எனக்கு தெரியாம எங்களை வீடியோ எடுத்திட்டு காரணம் சொல்றியா?” என கோவப்பட்டான் ஜீவா

தவறான எண்ணத்தில் செய்யவில்லை, நீ முத்தமிடுவாய் என முன்னரே எங்களுக்கு தெரியாது, சாதாரணமாக உங்களின் விடை பெறுதலை படம் பிடிப்பது மட்டுமே நோக்கம் என விளக்கினான் அவன்

தன் கைப்பேசிக்கு அந்த காணொளியை மாற்றிக் கொண்ட ஜீவா, அவனுடைய கைப்பேசியிலிருந்ததை அழித்து விட்டான்

மன்னிப்பு கேட்டு விட்டு அவர்கள் சென்று விட, அந்த காணொளியை தனிமையில் பார்த்தான் ஜீவா. முத்தமிட்டு விலகி செல்லும் ஜீவா மிதுவின் பக்கம் திரும்பவே இல்லை. அதற்கு பின்னரான மிதுவின் உணர்வுகள் பதிவாகி இருந்தது

அவன் பார்த்திராத காட்சி, பிரிவின் வேதனை, காதல் இரண்டையும் தேக்கி வைத்திருந்த அவளின் அந்தப் பார்வை இப்போது அவன் கண்களை கலங்க செய்தது. மீண்டும் மீண்டும் பார்த்தான்

திரையில் தெரிந்த அவளின் உருவத்தை வருடி மன்னிப்பு கேட்டான். வேகமாக இந்த நடனத்தை முடித்து கொடுத்து விட்டால் நிம்மதி என நினைத்தவன் உறுதியோடு எழுந்து சென்றான்

அதன் பின் ஜீவா சொதப்பவே இல்லை

ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. முடிந்த பிறகு ஜீவாவுக்கு அப்பாடா என இருந்தது

சில நாட்களுக்கு பின் ஆசையாக மிதுவுக்கு அழைத்தான். நடந்ததை மறைக்காமல் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்பதுதான் அவனது எண்ணம்

காணொளி அழைப்பில் கண்களில் நீர் மல்க, “ஜீவாஅக்கா ப்ரெக்னெண்ட், இப்போதான் தெரிஞ்சது. நீங்களும் கால் பண்றீங்க, நான் எவ்ளோ ஹேப்பி தெரியுமா?” எனக் கேட்டாள்

அவனும் தன் மகிழ்ச்சியை தெரிவித்தான். அந்த நாளை பாழாக்க விரும்பாமல் அவன் ஆடியதை பற்றி சொல்லாமல் விட்டான்

நன்றாக யோசித்து பார்த்தவனுக்கு கைப்பேசி வாயிலாக இதை அவளிடம் சொல்லி சண்டை வந்தால் சமாளிப்பது சிரமம் என தோன்றியது. நேரில் போய் சொல்லிக் கொள்ளலாம் என இருந்து விட்டான்

ஜீவா நாடு திரும்புவதற்கு முன்னரே சென்னைக்கு வந்து விட்டாள் மிது. அவனை அழைத்து வர அவள்தான் விமான நிலையம் சென்றிருந்தாள். செக் அவுட் செய்து வெளியில் வந்தவனை நோக்கி விரைந்து சென்றாள்

தன்னை அணைக்க வந்தவளை தடுத்து, “வீட்டுக்கு போலாம் மிதுஎன்றான்

தன்னை போல இவனுக்கு எந்த உணர்வுகளும் இல்லையா? என நினைத்து ஏமாற்றமடைந்து விட்டாள் மிது.  

வீட்டுக்கு வந்த பின் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். விருப்பம் போல முத்தங்களிட்டான், செல்லமாக அவள் கோபம் கொள்ள, “யாரும் நம்மள வீடியோ எடுத்தா என்ன செய்றது, அதான்என்றான்

யாரு எடுக்க போறா? ஆசையா வந்தவளை தள்ளி நிக்க வச்சிட்டு காரணம் சொல்லாதீங்கஎன்றவளை பேசவே விடவில்லை அவன்

பின் பேச்சுகளுக்கும் அங்கே இடமில்லாமல் போனது

அடுத்த நாள் மிதுவை விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்லி கேட்டான். முக்கிய வேலை என சொல்லி அலுவலகம் சென்று விட்டாள். மாலையில் தாமதமாக வந்தவள் நாளை காலையில் அவளது அப்பா அவனை பார்க்க வருவதை சொன்னாள்

இத்தனை விரைவில் அவரது வரவை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. இன்னும் அவன் ஷாராவுடன் நடனம் ஆடியிருக்கும் விஷயத்தை மிதுவிடம் சொல்லாமல் இருக்க, அதென்னவோ அவனை நெருடிக் கொண்டிருந்ததுகுறைந்த பட்சம் அதை சொன்ன பிறகு அவரை எதிர் கொள்ள நினைத்திருந்தான்

அவன் வெளிநாட்டில் இருந்த போது அப்பாவுடன் தான் பேசியிருந்ததை அவனுக்கு தெரியப் படுத்தியிருந்தாள் மிது. ஆகவே வருகிறேன் என பசுபதி கேட்கவும் சரியென ஒத்துக் கொண்டு விட்டாள்

பசுபதியின் பயணம் முடிவாகி விட்ட பிறகு வர வேண்டாம் என சொல்வது மரியாதையாக இருக்காது என்பதால், ‘வரட்டும், நீ சொல்ல தயங்கிய விஷயங்களை நான் சொல்கிறேன்என சொல்லி விட்டான் ஜீவா

 மறுநாள் அதிகாலையிலேயே சென்னை வந்து விட்டார் பசுபதி. அவரை அழைக்க இரயில் நிலையத்திற்கு ஜீவா, மிது இருவருமே சென்றனர்

அவர்கள் சேர்ந்து வந்தது குறித்து தவறாக ஏதும் நினைக்கவில்லை பசுபதி. மகளிடம் மட்டும் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து குளித்து கிளம்பி பின்னர் ஜீவாவுடன் பேசலாம் என சொன்னார்

ஜீவாவோட வீட்டுக்கே போலாம் ப்பாஎன்றாள்

அது சரியாக வராது என மறுத்தவரிடம், ஜீவாவின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை, பெரிய வீடு, உங்கள் பிரைவேசி பாதிக்காது என்றாள்.

அந்த தம்பியோட அப்பாம்மா இறந்திட்டாங்களா? நீ ஏன் என்கிட்ட முதலேயே சொல்லலை பாப்பா?” என மகளிடம் கேட்டார் பசுபதி

மிது விழிக்க, “நான் இந்தியா வந்ததும் சொல்லிக்கலாம்னு நான்தான் மாமா சொன்னேன், யாருமில்லாத பையன்னு நினைச்சு என்னை நீங்க ரிஜெக்ட் பண்ணிட்டீங்கன்னா? அதான்…” என சமாளித்தான் ஜீவா

மகளை குழப்பமாக பார்த்தார் பசுபதி

அன்பு மாமா எனக்கு மாப்ள எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாரா, நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன் ப்பா, சொல்ல விட்டுட்டேன்என்றாள் மிது

மகளின் பதட்டத்தை உணர்ந்தவர், அவளை இலகுவாக்கவும் ஜீவாவின் வீட்டையும் நேரில் பார்த்து விடலாம் என்ற நோக்கத்தோடும்சரி சரி, தம்பியோட வீட்டுக்கு போலாம்என்றார்

வீடு வரவும், தன் மகள் வாழ வசதியான நல்ல பெரிய வீடுதான் என திருப்தி அடைந்தவர், ஜீவாவுக்கு இது சொந்த வீடா என இயல்பாக கேட்டறிந்து கொண்டார்

அப்பாவை எதிர்கொள்ள பயந்து தேநீர் போடுகிறேன் என சமையலறை புகுந்து விட்டாள் மிது.

இந்த வீட்டில் சுதந்திரமாக வளைய வரும் மகளை பார்த்தவருக்கு, அடிக்கடி இங்கு வந்து போக இருக்கிறாள் என்ற நினைவில் என்னவோ போலானது

படித்து வேலைக்கு செல்லும் பெண்கள் பெற்றோரை குறித்து கவலை படுவதே இல்லையா என யோசித்தவர், உடனே இப்படி நினைப்பது தவறு, என் மகள் என் மீது அன்பாக இருக்கிறாள், நான் அவளுக்கு முக்கியம் என தனக்கு தானே சொல்லி சமாதானம் கொண்டார்

அவரே ஏதாவது கேட்கட்டும் என அவரையே பார்த்திருந்தான் ஜீவா

உங்க அப்பாம்மாக்கு என்னாச்சு தம்பி? எப்படி தவறினாங்க?” எனக் கேட்டார் பசுபதி

தந்தை தன் குழந்தை பருவத்திலும் தாய் இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இறந்து விட்டதாக சொன்னான். வேறு யார் இருக்கிறார்கள் என அவர் கேட்டதற்கு தன் தாய்மாமா பற்றி சொன்னான்

வேறு ஏதும் அவர்கள் பேசிக் கொள்வதற்கு முன் தேநீரோடு வந்தாள் மிது

தாய் மாமான்னா யாரு, வாசுகியோட அப்பாவா?” என விசாரித்தார் பசுபதி

இல்லை என மட்டும் சொன்னான்

வாசுகி உங்களுக்கு அத்தை பொண்ணோ மாமா பொண்ணோதானே? ஏன் இப்ப அவங்க கூட பேசுறது இல்லையா? ஏதும் சண்டையா?” என அவர் கேட்க, சிரித்து மழுப்பினான் ஜீவா. அப்படித்தான் போல என அவராகவே முடிவு செய்து கொண்டார்

உங்களுக்கு என்ன வேலை தம்பி, பாப்பாவும் நீங்களும் ஒரே ஆஃபிஸா?” எனக் கேட்டார்

மறுப்பாக தலையாட்டியவன், “ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க மாமா, அப்புறம் பேசலாம்என்றான்

வேலை பற்றி சொல்ல என்ன தயக்கம் என்ற யோசனையோடே மிது காட்டிய அறைக்கு சென்றார்.  

அப்பாவின் பார்வையில் தளர்ந்து போனவளாக அமர்ந்தாள் மிது

மாமாக்கு பிபி சுகர் இல்லை வேற ஏதாவது ஹெல்த் இஸ்யூஸ் இருக்கா மிதுஇல்லைதானே?” என விசாரித்தான் ஜீவா

அதெல்லாம் இல்லை, ஏன் கேட்குறீங்க?” என குழப்பத்தோடு கேட்டாள் அவள்

அம்மா பத்தி சொல்லணும், என் அப்பா பத்தின உண்மையை தெரிய படுத்தணும், என் வேலைய அவரை ஏத்துக்க வைக்கணும், எல்லாத்துக்கும் மேல நம்ம மேரேஜ்எல்லாமே சொல்லணும். ஊஃஃப்எத பர்ஸ்ட் சொல்றது, எப்படி பேச்சை ஸ்டார்ட் பண்றதுன்னு கன்ஃபியூஷனா இருக்குஅஃப்கோர்ஸ் பயமாவும் இருக்குநான் சொல்ல போற எதுவுமே அவரை ஈஸியா வைக்க போறது இல்லை. கண்டிப்பா ஷாக்  ஆக போறார், அதான் அவர் ஹெல்த் பத்தி கேட்டுகிட்டேன்என்றான்

ஜீவா!” பற்களை நெரித்தாள் மிது

ஏய் டென்ஷன் ஆகாத, உன்னை இப்படி பார்த்தா எனக்கும் டென்ஷன் ஆகுது. கவலை படாத, உங்கப்பா கால்ல சாஷ்டாங்கமா விழுந்திடுறேன்என்றான் ஜீவா

ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறான் போல எனதான் அப்போது அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்

பசுபதியுடன் தனிமையில் பேசுவதே நல்லது என நினைத்து சரோஜாவை வரவேண்டாம் என முதல் நாளே சொல்லியிருந்தான் ஜீவா

குளித்து தயாராகி வந்த பசுபதி பூஜையறை எங்கிருக்கிறது என கேட்டு கடவுளை வணங்கி திருநீறு இட்டுக் கொண்டு வெளியில் வந்தார். மிதுவிடம் சொன்னது போலவே அவரின் கால்களில் விழுந்து விட்டான் ஜீவா

மிது திகைக்க, பசுபதி பதற, “தவிர்க்க முடியாத சிட்டிவேஷன்ல நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம் மாமா, தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க மாமாஎன்றான் ஜீவா

செய்வதறியாமல் ஸ்தம்பித்து விட்டார் பசுபதி