ஆதீஸ்வரன் எதையோ யோசித்தபடி சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாக அவ்விடத்தில் நடந்து கொண்டிருந்தான். என்னதான் திட்டம் போட்டாலும், விடிந்தும் விடியாத இந்த காலைப் பொழுதில் எதுவும் செய்ய வழியில்லை. குறைந்தபட்சம் இன்னும் சில மணி நேரங்களையாவது கடத்த வேண்டும். அதுவரை எப்படி சமாளிக்க என்று யோசித்தபடி தனக்குள் எதையோ திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
சத்யேந்திரனுக்கு இருக்கும் சூழல் அச்சுறுத்த தென்னரசுவை பார்த்து, “காப்பாத்துங்களேன்…” என சைகை காட்ட, அவன் கொஞ்சம் கூட இவனைக் கண்டுகொள்ளாமல், சட்டைக்குப் போட்ட கஞ்சியைத் தானும் அள்ளி குடித்தவன் போல விரைப்பாக நின்று கொண்டிருந்தான்.
அண்ணன் மீது தென்னரசு வைத்திருக்கும் அபிமானமும், விசுவாசமும் நன்றாக தெரிந்திருந்தும்… அவரிடம் போய் உதவி கேட்டோமே என சத்யா தான் தன்னைத்தானே திட்டிக்கொள்ள வேண்டியதாய் இருந்தது.
கொஞ்ச நேரம் தீவிரமாக யோசித்த ஆதீஸ்வரன் தென்னரசுவைத் திரும்பிப் பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் போல வேகமாக ஆதியின் அருகில் வந்தான்.
அண்ணனின் ஒரே பார்வையில் ஓடிச் செல்லும் அரசுவை கவனித்த சத்யா, ‘ம்க்கும்…’ என தனக்குள் நொடித்துக் கொண்டான். அண்ணனை ஏற்றி விடுவதே அவரை சுற்றி இருக்கும் கூட்டம் தான் என்பது அவனது எண்ணம். என்னதான் அண்ணனின் ஆளுமை பிடித்தாலும், அவன் இயல்பாகவே இருப்பதில்லையோ என்ற கவலை சத்யாவிற்கு இருந்து கொண்டே இருக்கும்.
ஆதியை வேகமாக நெருங்கிய அரசுவிடம், ஆதி சன்ன குரலில் சில கட்டளைகளைப் போட, அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், அவன் சொல்லி முடித்ததும், “பண்ணிடலாம் சார்…” என தலையசைத்து நகர்ந்தான்.
கண்டும் காணாமலும் அவர்கள் இருவரையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த சத்யாவை நெருங்கிய தென்னரசு அவனது தோளில் கை போட்டு, “சத்யா கொஞ்சம் என் கூட வா…” என அவனைத் தனியே அழைத்துக் கொண்டு சென்றான்.
தென்னரசு சத்யாவிடம் தாராவை பற்றிய மொத்த விவரங்களையும் சேகரித்து விட்டு, அவன் மேற்கொண்டு சொல்ல வருவதைக் கேட்கக் கூட நில்லாமல், “இங்கேயே இரு… இப்ப வந்துடறேன்…” என்று அவனைத் தனியாக விட்டுவிட்டு நகர்ந்திருந்தான்.
‘இந்த அரசியல்வாதிங்க தான் என்ன சொல்ல வரோம்ன்னு கேட்க மாட்டேங்கறாங்கன்னா… கூட இருக்கவங்களும் அப்படித்தான் இருப்பாங்க போலவே…’ என நெடுமூச்சை விட்டு தனக்குள் புலம்பிக்கொண்ட சத்யாவிற்கு, இப்படி இக்கட்டான நிலையில் தன்னை கொண்டுவந்து நிறுத்திய கனிகாவை உண்டு இல்லை என்று ஆக்கும் ஆவேசம். ஆனாலும் அதை எல்லாவற்றையும் தனக்குள் மூட்டை கட்டி வைத்துக் கொண்டான். பிறகு அவளிடம் காட்டுமளவு அவனுக்குத் தைரியம் ஏது?
சத்யா ஆதீஸ்வரனின் தம்பி என்று நம்ப முடியாத அளவிற்குக் கொஞ்சம் பயந்த சுபாவம். அவன் இயல்பிலேயே இப்படி எல்லாம் பயந்தவன் இல்லை. ஒரு துர்சம்பவத்தின் பிறகு வந்துவிட்ட பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
அந்த சம்பவத்திலிருந்து மீளவும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளைச் சமாளிக்கவும் என அவர்களது குடும்பம் பெருமுயற்சி செய்து தத்தளித்த போது, சத்யாவைக் கவனித்து அவன் பிரச்சினையை மீட்பார் யாரும் இல்லாமல் போனார்கள்.
சத்யாவிடம் பேசிவிட்டு விலகிச் சென்ற தென்னரசு தங்களுக்கு மிகவும் நம்பகமான டிடெக்ட்டிவ் ஒருவருக்கு தாராவின் தகவல்களை எல்லாம் அனுப்பியவன், அவரை அழைத்து, “பேக் கிரவுண்ட் செக் பண்ணுங்க… அரசியல் பின்புலம் எதுவும் இருக்கான்னு தெரியணும். முக்கியமா அந்த பிரதாபனுக்கு எந்த வகையிலும் தெரிஞ்ச பொண்ணான்னு தெரியணும். சீக்கிரம் டீடெயில்ஸ் கொடுங்க…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் சத்யாவைத் தேடி வந்தான்.
“அண்ணா… அவங்க நீங்க சந்தேக படற மாதிரி பொண்ணு எல்லாம் இல்லை… கேரளா பொண்ணு. அவங்களுக்குன்னு உறவா இருந்த அம்மாவும் இறந்து போயிட்டாங்கலாம். பீகார் மெடிக்கல் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தாங்க. இப்பதான் படிப்பு முடிஞ்சிருக்கு. ஆதரவுக்கு ஆள் இல்லைன்னாலும், கொஞ்சம் வெல்தி பேமிலி தான்… அதுதான் அவங்க படிப்புக்கு எந்த தடங்கலும் இல்லை… எதிர்பாராம ஒரு பிரச்சினையில மாட்டிட்டாங்க போல. பார்க்கப் பாவமா இருந்தது அதுதான் உதவி செஞ்சேன்…” என சத்யா அடுக்க, என்ன விளக்கம் சொன்னாலும் தென்னரசுவுக்கும் சத்யா செய்ததில் உடன்பாடில்லை தான்.
‘அதெப்படி ஒரு பெண்ணை வீட்டில் ஆள் இல்லாதபோது இங்குத் தங்க வைக்கலாம்? அதுவும் யாருக்கும் தெரியாமல், தெரியப்படுத்தாமல்?அவளால் நேரடியாகத் தான் பிரச்சினை வரும் என்றில்லையே! அவள் நல்லவளாகவே இருந்தாலும் அவளைப் பகடை கயாக வைத்து எப்படி எல்லாம் பிரச்சினையைத் திரிப்பார்கள்? இதில் வீணாகச் சம்பந்தமே இல்லாத அந்த பெண்ணையும் உள்ளிழுத்து வேறு வைத்தாயிற்று. இந்த அரசியல் உலகத்தில் எத்தனை வேலைகள் நடக்கிறது. இதற்கேற்ப கவனமாக இல்லாமல், இத்தனை அஜாக்கிரதையாகவா இருப்பது?’ என்பது போன்ற மனத் தாங்கல்கள் சத்யா மீது தென்னரசுவிற்கு இருந்த போதும் எதையும் அவனிடம் காட்டவில்லை.
சத்யா விசயத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்து, வழக்கமாக அவன் சிறு சிறு பிழைகள் செய்யும்போதும் எடுத்துச் சொல்பவன் தான்… ஆனால், இப்பொழுது ஏற்கனவே ஆதியின் கோபத்தில் அரண்டு போய் இருப்பவனிடம் இத்தனை எச்சரிக்கைகளை எப்படிச் செய்வது என எண்ணிய தென்னரசு, பிறகு நிதானமாகச் சொல்லிக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
தென்னரசு தன் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதைக் கண்டு சத்யா, “ஒன்னு சொல்ல வரதை கேட்க மாட்டேங்கறீங்க… மீறிச் சொன்னாலும் சொல்லும்போதும் காதுல வாங்கிக்க மாட்டீங்கறீங்க…” என்று மனத்தாங்கலுடனும் கடுப்புடனும் புலம்ப,
“ஸ்ஸ்ஸ்… ப்ளீஸ் சத்யா… வீ ஹேவ் மோர் திங்க்ஸ் டு டூ… வெளிய இருக்க போலீஸை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க முடியாது. கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணு…” என்று அழுத்தமாகச் சொன்னவன், ஆதி சொன்னதைச் சொன்னான்.
அதைக் கேட்டதும், “என்னது நிஜமாவா?” என கண்கள் விரிந்தது சத்யேந்திரனுக்கு. “இப்பவே வர சொல்லறேன்…” எனத் துள்ளிக்கொண்டு ஓட பார்க்க,
“ஹேய் நில்லு… நில்லு…” என இழுத்து பிடித்து, “ரொம்ப ரொம்ப நம்பகமானவங்க… மொத்தம் பத்துக்கும் மேல போயிட கூடாது. இங்கே வந்து எந்த சேட்டையும் செய்யாத வானரங்களை மட்டும் கூப்பிடு…”
“எனக்கு தெரியலை… வேணும்ன்னா ஆதி சார் கிட்ட கேட்டு சொல்லவா?” என தென்னரசு கேட்க, “ஆளை விடுங்க…” என மீண்டும் ஓடினான்.
இவன் பிரண்ட்ஸை வீட்டுக்கு கூப்பிட தானே சொன்னேன், அவங்க கிளம்பும்போது அவங்களோட இந்த பெண்ணையும் கிளப்பிடலாம்ன்னு பிளானை சொன்னா… அதுக்கு எதுக்கு இப்படி துள்ளறான்? தென்னரசுவுக்கு அவனின் துள்ளலுக்கான காரணம் புரியவில்லை.
ஒரு பெருமூச்சோடு ஆதீஸ்வரனை நோக்கிச் சென்றவன், “சார் வெளிய போலீஸ்காரனுங்க…” என தயக்கமாக இழுக்க,
தென்னரசுவை திரும்பி அர்த்தமாகப் பார்த்த ஆதி, “பாவம் விடியக்காலையிலயே டியூட்டி பார்க்க வந்திருக்காங்க. ரொம்ப நேரம் நிக்க வேற வெச்சுட்டோம். எதுவும் சாப்பிட்டாங்களான்னு கூட தெரியலை…” என நக்கலாகச் சொல்ல,
“சிறப்பா கவனிச்சுடலாம் சார்…” என சிரிப்புடன் சொன்னான்.
ஆதியின் ஓய்ந்த தோற்றம் வேறு உறுத்தியது. ஆனால், போய் ஓய்வெடுக்கச் சொல்லி எப்படி சொல்வது என தென்னரசு ஒரு நொடி தயங்க, ஆதியே, “கொஞ்ச நேரம் பாத்துக்க… நான் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் வரேன்” என கீழே இருந்த ஒரு அறைக்குள்ளே புகுந்து கொள்ளப் போனவன்,
சட்டென்று நின்று அரசுவை அழுத்தமாகப் பார்த்து, “என் ரூம் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளியர் ஆகி இருக்கணும். கிளீனிங்க்கு சீதாம்மாவை மட்டும் அனுப்புங்க” என்று சொல்ல, “ரெடி பண்ணிடறோம் சார்…” என்றான் வேகமாக.
அவனுக்கும் தெரியுமே அந்த அறைக்குள் ஆதி யாரையும் அனுமதிக்க மாட்டான் என்று! இவனிடம் நீண்ட காலமாக வேலை செய்யும் சீதாம்மாவை மட்டும் தான் எப்போதாவது சுத்தம் செய்ய அனுப்புவான். அப்படியிருந்த அறைக்குள் ஒரு பெண்! தென்னரசுவுக்கு பெருமூச்சு தான் வந்தது.
அங்கு சத்யாவோ, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரை உடனே கிளம்பி வரும்படி சொன்னவன், கனிகாவிடமும் வர சொல்லி அழைப்பு விடுத்தான்.