கொஞ்சும் காதல் சாரல் 26 2 5595 அன்பு தன் அம்மா மற்றும் பாட்டியோடு வீடு வந்து சேர்ந்தான். அருந்ததியின் நலனை விசாரித்தனர் சகோதரிகள் இருவரும். மிதுவுக்கு என்னவானது என அருந்ததி கேட்க, தங்கை சொன்ன கதையையே சொன்னாள் லாவண்யா. அன்பு மிதுவை கடினமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான், அவ்வளவே. அவனது பார்வையை தவிர்த்த மிது ஒரு வழியாக ஓய்வெடுக்கிறேன் என அறைக்கு சென்றாள். ஜீவாவை காணாமல் அவனுக்கு அழைத்திருந்தார் சங்கரன். வேலை தொடர்பாக சில முக்கிய அழைப்புகள் வரும், பேசி விட்டு வருகிறேன் என சொல்லி வைத்தான். அறைக்குள் நுழைந்த மிது கதவை தாழிட்டு படுக்கையில் விழுந்தாள். அவளருகில் படுத்துக் கொண்டவன் அவளை அணைத்துக் கொள்ள, பட படப்பாக இருந்தவளுக்கு ஆறுதலான அவனது அணைப்பு அதி முக்கியமாக இருக்க, அந்த அணைப்புக்குள் அடங்கினாள். அவளை புரிந்து கொண்டவன் போல முதுகை வருடி விட்டான். “இந்த மாமா ஏன் யார் பக்கம் தப்புன்னு புரிஞ்சுக்காம உங்க மேல கோவத்தை காட்டுறார்? நாம லவ்வர்ஸ்னு நினைச்சிட்டு இருக்கார், மேரேஜ் ஆனது தெரிஞ்சா… அவ்ளோதான்” என பயத்தோடு சொன்னாள். “நம்ம மேரேஜை அவர் அப்ரூவ் பண்ணனும்னு இல்லியே மிது, உங்கப்பா ஒத்துக்கிட்டாரே” “ஆமாம் ஜீவா, மாமா அப்ரூவ் பண்ண வேணாம், ஆனா நம்மளோட பேசாம போயிடுவார். அவர் கோவத்துக்காக என் அக்காவை நான் பிரியணுமா?” “நீ ரொம்ப யோசிக்கிற, கன்னத்துல என்ன மருந்து போட்ருக்க, இதுல சரியாகிடுமா?” என அவன் கேட்கவும், அவனை விட்டு விலக பார்த்தாள். “என்ன மிது, இப்படியே இரு” என்றான். “நான் உங்க மேல கோவத்துல இருக்கேன்” என சொல்லி விலகுவதிலேயே குறியாக இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளை விட்டு விட்டவன், மேலே பார்த்து நேராக படுத்துக் கொண்டான். அவளும் அப்படித்தான் படுத்திருந்தாள். “என்ன செய்யலாம்னு நீயே சொல்லு மிது, வேற வேலை ரெடி பண்ணிக்கவா?” என அவன் கேட்கவும் அதிர்ந்து விட்டாள். நடன இயக்குநரிடம் உதவியாளராக இருப்பதோ அல்லது வருங்காலத்தில் நடன இயக்குநராகவோ ஆவது என்றால் நடனம் கற்றுத் தருவது மட்டும்தான் என்பதே அவளின் நினைப்பு. திரையில் ஆடுவது கூட அவளுக்கு சம்மதம்தான், இந்த அதீத நெருக்கம்தான் அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதை அவனிடம் வெளிப்படையாக சொன்னாள். அவன் ஆட வேண்டி வந்த சூழலை இன்னும் விளக்கமாக சொன்னான், அவளிடம் அனுமதி பெற நினைத்தத்தையும் அப்படி பெறாமல் போனதற்கான காரணத்தையும் கூட சொன்னான். “சென்னைக்கு வந்த பிறகு நானே உன்கிட்ட சொல்ல சந்தர்ப்பம் பார்த்திட்டு இருந்தேன், அதுக்குள்ள…” என்றவன் தன் கைகளை விரித்து காட்டி நிலைமை தன் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக பாவனை செய்தான். அவனை பார்க்க பார்க்க அவளுக்கு பாவமாகி விட்டது. அவனை நெருங்கி படுத்துக் கொண்டவள் பழைய படி அவனே தன்னை அணைத்துக் கொள்ளும் படி செய்தாள். “இவ்ளோலாம் மூஞ்ச தொங்க போட வேணாம். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களை விட முடியலை என்னால, இப்ப மட்டும் விலகி போயிடுவேனா?” எனக் கேட்டாள். அப்பாடா என்பது போல மூச்சு விட்டான். “அதுக்காக வேற வேலைன்னு எல்லாம் பேசக்கூடாது, இனிமே இப்படி ஆட வேணாம். நீங்க என்ன செஞ்சாலும் நாளைக்கு உங்க பசங்க பார்க்கிற மாதிரி இருக்கணும்” என தீவிரத்தோடு சொன்னாள். “இத நம்ம பசங்ககிட்ட சொல்லவே வேணாம்” என கெஞ்சலாக சொன்னான். “ஆமாம், நான்தான் இத பெருமையா வேற சொல்ல போறேன்! எப்படி அப்படி ஆடினீங்க, சுத்திலும் குறைஞ்சது முப்பது பேராவது இருந்திருக்க மாட்டாங்க? கொஞ்சம் கூட கூச்சமாவே இல்லையா உங்களுக்கு?” என்றாள். “திரும்பவுமா மிது? நான் ஆடவே இல்லடி இனிமே” என்றான். அவன் கன்னத்தில் செல்லமாக என்றாலும் சற்றே சுளீர் என அடி வைத்தவள், “முகம் சுளிக்காத மாதிரி ஆடுறேன்னு வருதா பாரு வாயில?” என்றாள். “உன் குடும்பத்துல எல்லாருக்கும் கை நீளம்தான்” “ஐய… அன்பு மாமா உங்க ஃபேமிலி” என்றாள். ஒன்றும் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தவன் அவளின் அடி பட்ட கன்னத்தை லேசாக தடவினான். வலியில் முகம் சுளித்தாள் அவள். அடி படாத கன்னத்தில் முத்தமிட்டான். நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டு நெற்றியிலும் முத்தமிட்டு பின் இதழ்களுக்கு வாகாக இருந்த இடத்திலெல்லாம் அன்பை பொழிந்தான். போதுமென்றவள் அவனை எப்படி இங்கிருந்து வெளியேற செய்வது என பயந்தாள். அவனுக்கு அழைத்த சங்கரன் வேறு ‘விருந்து தயாராகி விட்டது, உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார். இவளின் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். அவனை குளியலறைக்குள் நுழைந்து கொள்ள சொல்லி விட்டு கதவை திறந்தாள் மிது. அவளின் அம்மா நின்றிருந்தார். அழுத தடம் அவரின் முகத்தில் தெரிந்தது. “அக்கா ஃபோன் பண்ணினாளா? அழுதிருக்கியா என்னம்மா? எனக்கொன்னும் இல்லம்மா” என்றாள் மிது. அறைக்குள் வந்து கதவை தாழிட்டவர் மகளை ஏகத்திற்கும் முறைத்தார். “ம்மா…” தைரியமிழந்து அழைத்தாள் மிது. “மூஞ்சு இப்படி இருக்க போய் என்னால எதுவும் செய்ய முடியலை, இல்லைனா நானே உன் கன்னத்தை வீங்க வச்சிருப்பேன்” என சீற்றமாக சொன்னார். மிது பயத்தோடு விழித்தாள். இன்று அதிகாலையில்தான் எல்லா உண்மைகளையும் மனைவியிடம் சொல்லியிருந்தார் பசுபதி. மனைவியின் கோவம் குறைந்த பிறகுதான் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் எனதான் அவர் இருந்தார். ஜீவாவின் வருகை, அதைத் தொடர்ந்த அன்புவின் கோவம், சங்கரனின் வீம்பு இதெல்லாம் கேள்விப்பட்டு மிது இங்கே இருக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டார். மிதுவை அழைத்து வர அவர் மட்டும் கிளம்ப, தானும் வருகிறேன் என வினோதினியும் புறப்பட்டு விட்டார். பசுபதி ஏற்கனவே மனைவியை தேற்றித்தான் வைத்திருந்தார். ஆனாலும் எப்படி அவரால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்? மகள் காதலிக்கிறாள் என்பதே பெரிய அதிர்ச்சி, சில வீடுகளில் சிலர் காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடியாக மாலையும் கழுத்துமாக வீட்டின் முன் நிற்பதை கூட அவரின் அனுபவத்தில் பார்த்திருக்கிறார். அவரது அண்ணன் மகள் கூட காதலித்தாலும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்து காதலனை கைப்பிடித்தாள். ஆனால் தன் மகள் வீட்டிற்கு தெரியாமல் திருமணத்தையும் செய்து கொண்டு மாதக் கணக்காக மண வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள். அம்மாவாக தோற்று விட்டதாகத்தான் நினைத்தார். ஒரே நாளில் எல்லா பிரச்சனையும் சேர்ந்து கொள்ள வேண்டுமா என அயர்ந்து போய் விட்டாள் மிது. வினோதினியின் புலம்பலும் அழுகையும் நிற்கவே இல்லை. அம்மாவின் காலடியில் அமர்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டாள் மிது. மனைவிக்கு அழைத்த பசுபதி ‘நேரமாகிறது, சீக்கிரம் வாருங்கள்’ என்றார். இந்த வீட்டில் இருந்து கொண்டு இதைப் பற்றி மேலும் பேசக்கூடாது என நினைத்த வினோதினி முகத்தை துடைத்துக் கொண்டார். புறப்படும் படி மகளிடம் சொன்னவர் ஓய்வறை உபயோகிக்கலாம் என சென்றார். அம்மாவை தடுத்தவள் உள்ளே தண்ணீர் வரவில்லை என்றாள். அறையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டவர், முகம் கழுவி வருவதாக சொன்னார். அக்காவின் அறைக்கு செல்லலாம் என்றாள் மிது. “என்னடி உனக்கு பிரச்சனை? இப்படி அழுது வடிஞ்ச மூஞ்சோட எல்லார் முன்னாடியும் எப்படி வர்றது நான்?” கோவமாக கேட்டவர் மகளை விலக்கி நிறுத்தி விட்டு குளியலறையின் கதவை திறந்தார். வெளிப்பட்ட ஜீவாவை பார்த்தவர் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார். சங்கடமாக அவரை பார்த்தவன் என்ன செய்வது என தெரியாமல் சங்கடமாகவே சிரித்து, “ஹாய் அத்தை!” என்றான். மிது அம்மாவின் தோளை பற்ற, அவருக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.