மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இரண்டு வருடங்கள் போகட்டும் என சொல்லி சமாளித்திருந்தாள். வருடங்கள் கடந்த பின்னும் ஜீவாவுடன் பழகிய அந்த சில கால நினைவுகள் அவளுள் இன்னும் பசுமையாகத்தான் இருக்கிறது. வேறொருவனை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யும் மனநிலைக்கு இன்னுமே அவளால் வர முடியவில்லை.
மீட்டிங் ஹாலில் மிது இருக்கும் போது வாசுகியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இப்போது அவள் பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். மிது அழைப்பை ஏற்காமல் போயும் மீண்டும் அழைப்பு வந்தது, அவசரம் இல்லாமல் போனால் கூட விளையாட்டாக இப்படித்தான் செய்வாள் வாசுகி.
மீட்டிங்கில் இருப்பதாக செய்தி அனுப்பி வைத்தாள் மிது, இருந்தும் மீண்டும் அழைப்பு வந்தது. மிது அலட்சியம் செய்ய, மீண்டும் அழைப்பு வந்தது. இப்போது மிதுவுக்கு லேசாக பயமானது.
மீட்டிங்கின் இடையில் அழைப்பை ஏற்க இயலாத காரணத்தால் ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறாளா என வாட்ஸ் ஆப் திறந்து ஆராய்ந்து பார்த்தாள். எந்த புதிய செய்தியும் வந்திருக்கவில்லை. வாசுகியின் அடுத்த அழைப்பு வந்தது.
மிதுவின் கவனம் கைப்பேசியில் இருக்க, மேனேஜர் அவளை திட்டி அங்கிருந்து வெளியில் அனுப்பி விட்டார்.
அவமானத்தில் கன்றி விட்ட முகத்தோடு வாசுகிக்கு அழைத்த மிது, “உன் விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சுடி, அந்த மேனேஜர் எல்லார் முன்னாடியும் திட்டிட்டார், எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியமா?” என கோவப்பட்டாள்.
“மிது… ஜீவாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம், உடனே அவரை பார்க்க கிளம்பு” என பதற்றத்தோடு சொன்னாள் வாசுகி. மிதுவுக்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.
“என்னாச்சு அவருக்கு?” என பயந்து போன குரலில் கேட்டாள் மிது.
எந்த மருத்துவமனை என சொன்ன வாசுகி, “எனக்கும் எதுவும் தெரியாது மிது, எப்படியோ என் நம்பர் கிடைச்சு உன்கிட்ட சொல்ல சொன்னார் ஜீவாவோட ஃப்ரெண்ட் மணி. நான் உடனே உனக்கு கால் பண்ணிட்டேன். மணியோட நம்பர் உனக்கும் அனுப்புறேன், அவர்கிட்ட பேசிக்க” என்றாள்.
வாசுகி சொன்ன மருத்துவமனையை மிது வந்தடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. மாசிலாமணியின் கைப்பேசி எண் இருந்தும் அவனுக்கு அழைக்க வேண்டும் என்ற யோசனை கூட இல்லாமல் பயத்திலேயே வந்து சேர்ந்திருந்தாள் அவள்.
மருத்துவமனை ரிசப்ஷனில் ஜீவாவின் பெயரை சொல்லி எங்கிருக்கிறான் என கேட்டு அவனிருந்த நான்காவது தளத்தை மிது வந்தடைவதற்குள் அவளுக்கு ஏழு யுகம் கடந்து விட்டது போலானது.
வராண்டாவிலேயே மாசிலாமணியை பார்த்து விட்டாள். அவனும் இவளை கண்டு கொண்டவனாக எழுந்து நின்றான். உடன் இன்னும் ஒருவர் இருந்தார். உற்று பார்க்கும் போதுதான் நடன இயக்குநர் பங்கஜ் என தெரிந்தது. அவரை எப்போதோ டிவியில் பார்த்திருக்கிறாள்.
ஜீவாவின் உடம்புக்கு என்னவென சொல்லப் போகிறார்களோ என்ற அச்சத்தில் அவளின் இதயத்தின் தடதடப்பு அவளுக்கே கேட்டது. மணியின் கவலை அப்பிக் கிடந்த முகமும் பங்கஜின் வேதனையான பார்வையும் நிலைமையின் தீவிரத்தை வார்த்தைகள் இல்லாமலே அவளுக்கு எதையோ புரிய வைத்தன.
‘உயிரை கையில் பிடித்தபடி’ என எங்கேயோ படித்திருக்கிறாள், இன்றுதான் அதை அனுபவத்தில் உணர்ந்தாள்.
“ஜீவா எங்க?” என நடுங்கும் குரலில் கேட்டாள்.
அறையை சுட்டிக் காண்பித்தான் மாசிலாமணி. வேகமாக உள்ளே ஓடினாள். ஜீவாவை நேரில் கண்ட அந்த சில நொடிகள் அவளது வசத்திலேயே இல்லை. என்ன நினைத்தாள், என்ன உணர்ந்தாள் என எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.
நீண்ட தாடியும் மண்டிக் கிடந்த சிகை முடியும் சட்டென பார்க்கையில் அடையாளம் தெரியாதபடி அவனை மாற்றியிருந்தன. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று அவனது கன்னத்தில் கை வைத்தாள். அவனது உடம்பு லேசாக சுட்டுக் கொண்டிருந்தது.
உடல் பலஹீனமாக இருக்கிறான் என்பதை பார்ப்பவர்கள் யாரும் சொல்லி விடுவார்கள்.
முதன்முதலில் அவனை மதுரை கல்லூரியில் கலை விழாவின் போது பார்த்தது நினைவிலாடியது. எத்தனை குதூகலத்தோடு ஆடிக் கொண்டிருந்தான். அந்த ஜீவாவா இது? என நினைத்தவளுக்கு அவளை மீறிக்கொண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது.
இமை மூடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் அசைவே இல்லை. மணி வந்தான், அவனுக்கு தொந்தரவாக இருக்கும், வெளியில் போய் பேசலாமா என சின்ன குரலில் கேட்டான்.
ஜீவாவை விட்டு நகர அவளுக்கு மனமே இல்லை, ஆனால் ஜீவாவுக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ள வேண்டுமே, ஆகையால் வெளியே வந்தாள்.
மிதுவை விட்டு பிரிந்த பிறகு அந்த வருத்தத்திலிருந்து மீள முடியாமல் மிகவும் சிரமப்பட்டான் ஜீவா. யார் என்ற விவரம் தெரியாவிட்டாலும் தன் மகன் விரும்பிய பெண்ணை பிரிந்து விட்டான் என்ற அளவில் மட்டும் கோபிகாவுக்கு தெரியும். அவர் மூலமாக பங்கஜுக்கும் தெரிய வந்தது.
வேறொரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள், நான் ஏற்பாடு செய்கிறேன், உனக்கு நல்ல மாற்றமாக இருக்கும் என ஜீவாவிடம் கூறினார் பங்கஜ். அவன் ஒத்துக் கொள்ளவில்லை.
என்ன செய்தாவது தன் மகனை இந்த பிரிவின் வேதனையிலிருந்து விடுவித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் மாசிலாமணிக்கு அழைத்து விவரம் சொல்லி, ஜீவாவை நடனமாட சம்மதிக்க வைக்கும் படி கேட்டுக் கொண்டார் கோபிகா.
“என்னை யார் கூடவும் க்ளோஸா பார்க்கிறது மிதுவுக்கு பிடிக்காதுங்கிறது ஒன்னு, அத விட என்னை அவ எந்த விதத்திலேயும் பார்க்க கூடாது, அப்படி பார்த்தா அவளால என்னை மறக்க முடியாம போயிடும், அதனால எந்த ப்ரொக்ராம்க்கும் நான் போகல” என தீர்மானமாக சொல்லி விட்டான் ஜீவா.
கோபிகாவிடம் அதை அப்படியே சொல்லாமல் ‘நடனத்தில் ஈடுபாடு இல்லை அவனுக்கு, நல்ல வேலையாக போய் விடுவான், அதற்கு நான் பொறுப்பு’ என சொல்லி விட்டான் மாசிலாமணி.
மிதுவின் நினைவிலிருந்து வெளி வந்து அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனதான் ஜீவாவும் விரும்பினான். ஆகவே தன்னை புதுப்பித்துக் கொள்ள சிறிது காலத்துக்கு இடமாற்றம் தேவை என நினைத்து மும்பையில் வேலை தேடிக் கொண்டு சென்றான்.
படிக்கும் காலத்தில் தன்னுடன் இல்லாத மகன், இனி தன்னுடன் சென்னையில்தான் இருப்பான் என ஆசையாக நினைத்துக் கொண்டிருந்த கோபிகாவுக்கு ஜீவாவின் செயலில் பெரிய ஏமாற்றம்.
“ஜீவா இனிமே இங்கதான் இருப்பான், அதனால வெளியூர் ஷூட்டிங்லாம் வரமாட்டேன், சென்னைல ஒர்க்னா மட்டும் வர்றேன்னு பங்கஜ்கிட்ட சொல்கியிருந்தேன்டா. நீ என்னடான்னா மும்பை போறேன்னு சொல்றியே” என மகனிடம் ஆதங்கமாக கேட்டார் கோபிகா.
“ஒரு வருஷம் டைம் கொடும்மா, எனக்கு எங்கேயாவது போய் தனியா இருக்கணும்” என ஜீவா சொல்ல, விருப்பமில்லா விட்டாலும் மகனின் முடிவுக்கு ஒத்துக் கொண்டார்.
மும்பை வாழ்க்கையிலும் வேலையிலும் தன்னை தொலைத்து பழைய நினைவுகளை மறக்க முயன்றான் ஜீவா. அது அத்தனை எளிதாக இல்லாமல் மிதுன்யா அவனுள் விஸ்வரூபம் எடுத்து சவால் விடுத்தாள்.
வேலையை விட்டவன் மேற்படிப்புக்கென ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தான். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று எல்லா நடைமுறைகளையும் முடித்து ஆஸ்திரேலியாவும் சென்று விட்டான்.
அங்கேயும் அவனால் மனமொன்றி படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை, இதற்கான செலவுகளையும் திரும்ப சென்றால் அம்மா இன்னும் வருத்தமடைவாரே என்பதையும் நினைவில் வைத்து பல்லை கடித்துக் கொண்டு இருந்தான்.
வெளியூரில் நடந்த படப்பிடிப்பின் போது தடுமாறி விழுந்து விட்டார் கோபிகா. பெரிய அடி இல்லை என சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் அறைக்கு திரும்பி விட்டார். இரவில் அம்மாவுடன் பேச முயன்று முடியாமல் போனதால் பங்கஜ்க்கு அழைத்து சொல்லியிருக்கிறான் ஜீவா.
பங்கஜ் போய் பார்த்த போது கோபிகா இறந்து போயிருந்தார். தலையில் அடிபட்டதுதான் அவரின் மரணத்துக்கு காரணம் என பின்னர்தான் தெரிய வந்தது.
அம்மாவின் இறுதி சடங்குக்கு வந்து சேர்ந்த ஜீவா மொத்தமாக உடைந்து போய் விட்டான். படிப்பை தொடர மீண்டும் ஆஸ்திரேலியா செல்லவில்லை.
“என் அக்காவை சரியா பார்த்துக்கல நீ, என் அப்பா, நான், உன் அப்பா, நீன்னு யாருமே என் அக்காவை சந்தோஷமா வச்சுக்கல. ஒரேயடியா போய் சேர்ந்தாட்டாங்க” என ஜீவாவின் மாமா இளங்கோ அழுதது ஜீவாவை மிகவும் பாதித்து விட்டது.