Advertisement

    முகம் பயத்தில் வியர்க்க அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வேகமாய் சென்றாள் அபிநயா. இன்று சிக்கி விடக் கூடாதே என்ற உத்வேகத்தில் சைக்கிளின் வேகத்தை அதிகப்படித்தினாள். “அப்பாடா சரியான நேரத்திற்கு வந்துட்டோம் மழைல நனையாம”  என தீடீரென மேகம் மழை கொட்டப் போவது போல் இருந்ததில் நனைந்து விடக்கூடாதே என நனையாமல் வந்ததின் பொருட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி சைக்கிளை நிறுத்தினாள்.
      அது ஒரு அரசுப்பள்ளி இங்கு தான் அபி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இன்று அவளின் கடைசி தேர்வு. என்ன தான் பள்ளி முதல் மாணவியாக இருந்தாலும் தேர்வை நினைத்து சிறிது பயம் இருக்கத்தான் செய்தது. தன் தோழி மீனாவிடம் சென்ற அபி “ஏ மீனா! என்னடி பண்ற படிச்சிட்டியா. எனக்கு என்னமோ பயமாவே இருக்கு பா” என்றாள் உண்மை பயத்தோடு.
     “ஏய் என்ன நான் சொல்ல வேண்டிய டயலாக்லாம் நீ முதல்ல சொல்லிட்டா நான் என்னத்த சொல்றது. நீயாவது பள்ளி முதல் மாணவி. நான்லாம் பாஸ் ஆன போதும்னு நினைக்கிற ஆளு. பேசாமா போய்ரு அங்கிட்டு. எனக்கே பயத்தில கைக் கால்லாம் டைப் அடிக்குது” என அதீத பயத்தில் பேசினாள் மீனா.
     “பெல் அடிச்சிட்டாங்க வா வா போகலாம்” என தேர்வு மணி கேட்கவும் தங்கள் அறை நோக்கி சென்றனர். தேர்வுகள் முடிந்தது. அன்று தான் தேர்வு முடிவுகள் வெளியீடு. மாணவர்கள் அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர். எப்போதும் போல் அபி பள்ளியின் முதல் மாணவியாக நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாள்.
     மீனா தன்னால் முடிந்த அளவுக்கு நல்ல மதிப்பெண்ணை பெற்றாள். ஒரு வாரம் கழித்து மீனா அபியை காண அவள் இல்லம் சென்றாள். மிகவும் சிறிய மண்வீடு தான் அது. அங்கே அபி படுத்து அழுதுகொண்டு இருந்தாள் அருகில் அவள் அன்னை சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.
     “ஏ அபி என்னபா ஆச்சு. நீ முதல் மார்க் வாங்கி இருக்க. அப்புறம் ஏன் அழற” என்றாள். அதற்கு அபி “பரிச்சை ரிஸட்டுக்கு அடுத்த நாள் எங்க அப்பா யாரையோ கூட்டிட்டு வந்தார்பா. அவங்க பார்க்க பெரிய ஆளா இருந்தாங்க. அவங்களுக்கு என்ன கல்யாணம் பண்ணி தர போறேன்னு சொன்னார் பா. எங்க அப்பா அவர்ட்ட 2 லட்சம் கடன் வாங்கிடாராம். அத தரமுடியல. அதான் என்னை கட்டி வைக்க போறாங்களாம்” என்றாள் அழுதுகொண்டே.
     ” கலெக்டர் ஆகனும் அப்படினு ஆசையா சொல்லிட்டே இருப்பியே டி. இப்ப என்ன இப்படி சொல்ற. உங்க அம்மா எதுவும் சொல்லலையா” என்றாள் மீனா ஆதங்கமாய். “அம்மா அப்பாட்ட எவ்வளவுவோ கெஞ்சி பாத்துட்டாங்க பா. அப்பா கேக்க மாட்டேங்குறாங்க. காசு எங்க அப்பா அம்மாவுக்கு தரேனு அந்த ஆள் சொல்லவும், கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டாங்க.
     இதுல என்னை காலேஜ்லா சேர்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க பா. அப்ப நான் கலெக்டர் ஆக முடியாதுல” என பாவமாக சொல்லி அழுதாள். அந்த நேரம் அவள் அம்மா ” கண்ணு நீ அவளோடு ஸ்நேகிதி தானே. உன்னால ஒன்னும் பண்ண முடியாதா மா. இவள இங்க இருந்து எப்படியாவது போன்னு கூட சொல்லிட்டேன். அதுக்கும் பயந்துகிட்டு அழுதுட்டு இருக்கா” என்றாள் அன்னை வேதனையாக.
     “ஏன்டி அதான் அம்மா சொல்லுறாங்கல அவங்க சொல்றத கேட்டு எங்கயாவது போக வேண்டியது தானே. ஏன்டி இப்படி பண்ற” என்றாள் மீனா கோபமாய். ” எனக்கு பயமா இருக்கு பா. நான் எங்கனு போவேன் சொல்லு” என்றாள்.
      ” வேனும்னா நம்ம ஒன்னு பண்ணலாம். நம்ம தேவி மிஸ் நமக்கு தனியால சும்மாவே பாடம் சொல்லிக் கொடுப்பாங்களே, அவங்கட்ட உதவி கேட்கலாமா. என்ன மா சொல்லுறீங்க” என்றாள் மீனா. “அவங்க நிச்சயமா நமக்கு உதவி பண்ணுவாங்களா கண்ணு. பிரச்சினை வந்துராதே” என்றார் அன்னை.
      “அவங்க கண்டிப்பா நமக்கு உதவி பண்ணுவாங்க மா. உங்க போன் தாங்க மா பேசிப் பார்போம்” என அழைப்பு விடுத்து அனைத்து தகவல்களையும் சொல்லி அடுத்து என்ன செய்யவென கேட்டாள் மீனா.
     அனைத்தையும் கேட்ட தேவி “நீங்க உடனே புறப்பட்டு எங்க வீட்டுக்கு வாங்க மீனா. அவ நல்லா படிக்கிற புள்ள. நான் பாத்துக்கிறேன்” என்றார். “ரொம்ப நன்றி மா. என் புள்ளைய நல்லா பாத்துக்கோங்க மா என்னால அவளை வீட்ட விட்டு அனுப்ப மட்டும் தான் முடிஞ்சுது. அவளை எங்காவது தொலைவுக்கு அனுப்பிப் புடுங்க மா. நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க” என்றாள் கண்ணீரோடு.
      பின் அனைத்தும் துரித கதியில் நடைப்பெற்றது. அபியை மீனாவோடு பத்திரமாய் தேவியின் வீட்டில் விட்டு வந்தார். அபி வீட்டை விட்டு செல்லக் கூடும் என தெரியாத அவள் தந்தையும் கொஞ்சம் மெத்தனமாய் இருந்து விட்டார். தேவியும் வேறு ஊரில் தனக்கு தெரிந்தவர் கொண்டு அபிநயாவின் கல்லூரி மற்றும் தங்கும் இடங்களை ஏற்பாடும் இரவுக்குள் செய்துவிட்டார்.
     “அபி கண்ணு உங்க அப்பனுக்கு தெரியாம உன்னை அனுப்பி வைக்கிறேன். அங்க போய் நல்லா படிக்கனும் டா. உனக்கு என்ன ஆக ஆசையோ அது மாதிரி ஆகுடா கண்ணு. எப்பவும் என் ஆசீ உனக்கு இருக்கும் டா. பாத்து இருந்துக்க டா” என்றார் பாசமாக.
     “அம்மா உன்னை நினைச்சா பயமா இருக்கு மா. அவங்க எதாவது உன்னை பண்ணிட்டா என்ன செய்றது? ” என்றாள் பயத்துடன். “அம்மாவை பத்தி எதுவும் கவலைப் படாதே. நாங்கலாம் இருக்கோம்ல பாத்துக்கறோம். நீ நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வந்து உங்க அம்மாவ பாத்துக்கணும் என்ன” என்றார் தேவி.
     சரி என்ற அபி தன் அன்னையை கண்ணீர் நிறைந்த விழிகளோடு பார்த்து தலை அசைத்து விட்டு தேவியோடு பேருந்தில் ஏறினாள். தன் வாழ்வு சிறந்து விடும் என்ற நம்பிக்கையோடு காற்றில் தன் சிறகை விரித்து பறக்க பயணம் மேற்கொண்டாள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜன்னலின் வழி ஈர காற்று அவள் கேசத்தை கலைத்து சென்றது.

Advertisement