மிதுவுக்கு இடுப்பு வலி, மனமும் சரியில்லை, ஆகவே மாலையில் விரைவாகவே வீடு வந்து விட்டாள். ஏற்கனவே சரோஜா வந்து சமைத்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

“நானே சொல்லலாம் நினைச்சேன் மா, உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லியே?” எனக் கேட்டாள் மிது.

“பக்கத்துலதானே என் வீடு, என்ன கஷ்டம் கண்ணு? உடம்பு முடியாதாப்போ இது கூட செய்யலைனா எப்படி?” எனக் கேட்டார். 

“எனக்கு முடியலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள். 

“ஜீவாதான் சொல்லிச்சு, மதியம் போலவே கூப்பிட்டு ‘மிதுவுக்கு முடியலை, காலைல உங்கள்ட்ட சொல்ல மறந்திட்டேன், சாயந்தரம் வந்திடுங்க, மிதுவுக்கு பழம் நறுக்கி கொடுங்க, ஜுஸ் போட்டு தாங்க, அவ கைல கொடுத்தா போதாது, சாப்பிடாறாளான்னு  பாருங்க’ன்னு எல்லாம் சொல்லிச்சே” என்றவர், பழச்சாறை அவளிடம் நீட்டினார். 

‘எனக்கு முடியலைனு தெரியும், அதை என்கிட்டேயும் கால் பண்ணி கேட்ருக்கலாம்’ என மனதில் நினைத்துக்கொண்டே பழச்சாறை வாங்கி பருகினாள். 

“ஜீவாவுக்கு பரவாயில்லையா இப்போ? இப்படியா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல உடம்பு முடியாம போகணும்?” என்றார்  சரோஜா. 

அவனது வயிற்று தொந்தரவை கேட்கிறார் போல என நினைத்தவள், “காலைல உங்ககிட்ட சொன்னாரா? நைட்டே ஓம வாட்டர் சாப்பிட்டார், சரியாகியிருக்கும்னு நினைக்கிறேன் மா” என்றாள். 

“ஓம தண்ணி  குடிச்சா உடம்பு வலி  எப்படி சரியாகும்?” என அவர் கேட்கவும்தான் என்னவென விசாரித்தாள். 

காலையில் ஜீவா நடக்க சற்று சிரமப்பட்டதை கண்டிருந்தவர் என்னவென அவனிடம் கேட்டிருக்கிறார். அவனும் சொல்லியிருக்கிறான். 

“ரொம்ப நாளா ஆடி பழகாத உடம்பு, கொஞ்ச நாளா ஜீவா ஆடினாலும் ஆரம்பத்துல அப்படி பெருசா வேலை இல்லையாம், இப்ப ரெண்டு மூனு நாளாதானே ரெஸ்ட்டே இல்லாம வேலையாம், அதான் வலி போல. ஏன் கண்ணு உனக்கு தெரியாதா?” என அவர் கேட்க, மறுப்பாக தலையாட்டியவள் அறைக்குள் சென்று விட்டாள். 

மிதுவுக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. ஜீவாவை பற்றிய யோசனையே, கூடவே அவனது நிலை தெரியாமல் சண்டை போட்டோமே என்ற குற்ற உணர்வு வேறு. 

‘ஸாரி’ என  அவனுக்கு செய்தி அனுப்பினாள். அவன் பார்த்ததற்கான அறிகுறியே இல்லை. 

சரோஜா கிளம்புவதற்கு முன் அவளிடம் சொல்லிக் கொள்வதற்காக வந்தார். அவள் முகம் சரியில்லாததை கவனித்து விட்டு ஜீவாவுக்கு விரைவில் சரியாகி விடும் என ஆறுதலாக சொன்னார். 

“அவர் என்கிட்ட உடம்பு வலின்னு சொல்லவே இல்லை மா” என்றாள். 

“என்கிட்ட மட்டும் தானாவா சொல்லிச்சு, நான் கவனிச்சு கேட்கவும்தான் சொல்லிச்சு” என்றார் சரோஜா. 

நான் ஜீவாவை சரியாக கவனித்துக் கொள்வதில்லையா என்ற கேள்வி அவளுள் எழ, அழுகை வருவது போலானது. 

 சரோஜா சென்றதும்  கார் எடுத்துக் கொண்டு பங்கஜின் டான்ஸ் ஸ்டுடியோவுக்கு சென்றாள் மிது. 

அப்போது ஷாரா என்ற  திரைப் பட நடிகைக்கு நடன ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான் ஜீவா. 

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் ஷாரா தமிழில் இப்போதுதான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் தமிழ் நாட்டிலும் அவள் பிரபலம் ஆகியிருந்தாள். 

அந்த நேரம் பங்கஜ் இல்லை, மற்றவர்களுக்கு மிதுவை யாரென தெரியவில்லை.  ரிசப்ஷனில் தன்னை ஜீவாவின் மனைவி என சொல்லித்தான் உள்ளே வந்திருந்தாள். 

ஷாராவுக்கும் சேர்ந்து ஆடப் போகும் நபருக்கும் ஒரு நடன அசைவை  சரியாக செய்ய வரவில்லை.  ஜீவாவே  ஷாராவுடன் சேர்ந்து ஆடி புரிய வைத்துக் கொண்டிருந்தான். 

ஜீவா இருக்கை இல்லாமல் அமர்ந்திருப்பது போல கால்களை மடக்கி நிற்க,  அவனது தொடைகளில் ஏறி நின்றாள் ஷாரா. ஜீவாவின் எதிரில் மிது நிற்கவும் அவளை எதிர் பார்த்திராதவன் திகைத்து போய், ஷாராவை பற்றியிருந்த பிடியை விட்டான். நல்ல வேளையாக இன்னொருவன் அவளை விழாமல் பிடித்து விட்டான். 

 மிகவும் மோசமாக ஜீவாவை திட்டினாள் ஷாரா. ஜீவாவோ கோவப்படாமல் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான். அதை பொருட் படுத்தாமல் கோபித்துக் கொண்டு கிளம்புகிறேன் என நின்றாள் ஷாரா. இப்போது அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தான் ஜீவா.

மிதுவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அதற்கு மேல் அவனை அப்படி பார்க்கும் சக்தியற்று வெளியே சென்று விட்டாள். மீண்டும் அந்தப் பாடல் ஒலிப்பது அவளுக்கு கேட்டது. 

பத்து நிமிடங்களுக்கு பின் அவர்களை பயிற்சி செய்ய சொல்லி விட்டு வெளியே வந்தான் ஜீவா. அவனை கண்டதும் வேகமாக அவனிடம் வந்தவள் அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். 

“மிது…” என அன்பாக அழைத்து அவளை விலக்கி விடப் பார்த்தான். 

“நாம போலாம், இனிமே நீங்க இங்க வரவே வேணாம்” என அழுது கொண்டே சொன்னாள் மிது. 

வெளியிலிருந்த ஓரிருவர் ஜீவாவிடம் என்னவென சைகையால் கேட்க, ஒன்றுமில்லை என அவனும் சைகை செய்து மிதுவின் முதுகை வருடிக் கொடுத்தான். 

“தெரியாமதானே நீங்க அவளை விட்டீங்க, அதான் அடி படலையே, அப்புறம் எப்படி அந்த ராட்சசி அப்படி பேசுவா உங்களை? அவ யாரு உங்களை அப்படி பேச?” என அழுது கொண்டே கேட்டாள். 

“எப்படி வந்த நீ? கார்லயா? நீ போ, டூ மினிட்ஸ்ல நான் வர்றேன்” என்றான். 

தன்னுடனேயே அவனையும் வரச் சொன்னாள். எப்படியோ சமாதானம் செய்து அவளை அனுப்பி வைத்தவன் உள்ளே சென்று தன்  பேகை எடுத்துக் கொண்டு வேறொரு உதவியாளரிடம் சொல்லிக் கொண்டு பார்க்கிங் வந்தான். 

அங்கே பங்கஜிடம் ஏதோ கார சாரமாக பேசிக் கொண்டிருந்தாள் மிது. 

ஜீவா வேகமாக அவர்களிடம் ஓடிச் செல்ல, “மரியாதை இல்லாத இடத்துக்கு நான் இவரை அனுப்ப மாட்டேன், நல்லா பார்த்துப்பேன்னு எவ்ளோ சொன்னீங்க நீங்க? இனி ஜீவா வர மாட்டார்” என சொல்லிக் கொண்டிருந்தாள் மிது. 

பங்கஜ் பாவமாக ஜீவாவை பார்த்தார். கண்களால் அவரிடம் மன்னிப்பு கேட்டவன், “நாம கிளம்பலாம் மிது” என சொல்லி அவளின் கையை பற்றினான். 

அவனது கையை உதறி விட்டவள், “வர மாட்டேன்னு நீங்களும் இவர்கிட்ட சொல்லிட்டு வாங்க” என்றாள். 

பங்கஜிடம் நடந்ததை சுருக்கமாக சொன்னான் ஜீவா. 

“நேத்து அந்த பொண்ணுக்கு சரியா ஆட வரலைன்னு நான் திட்டிட்டேன், அதான் பதிலுக்கு அவ இப்படி பேசிட்டா போல” என்றார் பங்கஜ். 

“அதுக்கு உங்களைத்தான் அவ திட்டனும், இவரை இல்ல” என கோவமாக சொன்னாள் மிது. 

இந்த துறையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை, உனக்கு புரியாது, இவற்றை கடந்துதான் நான் இந்த உயரத்திற்கு வந்தேன், ஜீவாவும் இதையெல்லாம் சந்திக்கத்தான் வேண்டும், சொல்லப் போனால் இன்னும் நிறைய இப்படி நடக்கும், நீ இதை கண்டு கொள்ள கூடாது என அறிவுரை சொன்னார் பங்கஜ். 

“அப்படி ஒன்னும் இவர் எந்த அவமானத்தையும் பார்த்து உயர வரணும்னு இல்லை” என பங்கஜிடம் முடிவாக சொன்னாள். 

பங்கஜ் ஜீவாவை பார்க்க, அவனோ சங்கடமாக பார்த்தான். அவர் நமட்டு சிரிப்பு சிரித்தார். 

“வாங்க ஜீவா” என கட்டளையாக சொல்லி காரை நோக்கி விரைந்தாள் மிது. 

“அவ மூட் தெரியாம அட்வைஸ் பண்றீங்களே” எனக் கேட்டான் பங்கஜ். 

“மாட்டிக்கினாரு மைனரு.. ஹஹ மாட்டிக்கினாரு  இந்த மைனரு” என கிண்டல் செய்தார் அவர். 

அவன் முறைக்க, “குரங்கு மரத்துக்கு மரம் தாவுற மாதிரி குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், நாகலாந்துன்னு எப்படி கண் கட்டுவித்தை காட்டின எங்களுக்கு? செமையா கோர்த்து விட்டாரா காட்? ஆட்ரா ராமா ஆட்ரா ராமா…” என இன்னும் அவனை ஓட்டினார்.

 “நாளைக்கு பார்க்கலாம்” என்ற ஜீவா செல்ல எத்தனித்தான்.  

“சொல்லி புரிய வைடா, நல்ல பொண்ணு, கோவ பட்றாத” என்றார் பங்கஜ். 

“போங்க ஸார் ஏற்கனவே எங்களுக்கு சண்டை, இன்னிக்கு நைட்டும் நல்லா கல கலப்பா போக போகுது” என்றான்.

அவனது சிகையை கலைத்து விட்டவர் “வெல்கம் டூ பாவப்பட்ட ஹஸ்பண்டஸ் க்ளப்”  என சொல்லி சிரித்தார். 

மிது காரின் ஹாரனை அழுத்தி ஒலி எழுப்ப, “ஓடு ஓடு, இல்லைனா ரண களம் ஆகிடும்” என்றார். 

சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடந்தான் ஜீவா. 

“உன் பையனை பார்த்துக்க நல்ல பொண்ணா கிடைச்சிட்டா கோபிகா, பாவம் முழிக்கிறான் பய!” என முணு முணுத்துக்  கொண்டே சென்றார் பங்கஜ். 

ஜீவா தன் பைக்கை அங்கேயே விட்டு விட்டு காரில் ஏறிக் கொண்டான். மிதுவின் கையில் கார் வேகமெடுத்தது. 

“ஸ்லோ மிது” என்றான். 

தளர்வாக அமர்ந்திருந்தவனை இரக்கமாக பார்த்தவள் நிதானமாக காரை செலுத்திக் கொண்டே, “அவ பேசினா அப்படியே வாங்கிப்பீங்களா? திரும்ப பேசத் தெரியாதா? நைட் என்கிட்ட மட்டும் மல்லுக்கு நின்னீங்க?” எனக் கேட்டாள். 

“மத்தவங்கட்ட யோசிச்சுதான் பேசணும், உன்கிட்ட மட்டும்தான் என்ன தோணுதோ பேசலாம்” என்றான். 

“ப்ச் காரணத்த பாரு! என்ன இருந்தாலும் அவ டூ மச்!”

“ரெண்டு பேர் சேர்ந்து டான்ஸ் ஆடும் போது ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நம்பிக்கை இருக்கணும் மிது, என்னை முழுசா நம்பிதான் நின்னா அவ, நான்தான் உன்னை பார்த்த ஷாக்ல கைய விட்டேன். யாருக்கா இருந்தாலும் கோவம் வரும். நீ வெளில போனதுக்கு அப்புறம் என்கிட்ட ஸாரி கேட்டா. பெருசு பண்ணாம விடு” என்றவன் கண்களையும் மூடிக் கொள்ள, அதற்கு மேல் அவனை பேசி தொந்தரவு செய்யவில்லை அவள். 

ஏதோ ஆங்கில பாடலை ஒலிக்க விட்டாள் மிது. 

“வேணாம் மிது, ஸ்டாப் பண்ணு, அமைதி வேணும் எனக்கு” என அவன் சொல்ல, பாடலை நிறுத்தியவளுக்கு தனக்கு இவனை பார்த்துக் கொள்ள தெரியவில்லை என குற்ற உணர்வும் மன பாரமும் இன்னுமின்னும் கூடிப் போனது.