மண்டபத்தின் முகவரிக்காக திருமண பத்திரிக்கையையும் கையோடு கொண்டு வந்திருந்தார் வினோதினி. எதேச்சையாக அதை புரட்டி பார்த்த மிதுன்யாவுக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஏனெனில் அழைப்பிதழில் அவளது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா பெயர்கள் எல்லாம் போடப் பட்டிருந்தன. அப்படியிருக்க மற்றவர்கள் ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என குழப்பம் கொண்டவள் அம்மாவிடம் கேட்கவும் செய்தாள்.
“இந்தக்கதைய ஆரம்பத்திலிருந்து சொல்லணும், சொன்னாலும் உனக்கு ஏதும் புரியாது. வீடு தேடி வந்து பத்திரிக்கை வச்சிட்டாங்க, என் கல்யாணத்தப்போ முறை செஞ்சிருக்காங்க, நாம திரும்ப செஞ்சிட்டா கடமை முடிஞ்சிடும்னுதான் நானே இன்னிக்கு இங்க வந்திருக்கேன்” என்றார் வினோதினி.
“நீ சொல்லு, புரிஞ்சுதா இல்லையான்னு நான் சொல்றேன்” என அவள் கேட்க, அழகாக பேச்சின் போக்கை மாற்றி விட்டார் அவர்.
அப்பா வழி சொந்தங்கள் நிறைய பேர் அங்கு வந்திருந்தனர். மிதுன்யா தனக்கு தெரிந்த உறவுகளிடம் புன்னகையும் சில வார்த்தைகளுமாக முடித்துக் கொண்டு கைப்பேசியோடு ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டாள்.
வினோதினி அவருக்கு தெரிந்த உறவுப் பெண்மணிகள் கூட்டத்தோடு பேசிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
திடீரென சுகந்தமான மணம் கமழ, தலை நிமிர்ந்தாள் மிதுன்யா. அவளை கடந்து சென்ற ஆடவனிடமிருந்துதான் அந்த வாசம். உபயம் வாசனை திரவியம். கைப்பேசியை பார்த்துக் கொண்டே அவள் அமர்ந்திருந்த அதே வரிசையில் கடைசி இருக்கையில் அமர்ந்தான் அவன்.
இருவருக்கும் இடையில் இரண்டு காலி நாற்காலிகள். இன்னும் கைப்பேசியிலேயே கவனம் வைத்திருந்தவனை பார்த்து விட்டு இவள்தான் ‘இவனா!’ என அதிர்ந்து பார்த்தாள். ஆமாம், அவன் ஜீவாவேதான்.
தன்னை யாரோ பார்ப்பது உணர்ந்து தலை நிமிர்ந்தவன், “ஹேய் நீ அந்த பூனைக்குட்டிக்கு பயந்து போய் மயக்கம் போட்ட வீரப் பொண்ணுதானே?” எனக் கேட்டான்.
“அது பூனைன்னு அப்போ எனக்கு தெரியாது” சின்ன குரலில் சொன்னாள்.
சரி சரி என்பது தலையாட்டிக் கொண்டான்.
“நீங்க எப்படி இங்க, மேரேஜ் அட்டெண்ட் பண்ண வந்திருக்கீங்களா?” எனக் கேட்டாள்.
“இல்லியே, நல்ல பசி, இந்த வெட்டிங் ஹால் போனா பிரேக் ஃபாஸ்ட் முடிச்சிக்கலாமான்னு வந்தேன்” என நமட்டு சிரிப்புடன் சொன்னான்.
“ஓஹோ, நான் கூட நாதஸ்வரம் வாசிக்க வந்தவரோன்னு தப்பா நினைச்சிட்டேன்” என்றாள் அவளும்.
“நீ தில்லானா ஆடுறதா இருந்தா வாசிக்க நான் ரெடி… ஆடுறியா?” என கண்களும் கன்னங்களும் சிரிக்க கேட்டான்.
நெற்றி சுருக்கி யோசித்தவள், “கல்ச்சுரஸ்ல நான் ஆடினத பார்த்தீங்களா?” என பார்த்திருக்க கூடாதே எனும் அவஸ்தையோடு கேட்டாள்.
“அப்படியா! ஆடினியா நீ?”அவன் கேட்ட விதமே பார்த்திருக்கிறான் என்பதை அவளுக்கு தெரிய வைத்தது.
உடனே வெட்கப்பட்டு கண்களை மூடிக் கொண்டவள், பின் அவனை சங்கடமாக பார்த்தாள்.
“அவ்ளோ மோசமில்லை, ஃபர்ஸ்ட்டைம் ஸ்டேஜ் ஏறினியா? போக போக சரியாகிடும்” என்றான்.
“ஸ்கூல்ல சில டைம் ஸ்டேஜ் ஏறியிருக்கிறேன். ஆனா அன்னிக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிட்டேன்”
“கீழ வந்து கூட யாரையோ தேடினதானே?” என அவன் கேட்கவுமே அவளுக்கு எங்கேயாவது ஓடி விடலாம் போலிருந்தது.
இரு கைகளையும் மேல் உயர்த்தி, “கூல் கூல், அதெல்லாம் நான் பார்க்கல” என்றான்.
தன்னை சமாளித்து நேராக அமர்ந்தவள், “உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல நினைச்சி தேடினேன், அவ்ளோதான்” என்றாள்.
‘ அப்படியா அவ்ளோதானா?’ என கேட்பது போலவே வில்லங்கமாக தலையாட்டியவன், “யார் பக்க சொந்தம்?” எனக் கேட்டான்.
அவள் புரியாமல் பார்க்க, “அட… பொண்ணு வீட்டு சைடா, பையன் வீட்டு சைடா?” என விளக்கமாக கேட்டான்.
பெண்ணின் தந்தை தனக்கு மாமா என அவள் கூற, “ஹேய் நாம ரிலேட்டிவ்ஸ்” என மலர்ந்து சிரித்தான்.
“அப்படியா?” என அவளும் அதிசயித்தாள்.
“சும்மா இல்லை, பொண்ணோட அப்பா எனக்கு பெரியப்பா” என்றவன் இரண்டு நாற்காலி இடைவெளியை ஒரு நாற்காலி இடைவெளியாக குறைத்து, “நீ எனக்கு முறை பொண்ணு” என்றான்.
“ஆனா உங்களை யாருன்னு எனக்கு தெரியலை”
தோள்களை குலுக்கியவன், தனக்கும் தெரியவில்லை என்பது போல சொன்னான்.
விஷேஷவீட்டிற்குவருவதால் பிரத்யேக அலங்காரத்தில் பாந்தமான பாவாடை தாவணியில் இருந்த மிதுன்யா தன்னெதிரில் இருக்க வாலிபனான ஜீவநந்தன் அவளை எல்லைகள் மீறாமல் ரசித்தான்.
தன்னை ஈர்ப்பவனும் தன்னால் ஈர்க்கப் படுகிறான் என்பதில் அவளும் கர்வம் கொண்டாள்.
“அடிக்கடிவருவேன், என் அம்மா அங்கதான் இருக்காங்க” என்றான்.
“அப்புறம் ஏன் மதுரைல படிக்கிறீங்க?”
“எல்லாமே இப்பவே சொல்லியாகணுமா?” என அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு ஏதோ அழைப்பு வந்தது. பேசியவன் இப்போது கிளம்பினால்தான் போக சரியாக இருக்கும் என சொல்லி எழுந்து கொண்டான்.
ஊருக்கு போனதும் தனக்கு தகவல் சொல்லும் படி கேட்டுக் கொண்டவளிடம் சரியென தலையசைத்து விடைபெற்று மனப் பெண்ணின் தந்தையிடம் சென்று சொல்லிக் கொண்டான்.
பெண்ணின் தந்தை அவனது கையை பிடித்துக்கொண்டு பாசமாக பேசினார், வாயில் வரை சென்று வழியனுப்பினார்.
வினோதியின் அருகிலிருந்த உறவுக்கார பெண் ஜீவாவை சுட்டிக் காட்டி அவரது காதில் ரகசியமாக ஏதோ சொன்னார். ஆர்வமாக கேட்டுக் கொண்டார் வினோதினி.
‘எப்படி போறீங்க, பஸ்லயா?’ என ஜீவாவின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு உரையாடலை தொடங்கியிருந்தாள் மிதுன்யா.