கொஞ்சும் காதல் சாரல் – 21

அத்தியாயம் -21

பங்கஜின் நடன அரங்கிலிருந்து ஜீவா, மிது இருவரும் வீடு வந்தடைந்தனர்.  வெந்நீரில் குளித்து விட்டு வந்த ஜீவா உடனே படுத்துக் கொண்டான். 

அவள் அவனிடம் வந்து நிற்க, “நீ படுக்கணுமா? நான் வெளில போறேன்” என எழுந்து கொண்டான். 

கலங்கிய கண்களும் வேக மூச்சுக்களுமாக அவள் பார்க்க, “ஏய் கோவத்துல இல்லை மிது, நீதான உன்னை தொடக் கூடாதுன்னு சொன்ன? அதான்…” என்றான். 

“நான் சொல்ற எல்லாத்தையும் அப்படியே கேட்பீங்களா?” எனக் கேட்டாள். 

“ம்… அப்படித்தானே இருக்கேன் நான். நம்ம கல்யாணம் கூட உன் பேச்சை நான் கேட்டதாலதான் நடந்தது”

“ஆமாம், எல்லா விஷயமும் நான் சொல்றத கேட்டு நடங்க, இந்த விஷயத்துல நான் சொன்னாலும் கேட்க கூடாது, கேட்டா அப்புறம் அவ்ளோதான்” என மிரட்டலாக சொன்னவள், “கோவத்துல ஏதோ சொல்லிட்டேன்னு தொட மாட்டாராம்! எப்படித்தான் என்னை விட்டு தள்ளி படுக்க முடியுதோ?” என மூக்குறிந்து கொண்டே புலம்பினாள். 

“நீயும் நான் இல்லாம தனியா தூங்கினதானே?” என அவன் கேட்கவும், “ஸாரி” என்றாள்.

“நைட்டெல்லாம் வருவே வருவேன்னு எவ்ளோ நேரம் முழிச்சிட்டு இருந்தேன் தெரியுமா?” எனக் கேட்டுக் கொண்டே படுத்தான். 

படுக்கையில் ஏறி நின்றவள் அவனை குப்புற படுக்க சொல்லி ஒரு காலால் அவனது முதுகு, கால் எல்லாம் அழுத்தி விட்டாள். அவனுக்கும் இதமாக இருக்க,  மறுப்பேதும் சொல்லவில்லை. 

“கொஞ்சமாச்சும் கஷ்டத்தை பொண்டாட்டிகிட்ட சொல்லணும்” என்றாள். 

“சொல்லாமலேதான் நல்லா மிதி கிடைக்குதே மிது, சொன்னா என்ன கிடைக்கும்?” 

“விளையாடாதீங்க ஜீவா, என்கிட்ட ஏன் சொல்லலை?”

“சொன்னா வருத்த படுவன்னுதான்”

“நீங்க சொல்லாமலே உங்களுக்கு பிராப்லம்னு சரோம்மா கண்டுபிடிச்சிட்டாங்க, என்னால அப்படி தெரிஞ்சுக்க முடியலை” என வருத்தமாக சொன்னாள். 

“உனக்கு தெரியக்கூடாதுன்னு கவனமா இருந்தேன் மிது,  எதெதுக்கு கவலை படுறதுன்னு இல்லியா?” எனக் கேட்டவன் சட்டென திரும்ப, நிலை தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள். 

விழுவாள் என தெரிந்தேதான் அவன் திரும்பியிருந்தான். ஆகவே வாகாக அவளை தாங்கிக் கொண்டான். 

“எதுக்கு இந்த சாகசம், எசகு பிசகா அடி பட்டா தெரியும்” என்றவளும் அவனுள் பொருத்தமாக அடங்கிக் கொண்டாள். 

“இதெல்லாம் இப்ப செய்யாம வயசானதும் செய்யலாம்னு தள்ளிப்போட சொல்றியா? இதுதான் அனுபவிக்கிற வயசு” என ஆசையாக சொல்லிக் கொண்டே கணவனாக எல்லை மீறினான். 

“இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு தள்ளிப் போட்டுத்தான் ஆகணும் ஜீவா” என குறும்பாக சொன்னாள்.

அவன் சோகமாக உதடுகளை பிதுக்கி அழுவது போல பாவனை செய்தான். 

“உடம்பு வலில ஆசைய பாரு!” என கண்டித்தாள். 

“வார்ம் அப்லாம் ஒழுங்கா செய்தா ஒன் மன்த்ல உடம்பு வலி எல்லாம் காணாம போயிடும். பங்கஜ் ஸார்கிட்ட அப்படி சண்டை போடுற மாதிரி பேசலாமா? நாளைக்கு முத வேளையா அவர்கிட்ட ஸாரி கேட்குற” என இவனும் கண்டிப்போடு சொன்னான். 

அவள் உம் என்று இருக்க, “நீ கேட்ப எனக்கு தெரியும். உனக்கு பரவாயில்லையா?” இடுப்பை வருடி விட்டுக் கொண்டே கேட்டான். 

“உங்க கஷ்டத்துக்கு முன்னால இது ஒன்னுமே இல்லை. உங்களுக்கு ரொம்ப வலிச்சா டாக்டர்கிட்ட போலாம் ஜீவா” 

“அவ்ளோக்கு எதுவுமில்ல. நேத்து பத்து மணிக்கு வீட்டுக்கு வந்திடலாம்னு நினைச்சுதான் உன்கிட்ட சொன்னேன், நானே எதிர்பார்க்காம டிலே ஆகிடுச்சு. உனக்கு மெசேஜ் பண்ண கூட டைம் இல்லை, சாப்பாடு வேஸ்ட் ஆகும் முன்னாடியே சொல்லணும் அதெல்லாம் என் சிந்தனைல இல்லவே இல்லை, ஸாரி” என்றான். 

“நானும் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் ஜீவா. எவ்ளோ சண்டை போட்டாலும் நானே துரத்தி விட்டாலும் என்னை விட்டு நகர கூடாது நீங்க, புரிஞ்சுதா, அப்புறம் அதுக்கும் சேர்த்து சண்டை போடுவேன்” என்றாள். 

“எல்லாத்துக்கும் சண்டையா மிது?” தீவிர தொனியில் கேட்டான். 

“விளையாட்டுதானே ஜீவா? அதெப்படி சண்டையே போடாம இருக்க முடியும், சண்டை போட போறோம், அப்புறம் இதோ இப்படி சேர்ந்துக்க போறோம்”

“கொஞ்ச நாளைக்கு அட்லீஸ்ட் என் ஒர்க் எனக்கு ஸ்மூத்தா போற வரைக்குமாவது கருணை வை மிதும்மா. இந்த குடும்ப வாழ்க்கை புதுசா, நீ என் கூடவே இருக்கிறது, உன் கூட அப்டி அப்டி சேர்ந்து இருக்கிறது எல்லாம் செம. இந்த சண்டைதான்  பேஜார் பண்ணுது” என்றான். 

“அது ஒன்னும் அவ்ளோ கஷ்டம் இல்லை ஜீவா. உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லி தர்றேன்” என்றவள் அவனது காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள்.

“ஓஹோ… உங்களை சமாதானம் செய்றது இவ்ளோ ஈஸியா? தெரியாம போச்சே” என்றவன் அவளுக்கு முத்தமிட்டு சரியென ஒத்துக் கொண்டான். 

“எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்றவர் என் புருஷர்” என அவனது கன்னங்களை கிள்ளி  கொஞ்சினாள். 

“கொஞ்சம் யோசிச்சு பாரு மிது, நீ இந்த வீட்ல இல்லைனா யாருமில்லாத வீட்ல நான் மட்டும்  தனியா, கேட்க நாதியில்லாம… ஹ்ம்ம்… நான் சரின்னு சொல்றது இல்லை விஷயம், என்கிட்ட ஏதாவது சொல்ல, வேணும்னு கேட்க யாராவது  என் கூட இருக்கணும்ல? நீ இல்லைனா நான் அனாதை மிது” என்றான். 

“இப்படி பேசாதீங்க ஜீவா, மணி அண்ணா, பங்கஜ் ஸார், உங்க மாமா, சரோம்மாலாம் உதைக்க வருவாங்க” 

“அஃப்கோர்ஸ் அவங்க எல்லாருக்கும் என் மேல அன்பும் அக்கறையும் இருக்கு, அவங்களோட பிரையாரிட்டி லிஸ்ட்ல ஃபர்ஸ்ட்  நான் கிடையாது மிது. அவங்கள தப்பு சொல்லலை, என் அம்மாக்கு அப்புறம் என்னை ஃபர்ஸ்ட்டா நினைக்கிறது நீ மட்டும்தான்” 

“அப்படின்னு நீங்களே முடிவு பண்ணிட கூடாது. நமக்கு பசங்க வந்தா அவங்களுக்கும் நீங்கதான் ஃபர்ஸ்ட்” 

“இருக்கலாம், பசங்க வளர்ந்து பெரியவங்க ஆனதுக்கப்புறம் லவ் வரும், வேற ஒருத்தர் அந்த இடத்துக்கு வந்திடுவாங்க. கண்டிப்பா என் பசங்களுக்கும் அந்த லவ் ஃபீல் கிடைக்கணும் மிது” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவனை விட்டு தள்ளி படுத்தாள். 

அவளது திடீர் முக வாட்டத்தை கண்டு யோசித்தவன், “நான் சொன்னதை கேட்டு உன்னை அந்த இடத்துல வச்சு ஃபீல் பண்றியா?” என சரியாக கேட்டான். 

கிராமத்தில் பெண்கள் மீது அன்பு செலுத்தி வளர்ப்பது இயல்பானது, ஆனால் அத்தனை எளிதாக சுய விருப்பத்தோடு வாழ முடியாது. ஆனால் பசுபதி தன் மகள்களுக்கு  அந்த சுதந்திரத்தை கொடுத்து வளர்த்திருந்தார். எதற்காகவும் வற்புறுத்தியது இல்லை. 

தன் பெற்றோர் எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார்கள் என கணவனிடம் சொல்ல ஆரம்பித்தாள் மிது. ஏற்கனவே தெரிந்த கதைதான் என்ற போதும் அமைதியாக கேட்டுக் கொண்டான். 

“அவங்க உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டா கூட இந்த விஷயம் உனக்குள்ள உறுத்திட்டேதான் இருக்க போகுதா மிது?” என்றான். 

“தெரியலை” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. 

ஜீவா சென்று பார்க்க, அவனது மாமா இளங்கோ அவரது மனைவி மற்றும் மகளோடு வந்திருந்தார். 

திகைத்தாலும் வரவேற்றவன் சங்கடமாக அவர்களை பார்த்து நின்றான். 

“என்ன மாமா? பேய் முழி முழிக்கிறீங்க?” எனக் கேட்டாள் இளங்கோவின் மகள் ஹரிணி. 

இவர்களாக இருக்கும் என மிதுவுக்கு தெரியாதே, பேச்சு குரல்கள் வைத்து ஜீவாவின் நண்பர்கள் யாரோ என்ற எண்ணத்தோடு வெளியில் வந்தாள். 

இரவு நேரத்தில் ஒரு பெண்ணை இங்கே கண்டு விட்டு சங்கடமாகி விட்டார்கள் இளங்கோவின் மனைவியும் மகளும். 

“எதுக்கு நீ இங்க வந்திருக்க?” என மிதுவிடம் கோவப்பட்டார் இளங்கோ. 

தங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதை சொன்னான் ஜீவா. 

என்ன நினைத்து இப்படி செய்தாய், அதுவும் அவள் வீட்டிற்கு தெரியாமல் திருமணமா? உன் அப்பா உன் அம்மாவுக்கு செய்ததை இவளும் உனக்கு செய்ய போகிறாள் என சத்தம் போட்டார் இளங்கோ.

அவர் பேசுவதை கேட்டு கோவம் கொண்ட மிது அறைக்குள் சென்று விட்டாள்.

 ஜீவா வெகு நேரம் சமாதானமாக தன் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான். இளங்கோவின் மனைவிதான், கல்யாணமே முடித்துக் கொண்டான், இனி கோவப்பட்டு ஆகப் போவது என்ன? நம் மகளை இவனுக்கு செய்ய வேண்டுமென பல வருட கால ஆசையெல்லாம் இல்லையே, ஹரிணி படிக்கட்டும். ஜீவாவுக்கு நம்மை விட்டால் வேறு சொந்தமில்லை, பெரியவர்களாக வாழ்த்துவதுதான் முறை என எடுத்து சொன்னார். 

திருமணத்தை தனக்கு தெரியாமல் செய்து கொண்டான் என அடுத்த சண்டையை ஆரம்பித்தார் இளங்கோ.

“ஜீவா மாமா கூட யாராவது இருந்தே ஆகணும்னுதானே அவருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ண நினைச்சீங்க ப்பா? அந்த அக்காவும் அப்படித்தான் யோசிச்சிருப்பாங்க, உங்ககிட்ட சொன்னா உடனே கல்யாணம் நடக்க வாய்ப்பில்லைனு தெரிஞ்சுதான் அவங்களே மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அவங்க செஞ்சது கரெக்ட்தானேப்பா?” எனக் கேட்டாள் ஹரிணி. 

“படிக்கிற பொண்ணு அந்த வேலைய மட்டும் பாரு, எனக்கு சொல்ல வந்திட்டா” என மகளிடமும் கோவப்பட்டார் இளங்கோ.

“பாருடா, மாமாவை கட்டிக்க சொல்றப்போ பெரிய பொண்ணுன்னு சொன்னீங்க, இப்ப சின்ன பொண்ணாயிட்டேனா?” எனக் கேட்டாள் ஹரிணி. 

“அதான் என் வார்த்தையை துச்சம் ஆக்கிட்டானே” என்றார் இளங்கோ. 

அவரின் கையை பிடித்துக்கொண்ட ஜீவா, “அப்படிலாம் இல்லை மாமா. ஹரிணிய போய் எப்படி கட்டுவேன் மாமா? உங்களுக்கு தெரியாம  கல்யாணம் பண்ணினது என் தப்புதான், மன்னிச்சிடுங்க மாமா” என பொறுமையாக பேசி மன்னிப்பு கேட்டான். 

இளங்கோவின் மனைவியின் மகளும் அறைக்குள் சென்று மிதுவிடம் சமாதானமாக, நட்பாக பேசி அவளை வெளியில் அழைத்து வந்தனர். 

ஜீவாவுக்கு தன் மகளை கொடுக்க வேண்டும் என இளங்கோவுக்கும் பெரிய ஆசையெல்லாம் இல்லை, அவனது நலன் கருதி எடுத்த முடிவுதான். இப்போது தெளிவாக பேசுகிறான், மலர்ச்சி தெரிகிறது, சந்தோஷமாக இருந்தால் சரிதான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். மிதுவிடம்தான் இயல்பாக பேச வரவில்லை. பாலச்சந்திரனுக்கு உறவு என்பதால் அவள் மீது ஏற்கனவே உண்டாகியிருந்த வெறுப்பு உடனே எப்படி அகலும்? 

அவரை அவளிடம் பேச வேண்டும் எனவும் யாரும் வற்புறுத்தவில்லை. ஆனால் பெண்கள் இருவரும் மிதுவிடம் நன்றாக பழகினார்கள். 

திருமண விஷயமாகத்தான் பேச வந்தோம் என வெளிப்படையாகவே மிதுவிடம் சொன்னார் இளங்கோவின் மனைவி. இளங்கோ தொழிலில் முன்னேற கோபிகா எப்படியெல்லாம் உதவினார் என்பதையும் சொல்லி, அவரின் மகனை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி எதுவுமில்லை எனவும் தெளிவு படுத்தி விட்டார். 

ஹரிணியும் ‘மாமாவுக்காக சரி என்றேன், ஆனால் மிகவும் பயந்து போயிருந்தேன், இப்போதுதான் நிம்மதி, என்னை திடீர் திருமணத்திலிருந்து காப்பாற்றிய உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றாள். 

சரோஜா இருவர் சாப்பிட மட்டுமே சமைத்திருந்தார். மதுரையிலிருந்து பிரயாணம் செய்து வந்தவர்கள் மிகவும் சோர்ந்து காணப் பட்டனர். ஆகவே உதவிக்கென வந்த இளங்கோவின் மனைவியை தடுத்து விட்டு மிதுவே உணவு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள். 

மாமாவோடு அமர்ந்திருந்த ஜீவா சமையலறையையே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். 

இளங்கோ குரலை செரும, “அவளுக்கு லைட்டா உடம்பு முடியலை மாமா, இதோ வந்திடுறேன்” என சொல்லி  மிதுவிடம் சென்று விட்டான்.

மனைவியை பார்த்த இளங்கோ, “எப்படி ஓடுறான் பாரு, எங்க போய் முடிய போகுதோ!” என சொல்லி இட வலமாக தலையாட்டினார்.  

“ஒன்னும் செய்யாம இருந்தவன் பங்கஜ் ஸார்கிட்ட போக ஆரம்பிச்சிட்டான். அந்த பொண்ணுகிட்ட பேசி பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது.  இந்த விட்டுட்டு போறது ஏமாத்துறது இதெல்லாம் ஆம்பளைங்கதான் செய்வாங்க, பொம்பளைங்க நாங்க அப்படி இல்லை” என்றார் இளங்கோவின் மனைவி.