எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி காலம் வரை வைத்திருந்து பார்க்க கடமை பட்டவன் ஆகிற்றே.
“அவளை இனிமே எதுவும் சொல்லாத அம்மாச்சி, அவ திருப்பி பேசினா உன்னால தாங்க முடியாது” என சாதாரணமாகவே சொன்னான் அன்பு.
“பேசத்தான் சொல்லேன்” என முறுக்கினார் விஜயா.
“குறை எனக்குதான், வைத்தியம் பார்த்திட்டு இருக்கேன், சரியானாதான் குழந்தை வரும். வெளில சொல்லாம இருக்கா, நீ அவளை குத்தி பேசி அந்த பேச்சு பொறுக்க முடியாம நாலு பேர் மத்தியில உண்மையை சொல்லி வச்சான்னா என்னாகிறது?” எனக் கேட்டான்.
இப்படி சொல்கிறானே என அருந்ததி திகைத்தாலும் தன் அம்மாவை இப்படித்தான் வாயை மூட வைக்க முடியும் என நினைத்து சமாதானம் ஆகிக் கொண்டார்.
அதிர்ந்து போன விஜயா, “ என்கிட்டேயே பொய் சொல்றியா? அவ குறைய மறைக்க நீ பழி ஏத்துக்கிறியா டா?” என கோவமாக கேட்டார்.
அப்படித்தான் என்பது போல சிரித்தவன், “அவளே சொல்லாட்டாலும் நான் அப்படித்தான் சொல்வேன், அதான் நடக்கணும்னா நீ அவளை என்ன வேணா பேசு. இல்லைன்னா அவ இருக்க பக்கம் திரும்பாத” என அழுத்தமாக சொல்லி அங்கிருந்து சென்று விட்டான்.
நீ சரியான மாமியாராக நடந்து கொள்வதில்லை, நீயும் அவளுக்கு இடம் தருகிறாய், இவன் ஆசை பட்டான் என ராசியில்லாதவளை கொண்டு வந்து விட்டாய், உன்னால்தான் வம்சம் விளங்காமல் போகிறது என மகளிடம் கோவப்பட்டார் விஜயா.
தன்னை அம்மா போல நடத்தும் பெண்ணை தானும் அப்படித்தானே மகளாக பாவிப்பேன் என மனதிற்குள் நினைத்துக்கொண்டார் அருந்ததி. அவளுடைய கவனிப்பில்தான் இன்று அருந்ததி எந்த கவலையும் இல்லாமல் ஆரோக்கியமாக நடமாடுகிறார். விஜயாவும் நேரில் பார்க்கிறார், ஆனாலும் அதெல்லாம் அவருக்கு பெரிதே இல்லை.
செல்வநாயகம் மற்றும் மங்களத்தின் மீதான துவேஷம் அப்படியே அவர்களின் பேத்தியின் மீதும் வந்து விட்டது.
“நான் தூக்கி வளர்த்தவன் பாதியில வந்தவளுக்காக என்ன பேசிட்டு போறான்!” என குறையாக சொன்னார் விஜயா.
“அவ முகம் வாடினா கூட இவனுக்கு பொறுக்காதுன்னு உனக்கு தெரியாது? நம்ம புள்ளைய எப்படி சந்தோஷமா நிம்மதியா வச்சுக்கிறா? உன் கண்ணுக்கு அது தெரியலை, அவ மனச போய் நோகடிச்சியே! புள்ள இல்லை புள்ள இல்லைனு எதுக்கு இந்த புலம்பு புலம்புற? வர்றப்போ தானா வரும். எங்களுக்கெல்லாம் இல்லாத கவலை உனக்கெதுக்கு? இனிமே அவளை நீ ஏதாவது சொன்ன… உன்கிட்ட பேச்சுவார்த்தையை நிறுத்திடுவேன் பார்த்துக்க” என கடுமையாக பேசி விட்டு சென்றார் அருந்ததி.
இப்படியாக அம்மாவும் மகனும் விஜயாவின் வாயை தற்காலிகமாக அடைத்தனர்.
தாமதமாக எழுந்த லாவண்யா நேரத்தை பார்த்து விட்டு அரக்க பறக்க குளித்து விட்டு வந்தாள். அறைக்கு வந்த அன்பு, “எந்த இரயில புடிக்க போற, மெல்ல கிளம்பு” என்றான்.
“பசிக்கலையா உங்களுக்கு, ஏதும் சாப்பிட்டீங்களா?” என கேட்டுக் கொண்டே புடவை கட்ட ஆரம்பித்தாள்.
“நேத்து கொடுத்த புதுசுல எதையாவது கட்டிக்க பாப்பா. கோயிலுக்கு போயிட்டு அப்படியே உன் அப்பா வீட்டுக்கும் ஒரு எட்டு போயிட்டு வருவோம்” என்றான்.
இன்று எதுவும் விஷேஷ நாள் கூட இல்லையே என கேட்டாள்.
“நீதான பட்டு புடவையை கட்டிகிட்டு எங்க போக போறேன்னு கேட்ட, வா வா” என்றவன் அவனே ஒரு புடவையை கையில் எடுத்து கொடுத்தான்.
அவள் கட்டி கொள்ள உதவி செய்து அவள் முழுதும் தயாரான பின் அவளோடுதான் அறையை விட்டு வந்தான். பேரனிடமும் மகளிடமும் கோவம் கொண்டிருந்த விஜயா அவரது அறைக்குள் முடங்கி விட்டார்.
காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். அன்புவின் வீடு இருந்த அதே தெருவில்தான் எதிர்ப்பக்கத்தில் இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது அவனது பெரியப்பா சங்கரனின் வீடு.
சங்கரனின் மகள் ஊருக்கு வந்திருப்பாள் போலும். அவளுடைய இரண்டு வயது குழந்தை எப்படியோ வீட்டிலிருந்து சாலைக்கு வந்து விட்டது. அதைப் பார்த்த லாவண்யா கணவனை பைக்கை நிறுத்த சொல்லி விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டாள்.
“யாரும் கவனிக்கல போல, சொல்லி விட்டுட்டு வரலாம்” என்றாள் லாவண்யா.
“பக்கத்து வீட்ல கூப்பிட்டு சொல்லி விட்டுட்டு வா” என்றான் அன்பு.
“உங்க கோவதாபத்தை குழந்தைகிட்ட காட்ட வேணாம்” என அவள் அதட்ட, அவளை ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.
அதற்குள் குழந்தையின் அம்மா சாந்தாவே வந்து விட்டாள். அண்ணன் அண்ணியிடம் நலம் விசாரித்தாள். சங்கரனும் அன்புவும்தான் பேசிக் கொள்வதில்லை. மற்றவர்கள் வீட்டுக்கு வந்து போக இருக்கவில்லை என்றாலும் வெளியில் பார்த்தால் பேசிக் கொள்வார்கள்.
பதிலுக்கு அன்புவும் நலம் விசாரித்தவன், “இப்படியா புள்ளய ரோட்ல விடுவ? ஏதாவது ஆச்சுன்னா என்னாகிறது?” என கடிந்தான்.
“நம்ம ஊர்ல யாரு என்ன செய்ய போறாங்கண்ணே?” என்ற சாந்தா, சற்று தாழ்ந்த குரலில், “வீட்டுக்குள்ள வா ண்ணா, நீ ஒதுங்கி போற, அப்பாவையும் ஒதுக்கிட்டேன்னுதான் அப்பாக்கு வருத்தம். மத்த படி இப்ப நீ உள்ள வந்தாலும் சமாதானம் ஆகிடுவாரு” என்றாள்.
“நீ சின்ன புள்ள, உனக்கொன்னும் தெரியாது” என்றான் அன்பு.
“எனக்கே புள்ள வந்தாச்சு ண்ணா. நான்பெரியமனுஷிதான். எம்பொண்ணுக்கு இன்னும் முடி இறக்கல, காது குத்தல, நீதான ண்ணா மாமனா இருந்து எல்லாம் செய்யணும்? அப்பாவும் நீயும் முறைச்சுக்கிட்டு நின்னு கடைசில பொம்பளைங்க பாடுதான் திண்டாட்டம் ஆகுது” என்றாள் சாந்தா.
“என்னை மதிச்சு எது கேட்டாலும் நான் செய்வேன், உன் அப்பாக்குத்தான் அது புரியாம எனக்கு ஆகாத இடத்தை சேர்த்துகிட்டாரு. என்ன இப்போ புள்ளைக்கு காது குத்துதானே? எந்த கோயில்ல செய்ய போறீங்கன்னு சொல்லு, முறையா எல்லாம் செய்வேன்” என்றான் அன்பு.
அப்பாவின் சம்மதம் இல்லாமல் எப்படி அவள் சொல்ல முடியும்? இவனாக வந்து பேச வேண்டும் என அவர் நினைக்கிறார், அவர் எனக்கு தேவையே இல்லை என்பது அன்புவின் நிலை.
அதுவரை தலையிடாமல் குழந்தையை வைத்திருந்த லாவண்யா, “பாப்பாக்கு பசிக்குது போல, ஏதாவது கொடுங்க அண்ணி” என்றாள்.
மகளை வாங்கிக் கொண்டாள் சாந்தா. லாவண்யா கணவனுக்கு கண் காட்ட பணம் எடுத்து குழந்தையின் கையில் திணித்தவன், “என் மருமகளுக்கு பொம்மை ட்ரெஸ்னு எல்லாம் வாங்கிக் கொடு” என்றான்.
பின் பக்க கொல்லையில் வேலையாக இருந்த சங்கரன் வந்து விட்டார். மகளை அதட்டி உள்ளே வரச் சொன்னார். பயந்து போன சாந்தா வீட்டுப் பக்கம் திரும்ப, “அவன் கொடுத்த பணத்தை அவன் முகத்துலேயே விட்டெறிஞ்சிட்டு வா, நான் பாக்க பொறந்து வளந்தவன விட நான் ஒன்னும் மானம் மரியாதைல குறைஞ்சு போயிடல” என்றார்.
தன் மகள் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்த ரூபாய் நோட்டுக்களை பிடுங்கி அன்புவிடம் நீட்டினாள் சாந்தா. கோவ முகத்தோடு அந்த பணத்தை வாங்காமல் அவன் நிற்க, அதை வாங்கிக் கொண்ட லாவண்யா, “நீங்க போங்க அண்ணி” என்றாள்.
மகள் உள்ளே வந்ததும் கேட்டை வேகமாக சாத்தினார் சங்கரன்.
“நீங்க பைக்க எடுங்க” என லாவண்யா பதட்டமாக சொல்லவும், மனைவியின் மன நிலையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்ற ஒரே நோக்கத்தில் சங்கரனை எதுவும் சொல்லாமல் வண்டியை எடுத்தான் அன்பு.
கோவமாகி விட்டாரோ என இவள் கவலையாக, அவனோ அவளுக்காகவே சில நிமிடங்களில் எல்லாம் இயல்பாகி விட்டான்.
லாவண்யாவின் ஊரில் உள்ள கோயிலுக்குத்தான் அழைத்து சென்றான். இங்கு ஏன் என அவள் கேட்டதற்கு, “நம்மூர் கோயிலுக்குதான் அடிக்கடி போவியே, இங்கதானே உன் இஷ்ட தெய்வம் இருக்கார், பார்த்துக்க” என்றான்.
“பார்க்கிறதா? வேண்டிக்கன்னு சொல்லுங்க” என்றாள்.
“என்னத்த வேண்டனும் பாப்பா, உன் சாமிக்கு உம்மேல அக்கறை இருக்கும், அவரே வேணும்கிறத செஞ்சு தருவார்” என அவன் சொல்லவும் அவள் வருத்தமாக பார்த்தாள்.
“நமக்கு குழந்தை பொறக்கவே இல்லைனாலும் எனக்கு கவலையில்லை, வரும் போது வரட்டும்னு நீயும் சாதாரணமா இருக்கணும்” என அழுத்தமாக சொன்னான். அவளும்சரிஎன்றாள்.
கூட்டம் அதிகம் இல்லாததால் கடவுளை நிதானமாக தரிசித்து விட்டு கிளம்பினார்கள்.
தன் வீட்டுக்கு வந்த மகளையும் மருமகனையும் மலர்ச்சியோடு வரவேற்றார் பசுபதி. காபி மட்டும் பருகிய அன்பு, லாவண்யாவை மாலையில் வந்து அழைத்து செல்வதாக கூறி விடை பெறப் பார்த்தான்.
வந்து வெகு நாட்களாகி விட்டது, மதிய விருந்து முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டுமென அனைவருமே வற்புறுத்தினார்கள். லாவண்யாவும் ஆவலாக இவனை பார்க்க சரியென சொன்னான்.
பசுபதியும் வெளி வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வீட்டிலேயே இருந்தார்.
லாவண்யா மூலமாக சங்கரனுடன் ஏற்பட்ட பிரச்சனை வீட்டினருக்கு தெரிந்தது. அந்த குடும்பத்தினருடன் பேச்சு வைத்துக் கொள்ளாதே என அவளது அம்மா, அப்பயி இருவரும் அவளுக்குத்தான் அறிவுரை சொன்னார்கள்.
மதிய உணவின் போது மிதுவை பற்றிய பேச்சு வந்தது. தனக்கு தெரிந்த பையன் இருக்கிறான், அவனுக்கும் பக்கத்தில்தான் ஊர், சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான், மிகவும் நல்ல பையன் என சொன்னான் அன்பு.
யார், என்ன என இன்னும் விவரமாக விசாரித்த தாத்தா, தனக்கு தெரிந்த குடும்பம்தான் என்றார். பசுபதிக்கும் இன்னார் மகன் என விளக்க அவருக்கும் தெரிந்திருந்தது.
“அப்ப மேல பேசலாமே” என்றான் அன்பு.
“அது வந்து அன்பு… பாப்பா இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லியிருக்கா” என்றார் பசுபதி.
“புள்ளைக்கு என்னத்த தெரியும்டா, எனக்கும் உன் அம்மாக்கும் வயசாகுதே, நாங்க நல்லா இருக்கும் போதே மிது குட்டிக்கும் கல்யாணம் செய்யலாம் டா” என்றார் செல்வநாயகம்.
“நம்ம தேடுறப்போ நல்ல இடம் அமையாது மாமா. மிதுவுக்கு சென்னையிலேயே இருக்கணும், நமக்கு நம்ம ஊர் பையனா இருந்தா வசதிதானே? ஊருக்கு வர வச்சு பேசி புரிய வைங்க. சிட்டியில கல்யாணம் ஆகாம தனியா விடறதெல்லாம் நல்லதுக்கு இல்லை” என அன்பு சொல்லவும் வினோதினிக்கும் அதுவே சரியென பட்டது.
“அவ ஊருக்கு வந்தும் ரெண்டு மாசம் மேல இருக்கும்ல ப்பா, வர சொல்லுங்க ப்பா. நாம பேசலாம்” என உற்சாகமாக சொன்னாள் லாவண்யா.
சரியென தலையாட்டிக் கொண்டார் பசுபதி.
அன்று மிதுவுக்கு விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்தாள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் விடுகிறேன் என ஜீவாவும் மிதுவும் நனைந்து போயிருந்தனர்.
ஈரத்தில் இருந்தவளை சுற்றி வளைத்து சீண்டிக் கொண்டிருந்தான் ஜீவா.
“விடுங்கஜீவா” எனகெஞ்சிக்கொண்டிருந்தாள்.
“ஜில்லுன்னு இருக்க நீ என் மூளைக்குள்ள எதையோ எரிய வைக்கிற மிது” என அவளின் காதுக்கருகில் சொன்னான். அவளின் காதை உரசிய அவனது இதழ்கள் கன்னம், கழுத்து என இஷ்டத்திற்கு பயணம் செய்தன.
அவள் அவனை விலக்கி விட்டு ஓடிச்செல்ல, கால் தடுக்கி விழுந்து விட்டாள்.
அடி படவில்லை என்றாலும் ஈர உடையிலும் உடம்பிலும் மண் ஒட்டிக் கொண்டது. அவள் எழ கை நீட்டியவனையும் தரையில் இழுத்து விட்டு அவன் மீது மண் அள்ளி பூசினாள். தன் உடம்பிலுள்ள மண்ணை அவள் உடம்புக்கு மாற்றும் வேலையில் இறங்கினான் ஜீவா.
யாருமில்லாத தனிமையும் மனதில் அந்த நேரம் பரவியிருந்த இனிமையுமாக அவர்களுக்கே உரித்தான பொழுதாக மாறியிருந்தது.
திடீரென மிதுவின் கைப்பேசி சத்தமிட்டது.
தன்னை விட்டு விலக மறுத்த ஜீவாவை கட்டாயப் படுத்தி விலக்கிவிட்டாள் மிது. ஏமாற்றத்தோடு அவளை பார்த்தவனிடம், “வெயிட்பண்ணலாம்னுசொல்லியிருக்கீங்க, வார்த்தையைகாப்பாத்துங்கஜீவா!” என கிண்டலாகசொல்லி விட்டு எழுந்து சென்றாள்.
வீட்டில் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் லாவண்யாதான் தங்கைக்கு காணொளி அழைப்பு செய்திருந்தாள்.
காணொளி அழைப்பு எனவும் இப்படியே எப்படி பேசுவது என பதற்றமாகி விட்டாள் மிது. அழைப்பை துண்டிக்க போனவள் தவறுதலாக அழைப்பை ஏற்று விட்டாள்.
தங்கையை இந்த கோலத்தில் பார்த்த லாவண்யா, “என்னடி என்னாச்சு உனக்கு?” என அதிர்ச்சியாக கேட்டாள்.
அங்குமிங்குமாக அமர்ந்திருந்தாலும் லாவண்யா பேசுவது கேட்கும் தூரத்தில்தான் மற்றவர்கள் இருந்தனர். அவளின் பதட்டமான பேச்சில் அனைவருமே அவள் என்ன பேசுகிறாள் என கவனமானார்கள்.
அக்காவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்த மிதுவுக்கு பின்னணியில்அப்பா, தாத்தா, அன்புஆகியோரைகாணவும் மூச்சடைப்பது போலானது.