அடுத்த இரண்டு நாட்களும் கலைவிழா தொடர்ந்து நடைபெற்றாலும் ஜீவநந்தனைமிதுன்யாவால் காண முடியவில்லை.
அவள் குறு நாடகம் ஒன்றில் பங்கேற்று இருந்தாள். இடையில் தில்லானா தில்லானா பாடலுக்கு முப்பது நொடிகள் ஆடுவது போல கூட ஒருகாட்சி வரும். கையில் அடி பட்டிருந்ததாலும் கூட்டத்தை கண்டு அச்சம் எழுந்ததாலும் நடன அசைவுகளை தாளத்திற்குஏற்ப சரியாக ஆடாமல் சொதப்பி விட்டாள்.
நல்ல வேளை இதை அவன் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டாள்.
மேடையிலிருந்து இறங்கிய பின் அடிக்கடி அவனை தேடினாள். ஆனால் அவளது பார்வையில் அவன் விழவே இல்லை.
அவளுக்கு மனதில் ஒரு பக்கம் வருத்தம் எழுந்தாலும் இன்னொரு பக்கம் நிம்மதியாகவும் இருந்தது.
கலைவிழா முடிந்து சென்னையிலிருக்கும் அவளது கல்லூரிக்கு திரும்பி விட்டாள். நினைவின் ஒரு பகுதியில் சிறு புள்ளியாக அந்த ஆட்டக்காரனும் தங்கி விட்டான். அவளே மறக்க நினைத்தாலும் அவன் ஆடிய பாடல்களை கேட்க அல்லது பார்க்க நேரிட்ட போதெல்லாம் நினைவுக்கு வந்தான்.
அவனைபற்றிபெரிதாகஒன்றும் தெரியவில்லை என்ற போதும் அவன் லேசாக அவளின் கவனத்தை சிதற வைப்பதை உணர்ந்தாள். இதுதவறுஎனகுற்றஉணர்வுவேறு. சமாளிக்கவோகையாளவோதெரியவில்லை.
இதுசரியாகவராதுஎன அந்த வார இறுதியில் ஊருக்கு கிளம்பி விட்டாள்.
தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் கிராமம்தான் அவளது ஊர். தென்னை மற்றும் நெல் விவசாயம்தான் அவர்களின் பாரம்பரிய தொழில். ஏக்கர் கணக்கில் தோட்டம், தோப்பு, வயல் சொந்தமாகஅரிசிஆலை என வளமான குடும்பம்.
அவளுடையதாத்தாசெல்வநாயகம்தான்ஊர்மணியக்காரர். பாட்டிமங்கம்மா, அப்பா பசுபதி, அம்மா வினோதினி, அக்கா லாவண்யா என அளவான அழகான குடும்பம்.
“உனக்குசண்டைபிடிக்கதாத்தாஇல்லியாவீட்ல, வந்ததும்வராததுமா என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க” என சொல்லிக் கொண்டே பாட்டியை கட்டிப் பிடித்து கொஞ்சி விட்டு உள்ளே சென்றாள்.
காலை பலகாரமாக பனியாரம் செய்து கொண்டிருந்தார் வினோதினி. மகள் வந்ததை கவனிக்காமல் சமைப்பதில் அத்தனை மும்முரம்.
சத்தம் செய்யாமல் பின்பக்கம் சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்த மிதுன்யா பனியாரங்களை தட்டில் அடுக்கிக் கொண்டு சட்னியில் தோய்த்து ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஏய் கழுதை! எப்படி வந்த?” விழிகள் விரித்து சந்தோஷமாக கேட்டார் வினோதினி.
“என்னை சென்னைல ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட விட்டு நீங்கல்லாம் இங்க வகை வகையா ஆக்கி திங்கிறதா சேதி கிடைச்சது, உடனே புறப்பட்டு வந்திட்டேன்” சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் மிதுன்யா.
“நானா போக சொன்னேன், நீதான் பெரிய இவளாட்டம் அங்க போன. பாரு நல்ல சாப்பாடு இல்லாம எப்படி கஷ்ட படுற” என வாஞ்சையாக சொன்னார் வினோதினி.
“அடங்காப்பிடாரி, அறுந்த ஆட்டு வாலுன்னு திட்டிட்டே இருப்பியே, அப்படிலாம் நான் இல்ல, உன் சின்னப் பொண்ணு ரொம்ப ரொம்ப பாவம்னு இப்பவாவது ஒத்துக்கம்மா” என்றாள் மிதுன்யா.
“ஆமாமாம் ரொம்ப பாவம்தான் நீ, மதுரைக்கு கல்ச்சுரல்ஸ் போறதை அப்பாகிட்ட மட்டும் ரகசியமா சொல்லிட்டு அம்மாவை ஏமாத்திட்டு நல்லா ஜாலியா இருந்திட்டு வந்து, இப்போ அப்பாவி வேஷம் போடுறியா?” என கேட்டுக் கொண்டே வந்தாள் லாவண்யா.
உண்மையா என்பது போல வினோதினி முறைக்க, தன்னை போட்டுக் கொடுத்த அக்காவை முறைத்தாள் மிதுன்யா.
“ஒன்னு அவளை சென்னைக்கு அனுப்பியிருக்கே கூடாது, அனுப்பி வச்சிட்டு இத செய்யாத அத செய்யாதன்னு கண்டிஷன் போடுறது ரொம்ப தப்பும்மா. காலேஜ்ல பாதுகாப்பா கூட்டிட்டு போயி பத்திரமா அழைச்சிட்டு வந்திட்டாங்கல்ல, அப்புறம் என்ன? ரெண்டு நாள்ல கிளம்பிடுவா, உன் ஆசை மகளை நல்லா கவனிச்சு அனுப்பு” என தங்கையை மாட்டி விட்ட லாவண்யாவே ஆதரவாகவும் பேசினாள்.
லாவண்யாவும் பொறியியல் பட்டதாரிதான். தஞ்சைக்கு அருகிலிருக்கும் கல்லூரியிலேயே படித்து முடித்திருந்தாள். வேலைக்கெல்லாம் வெளியூருக்கு அனுப்ப மாட்டேன் என அவளது அம்மா சொல்ல, அவளுக்குமே அதில் பெரிய ஆர்வம் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே இருக்கிறாள்.
உடனே திருமணம் வேண்டாம் என அவள் சொல்லியிருந்தாள். அவளது ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதால் இப்போது பார்க்க ஆரம்பித்தால்தான் நமக்கு பிடித்த மாதிரி பார்க்க முடியும், தாமதமாக பார்க்க தொடங்கினால் சரியான வரன் அமையாமல் காலம் கடந்து விடும் அல்லது ஏதாவது விஷயத்தில் சமரசம் செய்துதான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றெல்லாம் வீட்டு பெரியவர்களுக்கு பயம். ஆதலால் கடந்த மாதமே அவளது ஜாதகத்தை வெளியில் எடுத்து விட்டனர்.
மிதுன்யாவுக்கு படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என மிகுந்த ஆசை. சென்னையில்தான் படிப்பேன் என அடம் செய்து அப்பாவை தவிர மற்றவர்களின் எதிர்ப்பை சமாளித்துதான் படிக்க சென்றாள்.
தாத்தா தனது பேத்திகளின் மீது அன்பானவர் என்றாலும் மிகவும் கண்டிப்பானவர்.
இன்னுமே அப்பாவின் வார்த்தையை மீறாமல் நடந்து கொள்பவர் பசுபதி. பெண்ணை சென்னைக்கு அனுப்புவதற்கு கூட அப்பாவின் வாயால் சரி என்ற வார்த்தையை வாங்கி விட்டுத்தான் அனுப்பினார்.
“நம்ம குடும்பம் பத்தி நல்லா தெரியும் உனக்கு, அவ்ளோ தூரம் போறவ அடக்க ஒடுக்கமா படிச்சிட்டு நல்ல படியா வந்து சேரணும். படிப்பு ஒன்னுலதான் கவனம் இருக்கணும், என்ன சொல்றேன்னு புரியுதா?” என மகள் சென்னைக்கு செல்வதற்கு முன் கண்களை பெரிதாக்கிக் கொண்டு அறிவுறுத்தினார் வினோதினி.
“சும்மா எதையாவது சொல்லி மிரட்டாத” என மனைவியை அடக்கி, “நீ நல்ல படியா போயிட்டு வாடா. அப்பாவுக்கு ஒன்னுதான் முக்கியம், படிக்கிறேன் படிக்கிறேன்னு உடம்ப கெடுத்துக்க கூடாது. நல்லா சாப்பிட்டு நல்லா ஆரோக்கியமா இருக்கணும்” என்றார் பசுபதி.
பெண்கள் இருவருமே அப்பாவின் செல்லம். அதிலும் மிதுன்யாவுக்கு அப்பா என்றால் உயிர், அவரின் வார்த்தையை மட்டுமில்லை கண் பார்வையை கூட மீறி நடக்க மாட்டாள்.
அப்படிப்பட்டவள்தான் தன் மனம் அலை பாய்வதை கண்டு அஞ்சி, தன்னை நிலையாக இருக்க வைக்க வீட்டை தேடி வந்திருக்கிறாள்.
தங்கையின் வரவை கைப்பேசி வாயிலாக தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சொன்னாள் லாவண்யா. சற்று நேரத்தில் அவர்களும் வந்து விட்டனர். எதிர்பாராத அவளின் வரவை கண்டு அனைவருக்குமே ஆனந்த அதிர்ச்சிதான்.
இனி இப்படி தகவல் சொல்லாமல் வரக்கூடாது, பாதுகாப்பு இல்லை என தாத்தாவும் அப்பாவும் அறிவுரை சொல்ல, நன்றாக தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொண்டாள்.
அம்மாவின் கை சமையல், அப்பாவின் செல்லக் கொஞ்சல்கள், அக்காவுடன் சின்ன சின்ன சண்டைகள், பாட்டியோடுவம்பு, தாத்தாவின் கை பிடித்துக் கொண்டு தோட்டம்,தோப்புஎனநடப்பது என அத்தனை மகிழ்ச்சியாக இருந்தாள் மிதுன்யா. அந்த ஆட்டக்காரனின் நினைவு வரவே இல்லை.
ஆமாம், ‘ஹப்பா அவன் ஞாபகமே வரலை!’ என அவனை பற்றி நினைத்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அவள் அளவில் தன் மனதில் எந்த கல்மிஷமும் இல்லை என நம்பினாள்.
இரவில் உறங்குவதற்கு முன், “நாளைக்கு தஞ்சாவூர் வரைக்கும் போகணும், சொந்தத்துல ஒரு கல்யாணம். லாவண்யா துணைக்கு வர்றேன்னு சொல்லியிருந்தா, அவளுக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சுடி, நீ வர்றியா?” மகள் மறுத்து விடக்கூடாதே என நயமாக கேட்டார் வினோதினி.
“ரெண்டு நாள் லீவுக்கு வந்த என்னை ஏம்மா போட்டு அலைக்கழிக்கிற?” என சலித்தாள் மிதுன்யா.
வந்துதான் ஆக வேண்டும் என அதட்டாமல் வழக்கத்துக்கு மாறாக, ‘சரி போ’ என சொல்லி சென்ற அம்மாவை பார்க்க அவளுக்கு பாவமாக இருக்கவும் அவருடன் வருவதாக ஒத்துக் கொண்டாள்.
மணப் பெண்ணின் வீட்டினருக்குத்தான் இவர்கள் சொந்தம். பெண்ணின் தந்தை மிதுன்யாவுக்கு ஒன்று விட்ட மாமா முறையாகிறது. சிறு வயதில் பார்த்திருப்பதாக இவளுக்கு நினைவு, மற்ற படி அம்மாவுக்கு துணை என்ற அளவில் மட்டுமே வந்திருந்தாள்.
நெருங்கிய சொந்தமில்லை, அப்படியாக இருந்தால் அப்பா, தாத்தா எல்லாம் வந்திருப்பார்களே என நினைத்துக் கொண்டாள்.
வீட்டில் கார் இருக்கிறது, மிதுன்யாவே ஓட்டிக் கொண்டு வந்திருந்தாள். பசுபதிதான் மகள்களுக்கு எல்லாமே சொல்லி கொடுத்திருந்தார், டிராக்டர் கூட ஓட்டுவாள் இவள்.