ஜீவா வெளிநாடு சென்றதும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொண்டு அவளுடைய ஊருக்கு சென்று விட்டாள் மிதுன்யா.
மகளிடம் வித்தியாசமாக உணர்ந்த வினோதினி என்னவென வாய் விட்டு கேட்டார்.
“என்ன வித்தியாசம்? இளைச்சு போயிட்டேனா?” என சமாளிப்பாக கேட்டாள் மிது.
வினோதினிக்கு இன்னதென பிரித்தறிந்து சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் தான்தான் அதிகம் யோசிக்கிறோம் என நினைத்து, மகளிடம் அதிகமாக ஆராய்ச்சி கேள்விகள் கேட்காமல் விட்டார்.
அம்மா கேட்டதை இரவில் தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள் மிது. கிண்டலாக சிரித்தான் அவன்.
அவள் முறைக்க, “இந்த அம்மாஸ் எல்லாம் பக்கா சி ஐ டி. எப்படி மாட்டிக்காம சமத்தா அங்கேருந்து வர போறேன்னு பார்க்கிறேன்” என்றான்.
“சி பி ஐ வந்தா கூட சமாளிப்பேன்” என்றாள் மிது.
“ம்ம்ம்… பார்ப்போம்”
“ம்ம்ம்… ஆனா அப்படி என்னத்த அம்மா என்கிட்ட கண்டு பிடிச்சிருப்பாங்க?” என அவனிடமே சந்தேகம் கேட்டாள்.
“அவங்களோட உள்ளுணர்வு உன்னை பத்தி எதுவோ ரெட் சிக்னல் கொடுத்திருக்கும்”
“அதான் எதுக்கு?”
அவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன், “நீ அவங்க பொண்ணு மட்டும் இல்லியே, என் வைஃ பும் கூட” என்றான்.
“சரியான தத்தி மிது நீ? கல்யாணம் மட்டும் பண்ணிக்கல நாம? எல்லா விதத்திலேயும் வாழவும் ஸ்டார்ட் பண்ணியாச்சு. பிஸிகலா பழைய மிது இல்லை நீ. அதனால உன்கிட்ட சேஞ்சஸ் தெரிஞ்சிருக்கலாம்” என அவன் சொல்லவும் பயந்து போய் விட்டாள்.
“என்ன மிது?”
“அம்மாக்கு தெரிஞ்சா அடி வெளுத்திடுவாங்க”
“அடியோட விட மாட்டாங்க, ரூம்ல பூட்டி வச்சாலும் வைப்பாங்க. அப்புறம் நான்தான் வந்து ஃபைட்லாம் பண்ணி உன்னை கூட்டிட்டு வரணும்”
“ஓகே, கூல்! ரொம்ப யோசிக்காம நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா. என்ன நடந்தாலும் நல்லதுக்கேன்னு எடுத்துக்க, வர்றத வச்சு அப்படியே அந்த ஃப்ளோலேயே போய் சமாளிச்சுக்கலாம்” என்றவன் சற்று தயங்கி, “உனக்கு உன்கிட்ட வேற சேஞ்சஸ் தெரியலதானே?” எனக் கேட்டான்.
அவர்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள், ஒரு சதவீத வாய்ப்பாக கருவுற்றிருப்பாளோ என அவனுக்கு திடீர் சந்தேகம்.
மிதுவுக்கும் இனியும் நாட்களை கடந்த வேண்டாம் எனதான் தோன்றியது.
சரியென அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “இல்லயில்லை, நான் இந்தியா வந்ததும் சொல்லிக்கலாம்” என்றான்.
மிதுவின் வீட்டில் அவளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வது என யோசனை அவனுக்கு, உடனே அவளிடம் செல்ல முடியாதே, ஆகவே தள்ளி வைக்க சொல்லி விட்டான்.
அவளிடம் ஆறுதலாக அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, அவளுக்கும் அவனது அந்த தைரியப் படுத்தும் வார்த்தைகள் அதி முக்கியமாக இருக்க, உறக்கத்தை துறந்து அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.
தான் தன் மகளிடம் உணர்ந்ததை கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வினோதினி. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார் பசுபதி.
“ரெண்டு வாரம் இங்க இருக்க போறாளே, லாவண்யா வீட்டுக்காரர் ஒரு சம்பந்தம் பத்தி சொன்னாரே, அந்த பையனும் ஊருக்குத்தான் வந்திருக்கிறாராம். இவகிட்ட பேசுங்க, நீங்க சொன்னாதான் கேட்பா” என வினோதினி சொல்ல, சரியென ஒத்துக் கொண்டார் பசுபதி.
அடுத்த நாள் பசுபதி தன் வேலைகளை முடித்து விட்டு மகளிடம் பேசலாம் என வர, அவளோ லாக் இன் செய்து விட்டு அவளின் வேலையை ஆரம்பித்திருந்தாள். சற்று முன்னேரமாக வர என்ன கஷ்டம் என கணவரிடம் கோபித்துக் கொண்டார் வினோதினி.
“அடடா உனக்கு எல்லாம் உடனே உடனே நடக்கணுமா?” என கேட்டு சென்று விட்டார் பசுபதி.
மகளை நினைத்து அந்த தாய்க்கு ஏதோ கலக்கம், வயிற்றில் இனம் புரியாத பிசைவு. எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது என மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டார்.
அடுத்து நாள் சரியில்லை, நல்ல நாளில்தான் நல்ல விஷயத்தை மகளிடம் பேச வேண்டும் என தள்ளி போட்டார் பசுபதி.
தங்கையை பார்க்கவென வந்திருந்த லாவண்யாவிடம், தன் மன உணர்வை சொன்ன வினோதினி, “உன் அப்பா புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார். ஊருக்கு வந்திருக்க அந்த தம்பி திரும்ப சென்னை போயிட்டா கஷ்டம்தானே, இப்பவேன்னா பொண்ணு பார்க்கிறது கூட வச்சுக்கலாம்” என புலம்பினார்.
அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பிய லாவண்யா, தன் கணவனிடம் இது குறித்து புலம்பினாள்.
“மிது ஃபோட்டோ பார்த்தே ஹரிக்கு பிடிச்சு போச்சு. மிதுவுக்கும் ஹரியை பார்த்தா கண்டிப்பா பிடிக்கும். கவலைய விடு, நாளைக்கு சனிக்கிழமை, மிதுவுக்கு லீவாதானே இருக்கும், சாதாரணமா போற மாதிரி அவனை அழைச்சிட்டு போறேன். யார்கிட்டேயும் சொல்லாத, ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக்கட்டும். அப்புறம் மிதுகிட்ட பேசிக்கலாம்” என யோசனை சொன்னான் அன்பு. அவன் மிதுவுக்காக பார்த்திருக்கும் பையனின் பெயர்தான் ஹரி.
“அம்மாகிட்ட மட்டுமாவது சொல்லணும்” என அவள் சொல்ல, அதுவும் சரிதான் என ஒத்துக் கொண்டான்.
இப்படியாக ஹரியோடு மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அன்பு.
இன்னும் வெளி வராத டூயட் பாடலை தன் மனைவிக்காக கைப்பேசியில் பாடிக் கொண்டிருந்தான் ஜீவா. அவள் காதலாகவும் பிரிந்திருக்கும் வருத்தத்தோடும் அவனை பார்த்திருந்தாள்.
இன்று அவர்கள் மதுரை கலை விழாவில் சந்தித்துக் கொண்ட தினம். அதை நினைவு படுத்திய ஜீவா, அவளுடைய பயணப் பையின் வெளி ஜிப்பினை திறந்து பார்க்க சொன்னான்.
வாழ்த்து அட்டையும் சின்னதாக நெக்லஸ் ஒன்றும் இருந்தது. நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என வருத்தப்பட்டாள்.
“எனக்கு ஸ்பெஷல் ஃபோட்டோ அனுப்பு” என குறும்பாக சொன்னான்.
அவள் முறைக்க, “சேச்சே, உன் புத்தி போகுது பார்! பார்க்க பிளஸன்ட்டா ஃபோட்டோ கேட்டேன்” என சமாளித்தான்.
“ஏன் இப்ப பார்க்க சுமாரா இருக்கேனா? இருக்கும் இருக்கும், என்ன… வெள்ளைகாரிய பார்த்து சைட் அடிக்கிறீங்களா?” என பொய்யான கோவத்தோடு கேட்டாள்.
அவன் தோள்களை குலுக்கி இருக்கலாம் என்பது போல பார்த்தான்.
“இதெல்லாம் நோட் பண்ணிக்கிறேன், நேர்ல பார்க்கும் போது வச்சுக்கிறேன்” என்றாள்.
அவளை ரசனையாக பார்த்திருந்தவன், “ஹேய் மிது…” என ஆழமான குரலில் அழைத்து, “இந்த குளிர்ல மனசும் உடம்பும் உன்னைத்தான் தேடுது, சமாளிக்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. வெறும் மிஸ் யூ ங்கிற வார்த்தைல என் ஃபீலிங்ஸை எக்ஸ்பிரஸ் பண்ண முடியாது. என்னடி பண்ணி வச்சிருக்க என்னை?” எனக் கேட்டான்.
“ஹீரோவுக்கு ஹை ஃபீவர், அவரில்லாம டூயட் சாங் எப்படி எடுக்கிறது?” என்றவன் இரும, அவனுக்கும் அந்த குளிர் ஒத்துக் கொள்ளவில்லையோ என கவலையாக பார்த்தாள்.
என்னவென அவன் கேட்டுக் கொண்டிருக்கையில் யாரோ தன் அறைக்கு வரும் அரவம் கேட்கவும் வேகமாக அழைப்பை துண்டித்து விட்டாள் மிது.
மீண்டும் அவளுக்கு அழைக்காமல், அவளே அழைப்பாள் என காத்திருந்தான் ஜீவா. அப்போது பங்கஜ் அவனது அறைக்கு வந்தார், அவர் ஏதோ கேட்க மறுத்து விட்டான்.
“நீ யோசி, கொஞ்ச நேரம் கழிச்சு முடிவை சொல்லு” என சொல்லி சென்றார் பங்கஜ்.
ஹரி வருவதால் மகளிடம், சற்று நேரத்தில் கோயிலுக்கு சென்று வரலாம், பட்டு புடவை அணிந்து கொள் என சாதாரணமாக சொல்வது போல சொல்லி சென்றார் வினோதினி.
பின்னர் அழைப்பதாக ஜீவாவுக்கு செய்தி அனுப்பி விட்டு கிளம்ப ஆரம்பித்தாள் மிது.
அன்புவுடன் கடையில் சண்டையாகி, பின் ஜீவா வாங்கித் தந்த புடவையை எடுத்து வந்திருந்தாள். அதை அணிந்து கொண்டு நெக்லசையும் போட்டு வித விதமாக புகைப்படங்கள் எடுத்து ஜீவாவுக்கு அனுப்பி வைத்தாள் மிது.
இப்படி அவளை பார்க்கையில் எப்படி உணர்கிறேன் என வாய்ஸ் நோட் அனுப்பி வைத்தான் ஜீவா. அதை கேட்டவளுக்கு முகம் சிவக்க, அந்த நேரம் பார்த்து அவளை அழைத்தார் வினோதினி.
“இதோ வர்றேன் மா” என சத்தமிட்டவள் தன்னை நிலை படுத்திக் கொண்டு வெளியே வந்தாள். கழுத்தில் போட்டிருந்த நகையை கழட்டி வைக்க மறந்து விட்டாள்.
“அன்பு தம்பி வந்திருக்கு பாரு” என்றார் வினோதினி.
அன்பை “வாங்க மாமா” என வரவேற்ற மிது, அவனருகிலிருந்த புதிய ஆடவனை வெறுமனே “வாங்க” என்றாள்.
தனக்கு தெரிந்த பையன் என அறிமுகம் செய்த அன்பு, அவனது படிப்பு, வேலை போன்ற விவரங்களை சொன்னான். அசுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் எப்படி அங்கிருந்து கழன்று செல்வது என யோசிக்க, மிது கட்டியிருந்த புடவையை கவனித்த அன்பு நெற்றி சுருக்கி யோசித்தான்.
அன்புவின் முக பாவத்தை கண்டு எச்சரிக்கையடைந்தவள், “சென்னைல இந்த புடவை பார்த்தாமே மாமா, ஞாபகம் இருக்கா? எனக்கு ரொம்ப பிடிச்சது, வேற கடைல அதே போல பார்த்தேன், வாங்கிட்டேன்” என சமாளித்தாள்.
ஹரியின் முன்பு அதிகம் தோண்டி துருவாமல் விட்டான் அன்பு.
வினோதினி தன் கணவருக்கு அழைத்து வீட்டுக்கு வரும்படி சொல்லியிருக்க, பசுபதியும் வந்து விட்டார். தாத்தா மில்லில் இருக்க, பாட்டியோ காலையில் பக்கத்து வீட்டுக்கு கதை பேசவென சென்றவர், இன்னும் வந்திருக்கவில்லை.