கொஞ்சும் காதல் சாரல் -20

அத்தியாயம்-20

ஜீவா பங்கஜிடம் உதவியாளராக சேர்ந்து விட்டான். சேர்வதற்கு முன் தன்னால் முடியுமா என அவனுள் பலத்த சந்தேகம். 

“நாலு வருஷம் ஆடாம போனா உங்க காலும் மூளையும் உங்க ஜீன்லேயே கலந்திருக்க டானஸை மறந்து போயிடுமா? எனக்கு தெரிஞ்ச பெஸ்ட் டான்ஸர் நீங்கதான், உங்க டான்ஸ் பத்தி ஆல்ரெடி நிறைய பேருக்கு தெரியும், கிரியேடிவிட்டிய பத்தி கூட சீக்கிரம் எல்லாரும் தெரிஞ்சுக்க போறாங்க” என வெகுவாக உற்சாக படுத்தித்தான் அவனை பங்கஜ் ஸாரிடம் அனுப்பி வைத்தாள் மிது. 

பங்கஜ் வேலை செய்த திரைப்படத்தின் பாடல் சென்னையிலேயே செட் போட்டு  படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே நடனம் அமைக்க பட்டிருக்க, ஜீவாவுக்கு பெரிய வேலைகள் இல்லை. இரண்டு நாட்களில் அவனிடமிருந்த மிரட்சி தானாக மறைந்தும் விட்டது. 

 ஒரு வாரம் நேரத்துக்கு வீட்டிற்கு வந்தவனால் அடுத்து இரவு நேர படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டதால் நடு இரவு, விடியற்காலை எனதான் வர முடிந்தது.  

மிதுவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் பிஸியாக இருப்பதும் நல்லதற்கே என தன்னை தேற்றிக் கொண்டாள். 

எந்த நேரம் அவன் வந்தாலும் இவளும் எழுந்து கொள்வாள். அவனுக்கு பருக ஏதாவது கொடுத்து, அவன் உறங்க வரும் வரை காத்திருப்பாள். 

“நீ தூங்கு” என அவன் சொன்னாலும் கேட்பதில்லை. 

“இன்னிக்கு முழுக்க நாம சேர்ந்து டைம் ஸ்பெண்ட் பண்ணவே இல்லை, சான்ஸ் கிடைக்கும் போது விட மாட்டேன்” என்பாள். அவனுக்கும் அவளின் கத கதப்பில் உறங்கியே பழகி விட்டது. 

இப்போது திரைத்துறை சார்ந்த ஏதோ விருது வழங்கும் விழாவிற்கான நடனம் அமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருந்தார் பங்கஜ். அதற்கான ஒத்திகை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. நடனம் நன்றாக ஆடத் தெரியும் என்பது வேறு, அடுத்தவர்களை ஆட வைப்பது என்பது வேறல்லவா? 

இந்த துறைக்கு ஜீவா புதியவன் என்றும் பாராமல், இவனை இந்த துறையில் ஜொலிக்க வைக்கிறேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பங்கஜ் மற்றவர்களுக்கு வேலைகளை பகிர்ந்தளிக்காமல் இவனுக்கே அதிக வேலை வைத்தார். 

மறுப்பேதும் சொல்லாமல் சொன்னதை செய்த ஜீவாவுக்கு  இடிப்பு ஒடிந்தது எனதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் நாள் முழுக்க கூட ஆடுவான், இப்போது திடீரென உடம்பு சொன்ன படி எப்படி கேட்கும்? வளைந்து கொடுக்காமல் வருத்தியது.

மிதுவிடம் எதுவும் கூறாமல் சமாளித்து வந்தான். 

அன்று சரோஜா வரவில்லை. ஏதோ வெளியூர் கோயிலில் வேண்டுதல் என கணவரோடு சென்று விட்டார். ஜீவாவை எழுப்பாமல் மிதுவே சமைத்து விட்டு அலுவலகம் சென்று விட்டாள். அவளுக்கு மாதவிடாய் வேறு. 

காரை அவளுக்கு கொடுத்து விட்டு பைக்கை அவன் உபயோகிக்கிறான். 

இரவு அவள் வீடு திரும்பிய போது ஜீவா வீட்டில் இல்லை. வர பத்து மணியாகும் என செய்தி அனுப்பியிருந்தான். உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் எனதான் முதலில் யோசித்தாள். ஜீவாவுக்கு வெளி உணவுகள் அவ்வளவாக பிடிப்பதில்லை. எளிமையாக இருந்தாலும் பரவாயில்லை, வீட்டு சாப்பாடு என்றால் அவனுக்கு போதும். 

ஆகவே அவனுக்காக தன் சோர்வையும் பொருட் படுத்தாமல் அவளே சமைக்க ஆரம்பித்தாள். மாவு தீர்ந்து போயிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். 

அலுத்துக் கொண்டே சப்பாத்தி, குருமா என செய்து முடித்தவள் குளித்து வந்து சோஃபாவில் படுத்தாள். அவளுக்கு நன்றாக பசியெடுத்தது. நேரம் ஒன்பதரை ஆகியிருக்க, இன்னும் அரை மணி நேரத்தில்தான் வந்து விடுவானே, அவனோடு சேர்ந்தே சாப்பிடலாம் என காத்திருந்தாள். 

பத்து மணிக்கு மேலாகியும் அவன் வராமல் போக அவனுக்கு அழைத்தாள். இப்போதுதான் கிளம்புகிறேன், வந்து விடுவேன் என்றான். கோவத்தில் அழைப்பை துண்டித்து விட்டாள். 

பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தவன், “ஸாரி மிது, நாளைக்கு சீக்கிரம் வர ட்ரை பண்றேன்” என்றான். 

சண்டை போடக்கூடாது என மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், “சீக்கிரம் வாங்க, பசிக்குது” என்றாள்.

“இன்னும் ஏன் சாப்பிடாமஇருக்க நீ, எட்டு மணி போல பர்கர் சாப்பிட்டேன், ஸ்டமக்  அப்செட்…” அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே கோவத்தோடு அறைக்கு சென்று விட்டாள். 

“பசிக்குதுன்னு சொல்லிட்டு படுத்தா எப்படி, வா ஃபர்ஸ்ட் சாப்பிடுவியாம், அப்புறம் என் கூட டிஷ்யூம் டிஷ்யூம் போடுவியாம்” என்றான். 

“எவ்ளோ டயர்டா இருக்கேன் தெரியுமா? அப்பவும் உங்களுக்காக சமைச்சு வச்சிட்டு வெயிட் பண்ணினேன். இன்னிக்கு சரோம்மா வரலைன்னு உங்களுக்கு தெரியாதா? காலையிலேயும் அவ்ளோ வேலை பார்த்திட்டு, இப்பவும்… ப்ச்… சாப்பிட்டேன் எனக்காக சமைக்க வேணாம்னு சொல்றதுக்கு என்ன? உங்க இஷ்டத்துக்கு லேட்டா வந்திட்டு ஏன் சாப்பிடலைன்னு கேள்வி வேற” கோவமாக சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். 

“உனக்குதான் டயர்டா? எனக்கு இல்லியா? எப்படா வீடு வந்து சேர்வோம்னு வந்தா மூஞ்ச திருப்புற நீ?” என அவனும் சத்தம் போட்டான்.

சொன்ன நேரத்துக்கு வரவில்லை, ஏற்கனவே சாப்பிட்டதை எனக்கு அறிவிக்கவில்லை, ஆகவே தவறு அவன் மீதுதான் என்ற கண்ணோட்டத்திலேயே இருந்தவளுக்கு அவனது கோவத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. 

“எனக்கும் அப்படித்தான் இருந்தது, உங்களை மாதிரி வந்த உடனே  படுக்க முடிஞ்சதா என்னால?” எனக் கேட்டாள். 

“ஏன் உன்னை யாரும் படுத்துக்க கூடாதுன்னு சொன்னாங்களா?” என அவனும் கடுப்பாக கேட்டான். 

“என்னை யோசிக்காம வெளியிலேயே சாப்பிட்டு வருவீங்கன்னு தெரியாம உங்களுக்காதத்தான் சமைச்சேன், நான் ஒரு முட்டாள்!”

“சும்மா அதையே சொல்லாத, ஒரு நாள்தானே சமைச்ச? அதுகூட நான் கேட்கல, நீயா இழுத்து போட்டுக்கிட்டு என்னை குறை சொல்லாத” என எரிச்சல் பட்டான். 

தன்னை தன் கணவன் சமாதானம் செய்ய வேண்டும் என விரும்பிய மிதுவுக்கு தொடர்ந்து அவன் தர்க்கம் செய்ததில் அழுகை வந்தது, பசி மரத்து போனது. அவனுடன் பேச விரும்பவில்லை என்பது போல போர்வையை முகம் வரை இழுத்து மூடிக் கொண்டாள். 

அவனும் அதற்கு மேல் பேசவில்லை. நன்றாக சுடு நீரில் குளித்து வந்தவனுக்கு சற்றே நிதானம் வந்தது. பசியோடிருப்பதாக அவள் சொன்னது நினைவில் வரவும் மிதுவின் பெயரை சொல்லி அழைத்தான். 

அசைவே இல்லாமல் படுத்திருந்தாள். மீண்டும் அவன் அழைத்துக் கொண்டே அவளை தொட்டு எழுப்ப, “என்னை தொடாதீங்க, பேசாம போங்க” என சத்தம் போட்டாள்.

“ஹேய் மிது…” என சமாதானமாக சொல்லிக் கொண்டே அவளின் கன்னத்தை வாஞ்சையாக பிடித்தான். 

“தொடாதீங்கன்னு சொன்னேன்!” என வார்த்தைக்கு அழுத்தம் கூட்டி சொன்னாள். 

அவளின் செயலும் சொல்லும் அவனை பலமாக காயப்படுத்த அமைதியாக வெளியேறி விட்டான். 

சற்று நேரம் கழித்து, தான் கஷ்ட பட்டு சமைத்ததை தானே மதிக்காமல் போனால் எப்படி என நினைத்து வீம்பாக அவனை அழைக்காமல் தனியே அமர்ந்து சாப்பிட்டாள். வயிறு நிறையவும் அவளுக்கும் நிதானம் வந்தது. 

வயிறு தொந்தரவு என ஏதோ சொன்னானே என நினைவு கூர்ந்தவள் அவனை எட்டிப் பார்த்தாள். படுக்கையாகவும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ள சோஃபாவை நன்றாக விரித்து கால் நீட்டி படுத்திருந்தான்.   டிவியில் ஏதோ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.  

ஓம தண்ணீர் எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள். அவன் கண்டுகொள்ளவில்லை. டீபாயில் ஓம தண்ணீரை வைத்து விட்டு படுக்கையறைக்கு சென்று விட்டாள். அதை பருகியவன் அங்கேயேதான் படுத்திருந்தான். அவனாக வருவான் என எதிர்பார்த்திருந்தவளும் உடல் சோர்வின் காரணமாக தன்னை மறந்து உறங்கி விட்டாள். 

தன்னை அழைக்க வருவாள் என எதிர் பார்த்திருந்தவன் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தான். தொடாதே என அவள் சத்தமிட்டிருந்தது அவனை பாதித்திருந்தது, அதை மீறி அவளருகில் செல்ல அவனுள் ஏதோ தடை. அவள் அவனிடம் வராமல் போக,  ஏமாற்றத்தோடு அங்கேயே உறங்கினான். 

காலையில் சரோஜா வந்த போது ஜீவாதான் கதவை திறந்து விட்டான். சரோஜாவிடம் மாற்று சாவி இருந்தாலும் இவர்கள் யாரும் வீட்டில் இருந்தால் அவர்களாக திறந்தால்தான் உள்ளே வருவார். 

 பால்கனியிலிருந்த குப்பை தொட்டியை பார்த்தவன் மனைவியின் உடல் உபாதையை தெரிந்து கொண்டான்.  தங்களுக்குள் நேற்று நடந்த சண்டையை நினைத்து வருந்தினான். 

மிது எழுவதற்கு முன்னரே தயாராகி விட்டான். அவளை சமாதானம் செய்து விட்டு கிளம்பத்தான் விழைகிறான், ஆனால் நேரமாகி விட்டது. வெறும் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்காக அவளின் உறக்கத்தை ஏன் கலைக்க வேண்டும் என நினைத்து விட்டான். 

 ‘இன்று சீக்கிரம் செல்ல வேண்டும், அவள் எழுந்ததும் சொல்லி விடுங்கள்’ என சரோஜாவிடம் சொல்லி  புறப்பட்டு விட்டான்.  

தாமதமாக விழித்த மிது, சரோஜா சொன்ன செய்தியில் அதிருப்தி அடைந்தாள்.  திருமணமான பின் அவர்களுக்குள் நடந்திருக்கும் முதல் சண்டை, எப்படி அவரால் என்னை அலட்சிய படுத்தமுடிகிறது என கோவம் கொண்டாள். 

சரோஜாவிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளும் கிளம்பி சென்று விட்டாள்.