காரிகை கனவுகள் 01
செல்வக்குமரன் வெட்ஸ் திவ்யஜோதி
அலைபேசியில் இருந்த திருமண வரவேற்பு பேனரின் பிரதியை கண்ணெடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் செல்வா. கண்களில் கண்ணீர் இப்போதோ அப்போதோ என்று தயாராக நிற்க, நடந்து முடிந்த நிகழ்வுகளை இன்னமும் முழுதாக உள்வாங்க முடியாமல் அமர்ந்திருந்தான் அவன்.
அவனுக்கு முன்னே அவன் குடித்து முடித்து கீழே வீசியிருந்த மதுபான பாட்டில் ஒன்று உருண்டு கொண்டிருக்க, அருகே சில புகைத்து மீதியான சிகரெட் துண்டுகள். அந்த அறையை சிகரெட் புகையின் வாசம் நிறைத்து வைத்திருந்தது. ஆனால், அந்த புகையின் நெடி என்னை ஒன்றும் செய்யாது என்பது போல் தன் கையிலிருந்த அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்தான் செல்வா.
இன்று மட்டுமல்ல பதினைந்து நாட்களாக இப்படித்தான். இதே அறையில் தான் அவன் வாசம். அடுத்து என்ன? என்று யோசிக்கும் திறனை இழந்தவனாக ‘ எல்லாம் முடிந்தது‘ என்று அமர்ந்திருந்தவனை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தான் அவன் குடும்பமும் தவித்துக் கொண்டிருக்கிறது.
மூன்றரை ஆண்டு காதல் அவனுடையது. எங்கும், எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை அவன். அத்தனையும் அவள்தான் என்று நம்ப வைத்தவள், ஒரே நொடியில் அவனை தூக்கி எறிந்து சென்றிருந்தாள்.
சிறு வயதில் இருந்தே, தாயில்லா பிள்ளையாக தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவன் செல்வா. அருள், எழிலரசி என்று அவனுக்கு முன்பு இருவர் பிறந்து இருந்தாலும், இரண்டு வயது கைக்குழந்தையாக தந்தையின் மடியில் கிடந்தே வளர்ந்தவன் செல்வா.
மூத்த பிள்ளைகளுக்கு ஓரளவு விவரம் புரியும் வயதுதான் என்பதால், அவர்களும் தம்பியை குழந்தையாகவே பாவிக்க, அத்தனைப் பேரின் அன்பையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவனாக வளர்ந்து நின்றவன் அவன்.
அவன் தந்தை வழி பாட்டியும் துணை இருந்ததில் பிள்ளைகளை எப்படியோ வளர்த்து ஆளாக்கி விட்டார் ராமமூர்த்தி. ஊரிலும் சொல்லிக்கொள்ளும்படி சில அசையா சொத்துகளும் இருக்க, முதல் இரு பிள்ளைகளுக்கும் உரிய வயதில் திருமணம் முடித்து வைத்தவர், செல்வாவையும் பொறியியல் படிக்க வைத்து இருந்தார்.
படித்து முடித்தவனுக்கு சென்னையில் இருந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துவிட, தந்தையை கையில் பிடிக்க முடியவில்லை. அவர் கண்களில் படும் அத்தனைப் பேரிடமும் அவர் சொல்லி சொல்லி மாய்ந்து போக, அடுத்த சில நாட்களில் சென்னைக்கு வந்து சேர்ந்தான் செல்வா.
அவனது அக்கா எழிலரசி சென்னையில் தான் திருமணம் முடித்து வந்திருந்தாள். இப்போது செல்வாவும் அவள் வீட்டிலேயே தங்கி கொள்வதாக முடிவானது.
எழிலரசி திருமணம் செய்து வந்தது கிட்டத்தட்ட ஒரு கூட்டு குடும்பம். நாகரத்தினம், பாண்டி, ராகவன், ராஜேஷ் என்று அண்ணன் தம்பிகள் நால்வரும் அருகருகே வசித்து வர, எழிலரசி தான் கடைசியாக அங்கே திருமணம் முடித்து வந்தவள்.
ஆரம்பத்தில் செல்வாவின் வரவு குறித்து, அவள் குடும்பத்தினர் சிறிதாக சலசலத்துக் கொண்டாலும், செல்வாவின் நடத்தையில் அத்தனையும் அடிபட்டு போனது.
எங்கேயும், எதிலும் அதிகமாக ஒட்டிக் கொள்ள மாட்டான் செல்வா. அவன் அக்கா வீட்டின் மாடியில் இருந்த தனியறையில் தன் ஜாகையை அமைத்துக் கொண்டவன், யாரிடமும் அதிகமாக ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டான்.
அவனின் இந்த போக்கு அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் பிடித்துவிட, செல்வாவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை அவர்கள்.
இப்படியாக ஓராண்டு கழிந்த நிலையில் தான், அந்த குடும்பத்தின் பெண் வாரிசு ஒருத்தி செல்வாவை விரும்புவதாக நின்றாள். அதுவும், சம்பந்தப்பட்டவனிடம் சொல்லாமல், தன் குடும்பத்து பெண்களுக்கிடையே விஷயத்தை போட்டு உடைத்திருந்தாள்.
அவள் நாகரத்தினம்- ரேகாவின் இளையமகள் திவ்யஜோதி. மூத்தவளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருக்க, இருபது வயதில் இருந்த இரண்டாவது பெண்ணுக்கு மனிதர் பெண் பார்த்த நேரம், பெண் செல்வாவை கைகாட்டி இருந்தாள்.
நாகரத்தினம் அந்த நேரத்து கோபத்தில் பெண்ணை அடித்து விட்டாலும், செல்வாவை மறுப்பதற்கு அவரிடமும் பெரிதாக எந்த காரணமும் இல்லாமல் போக, மொத்த குடும்பமும் எழிலரசியிடம் தான் வந்து நின்றது.
எழிலரசியும் சட்டென எதுவும் பதில் கொடுக்கவில்லை. இது செல்வாவின் வாழ்க்கை என்பதில் அவள் அளவில் அவள் தெளிவாகத் தான் இருந்தாள்.
‘அவன் விருப்பமே‘ என்று முடித்துக் கொண்டவள் அவனிடம் இது குறித்து பேச சமயம் பார்த்திருக்க, அவனோ, வேலையை விட்டுவிட போவதாக வந்து நின்றான்.
“என்னடா சொல்ற” என்று மூத்தவள் பதற,
“கார் வாங்கப் போறேன்க்கா. ட்ராவல்ஸ் போல, ஐடி கம்பெனிஸ்ல டை அப் பண்ணிக்கலாம்னு ஒரு ஐடியாவும் இருக்கு. ஆனா, கண்டிப்பா வேலையை விடப் போறேன்” என்று வந்து நின்றான் அவன்.
“செல்வா இது சரியா வருமா? நல்ல வேலை. நல்ல சம்பளம். இதையெல்லாம் விட்டுட்டு கஷ்டப்படப்போறேன்னு சொல்றியேடா. முதல்ல அப்பா ஒத்துக்குவாரா?” என்று அவள் எடுத்துக்கூற,
“என்னால அடுத்தவனுக்கு வேலை செய்ய முடியாதுக்கா. எவ்ளோ நாள் நான் அவனுக்கு உழைக்க முடியும். சக்கையா பிழிஞ்சிட்டு ஒருநாள் தூக்கி எறிஞ்சிடுவானுங்க. அதே நான் கார் எடுத்தா, நானே முதலாளி, நானே தொழிலாளி. என் உழைப்பு எனக்கு தான். எனக்கு கொஞ்சம் கான்டாக்ட்ஸ்ம் இருக்கு. கண்டிப்பா நல்லா பண்ணுவேன்கா”
“அப்பாகிட்ட யாரடா சொல்றது”
“நீ பேசு”
“நானா. மனுஷன் கொன்னே போடுவாரு என்னை. நீ ஆளை விடு” என்று பேச வந்ததை மறந்து ஓடியிருந்தாள் அவள்.
ஆனால், அதற்காகவெல்லாம் தயங்கி நிற்காமல் தான் நினைத்ததை அடுத்த இரண்டு வாரங்களில் சாதித்துக் கொண்டான் செல்வா.
அவனே தந்தையிடம் பேசி சமாளித்து விட, ராமமூர்த்திக்கு வருத்தமாக இருந்தாலும், மகனுக்காக சரியென்று விட்டார்.
அவன் நினைத்தது போலவே, ஏழு பேர் அமரும்படியாக ஒரு கார். பாதிப் பணம் செலுத்தி, மீதியை emi போட்டுக் கொண்டிருந்தான். அதுவரை அத்தனையும் சரியாகத் தான் சென்றது.
காரை வாங்கியவன் தந்தையிடம் காட்டிவிட்டு, அக்காவின் வீட்டு வாசலில் வந்து நிற்க, சுற்றி இருந்த அத்தனைப் பேரும் மெச்சுதலாகத் தான் பார்த்து வைத்தனர்.
ஆனால், அவன் வேலையை விட்டு கார் வாங்கியிருப்பதை அறிந்ததும், ஆளுக்கு ஒன்றாக பேசி வைக்க, பெரிதாக எதையும் தம்பியின் காதுகளுக்கு கொண்டு செல்லவில்லை எழிலரசி.
நாகரத்தினத்துக்கு அப்போதே உதைத்தது தான். ஏதோ பையன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால், மகள் அவள் பிடிவாதத்தால் உறுதியாக இருக்க, எழிலரசி இதுவரையும் செல்வாவிடம் பேசி இருக்கவில்லை என்பதும் உறுத்தியது.
செல்வா இது எதை குறித்தும் கவலையற்றவனாக அவன் போக்கில், காரை எடுத்துக்கொண்டு அலைய, கிடைத்த அத்தனை வேலைகளையும் எடுத்துக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த தொழிலும் அவனுக்கு புதிதாக இருக்க, நிலையாக கையூன்றி நிற்கும்வரை ஓட்டம் தான் என்பது அவன் எதிர்பார்த்து இருந்தது தான் என்பதால், அந்த ஓட்டம் அவனை களைப்படையச் செய்யவே இல்லை.
இந்த நிலையில் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருபவனை பிடித்து வைத்து பேச முடியாமல் எழில் திணறிக் கொண்டிருக்க, திவ்யஜோதி பொறுப்பை அவளே கையில் எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் மாலை வேளையில் எழிலரசி கோவிலுக்குச் சென்றிருந்த நேரம், செல்வாவை தேடி வந்து நின்றாள் அவள்.
செல்வா அன்று காலையில் தான் வேலை முடித்து வந்திருக்க, அலுப்பில் உறங்கி கொண்டிருந்தவனை, அக்கா மகன் சர்வா வந்து எழுப்பியதில் உறக்கம் கலைந்தான் அவன்.
அவன் அறையை விட்டு வெளியே வர, அங்கு திவ்யஜோதியை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை செல்வா. கையில்லாத பனியனும், லுங்கியும் அணிந்திருந்தவன் அவள் முன் நிற்கவே தயங்க, அதை குறித்த தயக்கமெல்லாம் எதிரில் இருந்தவளுக்கு இல்லை போல.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் செல்வா” என்றாள் இயல்பாக.
மிஞ்சிப் போனால், இருபது வயது இருக்கலாம். தன்னைப் பேர் சொல்லி அழைக்கிறாளே என்று உள்ளூர உறுத்தினாலும், அக்காவை மனதில் வைத்து, “சொல்லுங்க” என்றான் மரியாதையாக.
எதிரில் இருந்தவள் சில நிமிடங்கள் எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
செல்வா அவளை அதிசயமாக பார்த்திருக்க, “எனக்கு.. எனக்கு உங்களைப் பிடிக்கும்.” என, அதுவே செல்வத்திற்கு அதிர்ச்சி தான்.
ஆனால், எதிரில் இருந்தவள் அதை கவனிக்காமல், “உங்களை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு பிடிச்சிருக்கு. என் வீட்ல மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கவும், உங்க பேரை சொல்லிட்டேன். எழில் சித்திகிட்ட எல்லாரும் பேசினாங்க. அவங்க உங்ககிட்ட பேசுறதா சொல்லி சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் பேசல.”
“சோ, சம்பந்தப்பட்ட நானே உங்ககிட்ட பேசிடலாம்னு வந்துட்டேன். என்னைப்பத்தி உங்களுக்கும் எல்லாம் தெரியும் இல்ல. அடிக்கடி பார்த்து இருக்கீங்க. என் குடும்பத்தை பத்தியும் தெரியும். உங்களுக்கு ஓகே வா இருந்தா, நாம மேற்கொண்டு பேசுவோம். லவ் பண்ணனும்னு சொன்னாலும் எனக்கு ஓகே. இல்ல, நேரா கல்யாணம் தான்னு சொன்னாலும் ஓகே. நீங்கதான் முடிவெடுக்கணும்.” என்று வெளிப்படையாக மனதில் உள்ளதை போட்டு உடைத்துவிட்டு சென்றுவிட்டாள் திவ்யா.
ஆனால், செல்வா தெளியவே இல்லை. “எப்பா” என்று தான் இருந்தது அவனுக்கு. சட்டென மூச்சடைத்தது போன்ற உணர்வு.
“என்னா பேச்சு பேசுறா” என்றுதான் தோன்றியது.
அவள் பேச்சில் இருந்து ஓரளவு விஷயங்களை கிரகித்து இருந்தவன், அன்று இரவே அக்காவிடம் இதை தெரிவிக்க, எழிலரசிக்கு முகம் சுணங்கியது.
“என்னக்கா” என,
“தெரியல செல்வா. ரொம்ப அவசரப்படற மாதிரி இருக்கு. என்கிட்டே ரேகா அக்கா பேசி இருந்தாங்க. நானே உன்கிட்ட பேசறேன்னும் சொல்லிட்டேன். இடையில இது என்ன வேலை. அவ விருப்பத்தை சொல்லிட்டா இல்ல, பெரியவங்க பார்த்துப்போம்னு நம்ப வேண்டாமா” என்றாள் எழில்.
செல்வத்திற்கு அவள் பக்கம் புரிய, “அவ சரியான ஆர்வக்கோளாறு போலக்கா. அவளால ரகசியமா எல்லாம் வச்சிருக்க முடியாது. அதுதான் வந்து கொட்டிட்டா” என்று சிரித்தான் அவன்.
“நீ என்ன அவளுக்கு பேசற.” என்று எழில் அதற்கும் முறுக்க,
“நான் யாருக்கும் பேசல. நீ எடுக்கிறது தான் முடிவு. உனக்கு ஓகேன்னா அப்பாகிட்ட பேச சொல்லு. ஆனா, கண்டிப்பா மூணு வருஷம் கழிச்சு தான் கல்யாணம். இதையும் தெளிவா சொல்லிடு” என்று விட்டான் செல்வம்.
எழில் பலமுறை தனக்குள் யோசித்து குழம்பி, கணவனிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தவள், தந்தையிடம் பேச, அவரும் ஒப்புக்கொள்ளவே, பெண் வீட்டுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.
இப்போதைக்கு நிச்சயம் முடித்து விடலாம் என்று நாகரத்தினம் கேட்டுக்கொள்ள, அவர்கள் வீடு வரைக்கும் கூடி, ஒரு பார்ட்டி ஹாலில் எளிமையாக நிச்சயமும் நடந்து முடிந்து இருந்தது.
அதன்பிறகான நாட்களில், எழிலரசி- ராஜேஷ் என்று யாரையும் யோசிக்கவில்லை திவ்யஜோதி. அவள் நினைத்த நேரம் செல்வாவை பார்க்க வருவாள். அவள் நினைப்பதை அவனிடம் பேசுவாள்.
அவனுக்கும் அவளின் இந்த சலசலப்பு பிடித்தே இருந்தது. பின்னே, பேசவே காசு கேட்பவன் அவன். இப்படி ஒருத்தி அருகில் அமர்ந்து வளவளத்துக் கொண்டே இருப்பது ஒருமாதிரி நன்றாக இருந்தது.
இப்படியே காதலை வளர்த்தவர்கள் வெளியேயும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்து இருந்தனர். செல்வா அவன் நினைத்தது போலவே, ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட, அவனது வேலைப்பளு அதிகரிக்க ஆரம்பித்தது அங்கே தான்.
பகலில், அவனது வாடிக்கையாளர்களுக்கு வண்டி எடுத்தவன், இரவில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேலையை கவனிக்க வேண்டி இருந்தது.
இரவும், பகலும் அவன் கையில் இல்லாமல் அவன் ஓடிக் கொண்டிருக்க, உடன் இருந்த சில நல்லவர்களின் அறிவுறுத்தலில், உடல் வலிக்காக என்று ஒட்டிக்கொண்டது அவனது குடிப்பழக்கம்.
“நம்ம வேலைல இதெல்லாம் சகஜம் செல்வா. அடி… தூங்கி எந்திரிச்சா வலியே தெரியாது” என்று அவனை இழுத்துச் செல்ல, படிப்படியாக அதை தன் தேவையாக்கிக் கொண்டிருந்தான் செல்வா.
வாரத்தில் ஒருநாள் என்று இருந்தது, இரண்டு, மூன்று என்று வளர்ந்து கொண்டே செல்ல, திவ்யாவிற்கும் விஷயம் தெரிய வந்தது.
அவனிடம் சண்டையிட்டவள் ‘இது வேண்டாம்‘ என்று பொறுமையாக எடுத்துக்கூற, அந்த நேரம் கேட்டுக் கொள்வான்.
ஆனால், அடுத்த வாரத்தில் அதே வேலையை செய்துவிட்டு வந்து நிற்பான். திவ்யா பொறுத்துப் பார்த்து அவள் வீட்டினரிடம் தெரிவிக்க, அவர்களும் கண்டித்தனர் செல்வாவை.
அதன்பிறகு ஓரளவு அடங்கியவன், மீண்டும் பழையபடி தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்க, திவ்யாவிற்கு அப்போதே மனம் அலைபாய தொடங்கியது.
‘இது சரியாக வருமா?’ என்று யோசிக்க தொடங்கிவிட்டவள், தன் சந்தேகத்தை தந்தையிடம் கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்போ ஒழுங்கா தானே இருக்கான். அவனும் நல்லா சம்பாதிக்கிறான். ஊர்ல வீடு வாசல் எல்லாம் இருக்கு. இதெல்லாம் ஒரு விஷயம்னு பெரிசு படுத்தாத” என்று மகளுக்கு தான் அறிவுரை வழங்கினார்.
திவ்யா அப்போதைக்கு தெளிந்தாலும், செல்வத்தின் மீதான அவளது நேசத்தில் எங்கோ ஒரு கீறல் விழுந்தது உண்மை.
அதே நேரம், அவள் பணியிடத்தில் அவள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்க, இந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியான சம்பள உயர்வும் கிடைத்து இருந்தது.
மேலும் அவளது பணிச்சூழல், பழகும் நட்புவட்டம் இதெல்லாம் படிப்படியாக உயர்ந்திருக்க, செல்வாவுடனான நேரங்கள் பெரிதாக குறைந்து இருந்தது.
இந்த நேரத்தில் தான் வீட்டில் திருமணப் பேச்சு தொடங்கியது. செல்வா ஓரளவு நல்ல நிலைக்கு வந்திருக்க, இந்த மூன்று ஆண்டுகளில் அடுத்த கார் வாங்க பணம் சேர்க்கும் அளவுக்கு இருந்தான்.
அவனும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காததில், வீட்டினர் திருமணத்திற்கு நாள் குறித்துவிட, மனம் முழுக்க குழப்பம் இருந்தாலும், வெளியில் மகிழ்ச்சியாகவே சுற்றி வந்தாள் திவ்யஜோதி.
திருமணத்திற்கான வேலைகள், ஷாப்பிங், நகை, புடவை என்று அத்தனையும் முடிந்திருக்க, அவள் நிறுவனத்தில் ஆன் சைட் ஆஃபர் வரும்போல் இருந்தது அவளுக்கு.
இதற்கிடையில், அவளுடன் வேலை பார்க்கும் ராகேஷ் வேறு. அவளது புதிய தோழன் அவன். அவனும் சேர்ந்து அவளின் வாழ்வுக்காக சில அறிவுரைகளை வழங்க, ‘திருமணம் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் இருந்தவள் திருமணத்திற்கு முன்தினம் கிளம்பியிருந்தாள்.
“இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை” என்று தெளிவாகாவே எழுதி வைத்துச் சென்றிருக்க, ஆளாளுக்கு அலறித் தீர்த்தனர்.
இதில் கொடுமை என்னவென்றால், செல்வாவிற்கு திருமணத்தன்று காலை தான் அவள் இல்லாத விஷயமே தெரிய வந்தது.
எழிலுக்கும் தெரியப்படுத்தாமல், திவ்யஜோதியை தேடி களைத்து போனவர்கள் வேறு வழியே இல்லை என்ற நிலையில், மணமகன் வீட்டிற்கு தகவல் கொடுத்து இருந்தனர்.
அதிகாலை உறக்கத்தில் இருந்தவனுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை அவன். எப்போதும் உள்ள வழக்கமாக தன் அக்கா வீட்டின் மொட்டை மாடியைச் சரணடைந்து இருந்தான்.
‘அடுத்து என்ன யோசிப்பது‘ என்று புரியாத நிமிடங்கள் அவை.
திருமண கனவுகளில் இருந்தவன். மனதுக்கு பிடித்தவள் உடனான வாழ்வு குறித்து ஆயிரம் ஆயிரம் கற்பனைகள், கனவுகள். அத்தனையும் ஒரே நொடியில் சிதைந்து இருக்க, இருக்கும் நிமிடத்தை நம்பவே சில கணங்கள் பிடித்தது.
முழுதாக உணர்ந்தவனுக்கு தனது நிலை பிடிபட, ஆண்மகன் என்பதெல்லாம் மீறி கண்களில் கண்ணீர் வடிந்தது.
“என்ன செய்துவிட்டேன் இவளை. ஏன் இந்த முடிவு?” என்று தனக்குள்ளாக கேட்டு கேட்டு நொந்து போனவன், பதில் கிடைக்காத விரக்தியில் மதுவை சரணடைந்து விட்டான் மீண்டும்.