காதல் வைபோகமே…. நாள்-21

அத்தியாயம் 66

வெள்ளி மாலை ஒரு பிரபல ஹோட்டலில் இரண்டு குடும்பமும் சந்தித்துக் கொண்டனர். தாத்தா பெரியவராக இருந்து,  பேச்சு வார்த்தைகளை நல்லபடியாகக் தொடங்கி வைத்தார்.

ரகு,  மாலினிக்கு…. 

இனியாவையும், அவள் குடும்பத்தை நேரில் பார்த்ததும்  பரமதிருப்தி. இனியாவை தன் அருகே மாலினி அமர்த்திக்  கொண்டார்.

விக்ரம் வீட்டில் பிகு பண்ணாமல் நேராக விசயத்திற்கு வர,

“பசங்க விரும்பிட்டாங்க,   அடுத்த கட்டத்திற்கு நாம் நல்லபடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்…” என ரகு பேச்சை ஆரம்பித்தார்.

கார்த்திகேயனும், “வளர்ந்த பிள்ளைகளின் முடிவை நாம் மதிக்கத்தானே வேண்டும்…” எனப் பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும், “ ரொம்ப நாள் வெளியே தெரியாமல் தள்ளிப் போடுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்…..” எனப் பெண்பிள்ளை பெற்றவராய்த் தன் கவலையைத் தெரிவித்தார். 

“நாங்களும்,  தேவையில்லாத வதந்திகளுக்கு வழி வகுக்கக் கூடாது என யோசித்து வந்தோம். விக்ரம் லண்டன் டிரிப் முடிந்தவுடன், நல்ல நாளாகப் பார்த்து நிச்சயதார்த்தம் முடித்து விடலாம். திருமணம் கூட இவர்கள் விருப்பப்படி ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாம்…” 

“ஒரு வருடம் கழித்து திருமணம் என்பதால் நிச்சயதார்த்தத்தைப்  பிரமாண்டமாகச் செய்து,   அனைவருக்கும் அறிவித்துவிடலாம்….” என்றார் மாலினி.

 

கார்த்திகேயன்,  கவிதா தம்பதியருக்கும்,  இந்த முடிவு சரியென்று  பட ஒத்துக் கொண்டனர்.

“ நான் ஜோசியரைப் பார்த்து,  இரண்டு,  மூன்று நாட்கள் வாங்கி விட்டு,  உங்களைக் கூப்பிடுகிறேன். எந்தத் தேதி ஒத்து வருது எனப் பார்த்து மண்டபம் முதலியவற்றை முடிவு செய்து விடலாம்…” என விக்ரமன் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டார்.

அனைவரும் திருப்தியாகக் கலைந்து சென்றனர்.

வீட்டிற்கு வந்த கவிதா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதுங்க,  விக்ரம் வீட்டில் அனைவரும் எந்த அரசியல் பந்தா இல்லாமல் யதார்த்தமாக இருக்கிறார்கள்,  தன்மையாகவும் பழகுகிறாள்”

“தாத்தா பொறுப்பை எடுத்துக் கொண்டது கூட நல்லது தான், நமக்கும் பேச,   எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஈஸியாக இருக்கும்….” என்றார் கார்த்திகேயன்.

“என்ன ஜில்லு, ஹாப்பியா?”என விக்ரம் கேட்க, 

“இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது…” என அவளும் வளவளத்து விட்டுப் போனை வைத்தாள். 

நாட்கள் அதுபாட்டிற்குப் போக,  அனைவரும் அவர்கள் வேலையில் பிஸியானார்கள்.

 

ஒரு பக்கம் ரோஜாவின் வழக்கும் பல கோணங்களில் போய் கொண்டிருந்தது.

சேனலில் புதிய மாற்றமாக,  கவுன்சிலிங் கமிட்டிக்குப் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. பல துறைகளில் இருந்து வல்லுநர்கள் சேர்க்கப்பட்டனர். 

மன உளைச்சலுக்குக் ‘கவுன்சிலிங்கே சரியான தேர்வு’ என விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரகசியங்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கை தரப்பட்டது. 

மேலும் பணப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டவும்,  தீர்வு அளிக்கவும்,  உதவவும் இந்தக் குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டது

மாத இறுதியில் மீட்டிங் எனவும், அங்கு எல்லா பிரச்சனைகளும் விவாதிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யபட்டது.

‘சி’ சேனல்,‌  அதன் மூன்று மொழியிலும் செய்த இந்த முன்னெடுப்பிற்குப் பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. இவர்களைத் தொடர்ந்து,   பல சேனல்கள் இந்த கமிட்டியை அமைக்க முற்பட்டன.

இனியாவும் இவன் முன்னெடுப்பைக் கண்டு மிகவும் சந்தோஷமானாள். நேரில் சந்தித்தபோது சிலபல சன்மானங்களுடன் தன் நன்றியைத் தெரிவித்தாள்.

“இதற்காகவே அம்மணி சொல்வதையெல்லாம் செய்யலாம் போல…” எனக் கேலி செய்தான்.

  பின்,  “ஜோக்ஸ் அபார்ட் ஜில்லு,   ரோஜாவின் மரணம் என்னையும் உலுக்கி விட்டது. இன்னொரு முறை இப்படி ஒரு மரணம் நிகழக் கூடாது என நினைக்கிறேன். நல்ல பெண்,  நிச்சயம் நிறைய சாதித்திருப்பாள். தப்பான தேர்வு,   அதைத் தைரியமாக எதிர் கொள்ளாமல் போய்விட்டாள்…” என வருத்தப்பட்டான்.

 

நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொண்டார்கள்.   மற்றபடி வழக்கம் போல் போனில் காதல் வானில் பறந்தனர்.

லண்டன் செல்வதற்கு முன் விக்ரமைச்  சந்தித்த இனியா, “தல…” என இழுக்க, 

“என்ன அம்மணி,  ஏதோ அப்ளிக்கேஷனோடு வந்திருக்காயா?” எனச் சரியாகக் கேள்வி கேட்டான்.

“என் நண்பரிகளிடம் அஃபிஷியலாகத் தெரிவிக்கும் முன் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கும் எவ்லோருக்கும் தெரியும் பொழுது சொன்னால் நன்றாக இருக்காது, தர்மசங்கடமாகி விடும்….” எனத் தன் கருத்தைச் சொன்னாள்.

“நீ சொல்வதும் சரிதான் ஜில்லு,  சரி, சொல்லி விடு பார்த்துக் கொள்ளலாம்…” எனச் சம்மதம் சொன்னான்.

“எனக்கு ஒரு மாதிரி வெட்கமாக,  சங்கடமாக இருக்கிறது. நீங்களும் வாங்களேன்….”  என மனு போட்டாள்.

“ம்ம்…” என புன்னகைத்தவாறு, “சரி,  இந்தச் சனி,  ஞாயிறுகளில் எந்த நாள் சரியாக வரும் எனப் பேசி,  விசயத்தை சொல்லாமல் ஹோட்டலில் டின்னருக்கு ஏற்பாடு செய். நான் பார்த்துக் கொள்கிறேன். மேலும், நானும் திங்கள் அன்று லண்டன் செல்கிறேன். அதனால் நான் வருவதற்குள் இது ஒரு வழியாகச் செட்டிலாகிவிடும் இனியா….”

“ஞாயிறு இரவு என்னுடைய ட்ரீட்…” என மூவரையும் அழைத்திருந்தாள்.

“என்ன ஸ்பெஷல்?” என அனு கேட்க,

“ சும்மா தான்…” 

“நம்ப முடியவில்லையே…” என வசந்த் இழுக்க , 

இனியா அசடு வழிந்தபடி, “இருக்கு, அங்க வாங்க சொல்கிறேன்…” என முடித்தாள்.

அத்தியாயம் 67

“என்ன இனியா? வளமாக இருக்கிறாய் போல….” ஹோட்டலைக் கண்ணால் காண்பித்தபடி வசந்த் கேட்க,  

இனியா பொதுப்படையாகச் சிரித்து வைத்தாள்.

“ஆளு சரியில்லையே….  என்ன தகிடுதத்தம் பண்ணின?” என் அர்ஜுன் கேட்க,

“உங்களுக்கு ட்ரீட் கொடுக்க வந்தவளை,  இப்படியா சந்தேகப்படுவீர்கள்?”  என் அனு கொந்தளிக்க,

“இன்னும் இவளை நம்புகிறாயா?”  எனப் பார்வையை அனு மீது செலுத்திவிட்டு,

 “சரி நல்லவளே…. என்ன விஷயம்? அதை முதலில் செப்பு…..” என்றான் வசந்த்.

“எனக்குக் கல்யாணம் முடிவாகி இருக்கு,  அதைக் கொண்டாடத் தான் இந்த ட்ரீட்….”  என்று குண்டைத் தூக்கி அசால்ட்டாகப் போட்டாள்.

மூவரும் திகைத்துப் பார்த்தனர்.  பின் சுதாரித்த அனு,  “என்ன இனியா,  இவ்வளவு மெதுவாகச் சொல்கிறாய்…. பேச்சு வார்த்தை நடந்ததைப் பற்றி எதுவுமே  சொல்லவில்லை….” என்று கோபப்பட,

“திடீரென முடிவாகிவிட்டதா?” என் அர்ஜுன் கேட்டான்.

இடைபுகுந்த வசந்த்,  “வெய்ட்,   இவள் பேசுவதைப் பார்த்தால்,  நிச்சயகப்பட்ட திருமணம் மாதிரி தெரியவில்லையே…!  சோற்றை வாங்கிப் போட்டு,  சாட்சி கையெழுத்துக்கு ஆள் பிடிக்கிறாள் என நினைக்கிறேன்…..” என்று சந்தேகத்தைக் கிளப்ப,

அனுவும்,  அர்ஜுனும்,  அப்படியா? என்பது போல் பார்க்க,

இனியா  மிகவும் ரோஷமாக,  “அதெல்லாம் வேண்டாம்,   லவ் கம் அரேஞ்ஜ்டு தான்…” 

“சரி,  உன் ஆளு,  என்ன பண்ணுகிறார்?” என் வசந்த் கேட்க,

“நம்ம சேனலில்…..” ஆரம்பிக்க,

“என்னது நம்ம சேனலா?  செவ்வாழை உன்னோடு தானே. சுத்துகிறேன்…..   எனக்கு எப்படித் தெரியாமல் போச்சு?” என் அர்ஜுன் அங்கலாய்க்க,

“உனக்கு அனுவைத் தவிர,  வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாதே….” என் வசந்த் வார,

“வசந்த்,  ரூட்டை மாற்றாதே,  டார்கெட் எஸ்ஸாகி விடும்…..”  என்றாள் அனு.  அனைவரும் இனியா மீது பார்வையைத் திருப்ப,

“யார்? எங்கே? எப்படி? என் ஆல் டீடெயில்ஸை இப்போ செப்பு….” என என்கொயரியை ஆரம்பித்தான் வசந்த்.

“வந்து….”  என இனியா பேச ஆரம்பிக்கும் பொழுது,  ஹோட்டலுக்குள் விக்ரம் நுழைவதை அர்ஜுன் கவனிக்க,  “தல…”. என் உற்சாகமாக எழுந்தான்.

அவனை இழுத்து உட்கார வைத்த அனு,  “அவர் என்ன வேலையாக வந்தாரோ…. தொந்தரவு பண்ண வேண்டாம்…”

அரை மனதாக ‘சரி’ எனத் தலையாட்ட,  வசந்த் கவனமெல்லாம் இனியாவிடம் இருக்க,  அவளும் வாசலைப் பார்ப்பதைக் கவனித்தான்.

அவள் திரும்பியிருந்ததால்,  அவள் முகத்தில் நடந்த வர்ணஜாலத்தைக் கவனிக்கவில்லை,  இல்லையென்றால் சுதாரித்த இருப்பான், “அடுத்து வருவது என்ன?” என்று யூகித்திருப்பான்.

நடந்த பஞ்சாயத்தில் அனுவும் கவனிக்கவில்லை. ‘தல’யைப் பார்த்தபின்,  அர்ஜுனுக்கோ வாய்ப்பேயில்லை….

“தல நம்மை நோக்கித் தான் வருகிறார்.  அவர் ஒன்றும் பந்தா பேர் வழியில்லை. நாமே முதலில் ஒரு ஹலோ சொல்லியிருக்கலாம். மரியாதையாக இருந்திருக்கும்….”  என்று புலம்பியபடி எழுந்து,  “ஹலோ ஸார்…”  என்றான். 

வேறு வழியில்லாமல் அனைவரும் எழுந்து விக்ரமை வரவேற்றனர்.

“வாங்க ஸார்,  உட்காருங்கள்….” என அர்ஜுன் ஒரு மரியாதைக்காகச் சொல்ல,  யாரும் எதிர்பாராத வண்ணம், விக்ரம் இனியா அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அனைவரின் திகைத்த முகத்தைக் கவனித்தே,   இன்னும் இனியா சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்,  சிறிது நேரம் விளையாடலாம் என்று நினைத்து,

“என்ன அர்ஜுன்?  என்ன ஸ்பெஷல்?” எனப் பாலை அர்ஜுனிடம் வீசினான்.

உடனே பதறிய அனு, “ சும்மா தான்…” என்று முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்தாள்.

“ஓ…! அப்படியா அர்ஜுன்…”  எனப் பார்வையைத் கூர்மையாக்க, 

 “ஐயோ…” என்றிருந்தது அனுவிற்கு,  இனி ஆண்டவனால் கூட தடுக்க முடியாது என்பது புரிந்தது.

அர்ஜுனின் பேச்சைத் தடுக்கும் யோசனையில்,  அர்ஜுனின் தொடையை அழுத்தியபடி, “இனியாவிற்குத் திருமணம் முடிவாகியிருக்கு ஸார்….  அதற்குத்தான் சின்ன விருந்து….” என, ‘விக்ரம் விட்டு விடுவான்’ என நினைத்து வசந்த் சொன்னான்.

“ஓ…!  வாழ்த்துக்கள் இனியா….”  என்றான் குறுஞ்சிரிப்புடன்,

இனியா கடுப்பாக அவனை முறைக்க,  பாசமலரின் கதையைச் சொல்லும் எண்ணத்தில், அர்ஜுன் களத்தில் குதித்தான்.  “ஸார்…” என ஆரம்பிக்க,

“இதை…. இதைத்தான் எதிர்பார்த்தேன்….” எனக் குஷியானான் விக்ரம்.

வசந்த்தும்,  அனுவும் இனியாவைப் பரிதாபமாகப் பார்க்க,  இனியா வின் நிலைமையைப் கேட்க வேண்டுமோ? என்ன சொல்லப் போகிறானோ?  எனப் பயத்தோடு அர்ஜுனைப் பார்த்தாள்.

“இனியாவிடம் நம் சேனலில் இருந்து ஒரு பாவப்பட்ட பையன் மாட்டிகிட்டான் போல,  அவனைப் பற்றித் தான் விசாரித்துக் கொண்டிருந்தோம்.  நீங்கள் சரியாக என்ட்ரி கொடுத்தீர்கள்.  முடிந்தால் அவனைக் காப்பாற்ற வேண்டும்….” என்று வழக்கம் போல் இனியாவை டாமேஜ் செய்தான்.

இனியா கடுப்பின் உச்சியில்,  தன் தீப்பார்வையைப் பாஸிடம் செலுத்த,  அதைக் கவனிக்கும் மனநிலையில் அர்ஜுன் இல்லை.   தலையோடு சேர்ந்து அமர்ந்திருப்பதிலே பூரித்துப் போயிருந்தான்.

“யார் என்று சொல் இனியா?” என்று அர்ஜுன் கேட்க,

பேரர் ரசமலாயோடு வர,

நாங்கள் எதுவும் ஆர்டர் பண்ணவில்லையே…. என்று யோசனையோடு,  ஏதேனும் காம்ப்ளிமென்ட்டோ… எனப் பெற்றுக் கொண்டனர்.

விக்ரம்,   இனியாவைப் பார்த்து வாய் கொள்ளாச் சிரிப்போடு,  “யாரும்மா அது?” என்று கேட்க,

கடுப்பில் இருந்தவள், “ஆ… ஆங்… தல…” என்றாள்.

     அர்ஜுன் இடைபுகுந்து,  “என்ன பேச்சு இது?” எனத் தடுக்க முயல,

   இதற்கு மேல் பொறுமையாக இருந்தால்,  அது இனியா அல்லவே….! “உண்மையைத்தான் சொல்கிறேன்,  தல தான்…” என அவன் கையைப் பற்றி, “சொல்லுங்கள்…” என்றாள்.

நிசப்தம்,  அமைதி,  என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தது.  சுற்றி நடப்பது என்னவென்று தெரியாமல் ‘ஆ’வென வாயைப் பிளந்தது இருவரையும் பார்த்தனர்.

“அந்தப் பாவப்பட்ட பையன் நான் தான் அர்ஜுன்….” எனக் கலகலவெனச் சிரித்தான்.

“விக்ரம்….” என்று இனியா கோபமாக அழைக்க,

உடனே,  “நான் ஆசைப்பட்டுத்தான் மாட்டிக்கிட்டேன்.  சமாளித்து விடுவேன்.   யாரும் காப்பாற்ற வேண்டாம்…” என்று வெடித்துச் சிரித்தான்.

தாங்கள் காண்பது கனவா? என்பதை உணர,  வசந்த் அர்ஜுனைக் கிள்ள,  அவன் கத்தினான்.

சுதாரித்த அனைவரும் அடுத்து என்ன என்பது? போல் பார்க்க,  “முதலில் ஸ்வீட் சாப்பிடுங்கள்….  பிறகு பேசலாம்…” எனப் புன்னகைத்தான்.

ஏதேதோ எண்ண ஓட்டத்தோடு,  ஸ்வீட்டை முடித்தனர்.

விக்ரம் மீண்டும் தன் கம்பீரக் குரலில், “நாங்கள் விரும்புகிறோம்…. இரண்டு வீட்டுப் பெரியவர்களும் பேசி விட்டார்கள்.  அநேகமாக இரண்டு மாதத்தில் நிச்சயதார்த்தம் இருக்கும்…” என முகத்தில் மெல்லிய புன்னகையோடு தெரிவித்தான்.

அஃபீஷியலாக வெளியே தெரிவதற்கு முன்,  உங்ககிட்ட நாங்க இரண்டு பேரும் சேர்ந்து சொல்ல வேண்டும் என்று இனியா பிரியப்பட்டாள்.  அதான் இந்த மீட்டிங்…” என் முடித்தான்.

“வாழ்த்துக்கள்….”   என்றவர்கள்,  அடுத்து என்ன பேசுவது? எனத் தெரியாமல் அமைதி காத்தனர்.

அவர்களின் நிலைமையைப் புரிந்த விக்ரம்,  “ஓ.கே. ஃபிரெண்டஸ்…. நாளைக்குத் காலையில் ஃபிளைட்.  நான் கிளம்புகிறேன்.  நீங்கள் ரிலாக்ஸாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள்….” என எழுந்தவன்,  பின் இனியாவிடம் குனிந்து, “என்னை வைத்து எஸ்கேப் ஆகலாம் எனப் பார்த்தாயா? தங்கமணி என்ஜாய்….”. எனக் கிசுகிசுத்து விட்டு,  “அவளைப் பத்திரமாக டிராப் செய்து விடுங்கள் வசந்த்…” எனச் சொல்லிச் சென்றான்.

இனியாவிற்கு,  உங்கள் நட்பு எவ்வளவு முக்கியம் என்பதையும்,  அவளை டிராப் செய்யச் சொன்னதில் இருந்து…. நானும் அவர்களின் நட்பை மதிப்பதை உணர்த்திய விதத்திலும் பேச்சற்ற இருந்தனர்.

இனியாவும் அவன் பேச்சில் மகிழ்ந்து போனாள்.

அத்தியாயம் 68

விக்ரம் கிளம்பியவுடன்,   இனியா மெதுவாகத் திரும்ப,   மூன்று பேரும் தீப்பார்வை பார்க்க , 

‘அனைவரும் கொலை வெறியில் இருக்கிறார்கள்.   அப்படியே சரண்டராயிடு இனியா, அப்போது தான் சேதாரம் கம்மியாகும்’ என மைண்டு வாய்ஸ் சொல்ல,

“அனு…” என இழுக்க,   

“பேசாத…. அழுத்தமான ஆளு தான் நீ,   ஏவ்வளவு பெரிய விசயத்தை மறைத்திருக்கிறாய்?” என அனு பொரியத் தொடங்கினாள்.

“நான் முதலிலே சொல்லலாம் என்றேன்.   தல தான் கொஞ்ச நாள் போகட்டும்.  முடிவாகி விட்டுச் சொல்லாம் என்றார்…” எனப் பாவமாக முகத்தை வைத்தபடி அனைவரையும் பார்த்தாள்.

பின் வசந்த்,   அனுவிடம், தன் பப்பு வேகாது என்பதை  உணர்ந்தவள்.  ‘ரூட்டை மாத்து’ என வண்டியை பாஸ் பக்கம் திருப்பினாள்.

“பாஸ்,  நீங்களே சொல்லுங்கள்…  தல பேச்சுக்கு மறு பேச்சுப் பேசமுடியுமா?” எனப் பிராதைத் தல ரசிகர் மன்றத் தலைவரிடம் எடுத்துச் சென்றாள்.

உடனே அர்ஜுனும், “பாவம் அனு,   அவள் என்ன பண்ணுவா?” என வக்காலத்து வாங்க,

“ அவள் தல பேச்சு எடுத்து உன்னைக் கவிழ்க்கப் பார்க்கிறாள், லேசில் விடாதே அர்ஜுன்….“ என்றான் வசந்த்.

 “நாலு நாளைக்கு முன்னால் தான், விக்ரமோட பெற்றோருக்கே தெரியும்.  வெள்ளி அன்று தான் இரண்டு பக்கமும் பேசி முடிவாகியது…. உடனே உங்களுக்குத் தானே சொல்லுகிறேன்….”  

இந்தச் செய்தியால் மனம் குளிர்ந்தார்கள்.  சற்று சமாதானமடைந்தார்கள்.

“சரி சாப்பிடலாம். அப்படியே உன் காதல் கதையைச் சொல்…” எனச் சமாதானப் புறாவைப் பறக்க விட்டனர். 

“ஙே..” என விழித்தவள், “மானேஜருக்காக விக்ரமிடம் பேசினேன் இல்லையா? அது அப்படியே தொடர்ந்தது. ஒரு பாயிண்டில் அது  நட்பைத் தாண்டிச் செல்கிறது எனப் புரிந்தது…” எனத் திருக்குறள் மாதிரி இரண்டு வரியில் சொன்னாள்.

 

“பாருடா,  தல கூட சேர்ந்து,  நம்ம இனியாவும் சிக்கனமாகப் பேசுகிறாள்…” என அனு கேலி செய்ய,  

இனியா வெட்கப்பட்டாள்.

இதைப் பார்த்த வசந்த், “இதுக்கு மேல் எந்த அதிர்ச்சியும் கொடுக்காதே,  என் சின்ன இதயம் தாங்காது. ஏற்கனவே உன் முதல் அதிர்ச்சியில் இருந்தே வெளியே வரவில்லை.  அதற்குள் நீ இப்படி வெட்கப்பட்டால்,  ஆஸ்பத்திரி நிச்சயம் தான்…” எனச் சொல்லி முடிப்பதற்குள்,  ஸ்பூன் அவன் மீது விழுந்தது.

“இப்போது தான் ஸார்…  நம்ம செட்டுக்கு அடிக்கடி வந்த காரணம் தெரிகிறது….” என அனு கலாய்க்க,  வசந்த் ஹைஃபை செய்தான்.

“உன்னை வொர்க்சாப்பில் சேர்த்த நண்பன் இவர்தானா?” என அர்ஜுன் அடுத்த பாலைப் போட்டான்.

 

இனியா அசடு வழிந்தபடி,  “நான் என் ஓபாமா சபதத்தை விலாவாரியாக விளக்கினேன்.  நான் ஒன்றும் அறுபதாம் கல்யாணத்திற்கு லவ் பண்ணவில்லை.   ஒழுங்காக வொர்க்சாப்பிற்குப் போ என அனுப்பிவிட்டார்….” என்றாள் பாவமாக.

“ஸாரையும் நீ விட வில்லையா…?” என மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பின் மாற்றி மாற்றி இனியாவை ஓட்டினாலும்,  தங்கள் தோழியின் நல்வாழ்வை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

“சின்ன வேண்டுகோள்,  அறிவிப்பு வரும் வரை வெளியே தெரிய வேண்டாம்.   வதந்திகளைத் தவிர்ப்பதற்காகத் தான்…” எனத் தயங்கியபடி சொல்ல, 

வழக்கம் போல், “தல பேச்சுக்கு மறு பேச்சு ஏது?” என அர்ஜுன் முடித்தான்.

இனியாவின் நிலைமை அவர்களுக்கு நன்றாகப் புரிய,  சின்ன வருத்தம் கூட இல்லாமல் ஒத்துக் கொண்டனர். 

இப்படியாகப் பேசிக்கொண்டே பார்க்கிங் வர, “அர்ஜுன்…” என அனு கத்த,

“ என்னாச்சு?ஏதும் அடிபட்டு விட்டதா?” என அர்ஜுன் பதற,

 “நொன்னாச்சு…. பாரு,  தல எப்படிக் கவனிக்கிறார்?  நீயும் இருக்கிறாயே….” எனக் கோபப்பட,

ஆர்ஜுன் தலையும் , வாலும் புரியாமல் நின்றான்.

“என்ன நடந்தது அனு?  உனக்காக நான் கேட்கிறேன்…” என களத்தில் குதித்தான் வசந்த்.

ரோஜா இறந்த சமயம்… அம்மணி,  இரண்டு நாட்களுக்குப் போன் எடுக்கவில்லை…. ஞாபகமிருக்கிறதா?”

“ஆம்…” என்றான் வசந்த்.

“தல யால் தொடர்பு கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன், அதனால் காலையில் ஒரு முறை போன் செய்து, எல்லோரையும் விசாரித்து,  இனியாவை வீட்டில் பார்க்கப் போகவில்லையா?” என நம்ம ஆளைத் தூண்ட,

 

“சும்மாவே தல சொன்ன நோ அப்பீல்…. என்னைக் கிளம்பச் சொல்லிப் பாடாய்ப்படுத்தி விட்டான். நான் எப்படியோ சமாளிக்க,  மாலை மறுபடியும் போன்,   எப்படி? எப்படி? தெரியாமல் கை பட்டு விட்டதாம்..….”  எனச் சொல்லி மீண்டும் விசாரித்துள்ளார்.

“தல கேட்டார் தெரியுமா? எனக்குத் தர்ம சங்கடமாகி ஆகிவிட்டது. உன்னால் தான் போகவில்லை என என்னோடு ஒரே சண்டை. இப்பத்தானே பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது,  எல்லாம் லவ்ஸ் தான் காரணம்…” என்று தன் கண்டுபிடிப்பை அறிவித்தாள்.

இனியா முகம் சிவக்க,  அர்ஜுன் விழி பிதுங்கி நின்றான். 

“மொத்தத்தில் காதலில் தலயை ஃபாலோ பண்ணு, உருப்படுவாய்…” என வசந்த் தீர்வு வழங்கினான்.

இனியா சிரித்தபடி,  வசந்த் வண்டியில் ஏற, அர்ஜுன்  பின்னால் அனு சென்றான்.

சேனலில் தனியாக இருக்கும் போதெல்லாம்,  இனியாவை ஓட்டித் தள்ளினார்கள்.

நாட்கள் ஓட,  வழக்கம் போல் போனில் காதல் பயிர் வளர்த்தனர்.

பெரியவர்கள் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

விக்ரம் லண்டனில் இருந்து வந்த பின்,  ஒரு சுபயோக சுபதினத்தில் பிரமாண்ட மேடையில் சுற்றமும்,  நட்பும் சூழ, இனியா –விக்ரம்,  நிச்சயம் இனிதே நடந்தது.

 “காரியம் யாவிலும் கை கொடுப்பேன்” எனக் கைப் பிடித்தான் விக்ரம். 

தொடரும்….