“தப்பு தானே அக்கா. அவ என்ன செஞ்சு இருந்தாலும், நம்மகிட்ட தானே சொல்லணும். இவ எப்படி மேல கையை வைப்பா. கல்யாணம் நின்னுப் போனது இவளுக்கு மட்டும்தான் வருத்தமா” என்று அவர்கள் இருவரும் இன்னும் ஏற்றிவிட, ரேகாவுக்கே எழில் எப்படி என் மகளை அடிக்கலாம் என்று கோபம் வந்துவிட்டது.
இதற்குள் பாண்டி விஷயத்தை நாகரத்தினத்திடம் கூறி, அவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட, மகளின் சிவந்த முகத்தையும், கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களையும் பார்த்து கண்கலங்கி விட்டார் நாகரத்தினம்.
பாண்டி அதில் வெகுண்டவராக, தன் தம்பி ராஜேஷுக்கு அழைத்துவிட, அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் கிளம்பிய எழிலின் கணவர் அடித்துப் பிடித்து அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
“எப்படி ராஜி உன் பொண்டாட்டி நம்ம பிள்ளை மேல கையை வைப்பா? கல்யாணம் நின்னுப் போனா, எல்லாம் அவ இஷ்டத்துக்கு செய்வாளா?” என்றார் பாண்டி.
ராஜேஷ் நடப்பதும் எதுவும் புரியாமல் நிற்க, “அவ தப்பு செஞ்சவ தான் தம்பி. ஆனா, அதுக்காக யார் வேணாலும் அவளை அடிக்கலாம்னு இருக்கா என்ன? பெத்தவ நானே அடிக்கலையே. அவ யாரு என் மகளை அடிக்க. வயசுப்பிள்ளை முகத்துல இப்படி விரலே பதியுற அளவுக்கு அடிக்கணும்னு என்ன இருக்கு? யார் கொடுத்த இடம் இது?” என்றார் ரேகா.
ராஜேஷ், “நீ ஏன் திவ்யா அங்கே போன? அவ கோபமா இருப்பான்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்டுவிட,
“நல்லா பேசறீங்க தம்பி. அடிச்சவளை ஏன் அடிச்சன்னு கேட்காம, ஏன் வீட்டுக்கு வந்தேன்னு அண்ணன் மகளை கேட்கறீங்க.அவ உங்க வீட்டுக்கு வர்றதுக்கு யாரை கேட்கணும் தம்பி. நாளைக்கு நாங்க யாரும் வர்றதா இருந்தாலும், உங்க பொண்டாட்டிகிட்ட அனுமதி வாங்கணும் இல்லையா. இல்லாட்டி, இப்படி அறைஞ்சுடுவாளோ” என்றார் மூன்றாவது மருமகள் கல்யாணி.
“அண்ணி… நீங்க இவ அடி வாங்கின கோபத்துல பேசறீங்க. எழில் இடத்துல இருந்து யோசிங்க. அவ தம்பி கல்யாணம் இவளால் நின்னுப் போயிருக்கு. அவ வேற எப்படி நடந்துப்பா?”
“நிச்சயம் அவ அடிச்சது தப்பு. ஏன் அடிச்சன்னு அவளையும் கேட்பேன் தான். ஆனா, இவ செஞ்சது தப்பில்லன்னு ஆகிடாதே.”
“டேய்… நீ என்னடா சும்மா அதையே பேசிட்டு இருக்க. தெரியாம ஏதோ நடந்துடுச்சு.அவளும் புரிஞ்சி தானே நம்மகிட்ட வந்து நிற்கிறா. நம்ம வீட்டு பொண்ணு அவ. அப்படியே விட்டுட சொல்றியா” என்றார் பாண்டி.
“நான் அப்படி சொல்லலண்ணா”
“அப்போ உன் பொண்டாட்டிகிட்ட பேசி அவளுக்கு புரிய வை. நின்னுப் போன கல்யாணம் நடந்தா தான் பட்ட அசிங்கமெல்லாம் கொஞ்சமாவது மறையும். அதோட இது நம்ம பொண்ணோட வாழ்க்கை ராஜி. அவளும் உன் மச்சானை தான் கட்டிப்பேன்னு அடமா இருக்கா. அதுக்காகத் தான் உன் பொண்டாட்டிகிட்ட இப்படி அடியும் வாங்கிட்டு வந்து நிற்கிறா. நீ பேசு உன் பொண்டாட்டி வீட்ல” என்றார் பாண்டி.
“அதுதான் சரி தம்பி. நீங்க உங்க மாமனார்கிட்ட பேசிடுங்க” என்று லீலாவதியும் குரல் கொடுக்க,
“நான் யார்கிட்டேயும் பேசறதா இல்ல அண்ணி. என் பொண்டாட்டிகிட்ட கூட இது விஷயமா நான் எதுவும் பேசமாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்ற ராஜேஷ் அங்கிருந்து கிளம்பிவிட,
“இதென்ன இப்படி பேசிட்டு போறாரு” என்று லீலா வாயில் கைவைத்து கொள்ள,
“நாம நேரே போய் பேசுவோம் தம்பி. எழில்கிட்ட நான் பேசறேன்” என்றார் ரேகா.
நாகரத்தினம் அமைதியாக மனைவியைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டார்.
“அதுதான் சரி. நீங்க வாங்கக்கா” என்று லீலாவும், கல்யாணியும் அவருடன் கிளம்பி நிற்க, ராஜேஷ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடத்திற்கெல்லாம் இவர்களும் வந்து நின்றனர்.
ரேகாவின் மீது இருந்த மரியாதையால், வந்தவர்களை, “வாங்க” என்று அழைத்தாள் எழில்.
கணவன் வேறு கோபமாக இருப்பது போல் தெரிய, அது என்னவென்று விசாரிக்கும் முன்பே, இவர்கள் வந்து நிற்க, எதுவும் சரியாகப்படவில்லை எழிலுக்கு.
ஆனாலும், வந்தவர்களை வரவேற்று அமர வைத்தவள் தண்ணீர் எடுத்துக் கொடுக்க, கையில் வாங்கி கொண்டாலும், ஒருவர்கூட குடிக்கவில்லை.
ராஜேஷ் நடப்பது எதையும் தடுக்க முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மனநிலையை வரவழைத்துக் கொள்ள, ரேகா பேச்சை தொடங்கினார்.
“ஏன் எழில் என் மகளை அடிச்ச? அவமேல என்ன கோபம் இருந்தாலும், இப்படி அடிக்கலாமா?”
“என் பொறுமைக்கு மீறி நான் அவளுக்கு சொல்லிட்டேன்க்கா. கேட்க மாட்டேன்னு நிற்கும்போது என்னை என்ன செய்ய சொல்றிங்க?” என்று எழிலும் அவரிடமே கேட்டு வைக்க,
“அவ தப்பு செஞ்சா, எங்ககிட்ட சொல்லாம நீ எப்படி கையை ஓங்குவ எழில்” என்று கல்யாணி அதட்ட,
“உங்க தம்பி கல்யாணம் நின்னுப்போய், அதற்கு காரணமானவ உங்க வீட்டு வாசலுக்கே வந்து நின்னு, மறுபடியும் உங்க தம்பி வாழ்க்கையை நாசம் பண்ணப் பார்த்த தான் என் நிலைமை உங்களுக்கு புரியும்க்கா. நீங்க பேசாதீங்க” என்றாள் மீண்டும்.
“நாசமாக்கிட்டா அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசாத எழில். அவளால நடந்ததை சரிசெய்ய தான் அவளும் முயற்சி பண்ணியிருக்கா. நின்னுப் போன கல்யாணம் நடந்தா எல்லாருக்கும் நல்லது தானே. நீ சின்னப்பொண்ணு. உன் கோபத்தால உன் தம்பி வாழ்க்கைக்கு ஒரு நல்லதும் இல்ல. புரிஞ்சிக்கோ” என்று பாண்டி அவளை அடக்க நினைக்க,
“ஆறு வயசு பையனுக்கு அம்மா மாமா நான். இன்னும் சின்ன பொண்ணுன்னு சொல்றிங்க. அதோட என் தம்பிக்கு நான் அக்கா. அவன் விஷயத்துல நான் எடுக்கிறது தான் முடிவு” என்றாள் எழில்.
“இதென்ன எழில். இப்படி பிடிச்ச பிடியில நின்னா, குடும்பம் எப்படி நடக்கும்? விட்டு கொடுத்து தான் போகணும்” என்று அவர் மேலும் பேச, எழில் அப்போது தான் தன் கணவனைப் பார்த்தாள்.
“நீயே பேசு” என்பதுபோல் அவன் அமர்ந்திருக்க, “விட்டு கொடுத்து போகத் தெரியுமோ இல்லையோ, விட்டுட்டு ஒடத் தெரியாது மாமா எனக்கு. செத்தாலும் உங்க தம்பி கூடத்தான் சாவேன். என் குடும்பம் நல்லபபடியாவே நடக்கும்” என்றுவிட்டாள்.
முள்ளை முகத்தில் தைப்பது போல் பேசும் அவளின் பேச்சில் முகம் சுருக்கிய பாண்டி, “இது சரியா வராது அண்ணி. இந்த விஷயத்தை எல்லாம் வீட்டோட பெரியவர்களை தான் கேட்கணும். எழிலக்கிட்ட பேசினா, அதுக்கு என்ன புரியும்? நான் ராமமூர்த்தி மாமாகிட்ட பேசறேன்” என்றார் பாண்டி.
“நீங்க யார்கிட்ட வேணும்னாலும் பேசிக்கோங்க. ஆனா, என்னை மீறி இந்த கல்யாணம் நடக்காது”
“இதென்ன பேச்சு எழில்” என்று லீலா எழ,
“நீ இங்கே வாழ வேண்டாமா… அதையும் யோசிச்சு பேசு” என்றார் கல்யாணி.
“நான் வாழ என் தம்பி வாழ்க்கையை பலி கொடுக்க சொல்றீங்களா? என்ன ஆனாலும் சரி. என் முடிவு மாறாது.” என்றவள், “என் தம்பிக்கு பொண்ணு கூடப் பார்த்தாச்சு. நீங்க தேவையில்லாம பேசி அசிங்கப்படாதீங்க” என்று முடித்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவ்வளவு நேரம் கத்தியதில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது அவளுக்கு.
இன்னும் கோபம் தீராமல் அமர்ந்திருந்தவளிடம் தண்ணீரை நீட்டிய ராஜேஷ், “உன் தம்பிக்கு போன் போடு. உன் வீட்டுக்கு கிளம்பு. உன் தம்பி கல்யாணம் முடியவும், நானே வந்து உன்னை கூட்டிட்டு வரேன்” என, கணவன் பேச்சில் கண்கள் கலங்கியது அவளுக்கு.
“பொண்ணெல்லாம் பார்த்து வச்சிருக்க. கல்யாணத்துக்கு போக வேண்டாமா. போன் போடு அவனுக்கு. கிளம்பு” என்றுவிட, கடினமான அவன் முகம் கோபம் கொடுக்க, செல்வாவிற்கு அழைத்துவிட்டாள் எழில்.
அரைமணி நேரத்தில் அவன் வந்துவிட, கையில் ஒரு பையுடன் கிளம்பி நின்றிருந்தாள் எழில். செல்வா அக்காவை கேள்வியாகப் பார்க்க, “கூட்டிட்டு போ செல்வா. சர்வாக்கு லீவ் தானே. ஒரு பத்துநாள் அங்கே இருக்கட்டும்.” என்றான் ராஜேஷ்.
எழில் அதில் கோபம் கொண்டு காருக்குச் சென்றுவிட, “என்ன மாமா. எதுவும் பிரச்சனையா?” என்று அங்கேயே நின்றான் செல்வா.
“ஒன்னும் இல்ல. நீ கிளம்பு. நான் உனக்கு போன் பண்றேன். அவ சாப்பிடவே இல்ல. கொஞ்சம் பார்த்துக்கோ” என்றான் ராஜேஷ்.
செல்வா ஒன்றும் புரியாமல் அக்காவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி நோக்கி பயணமானான்.