கொஞ்சும் காதல் சாரல் -11

அத்தியாயம் -11

அன்புக்கும் லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் அன்று என சொன்னால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். 

தன் பேத்தியை பெண் தர சம்மதிக்க மறுத்துக் கொண்டேதான் இருந்தார் செல்வநாயகம். மகனின் ஆசை தெரிந்து பல வருடங்களாக பிறந்த வீட்டுக்கு வந்திராத அருந்ததி மகனுக்காக வந்தார். தனியாக வராமல் தன் கணவரின்  தம்பி பிரகாசத்தின் குடும்பத்தினரையும் அன்பையும் அழைத்துக் கொண்டே வந்தார். 

அன்புவின் பெரியப்பா அவரது மகளின் திருமண பத்திரிக்கையில் கோபிகாவின் பெயரை போட்டதால் அவருடன் இப்போது மனஸ்தாபத்தில் இருக்கின்றனர். எனவே அவர் வரவில்லை. 

 தன் சித்தப்பாவிடம் அருந்ததியே நேராக பெண் கேட்டார். 

“எந்தக் காரணமும் சொல்லாதீங்கப்பா, என் மேலேயும் என் வளர்ப்பு மேலேயும் நம்பிக்கை இருந்தா வேற எத பத்தியும் யோசிக்காம நீங்க என் பையனுக்கு பொண்ணு கொடுத்துதான் ஆகணும்” என தீர்மானமான குரலில் சொன்னார் அருந்ததி. 

 பெரியவரால் தன் அன்பு மகளிடம் மாட்டேன் என சொல்ல முடியவில்லை.

 பேச்சுவார்த்தை இல்லை என்ற போதிலும் அன்புவை பற்றி செல்வநாயகம், பசுபதி இருவருக்குமே நன்றாக தெரியும். இவர்கள் மூலமாக வீட்டின் பெரிய பெண்மணிகளுக்கும் தெரியும். 

குடும்பத் தொழிலான எண்ணெய் வியாபாரத்தை அன்புதான் திறம் பட செய்கிறான். அவனது பெரியப்பா அவருடைய சொத்தையெல்லாம் இழந்திருக்க,  என்ன இருந்ததோ அதை வைத்துக்கொண்டு அவனது சித்தப்பா வாழ, இவன் மட்டும்தான் தாத்தா கொடுத்த செல்வத்தை பல மடங்காக பெருக்கியிருக்கிறான், அதுவும் நேர்வழியில். 

அன்புவின் ஊரில் அவனுக்கென தனி செல்வாக்கு இருந்தது, ஊர் மணியக்காரராக அவனது பெரியப்பா இருந்தாலும் இவனுடைய சம்மதம் இல்லாமலோ தலையீடு இல்லாமலோ எந்தக் காரியங்களும் அங்கே நடப்பதில்லை. 

தீய பழக்க வழக்கங்கள் இல்லாமல் நல்ல குணாளனாக இருக்கிறான் என்பதற்கு எந்த ஆதாரமும் அவர்களுக்கு தேவையில்லை. 

இரு குடும்பங்களுக்கு இடையில் தேவையில்லாமல் நடந்த நிகழ்வுகளும் விஜயலட்சுமியின் செய்கையும்தான் பெண் கொடுக்க இவர்கள் தயங்கியதற்கான காரணம். இப்போது அன்புவின் தந்தை வழி தாத்தா உயிரோடு இல்லை எனும் போது, அவர் நடந்து கொண்டதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுப்பது நியாயமாக இருக்காதே. 

சம்மதம் சொல்லி விடும் நிலைக்கு வந்த தாத்தா, தன் மகனிடம் பார்வையால் பேசினார். பசுபதி மட்டும் மறுக்கவா போகிறார். 

 இவர்கள் கேட்டை திறந்து கொண்டு வரும் போதே மகளை அறைக்குள்ளேயே இருக்கும் படி சொல்லி விட்டார் வினோதினி, இப்போது பேச்சுவார்த்தை செல்லும் திசை உணர்ந்து கணவருக்கு கண் காட்டினார். 

அப்பாவிடம் ரகசியமாக பேசிய பசுபதி, வேகமாக மகளை காண சென்றார். 

“என் அக்கா மகன் அன்புவை உனக்கு கட்டி வைக்க நானும் தாத்தாவும் முடிவு பண்ணியிருக்கோம் பாப்பா, உன் அம்மா உன்னை கேட்டுக்க சொல்றா, நீ என்ன சொல்ற?” எனக் கேட்டார். 

“முடிவு பண்ணிட்டு கேட்டா என்னப்பா அர்த்தம்?” என கோவமாக கேட்டாள் லாவண்யா. பின்னே இன்னும் அந்த அன்பு என்பவனை நேரில் கூட கண்டிருக்கவில்லை இவள். 

லேசாக சிரித்தவர், “எம் பொண்ண பத்தி தெரிஞ்சதாலதான் முடிவு பண்ணினோம், ஆனா ஒன்னுடா, உனக்கு ஒரு சதவீதம் கூட இதுல இஷ்டம் இல்லைனா அப்பா உன் பக்கம்தான் இருப்பேன்” என்றார். 

“நல்லாருக்கே, எல்லார்கிட்டேயும் சரின்னு சொல்லிட்டு இப்ப முடிவை என் கைல விடுறீங்களா?” என அதற்கும் கோபித்துக் கொண்டாள்.

“இன்னும் சரின்னு சொல்லலியே பாப்பா”

“சொல்ற மன நிலைலதானே இருக்கீங்க ப்பா?”

“கோச்சுக்காதம்மா, நீதான் அன்பை நேர்ல பார்த்தது இல்லை, பேச்சுவார்த்தை இல்லைனாலும் அவனை பத்தி எல்லா விவரமும் எங்களுக்கு தெரியும் பாப்பா” என்றார். 

“உங்களுக்கு தெரியும், எனக்கு தெரிய வேணாமா? அவரோட ஹைட் என்ன,  குரல் எப்படி இருக்கும், அவர் குணம் எப்படி,  எதுவும் எனக்கு தெரியாதே, அட்லீஸ்ட் அவர்கிட்ட பேசியாவது பார்க்கணும்ல ப்பா” என்றாள்.

“அதுக்கென்னடா, நீயும் ஒரு தடவ அன்புகிட்ட பேசி பாரேன்” என எளிதாக சொன்னார் பசுபதி. 

“ப்பா விளையாடுறீங்களா? இப்ப எப்படி முடியும்?” எனக் கேட்ட மகளிடம் ஏதோ சொன்னவர், ஹாலுக்கு வந்து அன்பை மட்டும் வெளியில் அழைத்து சென்றார். 

அன்புவின் சித்தப்பா பிரகாசமும் உடன் செல்ல எழுந்தார். 

“அவனை என் தம்பிதான அழைச்சிட்டு போறது, நீங்க எதுக்கு, அவங்க என்ன பேசணுமோ பேசிட்டு வரட்டும்” என அருந்ததி சொல்லி விட சரியென அமர்ந்து விட்டார். 

வெளித் திண்ணையில் நின்றிருந்தாள் லாவண்யா, அப்பா சொன்ன படி பின்கட்டு வழியாக இங்கு வந்திருந்தாள். 

தன்னை கண்டது முதல் கல்யாணம் செய்யத் துடிக்கும் அத்தை மகனை காண வேண்டும் என்ற குறுகுறுப்பு  லாவண்யாவின் உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது. 

லேசாக முறுக்கிய மீசையுடன், தன் அப்பாவுடன் சிரித்த முகமாக பேசிக் கொண்டே, கம்பீரமாக  நடந்து வந்த அன்புவை லாவண்யாவுக்கும் முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. 

“எம்பொண்ணு சரின்னு சொன்னாதான் இந்த கல்யாணம் அன்பு” என்றார் பசுபதி.

லாவண்யா மிரட்சியோடு பார்த்தாள். தான் இங்கேதான் இருக்கிறேன் என்பது போல மகளிடம் கண்களால் தைரியம் சொல்லி விட்டு சற்று தூரமாக கிடந்த இருக்கையில் இவர்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்து கொண்டவர் அங்கிருந்த தினசரியை கையில் எடுத்துக் கொண்டார்.  

லாவண்யாவுக்கு அன்புவிடம் பேசவே பட படப்பாக இருந்தது. 

“பேசணும்னு வரச் சொல்லிட்டு அமைதியா நின்னா என்ன அர்த்தம் பாப்பா? பேசுங்க பாப்பா” என்றான் அன்பு. 

“பாப்பாவா? எம்பேர் கூட தெரியாதா உங்களுக்கு?” 

“தெரியாம என்ன? உங்கப்பா உன்னை பாப்பான்னுதான் சொன்னார்” 

“அது அவருக்கு, உங்களுக்கு இல்லை” 

“சரி, நான் உன்னை எப்படி கூப்பிடணும்னு நீயே சொல்லு”

“ப்ச், உங்களுக்கு பிடிச்சா போதுமா? இப்படித்தான் பொண்ணு கேட்டு வந்து தொபுபுக்கடீர்னு குதிப்பீங்களா? என் இஷ்டம்லாம் உங்களுக்கு முக்கியம் இல்லைல?”

“வீட்ல உனக்கு வரன் பார்க்கிறாங்கதான? நீ வேற யாரையும் லவ் பண்ணல, பொண்ணு கேட்டு வந்தேன், என்னை பிடிக்காதுன்னு சொல்ல மாட்டேன்னு ஒரு நம்பிக்கைதான்” என்றான். 

“ஹையோ! ஓவர் கான்ஃபிடெண்ட்” என்றாள். 

“இருக்கட்டுமே, என்ன தப்பு?”

“பிடிக்கலைன்னு நான் சொல்லிட்டா என்ன செய்வீங்களாம்?”

“எங்க சொல்லு, என்னை பார்த்து சொல்லு”

அவன் முகத்தை பார்த்தவளுக்கு வார்த்தையே வரவில்லை. 

சின்னதாக சிரித்தவன், “எதுக்கு வராத வார்த்தையை இழுத்து பிடிக்க நினைக்கிற? சும்மா பிடிச்சிருக்குன்னே சொல்லு, இத செய்வேன் அப்படி வச்சு பார்த்துப்பேன்னு எல்லாம் கதை விட மாட்டேன். இந்த வீட்ல எப்படி இருக்கியோ அப்படியே அங்கேயும் இருக்கலாம், நீ நீயாவே இருக்கலாம். நீ சொல்ற எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுவேன்னு பொய் சொல்ல மாட்டேன், எல்லா விஷயத்துலேயும் உன் விருப்பம் என்னங்கிறத தயங்காம சொல்லலாம், நான் மறுத்தேன்னா என்கிட்ட தாராளமா சண்டை போடலாம்.  நான் கோவ பட்டா பதிலுக்கு நீயும் கோவப்படலாம்,  எனக்கு ரெண்டு அடி கூட வைக்கலாம்…” என பேசிக் கொண்டே போனவன் அவளின் கண்டன பார்வையில் அமைதியானான். 

“கல்யாணத்துக்கப்புறம் கூட என் இனிஷியல் மாத்திக்க மாட்டேன், எங்கப்பா இனிஷியல்தான் கடைசி வரைக்கும் போட்டுப்பேன்” என்றாள். 

“இப்படி அப்பன் மேல உசுரா இருக்கிற பொம்பள புள்ள எனக்கும் பொறக்கும், அது போட்டுக்கும் என் இனிஷியல” என்றான். 

 இதழ்களில் அடக்கப் பட்ட சிரிப்பு, கன்னங்களிலோ எதிரில் இருப்பவனின் கண்களை சிமிட்ட விடாத வெட்கச் சிவப்பு என லாவண்யாவின் முகம் அழகில் ஜொலித்தது. 

அவளை ரசித்துக் கொண்டே, “உங்கப்பாட்ட என்ன பதில் சொல்றதுன்னு முடிவுக்கு வந்திட்டியா?” எனக் கேட்டான். 

“அதெப்படி பார்த்த உடனே என்னை பிடிச்சு போய் கல்யாணம் செய்ற அளவுக்கு முடிவு பண்ணுனீங்க?” எனக் கேட்டாள். 

“நான் பார்த்ததும் பிடிக்கிற அளவுக்கு நீ ஏன்  இருந்த?” என அவன் கேட்கவும், “ஷ்ஷ்ஷ்… பதில் சொல்லுங்க” என்றாள். 

“பிடிச்சுதான் போச்சு, யாரு என்னன்னு விசாரிச்சு இன்னாருன்னு நீ தெரிய வரவும் எப்படி விடுவேன்? அந்தளவு முட்டாள் இல்லை நான், என்ன… அப்படி இல்லைதானே?” எனக் கேட்டான். 

அவனது முகத்தை மீண்டுமொரு முறை பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டே, சம்மதமாக தலையாட்டினாள். 

“நான் உள்ள போறேன், உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியதை சொல்லி உள்ள அனுப்பி வை” 

“எங்கப்பா உங்களுக்கு மாமா” 

“அப்படி கூப்பிட்டு பழக்கம் இல்லைல, அதான், இனிமே பார்த்துக்கிறேன், சீக்கிரம் என் மாமாவை அனுப்பி வை” என சொல்லி உள்ளே சென்று விட்டான். 

சில்லிட்டு போயிருந்த கைகள் இரண்டையும் கன்னங்களில் வைத்து அழுத்திக் கொண்டாள். பெரிய மூச்சுகள் விட்டு தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு அப்பாவின் முன் போய் நின்றாள். 

மகளின் முகத்தை வைத்தே அவளின் மனம் உணர்ந்தவர், “மேற்கொண்டு பேசலாமா பாப்பா?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தார். 

சரியென்றவள் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“வந்த மாதிரியே உள்ள போ, நான் பார்த்துகிறேன்” என சொல்லி பசுபதியும் உள்ளே சென்று விட்டார். 

முடிவை மாமா வந்து சொல்வார் என சொல்லி விட்டுத்தான் அமர்ந்திருந்தான் அன்பு. இப்போது அனைவருமே பசுபதியை பார்த்திருந்தனர். அவர் தன் அப்பாவை பார்த்தார். 

அவர் கண்களால் சம்மதம் தரவும், மகளுக்கு பட்டுபுடவை கட்டி அலங்காரம் செய்யும் படி மனைவியை பணித்தார் பசுபதி.  

“நாங்க எடுத்திட்டு வந்திருக்கோம், அத கட்டி விடுங்க” என்றார் அருந்ததி.