“தேங்க் காட்!” என முணு முணுத்தவன், “நீங்க மிதுவை விட்டுட்டு போனா அவ தாங்க மாட்டா” என்றான். 

வேதனையாக சிரித்தவர், “சின்னதுல மார்ல எட்டி உதைச்சு விளையாடின என் பாப்பா தம்பி அவ. விட்டுட்டு எங்க போறது நான்? பொம்பள புள்ளைங்கள என்னதான் ஆசை ஆசையா வளர்த்தாலும் ஒரு நேரத்துல அப்பனை விட இன்னொருத்தன் முக்கியமா போயிடுறாங்க” என்றார். 

சில நிமிட மௌனத்துக்கு  பின், “என் பாப்பாவை நல்லா பார்த்துப்பீங்கல்ல?” எனக் கேட்டார். 

“என் அம்மா மேல பிராமிஸ் பண்றேன் மாமா, நல்லா பார்த்துப்பேன்” என வேகமாக சொன்னான். 

தலையாட்டிக் கொண்டவர் எழுந்து  தோட்டத்துக்கு சென்று விட்டார். அதற்கு மேல் அவரை தொந்தரவு செய்யவில்லை அவன். 

மிதுவிடம் சென்றவன் தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள அவளது கால் மாட்டில் அமர்ந்து கொண்டான். அவளது பாதங்களை தொட்டவன் சில்லிப்பை உணர்ந்தான். தன் மடியில் அவளது கால்களை எடுத்து வைத்து வருடி விட்டான், பின் அவளின் பாதங்களிலேயே தன் முகம் புதைத்துக் கொண்டான். 

ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வந்திருக்க, அதை வாங்கிக் கொண்டு ஹாலின் வாயில் வரை வந்த பசுபதி, உறங்கும் மகளையும் அவளது பாதங்களை மடி தாங்கி அதில் முகம் சாய்த்திருந்த மகளின் கணவனையும் பார்த்தார். 

அவரின் பார்வையில் சிறு பிள்ளைகளான அவர்களின் அன்னியோன்யமான பிணைப்பை பறைசாற்றும் அந்தக் காட்சி அவரை உருக வைத்தது. 

இடையூறு செய்யாமல் வந்த வழியே அப்படியே சென்று விட்டார். 

கோபிகாவின் மீது தன் குடும்பத்தினருக்கு இருக்கும் கோவம் அறியாதவர் இல்லை, ஆனால் தவறு முழுதும் பாலச் சந்திரன் மீதுதான் என அவரின் நியாய மனதுக்கு தெரியும். அக்காவை சங்கட படுத்தும் கோபிகாவின் உறவு தேவையே இல்லை என்பதுதான் அவரது நிலைப்பாடும். ஆனால் மகளின் கணவன் என வரும் போது அவன் பக்க நியாயங்களை சீர் தூக்கி பார்க்கும் நிலைக்கு வந்து விட்டார். 

வினோதினியின் அண்ணன் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை எண்ணிப் பார்த்தார். பெற்றோர் பார்த்து செய்த சில திருமணங்கள் மகளின் மரணத்தில் கூட முடிவடைந்த செய்திகளை நினைவு கூர்ந்தார். 

தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என மனமார எண்ணினார். தான் சொன்னால் தன் மனைவி ஏற்றுக்கொள்வார் என அவருக்கு தெரியும். அவருடைய தந்தை, அக்கா, அன்பு ஆகியோரை சமாளிப்பதுதான்  கடினம். அதிலும் லாவண்யா கருவுற்றிருக்கும் இந்த சமயத்தில் அன்புவை கோவ படுத்துவது நல்லதல்ல, இந்த திருமணத்தை அனைவரும் சுமூகமாகவே ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என ஆசை பட்டவருக்கு அதற்கான வழிதான் தெரியவில்லை. 

மிது எழுந்த பிறகு மூவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். இந்த திருமணத்தால்  தனக்கு  வருத்தம் என்ற போதும் இதை ஏற்றுக் கொள்கிறேன் என வெளிப்படையாக சொல்லி மிது, ஜீவா இருவரையும் மகிழ்ச்சியடைய செய்தார் பசுபதி. 

தகுந்த சந்தர்ப்பம் வரும் போது தானே இந்த திருமணத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கிறேன், அதுவரை பொறுமையாக இருங்கள், நிம்மதியாக இருங்கள் என்றார். 

மிது இன்னொரு முறை அப்பாவிடம் மன்னிப்பு கேட்டாள்.

“அவ்ளோ தைரியமா கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ இப்பவும் தைரியமாதான் இருக்கணும், நல்லா பார்த்துக்க கல்யாணம் பண்ணிகிட்டு இப்படி அழுது புலம்பி இந்த தம்பியை பயமுறுத்த கூடாது” என்றார் பசுபதி. 

ஜீவாவை பார்த்துக் கொண்டே, “இனிமே பயமுறுத்த மாட்டேன் ப்பா” என அப்பாவிடம் சொன்னாள். 

இரவே கிளம்புவதாக சொன்னவர் ஓய்வெடுக்க அறைக்கு சென்று விட்டார். ஜீவாவை பார்த்து புன்னகை செய்தாள் மிது.

“நிஜமா சொல்றேன், உன் அப்பா ரொம்ப கிரேட்!” என்றான் ஜீவா. ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டவள் அப்பா சென்ற திசையை பெருமையாக பார்த்தாள். 

அப்பாவுக்காக தானே சமைக்க போவதாக சொன்னாள். அவனும் உதவினான். உறங்கி தெளிந்த மனதோடு வந்த பசுபதி வயிராற சாப்பிட்டார். 

மாலையில் ஜீவாவின் வேலை பற்றியும் அவருக்கு தெரிய வந்தது. மகளை குழப்பமாக பார்த்தார்.

“ஜீவாவுக்கு டான்ஸ்தான் பிடிச்சிருக்கு ப்பா, இந்த ஃபீல்ட்ல நல்லா வருவார்” என்றாள். 

“அதெல்லாம் பெரிய ஆளா ஆனாதானேம்மா, இப்போ என்ன பெருசா வருமானம் வரும்?” என கவலையாக கேட்டார். 

“எனக்கு நல்ல சேலரி கிடைக்குதேப்பா” என்றாள். 

 மகளை ஆழ்ந்து பார்த்தவர், “உனக்கு தேவையானதை குறை வைக்காம வீட்டுக்காரன் செய்யணும்னு ஆசை பட மாட்டியாம்மா?” எனக் கேட்டார். 

“அவருக்கு வேணும்கிறத நான் செய்வேன் ப்பா, அதுதான் எனக்கு சந்தோசம். அவரும் எனக்கு எந்த குறையும் இல்லாமதான் பார்த்துகிறார் ப்பா” என்ற மகளை பார்த்து நிறைவாக சிரித்தார். 

அன்றைய இரவே ஊருக்கு புறப்பட்டு விட்டார். 

அடுத்த நாள் மிது அலுவலகம் சென்றதும் மணியை பார்க்க சென்றான் ஜீவா. அவன் அவளிடம் மறைக்கும் விஷயத்தை நண்பனிடம் சொன்னான். 

எப்போதுமே சொல்லி விடாதே என அறிவுரை சொன்னான் மணி. மீறிக் கொண்டு நீ சொன்னால் மிது உன்னை விட்டு செல்லும் அபாயம் கூட இருக்கிறது என நன்றாக பயமுறுத்தி விட்டான். 

குழப்பத்திலிருந்த ஜீவா உண்மையை மிதுவிடம் சொல்வதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்க, அவன் ஆடியிருந்த அந்த பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தார்கள். வெளி வந்த ஒரு நாளைக்குள் அந்த பாடல் வைரலாகி விட்டது.

இளைஞர்கள் மத்தியில் அந்த பாடல் கொண்டாட பட, இளைய சமுதாயம் கெட்டு போக வழி செய்யும் பாடல் வரிகள் மற்றும் நடன அமைப்பு, கலாச்சாரம் சீரழிகிறது என எதிர்மறையான விமர்சனங்களும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் வந்தன. அதையும் படத்திற்கான விளம்பரமாகவே எடுத்துக் கொண்டது படக்குழு. 

மிதுவும் இந்த பாடலை பார்த்திருந்தாள். வேறு யாரையும் அது ஜீவா இல்லையென ஏமாற்றலாம், அவனோடு குடும்பம் நடத்தும் அவளுக்கு தெரியாமல் போகுமா? 

தனக்கு சந்தேகம் வந்த உடனேயே ஜீவாவிடம், “உங்களை போலவே தெரியுதே ஜீவா? எப்படி இப்படி?” என அவனிடமே கேட்டு விட்டாள். 

அவனுக்கு பொய் சொல்ல வரவில்லை. தான்தான் என்பதை ஒத்துக் கொண்டான். வெறுப்பு உமிழ அவனை பார்த்தாள். அவன் சொல்ல வந்த எந்த விளக்கங்களையும் கேட்க தயாராக இல்லை அவள். 

அவள் தணிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என அமைதி காத்தான். அந்த நேரம் பங்கஜ் அவனுக்கு அழைக்க, அவரை கோபித்துக் கொண்டான். 

அவனுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டவர் மிதுவுக்கு அழைத்து, இந்த நடனம் மூலம் அவனுக்கு நல்ல வாய்ப்புகள் வரும், எல்லாவற்றுக்கும் தடை சொல்லிக் கொண்டே இருக்காதே, இப்படி செய்தால் பாடலின் பின்னணியில் நடனம் ஆடுபவனாக இருந்தே  அவனது மொத்தக் காலமும் முடிந்து விடும் என்றார். 

இப்படி ஆடித்தான் ஜீவா முன்னுக்கு வர வேண்டும் என்றில்லை என அவள் கோவமாக சொன்னாள். 

“அப்போ ஒன்னு செய், அவனை வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சிடு, முடிஞ்சா அவன் கழுத்துல ஒரு சங்கிலி போட்டு கட்டி அந்த சங்கிலிய உன் கைல வச்சுக்க. உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்” என எல்லை மீறி பேசி விட்டார் பங்கஜ். 

அழைப்பை துண்டித்து விட்டவளுக்கு உறக்கமே வரவில்லை. காலையில் இவளை சமாதானம் செய்யலாம் என ஜீவா பேச வர, அவள் இடம் தரவில்லை. 

“பங்கஜ் ஸார்தான்…” என அவன் ஆரம்பிக்க, “பங்கஜ் ஸார் என்ன சொன்னாலும் கேட்பியா? அந்தாளு என்ன நினைச்சிட்டு இருக்கார்?” என கத்தினாள். 

“அவரை அப்படிலாம் மரியாதை குறைவா பேசாத மிது” என்றான். 

“ஆமாம் மரியாதை தர்ற மாதிரியான வேலைதான் செஞ்சிருக்கார் அந்தாளு. எப்படி ஆடியிருக்க நீ? என் கூட எப்படி க்ளோசா இருப்பியோ… அப்படி…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச பிடிக்காமல் கண்களை மூடிக் கொண்டாள். 

“அந்தளவெல்லாம் யோசிக்காத மிது, ஜஸ்ட் டான்ஸ்” என்றவன் வாயடைத்து போகும் அளவுக்கு திட்டினாள். அவனால் அவனுக்கு வாதாடிக் கொள்ள முடியவில்லை. 

உன் செயலை  என்னால் ஜீரணிக்க முடியவில்லை, ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக சண்டை வரும், நானாக வரும் வரை என்னுடன் பேசாதே, என்னை பார்க்க முயலாதே என கண்டிப்போடு சொன்னவள் ஊருக்கு கிளம்பி விட்டாள். 

அவளை அணைத்துக் கொண்டு போக விடாமல் அங்கேயே இருக்க வைக்க முயன்றான். 

“தள்ளி போங்க ஜீவா, என் உடம்பு கூசுது!” என அருவருத்த முகத்தோடு அவள் சொல்லவும் உள்ளம் நடுங்கிப் போனவனாக அவளை விட்டு விட்டான். 

அவனை திரும்பிக் கூட பார்க்காமல் அவனை விட்டு சென்று விட்டாள் மிது.