“ஒட்டு மொத்த ஆம்பளைங்களையே குறை சொல்லியாச்சா? சொல்லிக்க சொல்லிக்க. ஆனா ஒன்னு, எங்கக்கா ஏமாந்து நின்னப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, இப்ப அப்படி இல்லை. ஜீவாவுக்கு நான் இருக்கேன், ஏதாவது தப்பாச்சு.. உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என்றார். 

இதற்கு மேலும் மிதுவை பற்றி நன்றாக  எடுத்து சொல்லி பிரயோஜனம் இல்லை,  அவராக புரிந்து கொண்டால் இப்படி பேசுவதை விட்டு விடுவார் என கருதி அவரின் மனைவியும் இந்த பேச்சை அத்தோடு விட்டார். 

“உடம்பு முடியாததோடு  ஏன் செய்ற மிது? கடைல வாங்கிட்டு வர்றேன்” என மிதுவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவா. 

அவள் ஒத்துக் கொள்ளவில்லை, நாளைக்கு கிளம்ப போகிறார்கள், ஒரு வேளைதானே என நல்ல விதமாக சொன்னவள் இறுதியாக,  உன் மாமா அதற்கும் ஏதாவது சொல்வார் என்றாள். 

அவன் முறைக்க, “கோவத்தை பாரு, உங்களோட ரிலேட்டிவ்ஸ் அதான் செய்றேன், உங்களுக்காக செய்றேன், புரியுதா? என்ன பேச்சு பேசுறார்” என்றாள்.

அவன் அமைதி காக்க, “என்ன சத்தத்தையே காணோம்?” எனக் கேட்டாள். 

“மாமாகிட்டயே நிறைய பேசிட்டேன், எனர்ஜி இல்லாம உன்கிட்ட வேற என்ன பேச சொல்ற?” எனக் கேட்டான். 

அவனை  மென்மையாக அணைத்து விட்டவள், “இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க” என சிரிப்போடு சொல்லி வேக வேகமாக சமையலை முடித்தாள். 

அனைவருக்கும் இன் முகத்தோடு பரிமாறினாள். இரவு அங்குதான் தங்கினார்கள். அதிகாலை கிளம்பும் போது ஜீவாவோடு சேர்ந்து மிதுவும் எழுந்து கொண்டாள். புறப்படும் போது மிதுவிடம் விடை பெற்றுக் கொள்ளவில்லை இளங்கோ. ஆனால் அதை மிதுவும் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 

ஜீவாவுக்குத்தான் ‘நன்றாக கவனித்துக் கொண்டாள்தானே, ஒரு வார்த்தை சொல்லி சென்றால் என்ன?’ என மாமாவின் மீது மன வருத்தம். அவளிடம் சொல்லவும் செய்தான். 

“விடுங்க. அதான் உங்க அத்தை, ஹரிணி எல்லாம் அவருக்கும் சேர்த்து சொல்லிக்கிட்டாங்களே, அந்த டெரர் பீஸ் என்கிட்ட பேசாம இருக்கிறதே நல்லது” என்றாள். 

“டெரர் பீஸா, என் மாமா மிது” 

“ஆமாம், நான் என்ன தாத்தான்னா சொன்னேன்?” என அவள் கேட்கவும் சிரித்து விட்டான். 

“சிரிக்காதீங்க, பாவம் அந்த ஆன்ட்டி,  எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ? சரியான சிடு சிடுப்பு சிங்காரம்!” 

“போதும் போதும். அவர்தான் கிளம்பிட்டாரே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா?” என அவன் கேட்க, நன்றாக கொட்டாவி விட்டாள் அவள். 

அவளை தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் விட்டவன் அவளை அணைத்துக் கொண்டே படுத்தான். சரோஜா வரும் வரை தூங்கினார்கள். 

நல்ல மன நிலையிலேயே அவரவர் பணிகளை பார்க்க சென்றார்கள். மறக்காமல் பங்கஜிற்கு அழைத்து முன்தினம் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் மிது. அதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என சொன்னார் அவர். 

“ஜீவாவோட மனசு ரொம்ப ஸாஃப்ட், யாரும் அவரை ஹர்ட் பண்ணிடாம பார்த்துக்கோங்க ஸார், ப்ளீஸ்” என்றாள். 

“அவன் அப்படியொன்னும் வீக்கான ஆள் இல்லை. நீதான் அவன் வீக்னெஸ், நீ நல்லா பார்த்துகிட்டா போதும்” என்றார் அவர். 

“ஏன் என்னை பத்தி எதுவும் கம்ப்ளைண்ட் பண்ணினாரா?” என விசாரித்தாள். 

“உன்கிட்ட பயந்து நடுங்குறான். இந்த வேலை மத்தது மாதிரி கிடையாது. நீ கொஞ்சம் புரிஞ்சு நடக்கணும்” என அறிவுரை சொன்னார். 

“அவர் ஏதாவது அதிகமா சொல்லியிருப்பார், என் கோவம்லாம் எவ்ளோ நாளைக்கு. அவருக்கு நல்லதுன்னா நான் அட் ஜஸ்ட் பண்ணிப்பேன்” என ஜீவா வீட்டுக்கு காலதாமதமாக  வருவது பற்றி மிது சொல்ல, அதை எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வாள் என தவறாக அர்த்தம் செய்து கொண்டார் பங்கஜ். 

“அது போதும், அடுத்த வருஷம் இந்நேரம் நீ நினைச்சு பார்க்க முடியாத உயரத்துக்கு போயிருப்பான் அவன், பார்த்திட்டே இரு” என சூளுரைப்பது போல சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டார் பங்கஜ். 

அதன் பின் நாட்கள் நன்றாகவே நகர்ந்தன.  ஊருக்கு வந்து விட்டு போக சொல்லி மகளை அழைத்தார் பசுபதி. 

 மிது ஜீவாவிடம் கேட்க, சட்டென முகம் சுணங்கியவன், “அதுக்கென்ன போயிட்டு வா” என்றான். 

வேலைப் பளுவாக இருக்கிறது, இரண்டு நாட்களில் வந்து செல்வதென்றால் எனக்கும் அலைச்சல், நிறைய நாட்கள் தங்குவது போல பார்த்துக் கொண்டு வருகிறேன் என அப்பாவிடம் சொல்லி விட்டாள் மிது. 

ஏன் அப்படி சொன்னாய் என ஜீவா கேட்க, “நீங்க என்னை விட்டு தனியா தங்கிக்குற அளவுக்கு வளர்ந்தப்பறம் போயிக்கிறேன்” என்றாள். 

“ஏது நான் வளரணுமா? போடி!” என்றவன், அவள் தன்னை விட்டு போகவில்லை என்பதற்கான தன் மகிழ்ச்சியை அணைப்பின் மூலமாக அவளுக்கு உணர்த்தினான். 

பசுபதியே மகளை பார்க்க சென்னைக்கு வந்து விட்டார். அவளது அலுவலக நேரத்தில் வந்ததால் அவருக்கு மகளின் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்லி வெளியில் அழைத்து சென்றார்.

 நிறைய உடைகள் எடுத்துக் கொடுத்து, நல்ல உணவகத்தில் சாப்பிட வைத்து, கிளம்பும் போது நிறைய நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்து என எல்லாம் ஆசை ஆசையாக செய்தார். பதிலுக்கு இவளும் அப்பாவுக்கும் வீட்டினருக்கும் நிறைய வாங்கிக் கொடுத்தாள்தான். ஆனால் தன்னலமற்ற அவரின் செய்கையின் முன் இவளுடையது ஒன்றுமே இல்லை.

ஒரு நாள் சந்திப்பில் போய் திருமணம் பற்றி என்ன பேசுவது என நினைத்தவர், சீக்கிரம் ஊருக்கு வா என மட்டும் சொல்லி மகளை குற்ற உணர்வில் மூழ்க செய்து விட்டு புறப்பட்டார். 

ஜீவாவிடம் சொல்லி புலம்பினால் அவனும் வருத்தம் கொள்வான் என நினைத்து மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகினாள் மிது. 

ஒரு வாரத்தில் ஜீவாவுக்கு படப் பிடிப்புக்காக வெளிநாடு பயணப் படும் வாய்ப்பு வந்தது. அடுத்தடுத்து நான்கு நாடுகளுக்கு தொடர்ந்து செல்கிறார்கள், ஆகவே பயண நாட்களும் அதிகமாக இருந்தன. திரும்ப வர ஒன்றரை மாதங்கள் ஆகும். 

தனக்காக ஊருக்கு செல்லாமல் இருந்தவளை தனியே விட்டு எப்படி செல்வது என்பதை விட,  இன்னும் அவளின் தற்காலிக பிரிவை  ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரவில்லை அவன். ஒரு கட்டத்தில் தான் வரவில்லை என பங்கஜிடம் சொல்லிவிட்டான். 

வீடு வந்ததும் ஜீவாவிடம் கோபித்துக் கொண்டாள் மிது. பங்கஜ் அவளிடம் சொல்லியிருந்தார். 

“உங்க நிலைமை வேற, என்னோடது வேற. இப்படி இருந்தா எப்படி முன்னேறுறது நீங்க? ஒழுங்கா ஸார் கூட கிளம்புற வழிய பாருங்க” என முடிவாக சொல்லி விட்டாள். 

வெளிநாடு செல்வதற்காக அவள்தான் அவனை ஷாப்பிங் அழைத்து சென்று எல்லம் வாங்கிக் கொடுத்தாள். பயணப்படும் நாளன்று எத்தனை முறை அவளுக்கு பத்திரம் சொன்னான் என கணக்கே இல்லை. 

விமான நிலையத்தில் அவளுடனேயேதான் நின்று கொண்டிருந்தான். 

வெளிநாடு செல்லப் போகும் மற்றவர்களும் வந்து விட்டனர். அவர்கள் உள்ளே செல்ல, இவன் மட்டும் அறிவிப்பு வந்ததும் வருவதாக சொன்னான். 

“நீ அடுத்த ஃபிளைட்ல கூட வா ஜீவா, பார்த்துக்கலாம்” என கிண்டல் செய்தான் பங்கஜின் குழுவிலிருந்த குறும்புக்காரன் ஒருவன். 

“உன் ஆளையும் கூட்டிட்டு வா ஜீவா, இவனை இறக்கி விட்டுட்டு அந்த சீட்டை உன் வைஃபுக்கு கொடுத்திடலாம்” என்றான் இன்னொருவன். 

மிதுவை அவர்களிடமிருந்து தள்ளி அழைத்துக் கொண்டு சென்றான் ஜீவா. அவனை கிண்டல் செய்தவர்கள் இருவரும் ரகசியமாக எதுவோ பேசிக் கொண்டு கையில் அடித்துக் கொண்டு சிரித்தனர். 

 குழுவாக உள்ளே செல்லும் போது ஜீவாவை மட்டும் தனியாக வா என எப்படி விடுவது என மிதுவிடம் கேட்டார் பங்கஜ். 

அதுவரை தைரியமாக இருந்த அவளுக்குமே இப்போது என்னவோ போலானது. திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகி விட்ட  நிலையில் இப்போதுதான் முதல் பிரிவு வருகிறது, அதுவும் நாற்பத்தைந்து நாட்கள்.

இருவரும் ஒருவரையொருவர் தவிப்பாக பார்த்துக் கொண்டனர். 

“ரெண்டு நிமிஷத்துல வந்து சேரு ஜீவா” என கண்டிப்போடு சொல்லி, அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றார் பங்கஜ்.

கலங்கிய கண்களுடன் மூச்சை இழுத்து விட்ட மிது, “போயிட்டு வாங்க ஜீவா” என்றாள். 

எத்தனை தூரம் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதை இருவருமே புரிந்து கொண்ட தருணம். 

“என்ன மிது இது, நான் நினைச்சு பார்க்காத அளவுக்கு இவ்ளோ கஷ்டமா இருக்கு?” நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு கேட்டான்.  

“ஃபர்ஸ்ட் டைம் இல்லியா? போக போக பழகிடும் ஜீவா”  என்ற மிது மென்மையாக அவனை அணைத்து விட்டாள்.

தலையாட்டிக் கொண்டவன் சட்டென அவளை இறுக்கமாக அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “வரேன் மிது” என கலங்கிய குரலில் சொல்லி வேகமாக அவளை விட்டு விலகி நடந்தான். ஒரு முறை அவளை திரும்பி பார்த்தாலும் அவளிடமே வந்து விடுவோம் என பயம் அவனுக்கு. 

முத்தத்தால் ஏற்பட்ட கன்னத்து சில்லிப்பை தொட்டு பார்த்துக் கொண்டே அவன் உருவம் பார்வையிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள் மிது. 

இந்தப் பிரிவு என்னென்ன மாற்றங்களை அவர்களின் வாழ்வில் கொண்டு வரப் போகிறது என அப்போது அவர்களுக்கு தெரியாது.