கொஞ்சும் காதல் சாரல் 19 5707 கொஞ்சும் காதல் சாரல் -19 அத்தியாயம் -19 காணொளி அழைப்பில் தங்கையின் கோலத்தை கண்டு விட்டு முதலில் அதிர்ந்த லாவண்யா பின் அவளாகவே, “எங்க உன் ஃபிரெண்ட் யார் வீட்டுக்கு வந்திருக்கியா?” எனக் கேட்டாள். அதையே பற்றிக் கொண்ட மிது, ஆம் என சொல்லி தீபாவின் வீடுதான் என மேற்கொண்டும் பொய் சொன்னாள். வாசுகி சென்னைக்கு வந்திருக்கிறாள், மூவரும் ஒன்றாக சந்திக்க திட்டமிட்டு இங்கு இருக்கிறோம். வந்த இடத்தில்தான் இப்படி விளையாடுகிறோம் என்றாள். அவர்களை எங்கே என லாவண்யா கேட்கவும் குளிக்க சென்று விட்டனர் என சமாளித்தாள். “படிச்சப்பதான் இப்படி கோமாளிதனமா இருந்தீங்கன்னா, வேலைக்கு போயும் திருந்தலையே, என்ன பொண்ணுங்களோ!” என அலுத்தாள் லாவண்யா. இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த பசுபதி, “விடு பாப்பா, அவ இன்னும் குழந்தைதான், தினம் கம்ப்யூட்டரையே பார்த்திட்டு இருக்க முடியுமா? ஈரத்துல இருக்கா பாரு, நீ அப்புறமா பேசு” என்றார். லாவண்யாவும் அழைப்பை துண்டித்து விட, அப்பாவின் பேச்சை கேட்டிருந்த மிதுவுக்கு மனம் குறு குறுப்பாக இருந்தது. சோர்வாக தரையில் அமர்ந்து விட்டாள். நடந்த பேச்சுவார்த்தை எதுவும் தெரியாமல் அவளிடம் வந்த ஜீவா, பழைய படி சீண்டத் தொடங்க, கலங்கிய கண்களோடு அவனை பார்த்தாள். பதறிப் போனவன் என்னவென கேட்டான். அவள் சொல்லவும் ஆறுதலாக அணைத்துக் கொண்டவன், “எப்படி சரி பண்ணலாம்னுதான் யோசிக்கணும் மிதும்மா, இப்படி அப்செட் ஆக கூடாது” என்றான். “அக்காவை கூட அன்பு மாமாக்கு கட்டி தர முதல்ல வீட்ல சம்மதிக்கல. அப்புறம் அவரே வந்து பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டார். அக்காவை ரொம்ப நல்லா வச்சிக்கிறார், இப்ப வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். நம்மளையும் ஸ்டார்டிங்ல அக்செப்ட் பண்ணாட்டா கூட நீங்க என்னை நல்லா வச்சிக்கிறது தெரிஞ்சா போக போக ஏத்துப்பாங்கதானே ஜீவா?” எனக் கேட்டாள். “நான் எங்க உன்னை பார்த்துக்கிறேன், நீதான் என்னை பார்த்துக்கிற” “அப்படியா?” “அப்படியேதான், ஆமாம் உன் மொரட்டு பீஸ் மாமாவை முதல்ல ஏன் வேணாம்னு சொன்னாங்க?” என அவன் கேட்கவும் திகைப்பாக அவனை பார்த்தாள். “இதுக்கு ஏன் இவ்ளோ ஷாக்?” என அவன் கேட்க, தன் தலையிலேயே மானசீகமாக கொட்டிக் கொண்டாள். அவளது பார்வையில் குழம்பியவன் துருவி துருவி விசாரித்தான். ஈரத்தில் குளிர் எடுப்பதாக சொல்லி உள்ளே சென்று விட்டாள் அவள். என்னவோ இருக்கிறது, தன்னிடம் மறைக்கிறாள் என்பதை கண்டு பிடித்து விட்டான். மிது குளியலறையில் இருக்க கதவை தட்டினான். அவள் உள்ளிருந்த படியே என்னவென கேட்டாள். “என்கிட்ட மறைக்காம எல்லாத்தையும் சொல்லணுங்கிற மனநிலையோட நல்லா குளிச்சிட்டு வா” என்றான். “அதை பத்தி நாம இன்னொரு நாள் பேசலாம் ஜீவா” என்றாள். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னிடம் இவள் மறைக்க காரணமே இல்லை, ஒரு வேளை எந்த வகையிலாவது தான் இதில் சம்பந்த பட்டிருக்கிறேனா என அவனுள் சந்தேகம் எழ, இவளை விடுவதில்லை என முடிவு செய்து விட்டான். கதவை வேகமாக தட்டினான், தட்டிக் கொண்டே இருந்தான். ஷவர் தன் மேல் விழ, அந்த உணர்வே இல்லாமல் எப்படி இவனை சமாளிக்க போகிறோம் என்ற கவலையில் சுவரில் சாய்ந்து கொண்டாள். “மிது… மிது…” என அவளை அழைத்துக் கொண்டே தட்டினான். எரிச்சல் அடைந்தவள் கதவை திறந்து, முகத்தை மட்டும் வெளியில் நீட்டி, “குளிக்க விட மாட்டீங்களா ஜீவா? வெளில வந்தும் பேசிக்கலாம்தானே?” என கோவமாக கேட்டாள். “உனக்கு டைம் தந்தா என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம்னு யோசிச்சிடுவ, எனக்கு உண்மை தெரியணும்” என உறுதியான குரலில் சொன்னான். எப்படியும் ஜீவாவிடம் அவள் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய படி மாறி வருகிறான், இந்த வேளையில் சொல்லப் போகும் உண்மை அவனை பாதிக்க செய்யுமோ என பயந்தாள். வேலை பற்றி முடிவு செய்து விட்டாலும் இடையில் நடனம் ஆடாமலே இருந்ததால் தன்னால் நடனத் துறையில் சமாளிக்க முடியுமா என சந்தேகத்தில் வேறு இருக்கிறான். இந்த நேரம் இந்த உண்மை அவனுக்கு தேவையில்லை என நினைத்தாள். “இல்லை ஜீவா, நான் உங்ககிட்ட பொய் சொல்ல மாட்டேன், ஆனா உண்மையையும் இப்ப சொல்ல முடியாது. எப்ப சொல்லணுமோ அப்ப உங்ககிட்ட கண்டிப்பா சொல்வேன்” என்றாள். என்னவாக இருக்குமோ என்ற ஆவலை விட, அப்படி என்ன பயங்கர உண்மையோ என்ற பயம் அவனுக்கு. கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டான். அவளது கண்களை சந்தித்து கோவமாக, “இப்ப என்னன்னு என்கிட்ட சொல்லலை… உன்னை வெளியிலேயே விட மாட்டேன்” என இரைந்தான். அவனை கோவமும் சங்கடமுமாக பார்த்தவள் வேகமாக துண்டை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி நின்றாள். எதற்கு உள்ளே வந்தோம் என்பதே அவனுக்கு மறந்து விட்டது. ஈர உடையிலிருந்த போதும் அவனுள் அப்படியொரு உஷ்ணம். சமாளிக்க இயலாமல் ஷவரின் கீழே நின்றான். அந்த சில்லென்ற நீரோ அவனை ஆற்றுப் படுத்துவதற்கு பதிலாக தூண்டி விட்டது. வெளியேறப் போனவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினான். இருவரின் பார்வையும் மோதிக் கொண்டன. பிரிவில் துடிக்க துடிக்க வலியை அனுபவித்து மீண்டும் இணைந்தவர்கள். அடுத்தவர் நினைவுகள் இல்லாமல் கழிந்த பொழுதுகளே இல்லை, என்ன மாயமாவது நடந்து இணைந்து விட மாட்டோமா என எத்தனை ஏங்கியிருக்கிறார்கள்? ஒருவர் மீது மற்றவருக்கான ஈர்ப்புக்கும் பஞ்சமேது? இப்போது கணவன் மனைவி என்கிற உரிமை வேறு! எந்த கட்டுப்பாடுகளையும் அவர்களின் மனம் விரும்பவில்லை. அந்த நேரம் என்ன வேண்டுமென அவர்களுக்கு தோன்றியதோ அதை தடுக்க எந்த யோசனையுமில்லை. தழுவிக் கொண்டவர்களின் மேல் குளியலறை அருவி கொட்டித் தீர்த்தது. அடுத்து வந்த சில மணி நேரங்கள் அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிய நினைவுகளாக தங்கிப் போயின. இருள் பரவத் துவங்கியிருக்க, ஜீவாவின் மனம் அமைதியாக இருந்தது. மிது அவனது வாழ்க்கைக்குள் வந்து விட்ட போதே பிடிப்பு வந்து விட்டதுதான், ஆனாலும் சந்தேகம், குழப்பம், பயம், இழப்பின் வேதனை, குற்ற உணர்வு என ஏதேதோ உணர்வுகளால் சூறையாட பட்டுக் கொண்டே இருந்தான். மனம் நிறைந்தவளுடன் கூடிய தாம்பத்யம் ஆர்ப்பரிக்கும் கடல் போல இருந்த அவனது மனதை ஏகாந்த காட்டிலிருக்கும் பூக்குளம் போலாக மாற்றியிருந்தது. அத்தனை பெரிய படுக்கையில் இடமே இல்லாதது போல அவனது மார்பில் ஒன்றிக் கொண்டு படுத்திருந்தவளை ஒரு கையால் அணைத்திருந்தவன் அந்த அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான். “ஜீவா…” என சிணுங்கினாள். அவளை இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டவன் கண்களை மூடிக் கொண்டான். உடல் அயர்வில் உறங்கியும் போனான். தனக்கு நன்றாக பசி எடுப்பதை உணர்ந்து ஜீவாவுக்கும் அப்படித்தான் பசிக்கும் என்ற நினைவில் எழுந்து கொண்டாள் மிது. அவள் சமைத்து முடித்த போது அவனும் வந்து விட்டான். குளித்து விட்டு, கூந்தலை க்ளிப் செய்து, முட்டி தொட்ட கை இல்லாத கவுன் ஒன்றை அணிந்து கொண்டிருந்தவளை ஆசையாக பார்த்துக் கொண்டே வந்தான். அவனும் குளித்திருக்கிறான் போலும், டிராக் பேன்ட்டும் வெற்றுத் தோள்களை சுற்றி துவாலை ஒன்றுமாக இருந்தான். அவனை கண்டவள் அவனது பார்வையை தவிர்த்து பாத்திரங்களை ஒழித்து போட்டாள், இதழ்களோ சிறு வெட்கப் புன்னகையை தாங்கியிருந்தன. அவளை மென்மையாக அணைத்து அவளது முகத்தை முகத்தால் உரசியவன், “சொர்க்கம் மிதுவிலே சொக்கும் அழகிலே…” என முணு முணுப்பாக பாடினான். அவள் அவனை ரசிக்க, “மிது தரும் சுகம் சுகம்… எதில் வரும் நிதம் நிதம்…” என தொடர்ந்தான். “போதும் போதும்” என்றாள். “வாடின செடிக்கெல்லாம் தண்ணி விட கூப்பிட்டது நீதானே? அதுக்கு தேங்க்ஸ்” என்றான். “செடிக்கு தண்ணி விடறேன்னு என்னை நனைச்சது நீங்கதான்” என்றாள். “ஹ்ம்ம்… நான் மட்டும் தானா நனைஞ்சு போனேனா?” “சின்ன விளையாட்ட அங்க இங்க தொட்டு திசை திருப்பினது நீங்கதான்” “கீழ விழுந்தவளை தூக்கி விட கை கொடுத்து ஹெல்ப் பண்ணினவனை நீ என்ன செஞ்ச?” “நான் கையாலதான் மண் அள்ளி பூசி விட்டேன், நீங்கதான்…” அவன் செய்த செயல்களின் நினைவில் அதை வாய் விட்டு சொல்லவும் வெட்கப்பட்டு பாதியில் நிறுத்தினாள். “நான்தான்…” குறும்பாக கேட்டான். “நீங்கதான்… எல்லாமே நீங்கதான்” “நீ எதுவுமே செய்யலையா?” கண்கள் சிமிட்டி கேட்டான், பார்வையோ அவர்களுக்கு மட்டுமேயான ரகசிய கதையை பேசியது. ஆசையாக பார்த்துக் கொண்டனர், திடீரென அவள் தும்மினாள், அவனும் அடுக்குத் தும்மல் போட்டான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள். “பசிக்குது ஜீவா, சாப்பிடலாம்” என்றாள். அவளை விட்டு விலகியவன், “உனக்கு வருத்தம் இல்லியே? நீ ஓகேதானே?” எனக் கேட்டான். “நம்மள மீறி நடந்ததுக்கு நாம என்ன செய்றது? ரொம்ப யோசிக்காம வாங்க” என்றவள் சாப்பாடு இருந்த பாத்திரங்களை உணவு மேசைக்கு கொண்டு சென்றாள். அவனும் உதவினான். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், “இப்ப சொல்லு மிது, என்கிட்ட எதையும் மறைக்காத” என்றான். அவள் தயங்க, “எதுக்கு பயப்படற, நீ நினைக்கிற அளவுக்கு வீக் இல்லை நான், நீ கூட இருந்தா எதையும் ஈஸியா எடுத்துப்பேன். ப்ளீஸ் சொல்லு மிது” என்றான். இவன் விட மாட்டான் என்பது புரிந்து, அன்பு யார் என்பதை சொல்லி விட்டாள். அவனுக்கு அதிர்ச்சிதான். அவள் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு இன்னும் சந்தேகம் கேட்டு தெளிந்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “அவர்… நேத்து கடைல பார்த்தவர் என் அண்ணனா!” என நம்ப இயலாமல் கேட்டான். “ஹ்ம்ம்… உறவு முறைல அப்படித்தான் வரும். ஆனா அவர் உங்களை தம்பியா ஏத்துக்க மாட்டார் ஜீவா” என்றவள் இவனை சேர்த்து கொண்டதற்காகவே சங்கரனை ஒதுக்கி வைத்து விட்ட கதையை கூறினாள். கோபிகா இறந்த விஷயம் தாமதமாகத்தான் சங்கரனுக்கு தெரிய வந்திருக்கிறது. துக்கம் விசாரிக்க அவர் சென்னை வந்த போது ஜீவா வேறெங்கோ சென்றிருந்தான். சரோஜா மூலம் இவனது கைப்பேசி எண் பெற்று அழைத்தும் பார்த்திருக்கிறார், அவன்தான் யாரின் அழைப்புகளையும் அந்த சமயத்தில் எடுப்பது இல்லையே. ஜீவா வீடு வந்த பின் ‘உன் பெரியப்பா வந்து சென்றார், உனக்கு கைப்பேசியில் இரண்டு முறை அவர் அழைப்பு விடுத்தும் நீ எடுக்கவே இல்லை’ என சரோஜா சொல்லித்தான் அவனுக்கு தெரியும். அதை மிதுவிடம் பகிர்ந்தவன், “நல்ல மனுஷர் பெரியப்பா, அந்த அன்பு அண்ணாதான் ரொம்ப மோசம், ஆனா பெரியப்பா திரும்ப எனக்கு கூப்பிடவே இல்லை” என்றான். “அவரும் ரொம்ப வீம்பு பிடிச்சவர் போல, அவர் கால் பண்ணினப்ப நீங்க அட்டெண்ட் பண்ணாததால திரும்பவும் அவர் உங்களுக்கு கால் பண்ணாம போயிருக்கலாம்” என்றாள். “அப்படியா?” என்றவன் கைப்பேசி எடுத்து ஆராய்ந்து பார்த்தான். பெரியப்பாவின் எண்ணை அவன் சேமித்து வைத்திருக்கவே இல்லை. “என் பெரியப்பா நம்பர் கிடைக்குமா மிது?” “எதுக்கு?” “அவர்கிட்ட பேசத்தான். அவர் கூப்பிட்டு நான் எடுக்கல, தப்பில்ல?” “அது நடந்து ரொம்ப மாசம் ஆகியிருக்குமே?” “எப்ப நடந்தாலும் தப்பு தப்புதான், காலம் கடந்தாலும் தப்பை சரி செய்யணும்” “அவர் நம்பருக்கு நான் எங்க போவேன், ஊருக்கு போறப்ப கிடைக்குதான்னு ட்ரை பண்றேன்” என்றாள். “ம்ம்ம்… என் அண்ணாத்தே பத்தி சொல்லு, அவர் அம்மா… அவங்க எப்படி?” “அவருக்கு நீங்கன்னா ஆகாதுன்னு சொல்றேன், நீங்க என்னடான்னா கதை கேட்குறீங்க?” “எனக்கு அவர் பிளட் ரிலேஷன் மிது” “உங்களுக்கு அவர் மேல கோவம் வரலையா?” “என் கோவம் எல்லாம் என்னை பெத்தவர் மேலதான். அவங்க எங்களை என்ன பண்ணினாங்க? என் அம்மா மாதிரியே அவங்களும் ஏமாந்து போயிருக்காங்க, இங்க என் அம்மாவை குத்தி காட்டி யாரும் பேசல, துரோகத்திலேருந்து தானா மீண்டுகிட்டாங்க, நீ சொல்ற வரை எனக்கும் எந்த உண்மையும் தெரியாது. ஆனா, அவங்களுக்கு அப்படி இல்லை, வில்லேஜ் லைஃப்ல எவ்ளோ கஷ்டங்கள் அவங்க ஃபேஸ் பண்ணிருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது” என்றான். வேகமாக தாவி அவனை அணைத்துக் கொண்டாள் மிது. “ஹேய் சொல்லிட்டு செய்ய மாட்டியா?” என சிரித்தவனும் அவளை அணைத்துக் கொண்டான். “இது தெரிஞ்சா நீங்க இன்னும் வருத்த படுவீங்க, டென்ஷன் ஆவீங்கன்னு நினைச்சேன். வேற மாதிரி யோசிக்கிறீங்க ஜீவா. உங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் அவங்க பக்கம் என்னன்னு யோசிக்கிறீங்களே, ப்யூர் சோல் நீங்க” என்றாள். “அவ்ளோ தூரம் என்னை நீ தூக்கி பேச வேணாம். குழம்பி போன மனசோட இருந்திருந்தா இந்த விஷயம் என்னை பாதிச்சிருக்கலாம். நாம பிரிஞ்சதும் திடீர்னு என் அம்மா என்னை விட்டுட்டு போனதும்தான் என்னை அதிகமா பாதிச்ச விஷயங்கள். அத தாண்டின பெரிய அதிர்ச்சி இல்லை இப்ப நீ சொன்னது. அன்பு அண்ணாவால என்னை உன் வீட்ல ஏத்துக்கிறது இன்னும் சிக்கல்ன்னு புரியாம இல்ல மிது. பெரியப்பா என்னை சொந்தமா ஏத்துக்கிட்டார், என்னை அண்ணா ஏத்துக்காம போனாலும் அவர் எனக்கு சொந்தம்ங்கிறது உண்மைதானே? அது நல்ல ஃபீல் மிது, நீயே எனக்கு கிடைச்சிட்ட, வேற என்ன பெருசா என்னை அஃபெக்ட் பண்ண போகுது? சமாளிக்கலாம்” என்றான். “ம்ம்… சமாளிப்போம், அப்படி முடியாம போனா?” எனக் கேட்டாள். அவளின் கையை பற்றி முத்தமிட்டவன், “எனக்கு நீ போதும் மிது, உனக்கு எப்படின்னு நீதான் சொல்லணும்” என்றான். அவனை முறைத்தவள், “என் அப்பாம்மா அப்படிலாம் என்னை விட மாட்டாங்க. அக்காக்கு அன்பு மாமா முக்கியம்னா எனக்கு நீங்கதான் முக்கியம்” என்றாள். சற்று நேரம் அமைதியாக இருந்தனர். திடீரென “டயர்டா இருக்கா?” எனக் கேட்டான். “இல்லை ஏன் கேட்குறீங்க?” எனக் கேட்டுக் கொண்டே அவனது முகத்தை பார்த்தவள், அவனது கண்கள் சொன்ன செய்திக்கு சம்மதம் வழங்கினாள். மீண்டும் அங்கே காதலின் சாரல்!