவை அழ விட்டியா?” என மனைவியிடம் கேட்டவரின் பார்வையிலும் ஜீவா விழ, அவரும் திகைத்தார்.
ஜீவாவே அவரிடம் விளக்கம் சொன்னான்.
மேலும் மேலும் பேசிக் கொண்டிருக்க இது சமயமில்லையே, நானும் உன் அம்மாவும் சாப்பிட செல்கிறோம், அனைவருமே உணவு மேசைக்கு சென்று விடுவார்கள், அப்போது ஜீவாவை வெளியில் அனுப்பி விடு என மகளிடம் சொன்ன பசுபதி, சின்ன மருமகனிடம் தலையசைத்து விடைபெற்று, மனைவியோடு வெளியேறினார்.
“நீங்கதான் உங்க பொண்ணுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறது, அந்த தைரியம்தான் அவளுக்கு” என கணவரை கடிந்தார் வினோதினி.
“இப்ப வேறென்ன செய்ய சொல்ற? என்ன செஞ்சா சரியா இருக்கும்னு சொல்லு, செய்றேன்” என அவரும் மனைவியிடம் காய்ந்தார். வினோதினி வாயை மூடிக் கொண்டார்.
“உங்களை…” என ஜீவாவை பார்த்து பற்களை கடித்தாள் மிது.
“வெளியிலேயே நீ நல்ல மாதிரி டாடா காட்டியிருந்தா நான் ஏன் உள்ள வந்திருக்க போறேன்? எல்லாம் நல்லதுக்குத்தான் மிது, எப்படியோ உங்கம்மா ஓகே சொல்லிட்டாங்கல்ல?” என்றான் ஜீவா.
“அவங்க ஷாக்ல இருக்காங்க”
“அடுத்து அக்செப்ட் மோட்தானே?” என்றவனை முறைத்தாள்.
வலிக்கு மாத்திரை போட்டதில் மகள் உறங்குவதாக கீழே உள்ளவர்களிடம் சொன்னார் பசுபதி. ஏன் அழுதிருக்கிறீர்கள் என வினோதினியிடம் அருந்ததி விசாரித்ததற்கு, மகளின் முகத்தை பார்த்து அழுது விட்டேன் என சமாளித்தார்.
அன்பு அவர்களை சாப்பிட அழைக்க, மறுக்காமல் சென்றனர்.
பசுபதி மகளுக்கு மிஸ்டு கால் கொடுக்க, ஜீவாவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் மிது. சத்தமில்லாமல் இருவரும் வெளியே வந்து விட்டனர்.
சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட ஜீவா, மிதுவை அணைத்து, “டென்ஷன் ஆகாம இரு, இன்னிக்கு நைட் நான் கிளம்பிடுறேன்” என சொல்லி விலகினான்.
அவனை இழுத்து அணைத்துக் கொண்டவள், “சென்னை போய் ஒழுங்கா சாப்பிட்டு தூங்கணும், ஒன் வீக்ல வந்திடுறேன் நான்” என்றாள்.
அவளை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான் ஜீவா.
இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்த ஜீவாவிடம் “நேரத்துக்கு சாப்பிட வேணாமா? அப்படியென்ன பொல்லாத போன் பேச்சு?” என உரிமையாக கடிந்து கொண்டார் சங்கரன்.
“நேரமாயிடுச்சுன்னு மட்டும் சொல்றீங்க, கை கழுவிட்டு வந்து சாப்பிட வுட மாட்டேங்குறீங்க புள்ளைய, ஏற்கனவே என்னென்னமோ ஆகிப் போச்சு” என கணவரிடம் சொன்ன செல்வி, “நீ சீக்கிரம் வாய்யா” என ஜீவாவிடம் சொன்னார்.
இன்று நடந்த நிகழ்வுகளின் நினைவில் சங்கரனின் முகம் அழுத்தமாகி விட்டது. அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தார்.
“உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா?” என சத்தம் போட்டார் செல்வி.
“குரல உசத்தாத டி! என்ன… நேத்து பொறந்தவனெல்லாம் எனக்கு எதிரா இருக்கவும் உனக்கும் இளப்பமா போயிட்டேனா நான்? கூடிய சீக்கிரம் நான் யாருன்னு எல்லாருக்கும் காட்டுறேன்” என்ற சங்கரன் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டார்.
எப்படியோ இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார் செல்வி. தரையில் தடுக்கு போட்டுத்தான் அமர்ந்திருந்தனர். தலை வாழை இலையில் தடபுடலான அசைவ விருந்து. காரத்தில் ஜீவாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
செல்வியும் சங்கடமாக ஜீவாவை பார்க்க, “ஹையோ பெரியம்மா, எல்லாம் செமயா இருக்கு, சூப்பர் குக் நீங்க, இவ்ளோ காரம் பழக்கம் இல்லையா அதான் இப்படி” என்றான் ஜீவா.
“நீ ஊருக்கு திரும்புறதுக்குள்ள இவ கை சாப்பாட்டுக்கு பழகி போயிடுவ பாரு!” என சொல்லி சிரித்தார் சங்கரன்.
“அது வந்து பெரியப்பா… ரொம்ப முக்கியமான வேலை இருக்கு, இன்னிக்கு நைட்டே நான் கிளம்புறேன்” என்றான் ஜீவா.
சங்கரனுக்கு கோவம் வந்து விட்டது.
உனக்காக ஊர் பெரியவர்களை எல்லாம் எதிர்த்து நின்றிருக்கிறேன், நீ உடனே கிளம்பினால் உன்னை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள், என்னைத்தான் அன்புவிடம் பயந்து விட்டதாக கேலி பேசுவார்கள், என் அப்பா கொடுத்த சொத்து சுகத்தை இழந்தாலும் மானம் மரியாதையோடு வாழ்கிறேன், அதையும் இழக்க சொல்கிறாயா? இந்த வாரத்தில் திருவிழா வரப் போகிறது, அது முடியவும் என் பேத்திக்கு மொட்டையடித்து காது குத்த போகிறேன், அதுவரை இங்குதான் நீ இருந்தாக வேண்டும், என் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இருந்தால் நீ உன் இஷ்டத்திற்கு திரும்பி செல்லலாம் என்றார்.
“சொல்ல வேண்டியதை குணமா சொல்லாம இப்படியேன் புள்ளைய பயமுறுத்துறீங்க?” என கணவரை அதட்டிய செல்வி, கணவர் சொன்னதையே கொஞ்சம் நயமாக சொன்னார். காலையில் விஜயா நடந்து கொண்ட விதத்தில் அவருக்கும் கோவம், ஆகவே ஜீவாவை வைத்து அவர்களின் மூக்கை உடைக்க வேண்டும் என அவரும் ஆசைப் பட்டார்.
“என்ன இருக்கியா?” என சங்கரன் அதட்டலாக கேட்கவும், ஜீவாவின் தலை தன்னால் ஆடியது.
மதிய உணவுக்கு பின் மிதுன்யாவை அழைத்துக் கொண்டு புறப்படுவதாக சொன்னார்கள் பசுபதி தம்பதியினர். அன்புவும் அதுவே சரியென இருந்தான். ஆனால் லாவண்யா சம்மதிக்கவில்லை. தங்கை இங்குதான் இருந்தாக வேண்டும் என அடம் பிடித்தாள்.