கடந்த ஒரு வார காலமாகவே நீடிக்கும் ஜீவாவின் அமைதி கோபிகாவை குழப்பமுறச் செய்தது. நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத காரணமோ என கூட அவரால் நினைக்க முடியவில்லை.
ஏனெனில் முன்னரே இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவில்தான் ஜீவா இருந்திருக்கிறான் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் பங்கஜ் மூலமாக இவருக்கு தெரிய வந்திருந்தது.
ஜீவா இரண்டு பெண் தோழிகளுடன் மாசிலாமணியின் வீட்டிற்கு சென்றான், போகும் போது நன்றாக இருந்தவன் கிளம்பும் போது அவனது முகமே சரியில்லை என ரங்கசாமியும் சொல்லியிருந்தார்.
விரும்பும் பெண்ணுடன் ஏதோ மனஸ்தாபம் போல என எண்ணிக் கொண்டார் கோபிகா. பக்குவம் இல்லாத பையன் இல்லை, அவனுக்கான தனிமை கொடுக்க வேண்டும், அவனாக சொல்லும் வரை தலையிடக் கூடாது என நினைத்தார்.
எதுவாக இருந்தாலும் சரியாகி விடும், நிதானம் இருந்தால் எந்த சிக்கலான பிரச்சனை என்றாலும் தீர்வு பிடிபடும், எதற்காகவும் கவலை படாதே என்றெல்லாம் ஆறுதல் வார்த்தைகள் கூறி விட்டு அவரது பணி நிமித்தமாக வெளியூர் சென்று விட்டார்.
ஐந்து நாட்களுக்கு பின் அவர் சென்னை திரும்பிய போதும் ஜீவாவிடம் தெளிவு ஏற்பட்டிருக்கவில்லை.
ஜீவா சரியாக சாப்பிடுவதும் இல்லை என சரோஜா தெரிவிக்கவும் இதற்கு மேல் சும்மா விட கோபிகாவுக்கு மனமில்லை.
மகனை அமர வைத்து என்னவென விசாரித்தார்.
தன் தந்தை அவரது முதல் மனைவிக்கும் மகனுக்கும் இழைத்த துரோகத்தை அறிந்திருந்தாலும் அதை வைத்து தன் அம்மாவை அவனால் தவறாக கற்பனை கூட செய்ய முடியவில்லை.
தன் அம்மா தவறிழைக்கவில்லை என்பதற்கு விளக்கங்கள் ஏதும் அவனுக்கு அவசியப் படவில்லை. முடிந்து போன கதையை அம்மாவிடம் கேட்டு அவரை துன்பப் படுத்தவும் அவனுக்கு விருப்பமில்லை.
எங்கேயோ தன் அம்மாவும் ஏமாந்து போயிருக்கிறார் என்பதை ஆணித் தரமாக நம்பினான். அப்படி ஏமாற்றிய தன் அப்பாவின் மீது கோவமாக வந்தது, இந்த உலகில் இல்லாதவர் மீது அந்த கோவத்தை காட்ட இயலாதே.
கொஞ்சம் கொஞ்சமாக தன் அம்மா மற்றும் தன்னுடைய வாழ்க்கை ரகசியத்தை ஜீரணிக்கும் முயற்சியில் இருக்கிறான், அது அவ்வளவு எளிதானதாக இல்லை.
இப்போது என்ன என கேட்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லவென அமைதியாக இருந்தான்.
“யார் கூடவும் சண்டையா ஜீவா? ரெண்டு வாரம் முன்னாடி மணி வீட்டுக்கு போனியே, சாமி அண்ணன் சொன்னார்” என மறைமுகமாக கேட்டார்.
“ஆமாம் மா, சரியாகிடும், சின்ன பிரச்சனைதான்” என்றான்.
ஓரளவு நிம்மதியடைந்த கோபிகா, “நீயா சொல்வேன்னு பார்த்தேன், இன்னும் என்கிட்ட சொல்ல என்னடா தயக்கம்? யாரந்த பொண்ணு? சென்னைலயா இருக்கா?” என விசாரித்தார்.
“ம்மா… வேற பேசலாமா?” என சோர்ந்து போன குரலில் அவன் கேட்கவும், மீண்டும் அவரை பயம் தொற்றிக் கொண்டது.
அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். மகன் உறங்கிய பின்னரும் அவனை நகர்த்தாமல் அப்படியே அமர்ந்து விட்டார் அவர்.
மதுரையை பூர்வீகமாக கொண்டவர் கோபிகா. பிழைப்பு தேடி சென்னை வந்தார்கள். கோபிகாவின் தந்தையால் பெரிதாக பணம் ஈட்ட முடியவில்லை. கோபிகா வசீகரமான அழகி, நன்றாக நடனம் ஆடுவார், அவர்களின் குடியிருப்புக்கு அருகில் இருந்த பெண் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்தார். அவர்தான் கோபிகாவையும் திரைப்படங்களில் வாய்ப்பு தேட சொல்லி யோசனை கொடுத்தார்.
கோபிகாவின் அப்பாவுக்கு விருப்பமில்லை என்ற போதும் வீட்டின் வறுமை அவரை வாய் மூடி இருக்க செய்து விட்டது.
அத்தனை எளிதில் எதுவும் வாய்ப்புகள் அமையவில்லை, பின்னர்தான் பாடல் காட்சியில் பின்னணியில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பங்கஜும் அவருக்கு அறிமுகம்.
சற்று பண வரவு கணிசமாக தொடங்கவும் தண்ணீர் பிரச்சனை இல்லாத ஓரளவு வசதியான ஒரு குடியிருப்புக்கு மாறினார்கள். பக்கத்து வீடு பூட்டியிருந்தாலும், வாடகைக்கு விடப் பட்டிருப்பதாகவும் அவ்வப்போது ஒரு ஆள் வந்து தங்குவார் எனவும் கேள்வி பட்டிருந்தனர்.
ஆமாம், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தது பாலச்சந்திரன்தான். எண்ணெய் வியாபாரத்துக்காக சென்னை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இங்குதான் தங்குவார்.
ஒரு இரவில் கோபிகாவின் தந்தைக்கு உடம்பு மிகவும் முடியாமல் போய் விட்டது, நல்ல மழை வேறு. அவரை மருத்துவமனையில் சேர்க்க சந்திரன்தான் உதவினார். அப்படித்தான் கோபிகாவுக்கு அவர் பழக்கமானார்.
நாளைடைவில் இருவருக்கும் பிடித்து போனது, ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினார்கள். கிராமத்தில் வாழும் என் பெற்றோர் உன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், திருமணம் செய்து கொண்டு இங்கேயே வாழலாம், அவர்களின் மனம் மாறினால் அங்கே போகலாம், மாறவே மாட்டார்கள் என தெரிந்தால் நம் வாழ்க்கையை இங்கேயே தொடரலாம் என சந்திரன் சொன்னதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை கோபிகா.
அவர்கள் சம்மதம் தரும் வரை காத்திருக்கலாம் எனதான் சொன்னார். ஒத்துக் கொள்ளாமல் பேசி பேசியே கோபிகாவை சம்மதிக்க வைத்து விட்டார் சந்திரன்.
சினிமா சமபந்த பட்ட தங்கள் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நல்ல படியாக நடக்குமா என்ற பயத்தில் இருந்த கோபிகாவின் பெற்றோரும் சில மாத கால பழக்கத்திலேயே நல்லவராக தென்பட்ட சந்திரனுக்கு மகளை மணம் முடித்து தர சம்மதித்தனர்.
திருமணத்துக்கு பின்னர் கோபிகாவை நடனம் ஆடுவதை விடச் செய்து மாமனார் குடும்பத்தையும் சந்திரனே கவனித்துக் கொண்டார். கோபிகாவின் தம்பி இளங்கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அவ்வப்போது கிராமத்துக்கு சென்று வரும் கணவரிடம் நம் விஷயத்தை சொன்னீர்களா எப்போது என்னை அங்கே அழைத்து செல்வீர்கள் என கேட்க தவறுவதில்லை கோபிகா. ஏதாவது பொருத்தமான கதை சொல்லியே சமாளிப்பார்.
இரண்டு வருடங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை. ஒரே நாளில் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வெறும் மாயை என்றாகிப் போனது.
சந்திரனின் அப்பா, அண்ணன், தம்பி மூவரும் நேரில் வந்து சண்டையிட்ட போதுதான் உண்மையெல்லாம் கோபிகாவுக்கு தெரிய வந்தது.
முதல் மனைவியை எனக்கு பிடிக்க வில்லை, அது கட்டாயக் கல்யாணம், உன்னைத்தான் உண்மையாக விரும்புகிறேன், அவளை விவாகரத்து செய்து விட்டு நிரந்தரமாக இங்கேயே வந்து விடுகிறேன் என்றார் சந்திரன்.
தானுமே சந்திரனால் ஏமாற்றப் பட்டிருந்தாலும் ஏமாந்து போன இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் கொள்வதை கோபிகாவால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தெரிந்தே திட்டமிட்டு செய்த தவறுக்கு நியாயங்கள் கற்பிக்கும் கணவரை மன்னிக்கவும் முடியவில்லை.
உங்கள் மகனை அழைத்து சென்று விடுங்கள் என அப்போதே சந்திரனின் அப்பாவிடம் சொல்லி விட்டார் கோபிகா. ஆனால் சந்திரன்தான் ஊருக்கு போக மறுத்தார். வீட்டிற்குள் நுழையக் கூடாது என அவரை வெளியேற்றினார் கோபிகா. தான் கருவுற்றிருந்த செய்தியையும் அவருக்கு சொல்லாமல் மறைத்தார்.
பழைய படி பக்கத்து வீட்டை மீண்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு கோபிகாவின் பாரா முகத்தை பொருட் படுத்தாமல் எப்படியாவது சமாதானம் செய்து விடலாம் என போராடினார் சந்திரன்.
அடிக்கடி சந்திரனின் வீட்டிலிருந்து யாராவது வருவார்கள், உன் மனைவி மகனை நினைத்து பார் என எடுத்துக் கூறி ஊருக்கு வரச் சொல்லி அழைப்பார்கள், அவர்களின் பேச்சுக்கு மசிய மறுத்து அங்கேயே இருந்தார் சந்திரன்.
கர்ப்பத்தை எத்தனை நாட்களுக்கு மறைக்க இயலும்? அது தெரிய வரவும் கோபிகாவின் எதிர்காலத்தை நினைத்து கவலை கொண்ட அவரது பெற்றோர் கூட சந்திரனை ஏற்றுக் கொள்ள சொன்னார்கள். கோபிகா பிடிவாதமாக மறுத்து விட்டார்.
இளங்கோ படிப்பை பாதியில் விட்டு விட்டு பங்கஜின் உதவியால் சினிமா கம்பெனி ஒன்றில் எடுபிடி வேலைக்கு சேர்ந்தான். அவன் ஒருவனது வருமானத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியவில்லை, கோபிகாவாலும் அவரது கர்ப்பத்தின் காரணமாக வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. அவ்வப்போது பங்கஜ் உதவி செய்தாலும் சமாளிக்க முடியாத நிலை. மீண்டும் வறுமை அந்தக் குடும்பத்தை பின்னிக் கொண்டது.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து செயல்பட்டார் சந்திரன். இளங்கோவுக்கும் மாமாவை ஏற்றுக் கொண்டால்தான் என்ன என அக்காவின் மீது கோவம். யார் சொல்லியும் கேட்க வில்லை கோபிகா, விலக்கி வைத்த உறவு முடிந்து போன கதை என முடித்துக் கொண்டார்.