காலடியில் விழுந்து கிடக்கும் ஜீவாவை விடுத்து மகளைதான் பார்த்திருந்தார் பசுபதி. ஜீவா சொன்னது உண்மை என்பதை பார்வையால் சொன்னாள் மிது.
தன் பாதங்களை தொட்டுக் கொண்டிருந்த ஜீவாவின் கைகளிடமிருந்து நாசூக்காக விலகிக் கொண்டவர், தொய்ந்து போனவராக இருக்கை ஒன்றில் அமர்ந்து விட்டார்.
ஜீவாவை எழுப்பி நிறுத்திய மிதுவுக்கு அழுகை பொங்கி வந்தது. அவளை சமாதானம் செய்து அமைதி படுத்திய ஜீவா, இருவரும் மதுரையில் சந்தித்து கொண்டதிலிருந்து பிரியப் போகும் முடிவை எடுத்தது வரை கூறினான்.
கோபிகாதான் இவனது அம்மா என தெரிந்து அடுத்த கட்ட அதிர்ச்சிக்கு சென்று விட்டார் பசுபதி. நிஜமாகவே அவருக்கு தலை சுற்றியது.
“என்ன பாப்பா பண்ணி வச்சிருக்க நீ?” என சோர்ந்து போன குரலில் மகளிடம் கேட்டார்.
தன்னிடம் ஒரு வார்த்தை திட்டியாவது பேச மாட்டாரா என காத்திருந்த மிது, அவரிடம் ஓடி சென்று அவரின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள். இடையிடையில் பலஹீனமான குரலில் பல முறை மன்னிப்பு கேட்டாள்.
அவளின் அழுகை அந்த இரு ஆண்களையுமே பதற்ற படுத்தி விட்டது. அழாதே என அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அப்பா வருகிறார் என்ற செய்தி தெரிந்த நொடியிலிருந்தே அதிகப்படியான மன உளைச்சலில் இருந்தவள் மயக்கமடைந்து விட்டாள்.
மிதுவை அள்ளி எடுத்து சோஃபாவில் கிடத்திய ஜீவா தண்ணீரால் அவளின் முகத்தை ஈரப் படுத்தி அவளது கன்னங்களை தட்டி அழைத்தான். கண்கள் திறக்காமலே “ஸாரி ப்பா” என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
“இவ எதுவும் சாப்பிடலை இன்னும், நான் ஏதாவது எடுத்திட்டு வரேன் பார்த்துக்கோங்க” என சொல்லி நகரப் போனவனை தடுத்து விட்டார் பசுபதி.
அவரின் உள்ளமெங்கும் நடுக்கம், மகளை அப்படி பார்க்க முடியவில்லை. தனியாக தன்னால் அவளை கவனிக்க முடியும் என்ற தைரியத்தை இழந்திருந்தவர், “நான் போறேன், நீங்க இருங்க” என சொல்லி உள்ளே ஓடினார்.
சமையலறை வந்து விட்டாரே தவிர என்ன எங்கு இருக்கிறது என எதுவும் தெரியவில்லை. சில நொடிகள் மூச்செடுத்துக் கொண்டவரின் பார்வையில் எலுமிச்சை பழங்கள் தென்பட, அதை பிழிந்து சாறு தயாரிக்க ஆரம்பித்தார்.
அதற்குள் கண்கள் விழித்த மிது, ஜீவாவை கண்டு விட்டு, அப்பா எங்கே என பார்வையால் துலாவினாள். அவர் அங்கே இல்லாமல் போகவும் கோவம் கொண்டு இங்கிருந்து சென்று விட்டாரென நினைத்து சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
அவளை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஜீவா.
“நீங்க இல்லாம என்னால வாழ முடியாதுன்னு அப்பாகிட்ட சொல்லுங்க ஜீவா, அதை சொல்லாம வேறென்னனென்னவோ பேசினீங்க, அதான் கோச்சுக்கிட்டு என்னை விட்டுட்டு போயிட்டார், நீங்கதான் என் சந்தோஷம்னு ஏன் நீங்க சொல்லலை? அது தெரிஞ்சிருந்தா அப்பா கிளம்பியிருக்க மாட்டார். அப்பாவை சம்மதிக்க வைக்கிறது உங்க பொறுப்புன்னு சொன்னீங்கதானே, என் அப்பாவை என்கிட்ட அழைச்சிட்டு வாங்க, எனக்கு என் அப்பா வேணும். எதுக்கு போக விட்டீங்க அவரை?” என அவனை பேசவே விடாமல் புலம்பினாள்.
“உன் அப்பா இங்கதான் இருக்கார், காம் டவுன் மிது!” என ஜீவா சத்தமாக சொல்லவும்தான் அமைதி அடைந்தாள். கேவிக் கொண்டிருந்தவளின் முதுகை ஆறுதலாக தடவி விட்டுக் கொடுத்தவன், அவளின் அப்பா வருவதை பார்த்து விட்டு அவளை விட்டு விலகினான்.
மகள் அரற்றியதையெல்லாம் கேட்டிருந்த பசுபதி, வேகமாக மகளிடம் வந்து எலுமிச்சை சாறை பருக கொடுத்தார்.
“லெமனா மாமா, வெறும் வயித்துல சாப்பிட்டா தொந்தரவு பண்ணாது? ஃ பிரிஜ்ல மில்க் ஷேக் இருக்கும், அதை எடுத்திட்டு வர்றேன்” என்றான் ஜீவா.
“இல்லையில்லை தம்பி, அது ஜில்லுனு இருக்கும், இதுதான் தேவலை” என்றார் பசுபதி.
“அதுக்கு சாப்பாடே ரெடி பண்ணிடுவேன், இது…” ஜீவா சொல்லிக் கொண்டிருக்க, “சாப்பாடு ரெடி பண்ற வரை பாப்பா எப்படி தாங்குவா?” எனக் கேட்டார் பசுபதி.
அப்பாவின் இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டாள் மிது. அவளின் தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவர், “இத சாப்பிடு பாப்பா” என்றார்.
அவர் கொடுத்ததை பருகி முடித்தவள் அவரின் கையை பிடித்துக்கொண்டு தன்னருகில் அமர வைத்துக்கொண்டாள்.
எந்த சூழலில் திருமணத்தை செய்து கொண்டாள் என்பதை அவள் வாயாலேயே சொன்னாள்.
“நாலு வருஷம் இவரை பார்க்கவே இல்லப்பா, அப்பவும் இவரை தவிர யாரையும் நினைக்க முடியலை, இவர் நினைப்போட எப்படிப்பா வேற வாழ்க்கை வாழ முடியும்? ஜீவா ரொம்ப துக்கத்துல இருந்தார், இவர் பக்கத்துல நான் இருக்க வேண்டியது ரொம்ப அவசியமா இருந்ததுப்பா, என்னை நல்லா திட்டிடுங்க, கோவ படுங்க, ஆனா என்னை வேணாம்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்பா. நீங்க அம்மாலாம் இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியாதுப்பா” என சிறு அழுகையோடு சொன்னாள்.
உண்மையை சொல்லப் போனால் இப்போது அவர் அறிந்து கொண்ட எதையும் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மகளின் காதலை அங்கீகரிக்கும் எண்ணத்தில்தான் இருந்தார், ஜீவா யாரென தெரிந்த பிறகு இது பெரும் சிக்கலாக பட்டது.
திருமணமே ஆகி விட்ட பின் இவரால் என்ன செய்ய முடியும், அவள் பயப்படுவதை போல மகளை விலக்கி வைக்கும் அளவுக்கு அவரின் மனம் துணியாதே, அப்படி செய்வது நடை பிணமாக வாழ்வதற்கு சமம்.
என்ன செய்வதென அவருக்கு தெரியவில்லை, ஆனால் மகள் இதுவரை அவர் காணாத வகையில் அழுது, புலம்பி, மயங்கி என அவரை மிகவும் பயமுறுத்தி விட்டாள். தான் சொல்லப் போகும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை பாதிக்கும் என்பதை புரிந்திருந்தார்.
“அப்பா என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன், நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் பாப்பா” என்றார்.
“நீங்க ஊருக்கு போயிட மாட்டீங்களே?” எனக் கேட்டாள்.
“அதெப்படி பாப்பா உன்னை இப்படி விட்டுட்டு போவேன்? போ படுத்து தூங்கு” என்றார்.
அவள் அப்பாவின் மடியிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு என்னவோ போலானது. அவளை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.
மகள் உறங்கியதும் ஜீவாவின் பக்கம் பசுபதி திரும்ப, தலை குனிந்து யோசித்திருந்த அவனும் அவரை பார்த்தான். இருவருக்கும் என்ன பேசிக் கொள்வது என தெரியாத சங்கடமான நிலை.
குரலை செருமிக் கொண்டவர், “பாப்பாவை ரூம்ல படுக்க வைக்கலாமா தம்பி, சோஃபாவுல இடம் போதாது, எங்கேயும் பிடிச்சுக்க போகுது” என்றார்.
“அவளை தூக்கிட்டு போய் டிஸ்டர்ப் பண்ணினா எழுந்துக்குவா, நைட்டெல்லாம் சரியாவே தூங்கலை, சோஃபாவை பெட்டா மாத்திடலாம்” என சொல்லிக் கொண்டே வந்தவன், சோஃபாவின் சாயும் பகுதியை விரித்து விட்டான். பின் உள்ளே சென்று தலையணை எடுத்து வந்தவன் அவளுக்கு வைத்து விட்டான்.
மகளை பார்த்துக் கொண்டே தள்ளி அமர்ந்து கொண்டார் அவர்.
“டிஃபன் ஆர்டர் பண்றேன்…” என்றவன் சற்று தயங்கி, “மாமா…” என முடித்தான்.
“ஆமாம், ஏதாவது வர வைங்க, பாப்பா எழுந்ததும் ஏதும் சாப்பிடுவா” என்றார்.
சாப்பாடு ஆர்டர் செய்தவன் அவளின் கால் மாட்டிலும் பசுபதி அவளின் தலை மாட்டிலும் அமர்ந்திருந்தனர். அவருடன் ஏதோ பேச நினைக்கிறான், ஆனால் அவருடைய நிலையை எண்ணிப் பார்த்து குற்ற உணர்வில் பேச வராமல் தவித்தான்.
எப்படியும் அவருக்கு புரிய வைக்க வேண்டுமே, தயங்கிய குரலில் “மாமா…” என அழைத்தான்.
மேலும் எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பதை போல கை காட்டி அவனை தடுத்தவர் எழுந்து வெளியில் சென்று விட்டார்.
நீண்ட வராண்டாவில் கிடந்த நீள்விருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டவர் சற்று நேரம் எதையும் சிந்திக்காமல் இருப்போம் என நினைத்து கண்களை மூடிக் கொண்டார். அப்படியெல்லாம் விட மாட்டேன் என்பது போல அவரிடம் வந்து நின்றான் ஜீவா.
அரவம் உணர்ந்து கண்களை திறந்தவர் அவனை சலிப்பாக பார்த்தார்.
“ப்ளீஸ் பேச விடுங்க என்னை” என கெஞ்சினான்.
அவர் அமைதி காக்க, அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டான்.
“எல்லாத்தையும் சிக்கலாக்கி விட்டது நான்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருந்தா டிலே ஆனாலும் உங்க சம்மதத்தோட எங்க மேரேஜ் நடந்திருக்கும். அதுக்கான வாய்ப்பு என்னாலதான் இல்லாம போனது. இப்ப நீங்க பார்த்திட்டிருக்க ஜீவா இல்லை அப்போ நான். உயிரா காதலிச்சவளை பிரிஞ்சு, திடீர்னு அம்மாவையும் இழந்து யாருமே இல்லாம பரதேசி மாதிரி வாழ்ந்தேன்” என்றவனை பாவமாக பார்த்தார் அவர்.
“நேசிச்ச ஒருத்தர் அப்படி கண்ணு முன்னால சிதஞ்சு நிக்கும் போது கருணை இல்லாம போற அளவுக்கு உங்க பொண்ணை நீங்க வளர்க்கல மாமா” என ஜீவா கண்கள் பனிக்க சொல்ல, அவரும் கலங்கிப் போனார்.
ஆழ மூச்செடுத்து தன் உணர்வுகளை அடக்கியவன், “நாங்க செஞ்சது சரின்னு சொல்ல போறதே இல்லை. என் அம்மாக்காக அவளை பிரிய நினைச்சேன், மிதுவோட பேரெண்ட்ஸ் பத்தி யோசிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன். அதுக்காக எப்படி வேணும்னாலும் என்னை நீங்க பனிஷ் பண்ணலாம், ப்ளீஸ்…” என்றவன் அப்படியே பேச்சை நிறுத்தி விட்டான்.
அவர் அவனையே ஊன்றி பார்த்திருக்க, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான். துடிக்கும் உதடுகளை கடித்து கன்னத்தை தடவிக் கொண்டான். அவனுடைய அந்த தவிப்பு தன் மகளுக்காக என்பதை கண் கூடாக பார்த்தார் அவர்.
“எனக்கு மிது மட்டும்தான் இருக்கா, ஐ ஹோப்…” மீண்டும் சொல்ல முடியாமல் மேலே பார்த்தான்.
என்ன முயன்றும் அவனது கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தி விட்டன.
வளர்ந்த ஆண்மகன் அப்படி கலங்கி நிற்பதை கண்டவரின் மனம் கசிந்தது.
“தம்பி…” என ஆறுதலாக அழைத்தார் அவர்.
“எங்களை பிரிக்க மாட்டீங்கன்னு நம்புறேன் மாமா. அந்தளவு கொடூரமான தண்டனையை அனுபவிக்கிற அளவுக்கு பாவிங்க இல்லை நாங்க” என எப்படியோ சொல்லி விட்டான்.