மிதுவை நகர விடாமல் அங்கேயே அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான் அன்பு. ஹரியும் இயல்பாக அவளது வேலை, அலுவலகம் பற்றி பேசினான். 

கணவரை தனியாக அழைத்து விவரம் சொன்னார் வினோதினி. அப்பாவுக்கு சொல்லாமல் இதெல்லாம் என்ன என கோவமாக கேட்டார் பசுபதி. 

“சாதாரணமா அவங்க வந்தது போலவே இருக்கட்டும், உங்க பொண்ணு சரிங்கவும் குடும்பத்தோட வருவாங்க, அப்ப மாமாகிட்ட சொன்னா போச்சு” என வினோதினி சொல்லவும் சரியென விட்டார் பசுபதி. 

“ஒரு இம்பார்ட்டண்ட் கால் பண்ணனும், எக்ஸ்கியூஸ்  மீ” என சொல்லி அறைக்குள் சென்று விட்டாள் மிது. பின் அரை மணி நேரமாகியும் வெளியில் வரவே இல்லை. 

தான் சென்று எது பேசினாலும் பிடி கொடுக்க மாட்டாள் என நினைத்த வினோதினி, மகளிடம் கணவரை சென்று பேச சொன்னார். 

அறையில் அமைதியாக படுத்திருந்த மகளை கண்ட பசுபதி, “என்னடா பாப்பா?” எனக் கேட்டார். 

அப்பாவை காணவும் எழுந்து கொண்டவள், “யாருப்பா அவர், ரொம்ப மொக்கை போடுறார். கோயிலுக்கு போலாம்னு சொன்ன அம்மா மும்முரமா சமைச்சிட்டு இருக்காங்க. அவர் போனதும் வரலாம்னு படுத்திட்டேன்” என்றாள். 

உனக்காக அன்பு பார்த்திருக்கும் பையன்தான் அவன், எங்களுக்கும் விருப்பமுள்ளது, நீ என்ன சொல்கிறாய் என நிதானமாக கேட்டார் பசுபதி. திகைத்து போனவள், “என்கிட்ட சொல்லாம என்னப்பா இது?” என கண்டனமாக கேட்டாள். 

“எனக்கே தெரியாதுடா, உன் அம்மாவும் மாமாவும் பண்ணி வச்சிருக்க வேலை. உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு” என்றார். 

அவள் அமைதி காக்கவும் தாத்தா பாட்டி இவளது திருமணத்தை காண ஆசைப் படுவதையும் ஹரி இவளுக்கு பொருத்தமாக  இருப்பான் எனவும் எடுத்து சொன்னார். 

“அப்பா ப்ளீஸ் வேணாம்” அவரை நேராக பார்க்க முடியாமல் தவிப்பாக சொன்னாள். 

மகளையே ஊன்றி பார்த்தவர், “சரிம்மா, இந்த பையன் வேணாம், வேற இடம்…” என சொல்லிக் கொண்டிருக்க, “ப்பா…” என கெஞ்சலாக அழைத்தாள். 

சில நொடிகள் அமைதி காத்தவர், “கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்டா, உன் மனசுல உள்ளதை சொன்னாதானே  எனக்கு தெரியும்” என்றார். 

மிதுவின் இதயம் தட தடத்தது. ஜீவாவை பற்றி சொல்ல நினைக்கிறாள், ஆனால் தொண்டை அடை பட்டு போனது போன்ற உணர்வு. 

“வேற யாரையும் பிடிச்சிருக்கா பாப்பா?” என அவரே கேட்டு விட்டார். 

வேகமாக அப்பாவின் முகத்தை பார்த்தவள் அரை குறையாக மருண்ட பார்வையோடு தலையசைத்தாள். 

பசுபதியின் மனதில் ஏமாற்றமும் வருத்தமும் சூழாமல் இல்லை. ஆனால் அதை கடந்த அளவில் மகள்கள் மீது அளவில்லாமல் அன்பு கொண்டவர். அமைதியாகி விட்டவர் மனதை  நிதானத்திற்கு கொண்டு வந்தார். 

பெரிய மூச்சாக எடுத்துக் கொண்டவர், “யாருடா?” எனக் கேட்டார். 

“ஜீவா… ஜீவநந்தன் ப்பா” என்றவள் எச்சில் கூட்டி விழுங்கினாள். 

“ம்…  உன் கூட படிச்ச பையனா?” 

“இல்லப்பா, நாலு வருஷம் முன்னாடி என் ஃபிரெண்ட்ஸ் வந்தப்ப இங்க நம்ம வீட்ல வந்து தங்கினாரே” என நினைவுபடுத்தினாள். 

பசுபதியும் நினைவு படுத்தி பார்த்தார், உருவம் மறைந்து போயிருந்தாலும் அவனை பற்றிய நல்லெண்ணம் அப்போதே ஏற்பட்டிருந்ததே. 

“வாசுகியோட அத்தை பையன்தானே?” என அவர் கேட்க, பதில் சொல்லாமல் அமைதி காத்தாள். 

தான் தவறாக நினைக்கிறேன் என மகள் சங்கட படுவதாக அர்த்தம் செய்து கொண்ட பசுபதி, “உன் அம்மா உங்கிட்ட ஏதோ மாத்தம் தெரியுதுனு புலம்பினா. சரிதான்னு ஆகி போச்சு. அந்த பையனும் சென்னைதானே? அங்கதான் வேலையா? நானா கேட்டுத்தான் எனக்கு சொல்ற” என்றார். 

மிதுவின் கண்களில் கண்ணீர் கொட்டியது. பதறிப் போனவர், “ச்சீ கழுதை, கண்ண தொடைச்சிக்க, நான் முன்னாடியே உன்கிட்ட கேட்ருக்கணும், ஹ்ம்ம்… இப்ப அப்பாட்ட சொல்லிட்டதானே, நான் பார்த்துக்கிறேன்” என்றார். 

இதுவரை சொல்லி விட்டவளுக்கு மேற்கொண்டு நடந்தவைகளை அந்த பாசாங்கற்ற வெள்ளந்தி அப்பாவிடம் சொல்லும் துணிவு வரவில்லை. 

“ஸாரிப்பா…” என கேவினாள். 

தன் தோளி ல் கிடந்த துண்டை வைத்து மகளின் கண்கள் முகம் என துடைத்து விட்டவர், “உன் சந்தோஷம்தான் பாப்பா எனக்கு முக்கியம். அம்மாகிட்ட சமயம் பார்த்து நானே சொல்றேன். அதுக்கு முன்ன அந்த ஜீவா தம்பிகிட்டேயும் தம்பியோட குடும்பத்துக்கிட்டேயும்  நான் பேசணும்” என்றார். 

இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் குழம்பினாள். 

“என்னம்மா, அந்த தம்பிய எப்ப பார்க்கலாம் நான்?”

“அது… அவர்… அவர் வெளிநாடு போயிருக்கார்ப்பா, வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும்” 

“ஒரு மாசம்தானே, வந்ததும் பேசுறேன், அப்புறம் மத்தத பார்க்கலாம். நீ படுத்து தூங்கு” என சொல்லி வெளியேற பார்த்தார். 

அவரின் கையை பிடித்துக்கொண்டவள் தயக்கமாக அவரை பார்த்தாள். என்னவென அவர் கேட்க, அவளின் மூச்சுக்களின் எண்ணிக்கைதான் கூடியதே தவிர பேச வரவில்லை.  

“கவலை படாம தைரியமா இருடா” என சொல்லி சென்று விட்டார். 

படுத்துக் கொண்டவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. 

அன்பை தனியாக அழைத்த பசுபதி, தன் மகளுக்கு ஹரியை பிடிக்கவில்லை, பக்குவமாக சொல்லி விடு என சொல்லி விட்டார். அதிருப்தி அடைந்த அன்பு, மிதுவுக்கு எடுத்து சொல்லுங்கள் என்றான். 

“பிடிக்கலைன்னு என் பொண்ணு சொல்லும் போது என்னத்த எடுத்து சொல்லணும் அன்பு? லாவண்யாவுக்கு உன்னை பிடிச்சது, அதனால கல்யாணம் வரை போனது, மிதுவுக்கும் அவளுக்கு பிடிச்ச ஒருத்தனைத்தான் கட்டி வைப்பேன், காலத்துக்கும் என் பொண்ணு கூட வாழ போறவன் விஷயத்துல அவ சம்மதம் ரொம்ப முக்கியம்” என தீர்மானமாக சொல்லி விட்டார். 

வினோதினி ஏதோ பேச வர, “அப்படியென்ன கட்டாய படுத்தி அவ பிடிக்கலைன்னு சொல்ற ஒருத்தனை அவளுக்கு கட்டி வைக்கணும்? சின்ன சின்ன விஷயம் கூட அவகிட்ட கேட்டுத்தான் செய்றேன், கல்யாண விஷயத்துல கட்டாயம்ங்கிற வார்த்தையே இருக்க கூடாது” என கண்டிப்போடு சொன்னார். 

கணவனின் கூற்றில் வினோதினிக்கும் தெளிவு உண்டாகியிருக்க, அவரும் வேறு இடம் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். நம்பிக்கையோடு வந்திருந்த அன்பு, ஏமாற்றத்தோடு  ஹரியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். 

அன்பு தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். மிது கட்டியிருந்த புடவையையும் அன்று கடையில் பார்த்தவனையும் இணைத்து அவனுக்கு சந்தேகம் முளைத்தது. அது உண்மையாக இருக்க கூடாது என்றே விரும்பினான். என்னவோ ஜீவாவை யாரென தெரியாமலேயே அவன் மீது அவனுக்கு அப்படியொரு வெறுப்பு. 

பசுபதி மீண்டும் தன் வேலைகளை பார்க்க சென்று விட்டார். மகள் கழுத்தில் போட்டிருந்த நகை குறித்து கேட்டார் வினோதினி. 

அரை குறையாக என்றாலும் அப்பாவிடம் சொல்லி விட்டவளுக்கு அம்மாவிடம் வாய் திறக்க அத்தனை பயம். அந்த நகை தான்தான் வாங்கினேன் என பொய் சொன்னாள். 

“வர வர ரொம்ப பெரியவ ஆகிட்ட, தங்க நகையெல்லாம் என்ன வாங்க தெரியும் உனக்கு? எவ்ளோ கொடுத்து ஏமாந்து போன?” எனக் கேட்டார் வினோதினி. 

வாய்க்கு வந்ததை அம்மாவிடம் சொல்லி, ஏமாந்துதான் விட்டாய் என நன்றாக திட்டுக்கள் வாங்கிக் கொண்டாள் மிது. 

அடுத்து ‘இந்த பட்டுப் புடவை ஏது, வர வர எதையும் என்னிடம் சொல்வதில்லை’ என ஆரம்பித்தார். 

“கோயிலுக்கு போலாம்னு சொல்லிட்டு என்னம்மா செய்ற நீ? நேரத்தை பாரு, நடை சாத்த போறாங்க” என மிது கடியவும் வேகமாக கோயிலுக்கு புறப்பட்டனர் இருவரும். 

பெற்றோருக்கு துரோகம் செய்கிறோம் என்ற நினைவு அவளை வெகுவாக போட்டு அழுத்த, கடவுளிடம் சென்று மன்னிப்பு கேட்டாள். 

வழிபாடு முடியவும், மகளுக்கு திருநீறு இட்ட வினோதினி, “உன் விருப்பம் போலதான் கல்யாணம்னு அப்பா சொல்லிட்டார், ஆனா நாளை கடத்தாதடி” என கெஞ்சலாக சொன்னார். 

வெறுமனே ‘ம்’ போட்டுக் கொண்டாள். 

“வாயை தொறந்து சரின்னு சொன்னா முத்து உதிர்ந்தடுமா?” என கடிந்தார். 

“சரிம்மா” என அவள் சொல்லவும் கோயில் மணி ஓசை கேட்கவும் சரியாக இருந்தது. 

‘நல்லதே நடக்கும்’ என அகமகிழ்ந்து போனார் வினோதினி. 

தெரியாமல் செய்து கொண்ட திருமணம் அவளை நிலை குலைய வைத்தது.

அப்போது ஜீவாவிடமிருந்து அழைப்பு, அவள் ஏற்காமல் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. கடுப்பாகி கைப்பேசியை அணைத்து வைத்தவள் வீடு வந்ததும் அவனுக்கு அழைத்து காச் மூச் என கத்தினாள். 

“என்ன மிது ஆச்சு?” என பதற்றமாக அவன் கேட்கவும், நடந்தவற்றை சொன்னவள் அவனிடம் அழுதாள். 

“நம்ம கல்யாணம் பண்ணிகிட்டத எப்படி ஜீவா நான் அப்பாகிட்ட சொல்ல போறேன்? அவரை இன்னும் நோகடிக்க போறேன் நான்” என அழுது கொண்டே சொன்னாள்.

எப்படி அவளை ஆறுதல் படுத்த என அவனுக்கு தெரியவில்லை. சற்று நேரம் அவனிடம் புலம்பியவள், “நீங்க எதுக்கு கால் பண்ணிட்டே இருந்தீங்க?” என விசாரித்தாள். 

அவளிருந்த நிலைமையில் உண்மையான காரணத்தை அவனால் சொல்ல முடியவில்லை. உன்னிடம் பேச வேண்டும் போலிருந்தது என சொல்லி சமாளித்தான். 

அவன் சொல்லாமல் விட்ட காரணம் மிதுவுக்கும் அவனுக்குமான உறவில் பெரிய பிளவை ஏற்படுத்த போகிறது என கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டான்.