கொஞ்சும் காதல் சாரல் -25

அத்தியாயம் -25

மிதுன்யா ஊருக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. கணவனுடன் சண்டை என்பதை அப்பாவுக்கு சொல்லவில்லை, வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி கிடைத்தது, உங்களையெல்லாம் பார்க்க ஆசையாக இருக்கவும் வந்து விட்டேன் எனதான் சொல்லியிருந்தாள். 

ஜீவா வெளிநாடு போயிருக்கிறானா? என மகளிடம் தனிமையில் விசாரித்தார் பசுபதி.  

அவன் சென்னையில்தான் இருக்கிறான் என்பதை சொன்னவள், பிறகு எப்படி ஒரு மாதம் இங்கு தங்க போவதாக சொல்கிறாய் என்ற அப்பாவின் கேள்வி வரும் முன்னரே முந்திக் கொண்டு, ஜீவா அவனுடைய வேலையில் நல்ல பிஸி, வீடு வரவே நடு இரவாகி விடுகிறது, ஒரே வீட்டில் இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்வதே அரிது, ஆகையால் இங்கு இருக்கலாம் என வந்தேன் என்று சமாளிப்பாக சொன்னாள். 

“பாப்பா எதுக்கு பொய்? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” எனக் கேட்டு விட்டார் அவர். 

திகைத்துப் போனவள், “எப்படிப்பா உங்களுக்கு தெரிஞ்சுது?” எனக் கேட்டாள். 

“அப்ப சண்டைதான் என்ன?” 

“நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னுமில்ல, சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், கூடவே இருந்தா நான் ஏதாவது அவரை பேசிடுவேன், இப்ப அவர் கூட நான் இல்லாம இருக்கிறதுதான் அவருக்கு நல்லது, அதான் வந்திட்டேன்” என்றாள். 

“ஆசை பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு… இன்னும் இங்க யாருக்கும் சொல்ல கூட இல்லை, அதுக்குள்ள இப்படி வந்து நின்னா… பயப்படாம எப்படி பாப்பா இருக்க முடியும்?”

“நான் வேணும்னா கிளம்பி போயிடுறேன் ப்பா” 

“ப்ச், சட்டு சட்டுனு முடிவெடுக்காத ம்மா. எவ்ளோ நாள் இருக்கணுமோ இரு, ஆனா சண்டையை வளர்க்காம சமாதானமா இரு” என சொல்லி விட்டார். 

தான் இங்கு வந்து விட்டதை குறுஞ்செய்தி மூலமாக  ஜீவாவுக்கு தகவல் தந்தவள் கொஞ்ச நாளைக்கு தன்னை தனிமையில் விடும் படியும் சொல்லியிருந்தாள். 

அவளது வார்த்தையை மதித்து ஜீவாவும் அவளுடன் பேசாமல் இருந்தான். 

லாவண்யா பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வந்தாள். கர்ப்பப்பை சற்றே பலஹீனமாக இருப்பதால் ஓய்வில் இருக்க சொன்னார்கள். 

பசுபதியின் வீட்டில் தங்கும் அறையெல்லாம் மாடியில்தான், பெரியவர்களுக்குத்தான் தரை தளத்தில் அறைகள் இருந்தன. என் அறையில் இருக்கலாம், இங்கே வா எனதான் வினோதினி மகளை அழைத்தார். 

அன்பு சம்மதிக்கவில்லை, சகல வசதிகளோடும் இங்கே தரை தளத்திலேயே அறை இருக்கிறது, மகப்பேறு மருத்துவரை காண வேண்டுமென்றாலும் இந்த ஊரிலிருந்துதான் பக்கம் என காரணங்கள் சொல்லி மனைவியை தன்னுடனே வைத்துக் கொண்டான். 

ஆகவே லாவண்யாவின் பிறந்த வீட்டினர் அவளை அங்கு சென்றுதான் பார்த்து வந்தனர். சின்ன மகளை அழைத்துக் கொண்டு பெரிய மகளை பார்க்க வந்திருந்தார் வினோதினி. 

பார்த்து விட்டு புறப்படும் சமயத்தில் தங்கையோடு இருக்க ஆசை படுவதாக சொன்னாள் லாவண்யா. அருந்ததியும், “உன் அத்தை வீட்ல தங்கியும் நீ வேலை பார்க்கலாம், இங்க இருடா” என மிதுவை பாசமாக அழைத்தார். 

மிதுவுக்கும் அப்பாவை எதிர் கொள்ளும் போதெல்லாம் சங்கடமாக இருந்தது. அக்காவுடன் இருக்க அவளுக்கும்  ஆசைதான். ஆகவே சரியென சொல்லி விட்டாள். 

லாவண்யா கருவுற்று இருப்பதால் விஜயலக்ஷ்மி சற்றே வாயடக்கமாக இருந்தார். முதல் மாடியில் விசாலமான அறை ஒன்றை மிதுவுக்காக தயார் செய்து கொடுத்தார் அருந்ததி. 

காலை பதினோரு மணிக்குத்தான் அவளது வேலை தொடங்கும், அதுவரை அக்காவுடன் நேரம் செலவிட்டாள். லாவண்யா வீட்டிலேயே இருப்பதால் அவளுடன் அன்பு அதிக நேரம் இருக்க வேண்டியதாக இருந்தது, இப்போது மிதுவின் தயவால் நிம்மதியாக தன் வேலைகளை பார்த்தான். 

அன்று காலையிலேயே வெளி வேலையாக சென்றிருந்த அன்பு கடுங்கோவத்துடன்தான் வீட்டிற்கு வந்தான். 

என்னடா ஆனது என விசாரித்த அம்மாவிடம், எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த நாற்காலியை எட்டி உதைத்து தன் கோவத்தை வெளிப்படுத்தினான். 

அறைக்குள்ளிருந்த சகோதரிகள் இருவரும் பயந்து போய் வெளியில் வந்தனர். 

“வயசுல பெரியவர், குடும்பத்துல மூத்தவர் அப்படி இப்படினு சொல்வியேம்மா, அந்தாளு என்ன பண்ணி வச்சிருக்கார் தெரியுமா?” என பற்களை கடித்துக் கொண்டு கேட்டான் அன்பு. 

“எனக்கென்னடா தெரியும்? அங்க பாரு அரண்டு போய் நிக்கிறா லாவண்யா, சட்டுனு விஷயத்தை சொல்லு” என்றார் அருந்ததி. 

லாவண்யாவை கண்டதும் சற்றே தணிந்தவன், “அவனை கூப்பிட்டு விருந்து வைக்கிறார்மா அவர்” என அருவருக்க தக்க விஷயத்தை சொல்வது போல சொன்னான். 

“எவனைடா? உன் எதிரி எவனையுமா?” எனக் கேட்டார் விஜயா. 

“ஹ்ம்ம்… உங்க அருமை மருமகனோட முறையில்லாத உறவுல பொறந்த தரித்திரத்தை. பொண்ணோட கல்யாண பத்திரிகைல பேர் போட்டார்ல… இப்ப வீட்டுக்குள்ளயே கூப்பிட்ருக்கார், அந்த  பரதேசியும் வெட்கமில்லாம வந்திருக்கான்” என்றான். 

ஜீவாவைத்தான் சொல்கிறான் என்பது புரிந்து நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள் மிது. 

மகனை மேலும் தூண்டி விடக்கூடாது என்பதால், “யாரோ என்னவோ பண்றாங்க, நமக்கென்ன வந்திச்சு? நீ வா, சாப்பிடு” என்றார் அருந்ததி. 

லாவண்யாவும் அதையே சொல்ல, விஜயாதான் சங்கரனை வாய்க்கு வந்த படி திட்ட தொடங்கி விட்டார். 

“அவளை ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க, இப்படி சத்தம் போட்டா தொந்தரவு ஆகாதா? சும்மான்னு இரும்மா!” என அம்மாவை அதட்டி அமைதி படுத்திய அருந்ததி மருமகளுக்கு கண் காட்டினார். 

கணவனை அறைக்கு அழைத்து சென்று சமாதானம் செய்தாள் லாவண்யா. 

மிரண்டு போய் நின்றிருந்த மிதுவை பார்த்த அருந்ததி, “அவன் கோவத்தை கண்டு பயந்திட்டியாக்கும்? அதெல்லாம் உன் அக்கா சமாளிச்சுக்குவா. நீ சாப்பிட்டு உன் ரூம் கிளம்பு, வேலைக்கு நேரமாக போகுது” என்றார். 

எங்கிருந்து அவளால் சாப்பிட முடியும்? பின்னர் வருகிறேன் என சொல்லி மேலே ஓடினாள். 

ஜீவாவுக்கு அவள் அழைக்க, அழைப்பு துண்டிக்க பட்டுக் கொண்டே இருந்தது. ஆத்திரத்தோடு அவனுக்கு அழைத்து கொண்டே இருந்தாள் மிது. 

மிது தன்னை விட்டு சென்றதும் தவித்து போய் விட்டான் ஜீவா. தான் அவளிடம் பேசி சமாதானம் செய்கிறேன் என்ற பங்கஜிடம் நீங்கள் செய்தது வரை போதும் என சொல்லி விட்டான். 

மிது தானாகவே சமாதானம் ஆகி வருவாள் என்ற மணியிடம், “ரொம்ப கோவத்துல இருக்கா, நான் போய்தான் சமாதானம் செய்யணும். எப்படி போறதுன்னுதான் தெரியலை” என கவலை பட்டான். 

மணி வாசுகிக்கு அழைத்து நிலவரத்தை சொல்லி எந்த வகையிலாவது உதவ முடியுமா என கேட்டான். அவளும் மிதுவுக்கு அழைத்து சாதாரணமாக பேசுவது போல பேசிப் பார்த்தாள். மிது நல்ல கோவத்தில் இருப்பதாக சொன்னவள் அவளது அக்காவின் வீட்டில் தங்கியிருப்பதையும் பகிர்ந்தாள். 

அன்புவின் வீடிருக்கும் அதே தெருவில்தான் சங்கரன் பெரியப்பாவின் வீடும் இருக்கிறது என எப்போதோ மிது சொன்னது ஜீவாவுக்கு நினைவு வரவும் உடனே கிளம்பி விட்டான். 

ஜீவா ஊர் வந்த பிறகு சங்கரனின் வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் அவனுக்கு அவ்வளவு கடினமாக இல்லை. உங்களை பார்க்க தோன்றியது, வந்து விட்டேன் என்றவனை நிறைந்த சிரிப்போடு வரவேற்றார் சங்கரன். 

சங்கரனின் மனைவி செல்விக்கு அன்புவின் கோவத்தை இது அதிக படுத்துமே என பயமாகத்தான் இருந்தது. வீடு தேடி வந்து சிரித்த முகமாக நிற்பவனை போ என சொல்ல அவருக்கும் மனம் வரவில்லை. 

பெரியப்பா குடும்பத்திற்கு நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தான். அவர்களுக்கு ஐஸ் வைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை, பெரியப்பாவுடன் எப்படியாவது தொடர்பில் இருக்க வேண்டும் என்பதுதான் அவனது ஆசையும். இந்த சந்தர்ப்பத்தை  பயன் படுத்திக் கொண்டான். 

பெரியப்பாவுக்கு வேஷ்டி, சட்டை,கைக்கடிகாரம்,  பெரியம்மாவுக்கு விலை உயர்ந்த பட்டுப் புடவை என கொடுத்தான்.  அக்கா சாந்தா அவளின் மகளுக்கு என தனியே இரண்டு பைகளில் சாமான்கள் இருந்தன. இது தவிர பழங்கள், இனிப்புகள் என அது தனி மூட்டை. 

“எனக்கு யாருமே இப்படி வாங்கி தந்தது இல்லைடாப்பா” என்ற செல்வி, அவனுக்கு விருந்து சமைக்க நல்ல வெடக்கோழியாக பிடிக்க சென்றார். 

ஏற்கனவே சுத்தமாக இருந்த குளியறை கழிவறை போன்றவற்றை பினாயில் போட்டு கழுவுவதும் ஜீவா குளிக்க வெந்நீர் விலாவுவதும் அவன் தங்க போகும் அறையை சுத்தம் செய்வதுமாக பம்பரமாக சுழன்றார்  சங்கரன். 

கிராமம்தானே, அக்கம் பக்கத்து வீட்டினருக்கு ஜீவா வந்த செய்தி தெரியவும் சில நிமிடங்களில் கிராமம் முழுதுமே பரவி விட்டது. 

அதை கேள்வி பட்ட அன்பு கோவத்தோடு தன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.  தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு வீட்டிற்கு வெளியில் கிடந்த மர செத்தை குப்பையை எரித்து விட்டுக் கொண்டிருந்த சங்கரன்  அன்புவை கண்டதும் பரபரப்பாக கேட்டை திறந்து கொண்டு சாலைக்கு வந்தார். 

 வேண்டுமென்றே பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை கூவி அழைத்து, “எலேய் சம்முவம்! வாழ எல வெட்டி தாடா, என் தம்பி மவன்… அதான் டா, பாலசந்திரன் மவன் மெட்ராஸ்லேருந்து என்னை பார்க்க வந்திருக்கான். என்ன அருமையான புள்ள தெரியுமாடா? தலை கனம் இல்லாதவன்டா” என்றார். 

அன்பு தன் பெரியப்பாவை முறைக்க, “என்ன இருந்தாலும் என் தம்பியோட இரத்தம் என்னை மதிக்காம போயிடுவானா? மத்தவங்க மாதிரி அகம்பாவி இல்லை, பட்டணத்து  புள்ள  பட்டணத்து புள்ள தான்யா!” என்றார் சங்கரன். 

எங்கே அன்பு கோவமடைந்து தன்னையும் அடித்து விடப் போகிறான் என பயந்த பக்கத்து வீட்டுக்காரர்தான் சங்கரனை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். 

ஒரு டம்ளர் சர்க்கரை கடனாக கொடு, வாழை இலை கேட்டீர்களாமே… இதோ வாங்கிக் கொள்ளுங்கள், அக்கா இந்த பாத்திரம் உங்களோடதா பாருங்க என சாக்கிட்டுக் கொண்டு ஜீவாவை பார்க்கவும் அங்கு நடப்பதை நோட்டமிடவும் அக்கம் பக்கத்து பெண்கள் சங்கரனின் வீட்டில் குழுமி விட்டனர். 

அந்த பெண்களில் ஒருத்தியின் சுட்டிக் குழந்தைதான் ஜீவாவின் கைப்பேசியை எடுத்து வைத்துக்கொண்டு மிது அழைக்க அழைக்க, அழைப்பை துண்டித்துக் கொண்டே இருந்தது.