மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலையில்லை, ஆனால் மகனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என நினைத்தவனுக்கு அம்மாவின் இழப்பை தாண்டிய மன பாரம் ஏறிக் கொண்டது. 

மகள் மறைந்த துக்கத்தில் இருந்த கோபிகாவின் தாயாரும் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். தன்னுடன் வந்திருக்கும் படி இளங்கோ கேட்டுக் கொண்டும் அவருடன் செல்ல மறுத்து விட்டான் ஜீவா. 

அம்மா வாழ்ந்த வீட்டிலேயே நாட்களை கடத்தி வந்தான். ஒரு வேளை அம்மாவுடனே தான் இருந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பாரோ, யாருக்காக காதலை துறந்தேனோ அவரை கவனிக்காமல் தன்னை பற்றிய சிந்தனையில் சுயநலமாக நடந்து கொண்டேனோ, என் அம்மாவின் இறப்பை தடுக்க முடியா விட்டாலும் இறுதி காலத்தில் அவருடன் இருந்திருக்க தவறியது அவரை நோகச் செய்திருக்குமே என குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவனை வதைக்க ஆரம்பித்தது. 

தங்களை  வேலைக்காரர்களாக பாராமல் வீட்டில் ஒருவர் போல நடத்திய கோபிகாவின் மகனை சரோஜாவும் ரங்கசாமியும் தனியாக விடவில்லை. 

சரோஜா தினம் வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்து சமைத்து விட்டு செல்வார். ரங்கசாமிக்கு இப்போது வேலையில்லை, இருந்த போதும் மனைவியுடன் அவரும் வருவார். வரவேண்டாம் என ஜீவாவும் தடுக்கவில்லை. அவர்களுக்கான சம்பளத்தை தவறாமல் கொடுத்தான். 

அடிக்கடி மணியும் பங்கஜும் வந்து பார்த்து செல்வார்கள். தன்னுடன் வந்து வேலை செய்யும் படி  ஜீவாவை மல்லுகட்டி அழைத்து சென்றார் பங்கஜ். ஒரு வாரத்தில், என்னால் கவனம் வைக்க முடியவில்லை என சொல்லி நின்று விட்டான். 

மணி பார்த்துக் கொடுத்த ஐ டி வேலைகளுக்கான வாய்ப்புகளை நிராகரித்தான். திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என பெண் பார்க்க ஆரம்பித்தார் இளங்கோ. மாமா எனவும் பாராமல் நன்றாக திட்டி விட்டான் ஜீவா. அதில் கோவம் கொண்டு போனவர் பின் இவன் பக்கம் திரும்பவே இல்லை. 

வெளி மாநிலங்களில் அமைதியாக இருக்கும் இடங்களை தேடி செல்வான், அந்த சமயங்களில் யாரின் அழைப்புகளையும் ஏற்க மாட்டான்.  பின் திடீரென சென்னைக்கு வருவான், இங்கிருக்கும் பொழுதுகளில் வீட்டிலேயே நேரத்தை ஓட்டினான். 

எப்போது எங்கு செல்வான், எப்போது திரும்ப வருவான் என யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. 

ஜீவா இல்லாத சமயங்களில்  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டை சுத்தப் படுத்துவதற்காக மட்டும் வந்து விட்டு செல்வார் சரோஜா. அவரிடம் வீட்டின் இன்னொரு சாவி இருந்தது. 

சென்ற முறை சரோஜா அங்கு வந்த போது ஜீவா வீட்டிலிருக்கவில்லை. எங்கேயோ சென்று விட்டதாக தெரிந்தது. 

அதன் பின் இரண்டு முறை அவர் வீடு வந்த போதும் அவன் வீட்டில் இல்லை. ஆகவே வெளியூரிருந்து  அவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை தெரிந்து கொண்டார். 

வருடா வருடம் தன் சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு கணவரோடு சென்று வருவது சரோஜாவின் வழக்கம். இந்த முறையும் அப்படி சென்று விட்டார். 

சரோஜா ஊரில் இல்லாத சமயத்தில் ஜீவா சென்னை வந்திருப்பான் போலும். வீட்டில் இருந்தவன் தன்னை சரியாக கவனத்துக் கொள்ளாமல் நேரத்துக்கு சாப்பிடாமல் என இருந்திருக்கிறான். 

மணி, பங்கஜ் ஆகியோருக்கும் ஜீவா சென்னை வந்த விஷயம் தெரியாது. அக்கா போன பிறகு அக்காவின் மகன் தன்னை ஒரேயடியாக தவிர்க்கறான் என கோவத்தில் இருந்த இளங்கோவும் ஜீவாவை எந்த விதத்திலும் தொடர்பு கொள்வது கிடையாது. 

சரோஜா ஊர் திரும்பிய அடுத்த நாள்தான் ஜீவாவின் வீட்டுக்கு கணவரோடு வந்தார். உடம்பு அனலாக கொதிக்க மயக்கமடைந்திருந்தவனை அருகிலுள்ள மருத்துவமனையில் காட்டியிருக்கின்றனர்.  நிலைமை சீரியஸ், பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என அங்கு சொல்லி விட்டனர். 

ஜீவாவின் கைப்பேசி லாக் ஆகி இருந்ததால் அவர்களால் அவனை தெரிந்த வேறு யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 

அவர்களின் கையில் அதிக பணமில்லை, எதுவும் ஆகி விடுமோ என்ற பயம் வேறு. 

ரங்காசமிக்கு மணி, பங்கஜ் இருவரில் யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என தோன்றியது, ஆனால் அவர்களின் கைப்பேசி எண்கள் அவரிடம் இல்லை. ஆனால் இருப்பிடம் தெரியும், மணியின் வீடுதான் பக்கம் என்பதால் உடனே அவனை அழைத்து வந்து விட்டார்.  

ஜீவாவை வேறு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு வழி செய்து விட்டுத்தான் பங்கஜ்க்கு தகவல் தந்தான் மணி. 

இரண்டு நாட்களாக மருத்துவமனையில்தான் இருக்கிறான் ஜீவா. நேற்றுதான் ஐ சி யூ விலிருந்து அறைக்கு மாற்றப் பட்டிருக்கிறான். சென்ற இடத்தில் ஏதோ தொற்று எற்பட்டிருக்கிறது, ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விட்டிருக்கறான் போலும். 

இப்போது அபாயம் ஏதுமில்லை, ஆனால் குறைந்தது இன்னும் மூன்று நாட்கள் மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தார் மருத்துவர். 

இனி தாங்கள் பார்த்துக் கொள்வதாக சொல்லி சரோஜாவையும் ரங்கசாமியையும் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் பங்கஜ். 

தகவல் தெரிந்து நேற்றுதான் மதுரையிலிருந்து வந்து ஜீவாவை பார்த்தார் இளங்கோ. இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என சொல்லி விட்டு மீண்டும் ஊருக்கு சென்று விட்டார். 

ஜீவாவின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட பங்கஜ், மணி இருவருமே அவனை தற்காலிகமாக குணப் படுத்துவதை காட்டிலும் நிரந்தரமாக குணப் படுத்துவது அவசியம் என்பதை புரிந்து கொண்டனர். 

மணி மூலமாக மிது பற்றிய விவரம் எல்லாம் பங்கஜ் தெரிந்து கொண்டார். 

“மிதுன்யாவை இவன்கிட்ட வரவைக்கணும் மணி, அந்த பொண்ணால மட்டும்தான் ஜீவாவை பழைய படி மாத்த முடியும்” என உறுதியாக சொன்னார் பங்கஜ். 

“ரெண்டு பேரும் பிரேக் அப் பண்ணிட்டாங்க. மிதுவோட நம்பர் கூட அவன் ஃபோன்ல இல்லை, மிதுவோட ஃ ப்ரெண்ட்ஸ் நம்பர்ஸும்  இல்லை. மிதுவுக்கு மேரேஜ் கூட ஆகியிருக்கலாம். இல்லைனா கூட…” பேசிக் கொண்டே போன மணியை, “உன்னால முடியலைன்னா விடு, நான் பார்த்துகிறேன். என்ன செஞ்சாவது ஜீவாவை சரி பண்ணியே ஆவேன். நீ கிளம்பலாம்” என்ற பங்கஜின் வார்த்தைகள் கோவப்படுத்தியது. 

சரி முயன்றுதான் பார்ப்போமே என முடிவு செய்தான் மணி. வாசுகியின் கைப்பேசி எண்ணை கண்டறிந்தவன் அவளுக்கு அழைத்து மிதுவின் எண்ணை கேட்டான். தோழியின் அனுமதி இல்லமல் தர முடியாது என அவள் சொல்லவும் ஜீவா மருத்துவமனையில் இருக்கும் விவரத்தை சொன்னான். 

“உன் ஃபிரெண்ட் நம்பர் எனக்கு தேவையில்லை, நீயே அவகிட்ட சொல்லு. அப்புறம் உன் ஃபிரெண்ட்டோட விருப்பம்” என கோவமாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான். 

மணி சொன்னதையெல்லாம் கேட்டு இடையில் அழுது, சோர்ந்து போய் அமர்ந்திருந்த மிதுவுக்கு தேநீர் வாங்கி வரச் செய்து கொடுத்தார் பங்கஜ். 

அவள் சற்றே தெளிந்து விட்டதாக தெரியவும் அவள் பக்கத்தில் அமர்ந்தவர், “இவனை இப்படியே விட்டா ஒரு நாள் இல்லை ஒரு நாள்… அவனோட அம்மா மாதிரியே…” மேற்கொண்டு சொல்லாமல் விட்டார். 

அதிர்ந்து போனவளாக அவரை பார்த்தவள், “ஜீவா நல்லாருப்பார்” என கோவமாக சொன்னாள். 

“எப்படி இருப்பான்? இருபத்தி நாலு மணி நேரமும் எங்க யாராலேயும் அவனை கவனிச்சிட்டே இருக்க முடியாது. முதல்ல அவன் மேல அவனுக்கு அக்கறை இருக்கணும். சரோஜாம்மா வீட்டுக்கு போகாம இருந்திருந்தா ஜீவா பத்தி யாருக்குமே தெரிஞ்சிருக்காது. கொஞ்ச நாள்ல அவனோட எலும்பு கூடத்தான்…”

“நிறுத்துங்க!” என சத்தமிட்டு மணியின் பேச்சை நிறுத்தினாள் மிது. 

“இவன் கிடக்குறான் ம்மா, நீ சொன்ன மாதிரி ஜீவா நல்லாருப்பான், ஆனா அது உன் கைலதான் ம்மா இருக்கு” என்றார் பங்கஜ். 

“ஆமாம் மிது” என்ற மணி, “அதுசரி, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே?” எனக் கேட்டான். 

“பார்த்தா அப்படி தெரியலை, அப்படித்தானேம்மா  உனக்கு இன்னும் மேரேஜ்…” என பங்கஜ் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “அதுக்கு ஜீவாவை நான் மறந்திருக்கணும்ல ஸார்?” எனக் கேட்டாள். 

“நல்லா லவ் பண்ணிட்டிருக்கும் போதே பிரிஞ்சு போனவங்கதானே நீங்க?” என இடக்காக சொன்னான் மணி. 

மிதுன்யாவிடம் பதில் இல்லை.

“ஜீவா தன்னை தானே அழிச்சிக்கிறான். வாழறதுக்கு எந்த பிடிப்புமே அவன்கிட்ட இல்லை. நீ என்ன மைண்ட் செட்ல இருக்கேன்னு தெரியாது. ஆனாலும் உன்னை ஃபோர்ஸ் பண்றது தவிர எங்ககிட்ட வேற ஆப்ஷன் இல்லை. எங்க ஜீவாவை சரி பண்ணி கொடு மிது” என்றான் மாசிலாமணி. 

“அவர் என் ஜீவாவும்தான்” என்றவளின் கண்ணீரே அவளின் மனதை சொன்னது. 

‘இப்ப என்னடா சொல்ற?’ என பங்கஜ் மணியை கேலிப்பார்வை பார்க்க, “அது அப்ப, இப்ப உன் ஸ்டாண்ட் என்ன?” எனக் கேட்டான் மணி.  வீட்டினரை காரணம் காட்டி மீண்டும் பாதியில் விட்டுச் சென்று விடுவாளோ என மிதுவின் மீது அவனுக்கு பயம். 

மிது ஏதோ சொல்ல வருவதற்குள், “பேஷண்ட் கூட யாரும் இல்லாம அங்க என்ன ஸார் பண்றீங்க?” எனக் கேட்டுக் கொண்டே வந்த செவிலியர் ஏதோ மருந்துகள் வாங்கி வரும்படி கூறினார். 

தன் உதவியாளரை அழைத்து மருந்து வாங்கி வரும் படி அனுப்பி வைத்தார் பங்கஜ். ஜீவாவின் அறையை நோக்கி சென்றாள் மிது. உடன் செல்லப் போன மணியை தடுத்து விட்டார் பங்கஜ். 

விழித்திருந்த ஜீவா தன்னை நோக்கி மிது வருவதை பார்த்து விட்டு,  நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தான்.