குளித்து விட்டு வந்த ஜீவா தன் கைப்பேசியை தேடிக் கொண்டு வெளியில் வந்தான். பெண்களின் கூட்டத்தையும் அவர்களின் பார்வையையும் கண்டு விட்டு சிறு வெட்கத்தோடு மீண்டும் உள்ளே செல்லப் போனவன் ரிங் டோன் சத்தத்தை கேட்டு அந்தக் குழந்தையின் கையிலிருந்த தன் கைப் பேசியை வாங்கினான்.
திரையில் மிதுவின் பெயர் ஒளிரவும் உள்ளே செல்ல போனவனை, அந்த பெண்கள் பிடித்துக்கொண்டனர்.
பாலச்சந்திரன் கோபிகாவை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், உண்மை தெரிய வரவும் கோபிகா அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து அருந்ததியிடமே திருப்பி அனுப்பிய கதையும் அங்கே வெகு பிரபலம். போக போக இட்டுக் கதைகள் கலந்து கதையை திரித்தக் கூறியவர்களும் உண்டு.
எதிர்மறையாக பேசியவர்கள் சிலர் இருந்தாலும் பலரின் மனசாட்சிக்கு கோபிகா நியாயவாதி என தெரியும். அவர் இறந்து போன விஷயமும் சங்கரன் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்க, ஜீவாவை பரிதாபமாகத்தான் பார்த்தார்கள்.
முதலில் நலம் விசாரித்தவர்கள் இப்போது வம்பு செய்யும் நோக்கத்துடன், “இவ்ளோ வருஷம் கழிச்சு எதுக்குப்பா வந்திருக்க? உங்கப்பாரு சொத்துல பங்கு கேட்கவோ?” எனவும் கேட்டனர்.
உள்ளிருந்து வந்த சங்கரன், “ஏன் கேட்டாதான் என்ன தப்பு? இவனுக்கும் உரிமை இருக்கு” என்றார்.
“பெரியப்பா…” என ஜீவா சங்கடமாக அழைக்க, “சும்மா இரு நீ!” என உரிமையாக அதட்டல் போட்ட சங்கரன், வந்த பெண்களிடம் அவர்களை போலவே வம்பாக பேசிக் கொண்டிருந்தார்.
மிதுவின் அழைப்பு மீண்டும் வர, பெரியப்பாவை தவிர்த்து விட்டு இவனால் செல்ல முடியாத நிலை.
“இந்த தம்பிய எங்குட்டோ பார்த்த மாதிரியே இருக்கே” என்றாள் ஒருத்தி.
நான்கு வருடங்களுக்கு முன் அவன் டிவியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கண்டிருப்பாளா இருக்கும், ஆனால் இப்போது அவளால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
தன் மகளின் திருமணத்தின் போது பார்த்திருப்பாய் என ஜீவாவின் பதற்றத்தை தணித்தார் சங்கரன்.
இதற்கு மேலும் மிதுவின் அழைப்பை புறக்கணிக்க முடியாது என்பதால் முக்கிய அழைப்பு என சொல்லி அவனுக்கென கொடுக்க பட்ட அறைக்கு சென்று விட்டான்.
ஒரு வழியாக தன் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜீவாவிடம், “என்கிட்ட சொல்லாம இங்க வந்திட்டு என் கால்ஸ் கட் பண்ணி விடுறீங்களா?” என கோவமாக கேட்டாள்.
“ஹையோ மிது! உன்கிட்ட பேச துடிச்சிட்டு இருக்கிறவன் போய் கால் கட் பண்ணுவேனா? உங்க ஊரு வாண்டு பார்த்த வேலை அது”
“இது என் ஊரு இல்லை, ச்சே, அத விடுங்க, யாரை கேட்டு இங்க வந்தீங்க? சென்னைக்கு கிளம்புங்க முதல்ல” என இரைந்தாள் மிது.
“உங்க மேல இருக்க என் கோவம் அடங்க டைம் எடுக்கும், நீங்க இங்க வந்ததுல மாமா கோவமா இருக்காங்க ஜீவா… அப்பாக்கு தெரிஞ்சாலும் நம்மள திட்டுவார், ப்ளீஸ் போயிடுங்க இங்கேருந்து”
“ஒரு வாரமாகியும் உன் கோவம் தீரலைனா நான் கூட இருந்து சரி பண்ணியாகனும் மிது. அப்படியே உன் மாமா அதான் என் பங்காளி அவரையும் வழிக்கு கொண்டு வரணும், ஸோ… உன் பேச்சை கேட்க முடியாது” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, மிதுவின் அறைக்கு வந்தான் அன்பு.
மிது அழைப்பை துண்டித்து விட்டாள். ‘நீ சத்தம் போட்டதில் சாப்பிடாமல் சென்று விட்டாள்’ என அன்புவிடம் அவனது அம்மா சொல்லியிருக்க அவளை அழைக்க வந்திருந்தான்.
அவனிடம் மறுப்பாக ஏதும் சொல்லாமல் உணவருந்த சென்றாள் மிது. அன்புவின் இறுக்கமான முகம் அவளுக்கு பயத்தை கொடுத்தது.
அன்புவுக்கு ஏதோ அழைப்பு வர எடுத்து பேசினான்.
“இப்ப வரை நான் நிதானமாதான் இருக்கேன், அந்த பெரிய மனுஷனுக்கு எடுத்து சொல்லி அவனை ஊரை விட்டு கிளப்பி விட்டா நான் பாட்டுக்கும் இருந்துப்பேன். இல்லைனா அவனை என்ன செய்யணுமோ செஞ்சிக்கிறேன், யாரும் குறுக்க வர கூடாது சொல்லிட்டேன்” என யாரிடமோ காரமாக பேசினான்.
லாவண்யா அறையிலிருக்க அவளுக்கு இது தெரியாது. தேவையில்லாத வம்பு உனக்கெதுக்கு என மகனை கண்டித்தார் அருந்ததி. பதிலே சொல்லாமல் கிளம்பி விட்டான் அன்பு.
பெரும்பாலும் அந்த நேரத்தில் ஊர் ஆண்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள், அவரவர் வேலைகளை பார்க்க சென்றிருப்பார்கள்.
அந்த நேரம் பார்த்து சங்கரனின் வீட்டுக்கு சென்ற விஜயா, அவனை எப்படி வீட்டிற்குள் சேர்த்தாய் எனக் கேட்டு செல்வியிடம் சண்டை போட ஆரம்பித்தார்.
தடபுடலான காலை உணவை முடித்துக் கொண்டு ஜீவாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருந்தார் சங்கரன். ஆகவே, செல்வியால் தனியாளாக விஜயாவை சமாளிக்க முடியவில்லை.
விஷயம் அறிந்து அருந்ததியும் மிதுவும் அங்கே சென்றனர். விஜயா யார் பேச்சையும் கேளாமல் கண்ட படி பேசினார்.
தன் சித்தப்பா பிரகாசம், மற்றும் ஊர் பெரியவர்களை கொண்டு அன்புதான் வழக்கமாக பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சங்கரனை அழைத்திருந்தது.
ஜீவாவை நேரில் கண்ட அன்பு, மிது திருமணத்தை மறுத்தது, சென்னையில் நடந்த சண்டை, அவள் அணிந்திருந்த புடவை அனைத்தையும் ஒன்று கூட்டி இருவரும் காதலிக்கிறார்களோ என முன்னர் இருந்த சந்தேகத்தை இப்போது ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
யாரென தெரியாத போதே இவன் மீது வெறுப்பு, இப்போது சொல்லவும் வேண்டுமா?
மிதுவை காணத்தான் திடீரென இவன் இங்கு வந்திருக்கிறான் என நம்பிய அன்புவுக்கு ஆத்திரம் பீறிட்டது.
என் மனைவியின் தங்கையை விரும்புகிறாயா? எப்படி அவளை அடைவாய் என பார்க்கிறேன் என மனதில் கருவிக் கொண்டான் அன்பு.
ஊரில் அன்புதான் நமக்கு முக்கியம், அவனை சங்கடம் செய்யும் படி ஏன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பையனை திருப்பி அனுப்பி விடுங்கள் என அனைவரும் சங்கரனுக்கு எடுத்து சொன்னார்கள்.
அவர் மறுக்க, அன்பு கோவப்பட, மற்றவர்கள் சமரசம் செய்ய என நேரம் போய்க் கொண்டே இருந்தது.
இதெல்லாம் ஜீவாவுக்கு புதிதல்லவா? என்ன செய்வது என வேடிக்கை பார்த்திருந்தான், ஒரு கட்டத்தில் தன்னால் எதற்கு சண்டை சென்று விடலாம் எனவும் முடிவு செய்து கொண்டான்.
ஆனால் சங்கரன் அங்கிருந்து நகர்வதாக இல்லை.
கோவத்தில் அன்பு தன் பெரியப்பாவை மரியாதை குறைவாக ‘அந்தாளு’ ‘போயா’ என்றெல்லாம் சொல்லி விட்டான்.
வெகுண்டெழுந்த சங்கரன், “ஊர் திருவிசா முடிஞ்சதும் என் பேத்திக்கு மொட்டையடிச்சு காது குத்த போறேன், மாமனா இருந்து ஜீவாதான் எல்லாம் செய்ய போறான். இவன் என்ன தப்பு பண்ணினான்னு கிளம்ப சொல்றீங்க? என் வூட்டு விஷேஷம் முடியற வரை என் தம்பி பையன் என் வூட்லதான் இருப்பான். ஊர் பெரியவங்களா லட்சணமா அந்த அரை வேக்காட்டு பயலுக்கு புத்தி சொல்லுங்க, அத விட்டுட்டு…” என சொல்லி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டார்.
ஜீவா திகைத்து விழிக்க, அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்து சென்றார் சங்கரன்.
சற்று தள்ளி மரத்தடியில் கிடந்த சங்கரனின் டி வி எஸ் பைக்கை ஜீவா எடுக்க, கூட்டத்தினரை முறைத்துக் கொண்டே, அன்புவை பார்த்து ஏளன சிரிப்புடன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டவர் ஜீவாவின் பின்னால் அமர்ந்து கொள்ள, வண்டி சாலையில் பறந்தது.
இருவரும் வீடு வர, வாசலில் விஜயா வாய் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். தலையில் கை வைத்த வண்ணம் திண்ணையில் அமர்ந்திருந்தார் செல்வி. வயதானவரை ஒன்றும் செய்ய முடியாமல் அருந்ததியும் மிதுவும் ஓரமாக நின்றிருக்க, மற்ற பெண்கள் வேடிக்கை பார்த்திருந்தனர்.
கோவமாக விஜயாவிடம் வந்த சங்கரன், “ஏய் கெழவி! இப்போதான் உன் பேரனோட பல்ல பிடுங்கிட்டு வந்தேன், ஒழுங்கா உன் வூடு போய் சேரு, இல்லைனா நடக்கிறதே வேற” என சத்தமிட்டார்.
விஜயா அவரிடம் மல்லுக்கு நிற்க, கணவர் வந்து விட்ட தைரியத்தில் புது தெம்பு பெற்றவறாக செல்வியும் சண்டைக்கு வந்து விட்டார். அருந்ததி அவர்களை சமாதானம் செய்ய, எல்லோர் கவனமும் இங்குதான்.
ஜீவா மட்டும் மிதுவை பார்த்திருக்க, அவளோ குற்றம் சாட்டும் கோவப் பார்வை பார்த்தாள் அவனை.
சண்டையை கண் காட்டியவள், இதற்கு நீதான் காரணம் என பார்வையால் சொன்னாள்.
தொண்டையில் கை வைத்து சத்தியம் செய்தவன், தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, நான் உனக்காக வந்தேன் என்றான்.
கிளம்பி போ என பார்வையால் அவள் மிரட்ட, போயிடுறேன், கோவப்படாதே என அவனும் கெஞ்சினான்.
தன்னை வீட்டிற்கு இழுத்த மகளை ஒரு வேகத்தில் தள்ளி விட்டார் விஜயா. விழுந்த அருந்ததியின் நெற்றியில் அங்கு கிடந்த கல் குத்தி விட்டது.
ஆழமான காயம், இரத்தமும் நிற்கவில்லை, காரெடுத்து வர ஓடினாள் மிது. அவளின் பின்னாலேயே ஜீவாவும் சென்றான்.
உறங்கிப் போயிருந்த அக்காவை தொந்தரவு செய்யாமல் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அக்காவுடனே இருக்கும் படி பணித்து விட்டு கார் சாவியோடு வந்தாள் மிது. அவள் பதட்டமாக இருக்க, தான் ஓட்டுகிறேன் என சாவியை வாங்கிக் கொண்டான் ஜீவா.
வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்பு சங்கரனின் வீட்டிற்கு முன் கூட்டமாக இருந்ததை கண்டான்தான். எல்லோரும் கேட்டிற்கு அந்தப் பக்கம் இருக்க, யாரும் இவனை கவனிக்கவில்லை. அன்புவும் தன் அம்மா இங்கு இருப்பார், அவருக்கு அடி பட்டிருக்கும் என யோசிக்க கூட இல்லை.
என்னவோ கூத்து கட்டி அடிக்கிறார்கள் என நினைத்துக்கொண்டே பைக்கில் வேகமாக வீட்டிற்கு சென்று விட்டான்.
அங்கே மிதுவும் ஜீவாவும் ஒன்றாக நிற்பதை கண்டவனுக்கு தலை கால் புரியாத சினம்.