வினோதியின் அண்ணனுக்கு அழைத்து விவரம் சொல்லி உடனடியாக வீட்டுக்கு வரும் படி அழைத்தார் பசுபதி.
வேலை செய்யும் பெண்களிடம் மதிய விருந்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை மாமியாருடன் ஆலோசித்து சொல்லி விட்டே மகளின் அறைக்கு சென்றார் வினோதினி.
லாவண்யாவின் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது, ஆகவே அன்புவின் ஜாதகத்தோடு பொருந்திப் போகிறதா என பார்க்க வேண்டும் என்றார் மங்கம்மா பாட்டி.
“உங்க பேத்திக்கு ஜலதோஷம் கூட பிடிக்காம நான் பார்த்துக்கிறேன், வேற தோஷம் பத்தியெல்லாம் பேச வேணாம் அம்மாச்சி” என அன்பு சொன்ன தொனியில் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது.
விஜயலட்சுமி நேரில் வந்திருக்கவில்லை, அம்மாவுக்கு இங்கு வரத் தயக்கம், அவ்வளவுதான், மற்றபடி பிரச்சனைகள் ஏதுமில்லை என அருந்ததி சொல்ல, யாரும் அவரை பற்றி பேசவில்லை.
தாத்தா மட்டும் ‘என் பேத்தியை உன் அம்மா ஏதும் பேசியதாக கேள்விப்பட்டேன் என்றால் சும்மா விட மாட்டேன்’ என்றார்.
“இந்த அன்புவோட பொண்டாட்டிகிட்ட அதிகாரம் பண்ற தைரியம் யாருக்குமில்ல தாத்தா” என்றான் அன்பு.
“தாலி கட்டினாதான் டா ப்பா உனக்கு அவ பொண்டாட்டி முறை” என நொடித்தார் மங்கம்மா.
“அப்ப கொடுங்க இப்பவே கட்டிடுறேன்” என அன்பும் விளையாட்டாக சொன்னான்.
“தூக்குவான் தூக்குவான், இந்தூட்டு பொண்ண தொட்டு தூக்குற தைரியம் எவனுக்கிருக்கு?” என அன்புவை ஓரக் கண்ணால் கேலியாக பார்த்துக் கொண்டே சொன்னார் பாட்டி.
கோவமாக எழுந்த அன்பு சட்டையின் கைகளை மடித்து விட்டுக் கொண்டான். அவனது பார்வையே பயமுறுத்தியது.
அறைக் கதவை ஒட்டினார் நின்று பார்த்துக் கொண்டிருந்த லாவண்யா பயத்தில் ஓரடி பின்னால் எடுத்து வைத்தாள். எந்த புடவை என பார்த்து எடுத்துக் கொண்டிருந்த வினோதினியும் குழப்பத்தோடு எட்டிப் பார்த்தார்.
என்ன விபரீதம் செய்ய போகிறானோ என அன்புவின் சித்தப்பா பற்களை கடிக்க, என்ன செய்து விடப் போகிறான் என அலட்சியமாக பார்த்தார் தாத்தா.
வேகமாக வந்த அன்பு, மங்கம்மா பாட்டியை அலேக்காக தூக்கிக் கொள்ள, அங்கே ஒரே வெடிச்சிரிப்பு.
“என் பேத்தி உனக்குத்தான் டா, விட்றா என்னை” என சொல்லவும்தான் அவரை கீழிறக்கி விட்டான்.
சின்ன மகளுக்கு அழைத்து விவரம் சொன்னார் பசுபதி. மிதுன்யாவால் நம்பவே முடியவில்லை. அக்காவுக்கு பிடித்திருக்கிறதா என கேட்டுக் கொண்டாள். அக்காவின் வருங்கால கணவரை நானும் பார்க்க வேண்டும் என்றாள்.
“அன்பு, ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் ப்பா, என் சின்ன மக பார்க்கணுமாம் உன்னை” என்றார் பசுபதி.
“யாரு சின்ன பாப்பாவா மாமா?” என கிண்டலாக கேட்ட அன்பு காணொளி அழைப்பிலேயே மிதுவிடம் பேசினான். பிரேக் நேரத்தில் கேன்டீனில் அமர்ந்திருந்த மிதுவுக்கு பேச தடையில்லாமல் போனது.
நீ இல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டேன் என கோவம் கொள்ளாதே, பரிகாரமாக எங்கள் திருமணத்திற்கு விலை உயர்ந்த ஆடைகள் எடுத்துக் கொள், பணம் நான் செலுத்தி விடுகிறேன் என்றான்.
“இதுக்காக ரொம்ப வருத்த படுவீங்க” என மிரட்டி வைத்தாள் மிது.
பேசி விட்டு கைப்பேசியை வைத்த மிதுன்யாவின் மனமெங்கும் ஜீவாவின் நினைவுகளே.
பிரிவதாக முடிவு செய்து நான்கு மாதங்களாகி விட்டன. உள்ளத்தின் வலி இன்னுமே குறைந்திருக்கவில்லை. நாளுக்கு நாள் அவனது நினைவுகள் அதிகமாகிக் கொண்டே போனதே தவிர, அவனை மறக்கவே முடியவில்லை. அலட்டிக் கொள்ளாமல் அவனது நினைவுகளை சுமந்து கொண்டே வெளியில் சிரித்துக்கொண்டு நடமாடி வருகிறாள்.
அன்பு தங்கள் வீட்டின் மூத்த மருமகன் என்றானால் ஜீவாவை தான் அடையும் வாய்ப்பு சுத்தமாகவே அடைப்பட்டு விட்டதாக நினைத்தவளுக்கு தொண்டை அடைத்தது.
சில நிமிடங்களுக்கு பின்னர்தான் தெளிந்து அக்காவிடமும் அம்மாவிடமும் பேசினாள்.
மாமாவின் வீட்டிலிருந்து வந்து விட்டனர் எனக் கூறி பேச்சை முடித்துக் கொண்டார் வினோதினி.
பெண் கேட்கத்தான் வந்தோம், நிச்சயமே நடக்கும் போது மூத்தவரை அழைக்காமல் போனால் நியாயம் இல்லை என்றார் அன்புவின் சித்தப்பா.
தாத்தா கோவமாக ஏதோ சொல்வதற்கு முன் அன்பு முந்திக் கொண்டான்.
“என் அப்பாக்கு கூட பொறந்தவங்க ரெண்டு பேர் இருக்கலாம், எனக்கு ஒரே ஒரு சித்தப்பாதான்” என அழுத்தமாக சொன்னான் அன்பு.
பிரகாசம் ஏதோ சொல்ல வர, அவரின் மனைவி அவரை அடக்கினார்.
“உன் அம்மாவை அழைச்சிட்டு வர ஆள் அனுப்பவா?” என அருந்ததியிடம் கேட்டார் செல்வநாயகம்.
“மண்ணள்ளி தூத்தினா, பொண்ணு கொடுக்க மாட்டேன்னு அவளை மனசுல வச்சுதான் சொன்னாரு, இப்ப அவளை கூப்பிட ஆள் அனுப்புறாராம்” சத்தமாக முணு முணுத்து முகவாயை தோளில் இடித்துக் கொண்டார் மங்கம்மா.
“வாய மூடுடி, எனக்கும் அதுக்கும்தான் விரோதம், அதுக்காக அது பேரன் விஷேஷத்துல நிக்க கூடாதுன்னு சொல்ல முடியுமா?” என கோவப்பட்டார் தாத்தா.
அம்மாவை அழைத்து வருவதற்குள் நல்ல நேரம் போய் விடும், நிச்சயம் நடந்தது தெரிந்தாலே அம்மா சந்தோஷ படுவார், இன்னோரு நாள் அழைத்து வந்து லாவண்யாவை காட்டிக் கொள்கிறேன் என அருந்ததி சொல்லி விட்டார்.
லாவண்யாவை அழைத்து வந்தார் அவரது மாமி. பிரகாசத்தின் மகனும் மகளும் வந்திருந்தனர். இருவரும் கல்லூரியில் படிக்கின்றனர். அவர்கள் போட்டோ, வீடியோ என எடுத்தனர்.
“மருமகள முத முத பார்க்க வரும் போது சும்மா எப்படி வர்றதுன்னுதான் சாதாரணமா ஒரு பட்டு புடவை வாங்கிட்டு வந்தேன். இதுவே நிச்சய புடவை ஆகும்னு நினைக்கல” என்றார் அருந்ததி.
“அதுக்கென்ன அக்கா, இது ஒரு புடவைதான் எடுத்து தர போறோமா? இதுக்கெல்லாம் கவலை படாதீங்க” என்றார் அன்புவின் சித்தி.
புடவையை வைத்துக் கொடுத்தனர், லாவண்யா மாற்றி வந்ததும் தான் அணிந்திருந்த அட்டிகையை அவளுக்கு அணிவித்து விட்டார் அருந்ததி.
“இதெல்லாம் எதுக்கு அண்ணி?” எனக் கேட்டர் வினோதினி.
“அப்புறம் என் மருமகளை வெறுங்கையோட நிச்சயம் பண்றதா?” என உரிமையாக சொன்னார் அருந்ததி.
வினோதியின் அண்ணன் நிச்சய பத்திரிக்கை எழுதி வாசித்தார். இரண்டு மாதங்களில் நாள் குறித்திருந்தனர்.
அன்புவையும் லாவண்யாவையும் அருகருகில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்தனர்.
தன் தங்கையின் கைப்பேசி எண்ணை சொல்லி இந்த புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு சொன்னாள் லாவண்யா.
இன்னும் வகுப்புக்கு செல்லாமல் கேன்டீனிலேயே இருந்த மிது புகைப்படங்களை பார்த்தாள். அக்காவின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை கண்டு அக்காவுக்காக சந்தோஷ பட்டாள்.
ஏதேதோ சிந்தனைகள் அவளுள். எதிர்காலத்தில் தனக்கும் தன் வீட்டில் திருமணம் செய்ய முனைவார்கள் என்ற நினைவு வந்தது.
தன்னருகில் ஜீவா இல்லாமல் வேறு யாரோ நிற்பார்கள், அக்கா முகத்தில் இருக்கும் இந்த மகிழ்ச்சி என்னிடமும் இருக்குமா என எண்ணியவளின் கண்கள் நீரில் தழும்பின.
இன்னொருவனுடன் தன்னை இணைத்து கற்பனையாக காணும் கொடுமையை சகிக்க இயலாதவள் கைப்பேசியின் கேலரிக்கு சென்று ஜீவாவின் புகைப்படங்கள் இருந்த கோப்பை திறந்தாள்.
ஒவ்வொரு படமாக பார்த்து வந்தவள் அவன் மட்டும் திரையை ஆக்ரமித்திருக்கும் புகைப்படத்தை பெரிது படுத்தி அவன் உருவத்தை தடவிப் பார்த்தாள்.
சிரித்துக் கொண்டிருக்கும் ஜீவாவை மிதுவின் கண்ணீர் பாதிக்கவே இல்லை, அப்படியே சிரித்துக் கொண்டேதான் இருந்தான் அவன்.
என்னை போல கஷ்டம் அவனுக்கில்லையா? என்னை மறந்து போயிருப்பானா? மறக்கவும் முடியுமா அவனால்? மறந்து மட்டும் போயிருந்தால் சும்மா விட மாட்டேன் அவனை, என பலவிதமாக நினைத்தவள் இறுதியில், இல்லையில்லை என்னை மறந்து விட்டு நன்றாக வாழ வேண்டும் அவன் என மனதார நினைத்துக் கொண்டாள்.