கொஞ்சும் காதல் சாரல் -12

அத்தியாயம் -12

அன்பு, லாவண்யா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மிதுன்யாவின் தோழிகளும் வந்திருந்தனர். 

மங்கம்மா பாட்டி ஜீவாவை நினைவு வைத்து, அவன் வரவில்லையா என வாசுகியிடம் கேட்டார். அவள் மறுப்பாக தலையாட்ட, “நல்ல பையன், நல்லா ஆடினான், எல்லார் கண்ணும் அவன் மேலதான், அதான் கை உடைஞ்சு ஆட முடியாம போயிடுச்சு போல, நான் விசாரிச்சேன்னு சொல்லு அவன்கிட்டஎன்றார்

அருகில் நின்றிருந்த மிதுவுக்கு மனம் கலங்கியது. ஜீவாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. கைப்பேசி எண்ணை மாற்றி விட்டான் போல, அவனது நலமறிய வேண்டி வாசுகியை விட்டு பேச சொல்லியிருந்தாள், அந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்தது.

ஆறு மாத காலமாக அவனை பார்க்கவில்லை, பேசவில்லை, அவனுடன் எந்த தொடர்பும் இல்லை, எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் எதுவுமே தெரியவில்லை என்றெல்லாம் யோசித்து யோசித்து மிதுவிடமும் மகிழ்ச்சி காணாமல் போயிருந்தது

ஏன் எப்படியோ இருக்கிறாய் என வீட்டில் கேட்ட போது, “படிக்க நிறைய இருக்கு, அந்த பிரஷர்என பொய் சொல்லி சமாளித்திருந்தாள்

அப்படிலாம் உன்னை போட்டு வருத்திக்கிட்டு படிக்காத பாப்பா, பாஸ் பண்ணினா போதும், உடம்ப பார்த்துக்கடாஎன பசுபதி சொல்லியிருக்க, அதையே, “உடம்பு நல்லா இருந்தாதான் எதுவுமே, இன்னும் இளைச்சு போனா படிப்பே வேணாம்னு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவேன் பார்த்துக்கஎன கண்டிப்புடன் சொல்லியிருந்தார் வினோதினி

பிரிந்து போய் ஆறு மாதங்கள் ஆகியும் மிதுன்யாவுக்கு ஜீவாவின் நினைவுகளோ அவன் மீது கொண்ட நேசமோ கடுகளவு கூட மறையவோ குறையவோ இல்லை

உன் அக்கா கல்யாணத்துல இப்படி உம்முன்னு நிக்க வேணாம் நீ, சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய் டிமிதுவின் காதில் கிசு கிசுத்தாள் தீபா. பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டாள் மிது. ஆனால் அந்த சுதாரிப்பு வெகு நேரம் நீடிக்கவில்லை

அன்புக்கும் லாவண்யாவுக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. சில சடங்குகளின் போதெல்லாம் மனைவிக்கே விட்டுக் கொடுத்தான் அன்பு. சுற்றியிருப்போரின் கிண்டல் பேச்சுகளுக்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.

வெட்கமும் மனநிறைவுமாக  பொலிவுடன் இருந்தாள் லாவண்யா

மிதுவால் அவளது உடன்பிறந்த ஒரே சகோதரியின் திருமணத்தில் கூட மனமொன்றி நிற்க முடியவில்லை. அந்த மணக் கோலத்தில் ஜீவாவின் அருகில் தானும் இருக்க வேண்டும் எனதான் மனம் ஆர்ப்பரித்தது

எளிதாக பிரிவை சொல்லி சென்றவன் இப்படி கண்களில் கூட தென் படாமல் இருக்கிறானே என நினைத்தவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. அவசரமாக ஓய்வறை சென்று தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு வெளியில் வந்தாள் மிது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பையனை காதலித்த மிதுவின் மாமா மகள் வீட்டில் போராடியும் அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனதால் வீட்டினருக்கு தெரியாமல் விரும்பியவனையே பதிவுத் திருமணம் செய்திருந்தாள். ஒரு மாத காலத்தில் அவளது வீட்டில் பெண்ணை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

அந்தப் பெண் தன் கணவனோடு இந்த திருமணத்திற்கு வந்திருந்தாள். கணவனை விட்டு எங்கும் பிரியாமல் அவனோடே சுற்றிக் கொண்டிருந்தாள், அவனும் இவ்வளவு கூட்டத்திலும் மனைவியின் பிடித்த கையை விடாமல் இருந்தான்

அப்படி என்னதான் வீட்டில் பேசாததை இங்கு பேசுவார்களோ, மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டார்கள். சுற்றமே அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை போலும், உலகையே வென்று விட்ட ஆனந்தத்தோடு வளைய வந்தார்கள்

மிதுன்யாவும் சராசரி பெண்தானே? அவர்களை கண்டு பொறாமை எழுந்தது. இது தவறு என தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். ஆனால் விதி அந்த பொழுது அவளை வைத்து செய்வது என தீர்மானித்து விட்டது, அவள் போகும் இடமெல்லாம் அந்த காதல் தம்பதியினர்தான்  அவளது பார்வையில் பட்டனர்

அந்த மாமா மகளின் காதலை மறுத்த அவளின் வீட்டினர் எல்லாம் எங்கள் மாப்பிள்ளை இப்படி அப்படி என வாய் ஓயாமல் சொந்தங்களிடம் பெருமை பேசினார்கள்

எந்தக் காதலை சொல்லி ஒழுங்காக படித்து வா என மிதுவின் அம்மா அவளை எச்சரித்தாரோ அவரே, “நல்ல பையன்தான், அவளை அப்படி தாங்குறான், ஏதோ நல்லா இருந்தா சரிஎன சொல்கிறார்

இந்தக் காதலை நினைத்து உடல் நலமில்லாமல் போன மிதுவின் அம்மாச்சி கூட இப்போது ஜம் என இருக்கிறார், பேத்தியின் கணவனுடன் சிரித்து சிரித்து பேசுகிறார்

வீட்டினர் எதிர்ப்பெல்லாம் நிரந்தரம் இல்லை, கொண்ட காதலில் என் மாமன் மகளிடம் இருந்த உறுதி என்னிடம் இல்லை, அதனால்தான் ஜீவாவை நான் இழந்து விட்டேன் என ஆதங்கப் பட்டாள்

என்னைத் தவிர எல்லாருக்கும் எல்லாம் சரியாக அமைகிறது, நான் துரதிஷ்டசாலி என நினைத்து வருந்தினாள்

என்னால் தெளிவாக முடிவெடுக்க தெரியவில்லை, ஜீவாவின் அம்மாவுக்கு எந்த அவமரியாதையும் இல்லாமல் எப்படி காதலில் வெற்றி பெறலாம் என சேர்ந்து யோசிப்பதை விடுத்து பிரிவை தேர்ந்தெடுத்தது முட்டாள்தனம், நான் முட்டாள் என அவளை அவளே திட்டிக் கொண்டாள். 

இப்படியாக குழப்பதிலும் சுய பச்சாதாபத்திலும் சோர்ந்து போனாள் மிது

மங்கம்மா பாட்டியும் விஜயலக்ஷ்மி பாட்டியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் முகவாயை தோளில் இடித்துக் கொண்டனர். சாம்பலுக்குள் மறைந்த நெருப்பாக ஒருவருக்கு மற்றவர் மீதான கோவம் இன்னும் இருக்கிறதுதான்

என்னவோ உன் பெரியப்பா தெரியாமல் செய்து விட்டார், உன் திருமண அழைப்பிதழில் அவரின் பெயரையும் போட வேண்டும், முறையாக நேரில் சென்று அவரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் எவ்வளவோ அன்புவிடம் சொல்லி பார்த்து விட்டார் அருந்ததி

 அவரது மகளின் திருமணத்துக்கு உதவி வேண்டுமென்றால் என்னிடம் வந்திருக்கலாமே, கோபிகாவிடம் சென்று நின்றாரே, எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்? என் அம்மாவை அசிங்க படுத்துவதுதானே அவரது நோக்கம்?

 கோபிகாவைமணப் பெண்ணின் சின்னம்மாஎன உறவுமுறை போட்டே அழைப்பிதழில் அன்புவின் பெரியப்பா பொட்டிருந்தார், அவர் உங்கள் பெண்ணுக்கு சின்னம்மா  என்றால் முறையாக திருமணம் செய்து வாழ்ந்த என் அம்மா யார்? என அன்புவுக்கு அவனது பெரியப்பா மீது பெருங்கோபம்

நீ வராவிட்டால் நானாவது செல்கிறேன் என அருந்ததி சொல்ல, சாப்பிட தூங்க என எதற்கும் வீட்டிற்கு வராமல் தன் எதிர்ப்பை காட்டி அவரையும் போக விடாமல் செய்திருந்தான்

அவனது சிறு வயதில் நடந்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் பெரிதாக அவனுக்கு தெரியாது. கோபிகாவும் ஏமாற்ற பட்டிருப்பார் என்ற கண்ணோட்டத்தில் அவன் சிந்தித்ததே இல்லை, தன் அப்பாவால் வஞ்சிக்க பட்ட பாவப்பட்ட பெண் என் அம்மா, அதற்கு துணை அந்த கோபிகா என்பதாகத்தான் அவனது மனதில் பதிந்து போயிருந்தது

நேரில் பார்த்தே இராத கோபிகாவின் மகனையும் மனதிற்குள் வெகுவாக வெறுத்தான்

உயிரோடில்லாத அப்பாவை என்ன செய்ய முடியும், ஆகவே இருக்கும் கோபிகா மீதும் அவரது மகன் மீதும் அளவில்லாமல் துவேஷத்தை வளர்த்துக் கொண்டான்

ஜீவா நடன நிகழ்ச்சியில் ஆடும் போது அதையெல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லாத சங்கரன் பார்த்திருக்கவே இல்லை. அவரது மகளின் திருமண ஆல்பத்தில் ஒரே ஒரு புகைப்படத்தில் ஜீவா இருக்கிறான், அதை அன்பு பார்த்திராத காரணத்தால் அவனுக்கு ஜீவா யாரென இப்போது வரை தெரியாது

என் மகள் உனக்கு தங்கை முறைதானே? உன்னிடம் இல்லாத வசதியா? நீயாக வந்து நின்று உதவியிருக்க வேண்டாமா? என அன்புவின் மீது சங்கரனுக்கு கோவம்

என்ன இருந்த போதும் மகளின் திருமணத்தில் தம்பியின் குடும்பத்தை ஒதுக்காமல் நேரில் போய் அழைத்தார், இப்போது தம்பியின் மகன் தன்னை தவிர்க்கவும் அதை அவமானமாக நினைத்தவர், “எம்பொண்ணு கல்யாணத்துல இவனை அவமான படுத்திட்டேன்னு சொல்றான்ல, நிஜமான அவமானம் என்னன்னு வாய்ப்பு வரும் போது காட்டுறேன் இவனுக்குஎன மனைவியிடம் சவால் போல சொன்னார்

எங்கேயோ போய் நிக்கிறதுக்கு அன்புகிட்ட போய் நில்லுங்கன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன், கேட்டீங்களா? ஒரே ஊர்ல கூப்பிடுற தூரத்துல உள்ளவன பகைச்சுக்கிட்டு எங்குட்டோ  உள்ளவன் உறவு இருந்து என்னாக போகுது நமக்கு? அறிவில்லாத மனுஷன்என தலையில் அடித்துக் கொண்டார் சங்கரனின் மனைவி

யாருக்குடி அறிவில்ல? இப்பவும் ஒரு போன் போட்டா என்ன வேணும்னாலும் செய்யும் என் தம்பி பொண்டாட்டியும் அவன் மவனும். எம்மேல அவ்ளோ பாசம் மரியாதை

அடுத்தவ வாழ்க்கைய சீரழிச்சவள பத்தி என்ன பிரமாதமா பேசுறீங்க நீங்க?” நொடித்தார் திருமதி சங்கரன்

 “அந்த கோபிகாவோட நிலைமை அருந்ததி நிலைமையை விட மோசம், அது போட்ட பிச்சை டி அருந்ததியோட வாழ்க்கை. அருந்ததிக்காகத்தான் அந்த காலத்துல  மெட்ராஸ்ல அந்த புள்ளகிட்ட சண்டை போட்டோம், நான் அந்த சமயம் அருந்ததி பக்கம்தானே பேசினேன், எங்கப்பா கூடுதலா சொத்து கொடுத்தப்பவும்  திரும்ப கொடுன்னு வாங்கிக்கலையே, அன்பு பயலுக்கு நன்றி இல்லாம போலாம், அருந்ததிக்கும் இல்லைங்கிறப்பதான்ஹஹான்இருக்கட்டும் இருக்கட்டும்என கறுவிக் கொண்டார் சங்கரன்.

தன் சித்தப்பா மற்றும் தம்பியின் உறவு இல்லாமல் போய் விட்டதே என அருந்ததிக்கு கவலை இருந்து கொண்டே இருந்தது, இப்போது தம்பியின் மகளே தனக்கு மருமகளாக வாய்த்ததை நினைத்து அவருக்கு பேரானந்தம்