மொத்தத்தில் ஒரு விரக்தியான மனநிலையில் நேரத்தைக்  கடத்தினாள்.

கார்த்திகேயன் மிகவும் கவலைப்பட, “ முதல் அதிர்ச்சி,  அதனால் வெளியே வர சிரமப்படுகிறாள்.  எதையோ மனதிலும் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன்…”

“இரண்டு நாட்கள் போகட்டும்,  பிறகு பேசுவோம்…” எனக் கவிதா சமாதானப்படுத்தினார்.

 காவியாவை, “அக்காவைக் கவனித்துக் கொண்டே இரு….” என எச்சரித்தார்.

இதற்கிடையில் இனியாவின் போனும் சார்ஜ்யின்றிப் போனது. காவியாவும் கவனிக்காது போனாள்.

விக்ரம் மறுநாள் அழைக்க,  சுவிட்ச் ஆஃப் என வர, மதியம் வரை முயற்சி செய்து கொண்டே இருந்தான். காவியா நம்பரை வாங்காமல் விட்டதை நினைத்து வருந்தினான்.

“எப்படி அவளைத் தொடர்பு கொள்வது?” எனப் புரியாமல் தவித்தான். 

விக்ரமிற்கு வேலையே ஓடவில்லை, “ எப்படி இருக்கிறாளோ? , என்ன செய்கிறாளோ?” எனக் கவலைப்பட்டான்.

 

வீட்டில்,  அவள் பெற்றோர்கள்  பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிந்த போதும், “எதையாவது யோசிப்பாளே…?” எனத் தவித்துப் போனான்.

பிறகு, வேறு வழியில்லாமல் அர்ஜுனை அழைத்தான். ஷூட்டிங் பற்றிப் பேசுவது போல் பேசி,  ரோஜா விசயத்தையும் கேட்டு அறிந்தான்.

அப்படியே சுற்றி, “இனியாவும்,  ரோஜாவும் நெருக்கமில்லையா?” என வினவினான்.

“ரொம்ப நெருக்கம் என்று சொல்ல முடியாது.  ஆனால் நல்ல நட்பு இருந்தது.  இனியா பயங்கர அப்செட்…” என வருந்தினான்.

“இப்போது,  இனியா ஓ.கே. வா?”  

“தெரியவில்லை ஸார், இரண்டு நாட்களுக்கு லீவ்  சொல்லியிருக்கிறாள்.  போனையும் எடுக்கவில்லை…” எனக் கவலைபட்டான்.

“நீங்கள் போய் பார்க்கவில்லையா?” எனத் தூண்டினான். 

விக்ரம் கேட்ட பிறகு,  அர்ஜூன் மறுப்பானா? “மாலை போகலாம் என உள்ளேன்…” 

“சரி, அதற்குள் பேசுகிறாளா? எனப் பார்ப்போம் இல்லை அர்ஜூனை அழைத்து விசாரிப்போம்…” என முடிவு செய்து வேலையைப் பார்த்தான்.

மீண்டும் இரவு அழைக்க,  சுவிட்ச் ஆஃப் என வர, கோபமானான்.

 

சிறிது நேரம் கழித்து அர்ஜுனை அழைத்தான்.

“ஸார்…” என இழுக்க,

“ஸாரி அர்ஜுன்,  தெரியாமல் கை பட்டுவிட்டது. சரி வைக்கிறேன்…” என்றவாறு, “அப்புறம் இனியாவைப் போய் பார்த்தீர்களா?” 

“இல்லை ஸார் , அனுவிற்கு வேறு வேலை வந்து விட்டது, அதனால் போக முடியவில்லை. அநேகமாக நாளை போவேன்…” 

“ஓ….! சரி…” எனப் போனை வைத்தான்.

இனியா இரன்டு நாட்களுக்குப் பின் சற்றுத் தெளிந்தவள்,  காலையில் போனைத் தேடினாள்.

சார்ஜ் இல்லாததைக் கவனித்து, “சார்ஜ் ஏறிவுடன் விக்ரமிடம் பேசுவோம்…” எனக் குளித்து விட்டு அன்னையிடம் சென்றாள்.

கவிதா தலையைக் கோதியவாறு, “இப்போது ஓ.கே. வாடா…” எனக்  கேட்க,  கண் கலங்கினாள்.

 “வாழ்க்கை பல அதிர்ச்சிகளையும்,   துக்கங்களையும் தரும், நாம்தான் அதைப் பக்குவமாகக் கடந்து வரவேண்டும் குட்டிம்மா, போய்ச் சாப்பிடு,  அப்புறம் பேசலாம்…” 

இனியா சாப்பிட்டு வந்த பின்,  போனைப் பார்க்க,  விக்ரமிடமிருந்து நூறுக்கும் மேற்பட்ட கால்கள் வந்திருந்தன.

“ரொம்பக் கவலைபட்டிருப்பானோ…?” என உடனே அழைக்க,   நாட் ரீச்சபில் மோடில் இருந்தது.

“மீட்டிங்கில் இருப்பான்.  சிறிது நேரம் கழித்து அழைப்போம்…” எனக் கட் செய்தாள்.

மதியம் மீண்டும் முயற்சிக்க,  அதே பதிலே வர, சோர்ந்தாள்.

நண்பர்கள் யாரையும் அழைக்க மனதில்லாமல்,  அப்படியே விட்டத்தைப் பார்த்துக் கிடந்தாள்.

விக்ரமிற்கு மட்டும் முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.  அவன் எடுக்காதது வருத்தத்தைக் கொடுத்தது. மேலும் குழம்பித் தவித்தாள். 

அந்நேரம் கவிதா பேச வர, “ஒரே குழப்பமாக உள்ளதும்மா,  ப்ளீஸ் அப்புறம் பேசலாம்…” எனத் தள்ளிப் போட்டாள்.

“சரி,  கொஞ்ச நேரம் தூங்கு,   மாலை பேசலாம்…” எனச் சொல்லிச் சென்றார்.

அத்தியாயம் 63

மாலை ஆறு மணிவாக்கில் மணி அடிக்க,   கார்த்திகேயன் எனக் கவிதா கதவைத் திறக்க,  விக்ரம் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியில்,  கவிதா சிலையானார். பின் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, “வாங்க… வாங்க…” என்று உள்ளே அழைத்து உட்கார வைத்தார்.

 

“ஸாரி அத்தை,  இனியா போனை எடுக்கவில்லை…” என விக்ரம் தயங்கியபடி சொன்னான்.

விக்ரமைக் கூர்ந்து நோக்கிய கவிதா,  அவன் கலைந்த முடியும், சோர்ந்த முகமும்,  கசங்கிய உடையும் பார்த்து,  அவன் கவலையையும் களைப்பையும் புரிந்து கொண்டார்.

 “ஒரு நிமிடம்…” என்றவாறு, “ இனியா…” எனக் குரல் கொடுக்க,

இனியா உள்ளே இருந்தவாறு, “அப்புறம் பேசலாம் அம்மா…”

“முதலில் வெளியே வா…” என அடுக்களைக்குச் சென்றார்.

“என்ன அம்மா…?” என அலுத்தபடி வெளியே வந்தவள்,  அப்படியே ஃப்ரீஷானாள்.

அதற்குள் கவிதா காபி எடுத்து வந்து விக்ரமிடம் கொடுத்து  விட்டு, “ அம்மா கடை வரை போய் வருகிறேன்…” என வெளியே நடந்தார்.

அம்மா பின் சென்று கதவைப் பூட்டிவிட்டு வர,  அதற்குள் காபியைக் குடித்திருந்தான்.

அவன் அருகில் வந்து, “ என்னாச்சு விக்ரம்?” எனப் படபடத்தாள்.

“உன் தலை….  வருகிற கோபத்திற்கு நன்றாக வாங்கப் போகிறாய்…” எனத் திட்டினான்.

இனியா என்னவென்று புரியாமல் பார்க்க,

“ஏன் இரண்டு நாளாகப் போன் பேசவில்லை?”  எனக் கோபமாகக் கேட்க,

உடனே, “ரோஜா அக்கா,  ரோஜா..…” எனத் தேம்ப,

அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“ஏன் விக்ரம்,  இப்படிச் செய்தார்கள்? எவ்வளவு கனவு?  எவ்வளவு ஆசை தெரியுமா? எத்தனை திட்டமிடல் தெரியுமா?  இப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு….” என மீண்டும் அழ,

 

“ஜில்லு…” எனத் தலை கோதினான்.

அவனை நிமிர்ந்து பார்த்தபடி, “ஏன் விக்ரம்?  இப்படி ஒரு முடிவு, தாங்க முடியவில்லை…” எனக் கண்கலங்கினாள்.

“ரோஜா எவ்வளவு தைரியமானவர்கள் தெரியுமா…?  காதலித்ததால் இப்படி ஒரு முடிவா ?  காதல் ஒரு ஆளைக் கோழையாக்குமா? புரியவில்லை,  காதல் தப்பா விக்ரம்?”  என ஏதேதோ புலம்பினாள்.

திடீரென்று, “நம்ம காதல் சரியாக வருமா விக்ரம்?  நான் உங்களை மாதிரி,   பார்த்துப் பார்த்துச் செய்ய மாட்டேனே…,  நீங்கள் என் கூட சந்தோஷமாக இருப்பீங்களா?” என ஏதேதோ பேசினாள்.

“அடி வாங்கப் போகிறாய்…. எது கூட எதை இனணக்கிறாய்?” எனக் கோபப்பட்டான்.

“இல்லை விக்ரம்,  உங்கள் வாழ்க்கை முறை வேறு, என்னோடது வேறு,  சரியா வருமா? இல்லை பின்னாடி வருத்தம் வருமா? இது சரியா? தவறா?  பயமாக இருக்கிறது…” என அவள் பாட்டிற்குப் உளற, 

அவள் இதழணைத்தான். 

சற்று நேரம் அமைதியே நிலவ,

மீண்டும் இனியா பேச முயல, 

“உஷ்…” என இதழின் மீது விரல் வைத்து, “நான் இல்லாமல் வேறு வாழ்க்கையை உன்னால் நினைத்துப் பார்க்க முடியுமா?” 

“இல்லை” எனத் தலையசைக்க, 

“தெரிகிறது இல்லையா? அப்புறம் ஏன் இப்படிப் பேசுகிறாய், யோசிக்கிறாய்…?” எனக் கோபப்பட்டான். பின் அவள் கன்னத்தைக் கையில் ஏந்தி, அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

 

“குழப்பமாக இருக்கிறது விக்ரம்… ஏதேதோ பயம் வருகிறது…” என மார்பில் சாய்ந்தாள்.

“இப்படி ஏதாவது யோசிப்பாய்…  உன்னை வருத்திக் கொள்வாய்  என நினைத்துத்தான்,   அதை வளர விடக்கூடாது என அரக்க பறக்க ஓடி வந்தேன்..”  

“ஆமாம்… லண்டனில் இருந்து  எப்போது வந்தீர்கள்?” எனச் சாவகாசமாக இனியா கேட்க, 

“எட்டு மணி நேரம் பயணம் செய்து,  நேராக விமான நிலையத்தில் இருந்து இங்கு தான் வருகிறேன்…” எனக் குண்டைத் தூக்கிப் போட்டான்.

இனியா ஆவென வாய் பிளந்து பார்க்க,  

“இரண்டு நாளாகப் போன் எடுக்காமல்,   உனக்கு என்னாச்சோ, ஏதாச்சோ எனத் தவிக்க விட்டு விட்டு,  இப்போது கதை கேளு…” எனப் பாய்ந்தான்.

“ஓ…! ஸாரி விக்ரம்…” என எம்பி முத்தம் வைத்தாள்.

முத்தம் அவன் கோபத்தைக் குளிர்விக்க, “பயங்கிரமான ஆளு நீ., , என்னை எப்படித் தாஜா பண்ண வேண்டும் எனக் கற்று வைத்திருக்கிறாய்..” எனச் சிரித்தான்.

“ஸாரி தல…  எதுவுமே ஓடவில்லை.  கடைசியாகப் பார்த்த  ரோஜாவின் முகமே கண்ணில் வருகிறது.   நான் இன்னும் கொஞ்சம் வலியுறுத்திருக்க இருக்க வேண்டுமோ? அன்று பேசியதோடு விட்டது தப்போ….? என ஒரே உறுத்தலாக உள்ளது.”

“ஜில்லு,,,” என இடைமறிக்க,  அதைக் கவனிக்காது தொடர்ந்தாள், 

“ரொம்ப குற்றவுணர்ச்சியாக இருக்கு விக்ரம்,  மனச்சோர்வு என்றார்களே…  எப்படியாவது டாக்டரிடம் கூட்டிப் போய் இருக்க வேண்டுமோ?” என வருந்தினாள்.

விக்ரம் அவளை எழுப்பி எதிரே அமர வைத்து,  கைகளைப் பிடித்துக்கொண்டு, “பிடிவாதமாகக் கூட்டிச் செல்வதற்கு ரோஜா சின்னக் குழந்தை இல்லை இனியா….

 

மேலும் நீ,  அவர்களைப் பற்றி வருத்தப்பட்டவுடன்,   நமது சேனலில் இருக்கும் கவுன்சிலிங் டீமைத் தொடர்பு கொள்ளச் செய்தேன். அவர்களும் பேசிப் பார்த்தார்கள்…. ரோஜா ஒத்துழைக்கவில்லை…

நான் மீண்டும் அவர்களைச் சிறிய இடைவேளை விட்டு அணுகச் சொன்னேன். 

 அப்பொழுதும், நான் பார்த்துக் கொள்வேன்.  

கவுன்சிலிங் சென்றால் எனக்கு அசிங்கம்…  என் இமேஜுக்குப் பங்கம் வந்துவிடும்…  வாய்ப்புகள் குறைந்து விடும் என மறுத்து விட்டார்.

நீ பேசி,   கண்டிப்பாக வழிக்குக் கொண்டு வந்திருக்க முடியாது  இனியா.  கவுன்சிலிங் உறுப்பினர்களாலே முடியவில்லை என்றால்,  நீயெல்லாம் எம்மாத்திரம்?  இது சுலபமான விசயமில்லை. அதனால் தேவையில்லாத குற்றவுணர்வை விட்டு விடு,  நம்மால் முடிந்த வரை முயன்று விட்டோம்.   அதற்குப் பிறகு, அவர்களுடைய விதி, அவர்கள் முடிவு,  புரிகிறதா…?” என அவளைத் தெளிவுபடுத்த முயன்றான்.

“அப்புறம், இரண்டு நாட்களாக நீ செய்திகளைத்  தொடரவில்லை என நினைக்கிறேன். ‌ பரத் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோஜாவின் பெற்றோர், இது கொலையாக இருக்குமோ? எனச் சந்தேகப்படுகின்றனர். ‌ ஆகையால் போலீஸ் அந்தக் கோணத்திலும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு முந்தைய நாள்,  படப்பிடிப்பில் ரொம்ப நேரம் ரோஜா போனில் பேசியுள்ளார். ‌ அதைக் கவனித்தவர்கள் ஏதோ மிரட்டல் மாதிரி இருந்தது…  சண்டை நடந்தது… என்றும் கூறுகிறார்கள்.

விசாரணைக்குப் பிறகு தான், முழு உண்மை தெரிய வரும். அதனால் தேவையில்லாததை மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே…” என விளக்கினான்.

சற்று மனம் தெளிந்தவள், “ரோஜா அக்கா கவுன்சிலிங்கிற்கு ஒத்துழைப்பு. கொடுக்காததற்கு,  புரிதல் இன்மையும்,   கவுன்சிலிங் பற்றிய தவறான பிம்பம் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

அதனால் ஒரு சின்ன வேண்டுகோள்,  நம் சேனலில் பணிபுரிபவர்களுக்குக் கவுன்சிலிங் பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும். இன்னும் கவுன்சிலிங் டீமை விரிவுபடுத்தி, தீவிரமாகச் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் விக்ரம்….”

“நல்ல விசயம்டா ஜில்லு,  நிச்சயமாகச் செய்யலாம்..” என உறுதியளித்தான்.

அதற்குள் மணி அடிக்க, “அம்மா வந்து விட்டார்கள் என நினைக்கிறேன்…” எனக் கதவைத் திறக்க செல்ல முயல,  

அவளை இறுக்கிணைத்து விடுவித்தான் விக்ரம்.

தொடரும்….