அத்தியாயம் 5

  

பத்து நாள் கடந்திருக்க,  அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது. 

அது இனியாவுடைய கனவுக் கார்,  அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது காமிராமேன் வசந்த் வர,  “என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி , போட்டோ எடுத்தான்.

உடனே பொங்கிய இனியா,  “ஓரு நாள் நான் இதே மாதிரி கார் வாங்குவேன்…” என்று வசனம் பேச ,

“நீ வாங்கிற அஞ்சு, பத்து சம்பளத்திற்கு இதெல்லாம் தேவையா?” எனக் கவுண்டமணி ஸ்டைலில் வசந்த் கலாய்க்க ,

இனியா ரோஷத்துடன்,  மீண்டும் அண்ணாமலை ஸ்டைலில் சபதம் போட முயல,

“ஆள விடு சாமி, எனக்கு வேலையிருக்கு…” எனச் சிரித்தபடி ஓட,

அவன் போன பாதையைப் பார்த்துக் கொண்டே, “வசந்த்..” எனப் பல்லைக் கடித்தபடி நிற்க, 

“ஹலோ… !” எனக் குரல் கேட்க,  இனியா திரும்பினாள்.  

“என்ன?”என்று இனியா பார்க்க,  கையில் சாவியை ஆட்டியபடி விக்ரம் நின்றிருந்தான். 

“உங்க காரா ஸார்?… சூப்பர் ஸார் …, எனக்கு இந்தக் கார் மிகவும் பிடிக்கும்…” என்று எப்போதும் போல் படபடவென்று பேசினாள் .

ஏற்கனவே கேண்டீனில்,  இனியா தன்னைப் பற்றி விசாரித்ததைக் கேட்டிருக்க,  இன்று தன் கார் முன் பார்த்தவன் கடுப்பாக,

அவளை ஒரு ஏளனப் பார்வையோடு, “மூவ்..” என்றான்.

     கன்னத்தில் அடி வாங்கியது போல் உணர்ந்தாள். சட்டென்று கண்கள் கலங்க, உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் இனியா.

  

இந்த மாதிரி நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை என்பதால் குழம்பிப் போனாள். பின் தன்னைச் சமன்படுத்துவதற்காக,  அங்கிருந்த ஆபீஸ் பூங்காவில் அமர்ந்தாள். 

எதற்காக அப்படிப் பார்த்தான் என்று புரியாவிட்டாலும் , தன்னைக் கேவலமாக எண்ணுகிறான் என்று மட்டும் புரிந்தது.

 சற்று மனம் தெளிந்தவுடன் ஒரு பக்கம் விக்ரம் மீது கோபம் வந்தது , மறுபக்கம் தான் ஒன்றும் பேசாமல் வந்ததை நினைத்து வருந்தினாள்.

‘ஒரு நாள் மாட்டுவ மவனே அன்று வைத்துக் கொள்கிறேன்’ என அவளுடைய இயல்பான குணம் தலை தூக்க,  சபதம் எடுத்துக் கொண்டாள் . 

இந்த அவமானத்தை யாரிடமும் சொல்லப் பிரியப்படவில்லை. சொன்னாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதும் புரிந்தது. 

‘நாமே பார்த்துக் கொள்ளலாம்’ என முடிவு செய்த பின், சற்று சமாதானமாகி உள்ளே சென்றாள். 

ஆனாலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை, சோர்வாக உணர்ந்தாள் .

டீம் மக்கள் கவனித்துக் கேட்க, “தலைவலி….” எனச் சமாளித்தாள்.

இனியா மிகுந்த எரிச்சலுடன்,  முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீட்டிற்கு வந்தாள்.

 

கவிதா கவனித்து அருகே வர, “அம்மா..” என்றவாறு  மடியில் சாய்ந்தாள் . 

கவிதா விசாரிக்க,  இனியா நடந்தவற்றைக் கூறினாள்.

இனியவை நிமிர்த்தி, எதிரே உட்கார வைத்து, அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு,  “குட்டிம்மா , இப்போது தான் நீ நிஜ உலகத்தில் அடி எடுத்து வைத்துள்ளாய் , இனி இது மாதிரி பல நபர்களைச் சந்திக்கக்கூடும்,  சிலர் அவர்களது மன அழுத்தங்களை நம்மிடம் காண்பிப்பர்,  சிலர் நமது உழைப்பைத் திருட முயல்வர், நமது புகழை மறைக்க முயலவர், சிலர் நமக்கு கேட்காமலே உதவுவர்,  சிலர் நமது முன்னேற்றத்திற்குத் துணை நிற்பர். நீ தான் அனைவரையும் கண்டு கொண்டு சரியான முறையில் கையாள வேண்டும்..” எனக் கவிதா அவளுக்குத் தன்மையாக எடுத்துச் சொன்னார் 

“அதே போல ஒரு நிகழ்வில் யாரையும் எடை போடாதே, இரண்டு மூன்று முறை கவனித்து விட்டு முடிவு எடு. உன்னுடைய குணத்திற்கு ஒத்து வர மாட்டார்கள் உறுதியாகத் தெரிந்தால்  இரண்டு அடி தள்ளி நின்று விடு இனியா.

 

அப்புறம் முக்கியமாக உன் வீர சாகஸங்களைக் காட்ட முயற்சி செய்யாதே,  பக்குவமாக நடந்து கொள். அனுபவங்களைப் பாடமாக்கிக் கொள்.”

அம்மாவிடம் பேசிய பிறகு,  இனியா தெளிந்தாள்.

“தேங்க்யூமா…” என்று முத்தமிட்டு விட்டு, அறைக்குச் சென்றாள்.

அப்போது, இவை அனைத்தையும் கவனித்தவாறு நின்றிருந்த கார்த்திகேயன்,  கவிதாவைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்தி, கட்டை விரலை உயர்த்தினார்.

“நான் சரியாகத்தான் பேசினேன், நம்மாளு போய் வம்பு பண்ணாமல் இருக்கணும். பார்ப்போம்..” என்று சிரித்தார் கவிதா.

அத்தியாயம் 6

சென்னை போட் ஹவுஸில் இருந்தது அந்த மிகவும் பிரமாண்டமான வீடு , மெயின் கேட்டில் இருந்து அரை கிலோ மீட்டராவது உள்ளே சென்றால் தான், வெள்ளை மாளிகை உங்களை வரவேற்கும். அங்கு வேகமாக நுழைந்தான் விக்ரம். 

வெளியில் செல்லும் முனைப்பில் இருந்த அவன் அம்மா மாலினி, இவனைக் கண்டவுடன், “என்னப்பா சீக்கிரம்…?” என்றவாறு, உள்ளே  திரும்பி “செல்வம்…” என்று அழைத்தார். 

அவர் வர , “தம்பி வந்து விட்டான்… என்ன வேண்டும் என்று கேட்டு கவனியுங்கள்…” என்றார். பின் விக்ரமிடம், “அம்மாவிற்கு மீட்டிங் இருக்குதடா,” எனத் தயங்க , 

“சரிம்மா , நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று கையாட்டினான்.  

“என்ன வேண்டும் தம்பி?” என்று செல்வம் வினவ , 

“மசாலா டீ போடுங்கள்,  நான் சற்று நேரத்தில் வருகிறேன்..” என்று மாடிப்படி ஏறினான். இடையில் நின்றபடி, “அப்பா இருக்கிறாரா?” எனக் கேட்டான்.

“அப்பா , டில்லி போயிருக்கார் தம்பி“

“ஓ..! ” என்று மாடி ஏறினான். எல்லோரும் பிஸி என நினைத்தபடி , கடகடவென்று குளித்து விட்டு கீழே வந்தான்.

 

செல்வம் டீயோடு நிற்க, அதை வாங்கிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான். கண்ணை மூடியவாறு ஏகாந்தமாகப் பருகினான். கண்ணை மூடிய பொழுது , மின்னல் மாதிரி இனியாவின் கலங்கிய முகம் வந்து போக. மனதில் ஏதோ உறுத்த,  குழம்பினான் .

 

சட்டென்று கண் விழிக்க,  அவன் தாத்தா நடைப்பயிற்சி முடித்து, அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னடா இந்நேரம்  வந்திருக்கிறாய்?”   

 “இரவு ஒரு பார்ட்டி இருக்கு தாத்தா,  அதான் கொஞ்சம் ரெப்ஃப்ரஷ் பண்ணிட்டுப் போலாம் என வந்தேன்.”  

பின் பேச்சு, வியாபாரத்தை நோக்கி நகர்ந்தது  . 

சிறிது நேரம் சென்ற பின், “என்னடா ராஜா,  முகமே சரியில்லை…” எனக் கேட்டபடி உற்றுப் பார்த்தார்.

 “ஒன்றுமில்லை..” என்று மழுப்பினான்.

 

மீண்டும் அமைதியாக அவனைப் பார்க்க,  “ தேவையில்லாமல்  காலையில் ஒருவரைத் திட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது தாத்தா. அதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது” 

“ஓ! சரி, பார்த்துக்கலாம் ராஜா. கொஞ்சம் அந்த நபரைக் கவனி , சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள். ஆனால் தவறு என்று உறுதியாகத் தெரிந்தால்,  வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை சரி செய்து விடு…”  

“ஓ.கே. தாத்தா..”  என்று பார்ட்டிக்குத் தயாராகச் சென்றான்.

விக்ரம் உள்ளே செல்ல , தாத்தா யோசனையோடு அவனைப் பார்வையால் தொடர்ந்தார் .

அத்தியாயம் 7

ஒரு வாரம் சென்றிருக்க,  நிகழ்ச்சிக்கான குழந்தைகள் தேர்வு முடிந்து இருந்தது ,

 படப்பிடிப்புக்குச் செட் ரெடி ஆகிக் கொண்டிருந்தது. டீம் மெம்பர்ஸ் அனைவரும் செட்டைப் பார்த்தவாறு,  கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டு கலகலத்தனர். 

அப்பொழுது விக்ரம்,  வேகமாக வர ,

அதுவரை கலகலத்துக் கொண்டிருந்த இனியா,  அவனைத் தீப்பார்வை பார்த்து விட்டு, மெல்லப் பின் தங்கினாள். 

“செட்டைப் பார்த்தீங்களா?  எல்லாம் ஓ.கே.யா? இல்லை, ஏதாவது மாற்றங்கள்..?” என்று விக்ரம் கேட்க,

 “இனியா சொல்லு…” என அர்ஜுன் முன்னிலைப்படுத்த, 

இனி தயங்கினால் நன்றாக இருக்காது எனப் புரிய,  உடனே விரைப்பாக,  “உங்கள் பட்ஜெட் அனுமதித்தால்,  சின்ன பிளே ஏரியா செட் பண்ணலாம்,  குழந்தைகளை விளையாட விட்டு சூட் பண்ணினால் இயற்கையாக இருக்கும்…” 

இடை புகுந்த அனு,  “அதை டைட்டில் அல்லது இறுதிப் பகுதியில் பயன்படுத்திக் கொள்ளலாம்..” 

 “ம்….  மற்ற டிபார்ட்மென்டோடு கலந்து பேசி விட்டுச் சொல்கிறேன். பார்க்கலாம்….” என்றவாறு இனியாவை சுவாரசியமாகப் பார்த்தபடி நகர்ந்தான்.

“கலக்கிட்ட,  சூப்பர் அனு…. “ என்று அர்ஜுன் பாராட்ட,

 

“இனியா…” என்று வசந்த் அழைக்க, 

தலையின் பார்வையைப் பற்றிய யோசனையில் இருந்தவள் , “என்னாச்சு வசந்த்?”

“அர்ஜுன் உன்னைக் கண்டுக்கவில்லை பார்” என்று வம்பு செய்ய, 

இனியா உடனே, “நாம் இருப்பது தெரிவதே பெரிய விசயம் வசந்த்…” என நக்கலடிக்க , 

வசந்த் ஹைஃபை செய்ய,

அர்ஜுன் வெட்கச் சிரிப்புடன், “ஸார் பார்க்கலாம் என்றால் ஓ.கே. ஆன மாதிரி தான்…”

 

பின்  கான்செப்ட், என்ன என்ன சுற்றுகள்?  வீஜேயோட பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பேச்சுப் போனது. 

பின் அனைவரும் கலைந்தனர்.

மறுவாரம் பரபரப்பாகச் சென்றது. செட்டில் பிளே ஏரியாவும் ரெடியாக இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்திருந்தது.

 

முதல் சுற்று  _   திறமைகளை வெளிப்படுத்துதல் 

ஒரே திறமையைச் சோதிக்காமல்,  குழந்தைகள் விரும்பியவாறு கதை, கவிதை சொல்வது  ஏதேனும் தலைப்பில் பேசுவது, பாட்டு, நடனம்,  மிம்கிரி,  ஜோக் சொல்வது என்று முடிவு செய்யபட்டிருந்தது.

இரண்டாம் சுற்று _  மாறுவேடப் போட்டி 

மூன்றாம் சுற்று _   இனியா குழந்தைகளை எடக்குமடக்காகக் கேள்வி கேட்க வேண்டும் , அதற்கு அவர்களின் பதில்கள் காமெடியாக இருக்கும்படி பிளான் செய்யப்பட்டது. 

இனியா குழந்தைகளோடு குழந்தையாக இணைந்து, தன்னை சில நேரம் கீழாக இறக்கி நடந்து,  சில சமயம் சரிசமமாகப் போட்டி போட்டு,  சில சமயம் குழந்தைகளிடம் மொக்கை வாங்கி…. என நிகழ்ச்சியை நன்றாகக் கொண்டு சென்றாள்.  

நிகழ்ச்சியின் பேர் மட்டும் முடிவாகாமலே இருந்தது. 

முதல் எபிசோட் விக்ரமிற்கும்,  சாருமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது . 

இன்று விக்ரமோடு இறுதி  டிஸ்கஸன்,  டீம்  முழுவதும் ஆர்வமோடு காத்திருந்தார்கள்.

விக்ரம் , சாருமதி மேடத்துடன் உள்ளே நுழைந்தான், “ குட் , எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது…” எனப் பாராட்டினான். 

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.

” தென் , தலைப்பை முடிவு செய்து விட்டீர்களா?” 

“சுட்டி குட்டீஸ்,  செல்லமே, கண்மணிகளே எனச் சில சாய்ஸ் யோசித்துள்ளோம்…” என்றார் சாருமதி.

“செல்லமே என்று இருக்கட்டும்.….” என விக்ரம் இறுதி முடிவு  எடுத்தான்.

சாருமதி மேடத்திடம், “புரோமோஸ் ஆரம்பித்து விடுங்கள் . எத்தனை எபிஸோடுகள் முன்னமே வேண்டும் என்பதை முடிவு செய்துவிடுங்கள்” என்று அடுத்தடுத்த கட்டளைகளைப் பிறப்பித்தான்.

அடுத்து நடக்க வேண்டியவைகளைப் பற்றி பேசியபடி , இனியா மீது யாரும் அறியாத வண்ணம் ஒரு தீர்க்கமானப் பார்வையைச் செலுத்தி விட்டு நகர்ந்தான். 

அவன் பார்வை, சில நொடிகளே அவள் மீது படிந்து சென்றது , அவளுக்கே அவன் தன்னைப் பார்த்தானா? இல்லையா? எனச் சந்தேகப்பட்டு , குழம்பும்படி இருந்தது.

 “வா இனியா போகலாம்“ என அனு அழைக்க, சுயநினைவு பெற்றவள், யோசனையை கைவிட்டு அவளுடன் கிளம்பினாள் .

அத்தியாயம் 8

அடுத்த வாரத்தில் ஒரு நாள், சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது,  கால் புரண்டு விட,  கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக இருக்க, அவர் விடுப்பு எடுத்தார்.

 

“இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் . 

“என்ன?” என்று அனுவும் , இனியாவும் பார்க்க, 

“இரண்டு மூன்று புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிற்குத் தயாராக இருப்பதால்,  சாருமதி மேடத்திற்குப் பதிலாக விக்ரம் ஸார் பொறுப்பேற்றுக்குக் கொள்வார் என ஒரு டாக் ஓடுகிறது…”

“ஏன் பாஸ்?  விக்ரம் ஸார் தான் இந்தச் சேனல் முதலாளி. அவர் ஏன் கிரியேடீவ் கெட்டாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்?  வேறு யாரையாவது நியமிக்கலாமே?”  என இனியா மிகப் பெரிய சந்தேகத்தைதக் கேட்க,

‘கிரியேடீவ் சைடில் வேலை செய்ய,  விக்ரம் ஸாருக்கு ரொம்ப விருப்பம்,  அதான் அவரே இறங்கி விடுவார். பிஸியாக இருந்தால் மட்டுமே,  தவிர்ப்பார். மேலும் ஒரு விதத்தில் நிகழ்ச்சியின் தரத்தையும் தீர்மானிப்பதற்காகத் தான்.”

“ஓ…!” என்று முடித்துக் கொண்டாள் இனியா.

அனைவரும் எதிர்பார்த்த மாதிரி விக்ரம் பொறுப்பேற்றுக் கொண்டான். 

புதிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பினால்,  சேனலே பயங்கர பிஸியாக இருந்தது. 

ஒரு வாரம் சென்றிருக்க, விக்ரம் இவர்களின் படப்பிடிப்பு தளத்திற்கு வர,  அவன் கண்கள் இனியாவைத் தேடியது.  அறையின் ஓரத்தில் மேஜையில் தலை வைத்துப் படுத்திருந்தாள். 

யாரும் பார்ப்பதற்கு முன் பார்வையைத் திருப்பியவன்,  பின் அர்ஜுனிடம், படப்பிடிப்பு நிலவரத்தைக் கேட்டுக் கொண்டு நகர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து விக்ரமிற்கு ஏனோ மனம் உந்த,  மீண்டும் அதே தளத்திற்குச் சென்றான்.

  

அவர்கள் இருந்த அறையைக் கடக்கும் பொழுது உள்ளே பார்த்தான். 

இனியா சற்று சோர்வுடன்,  ஆனால் மெல்லிய புன்னகையுடன் கையில் காபியுடன் இருக்க,  அவள் அருகில் உதவியாளர் ராஜேஷ் இருந்தான்.  அந்த இடமே ஒரே கேலியும் கிண்டலுமாக இருந்தது. 

அங்கிருந்த சூழ்நிலை பார்த்து என்ன நடந்திற்கும் என யூகித்துக் கொண்டான். பின் அங்கு இருந்து நகர்ந்தான் விக்ரம்.

“எங்களுக்குத் தலைவலி வந்தபோது காபி கொண்டு வந்தாயா?  இனியாவிற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு?” என அர்ஜுன்  ராஜேஷிடம் வம்பு செய்ய, 

‘ராஜேஷ் என்ன சொல்வது?’ என்று தெரியாமல் சிரித்து வைக்க,

அவனைக் காப்பாற்றும் விதமாக உள்ளே புகுந்த வசந்த், “நீ போன வாரம் அனுக்கு உடம்பு சரியில்லாத போது பயங்கரமாகக் கவனித்தாயே…. , நாங்கள் ஏதாவது கேட்டோமா?” எனக் கலாய்க்க, 

இனியா ஹைஃபை செய்ய, அந்த இடமே கலகலத்தது .

அடுத்தடுத்த நாட்களில் இனியா பிஸியானாள். தொடர்ந்து படப்பிடிப்பு இருந்தது,  

ஒரே நல்ல விசயம்,  குழந்தைகள் நிகழ்ச்சி என்பதாலும், பிரபலங்கள் யாரும் இல்லாததாலும் காலையிலே படப்பிடிப்பு இருந்தது. அவளும் அலுவலக வேலைக்குச் செல்வது போல் சுகமாக வந்து போய்க் கொண்டிருந்தாள்.

இவள் ஷோ ஒளிபரப்பான முதல் நாள்,  அவள் குடும்பமே டிவி முன்னால் குழுமியிருந்தனர். அனைவரும் ரசித்துப் பார்த்தனர் . 

இனியா குழந்தைகளிடம் மொக்கை வாங்கும்போது , காவியா ஓட்டித் தள்ளினாள் .

இனியா சிணுங்கியபடி,  அப்பாவைப் பார்க்க,   

“உன்னுடைய கனவு,  ஆசை அதற்கு நீ போட்ட உழைப்பு எல்லாம் உன் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் குட்டிம்மா…..“ 

 

உடனே, வேகமாக வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.

“சாதித்து விட்டாய் குட்டிம்மா,  ரொம்ப சந்தோஷம்…” என்று கவிதா நெற்றியில் முத்தமிட்டார்.

காவியா சிரித்தபடி இருக்க,

உடனே இனியா,  “ நாளைக்கு என் தோழிகள் கேட்டார்கள் என  ஆட்டோகிராப் வாங்க வருவ தானே…. , அப்போது கவனிச்சுக்கிறேன்….” எனக்  கெத்துக் காட்டினாள். 

ஆக மொத்தம் அவள் வீ.ஜே. பயணம் இனிதே தொடங்கியது .

 திங்கள் முதல் வெள்ளி வரை ‘செல்லமே’ ஷோ  ஒளிபரப்பாகியது. குடும்பத்தோடு பார்க்கும் நிகழ்ச்சி எனப் பெயர் பெற்றது . 

இனியாவிற்கும் நல்ல ரீச் கிடைத்தது.

தொடரும்…..