காதல் வைபோகமே….  நாள்-17

அத்தியாயம் 55

மறு நாள் காலை இனியாவை அழைத்து, “ லன்ச் சேர்ந்து சாப்பிடலாம் , வா…” 

“வீட்டில் என்னவென்று சொல்வது…?” என இனியா இழுக்க, 

“என்னுடைய ட்ரீட் எனச் சொல்லி வா” என்றான் உரிமையாக,

 “யார் யார் வருகிறார்கள்?” என விவரம் கேட்பார்கள், “என்ன சொல்வது? வேறு ஏதாவது காரணம் சொல்லவா?” என இழுத்தாள்.

“நோ… , இதையே சொல்,  விவரம் கேட்டால்,   போனால்தான் தெரியும்  எனச் சொல்லி விடு,  எந்தப் பொய்யும் வேண்டாம், உண்மையே சொல்” என ஆணித்தரமாகச் சொன்னான்.

“நாம் மட்டுமா?”

“இல்லை,  நேரில் வா, விவரம் கூறுகிறேன்”

“சரி” என அம்மாவிடம் விவரத்தைத் தெரிவித்து விட்டு, அவன் சொன்ன பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாள். 

அங்கு அவன் ஒரு பெரியவருடன் இருந்தான். அவரைப் பார்த்து  வணங்கி,  ஒரு புன்னகையோடு விக்ரம் அருகில் அமர்ந்தாள்.

அவரும், “ஹலோ,   நான்தான் ஒரிஜினல் விக்ரமன்…” எனக் கை குலுக்க,

சிநேக பாவத்தோடு, “இனியா…” என அறிமுகப்படுத்திக் கொண்டாள். 

விக்ரம் பேச வர,  அவனை இடை மறித்து, “நான் தான் இவனுடைய தாத்தா…” 

இனியா திகைத்து,  விக்ரமைப் பார்க்க,  விக்ரம் கண்ணடித்துச் சிரித்தான்.

“நான் இங்கு தான் இருக்கேன் ராஜா…” எனத் தாத்தா சிரிக்க, அனைவரும் சிரித்தனர்.

பின் பேசியபடி சாப்பிடத் தொடங்கினர்.  தாத்தா தன்மையாகவும் அன்பாகவும் பேச,

இனியா தயக்கம் கலைந்து,  படபடவென அவளுடைய படிப்பு, ஆசை (ஒபாமா கனவு),  குடும்ப நிலவரம் பற்றிக் கூறினாள்.

“நானும் பெரிய ஆளுமை தான் மா , எக்ஸ் மந்திரி,  தொழிலதிபர் , என்னையும் பேட்டிக் காணலாம்….” எனக் கேலி செய்ய,

இனியா வழக்கம் போல்,  தன் துடுக்குத்தனத்தோடு, “தாத்தா ,  இன்று,  இப்போது முடிவு செய்து விட்டேன்.   நான் தனிப்பேட்டி ஆரம்பிக்கும் போது,  நீங்கள் தான் என் முதல் பேட்டியாளர்…” எனச் சொல்ல,

விக்ரம் கடகடவென சிரித்தபடி, “நான் தான் சேனல் ஹெட்,   நான் ஓ.கே. பண்ண வேண்டாமா?” 

 “ஏன் தாத்தா ஹெட்டையே மாற்றி விடலாமில்லையா?”  என இனியா வம்பிழுக்க,

தாத்தா பேசு முன், “வாய்ப்பில்லை ராசா, வாய்ப்பில்லை….  இது என் சொந்த கம்பெனி…” என விக்ரம் உள்ளே புக,

இனியா முகம் வாட,

“விடும்மா,   நாம் ஒரு சேனலே ஆரம்பித்துக் கொள்ளலாம்…” என்றார் தாத்தா.

விக்ரமைப் பார்த்து,  நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள். இப்படியாகக் கதை பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.

 

“ரொம்ப சந்தோஷம்மா,  விக்ரம் சந்தோஷம் தான், எங்கள் சந்தோஷம்.   நீங்க இரண்டு பேரும் என்றும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்….” என வாழ்த்த,  

இனியாவும்,   விக்ரமும்,   ஒரே நேரத்தில், “நன்றி  தாத்தா….” என்றனர்.

அவர் சிரித்தபடி, “சரி,  நான் கிளம்புகிறேன்….” என்று எழ,

“சரி…” என்றான் விக்ரம்.

“நீங்கள் தாத்தாவை டிராப் செய்யப் போகவில்லையா?”

 உடனே தாத்தா,  “வரும் போது சேர்ந்து தான் வந்தோம் , இப்போது காரியம் முடிந்ததும் கழட்டி விடுகிறான் பாரும்மா…”  எனச் செல்லமாகக் கோபித்துக் கொள்ள,  

“என்ன விக்ரம்,  இப்படிச் செய்கிறீர்கள்,  முதலில் நீங்கள் கூட போங்கள்….” எனக் கட்டளையிட்டாள்.

“ நீ வேற இனியா…   அவர் தனியாக உலகத்தையே சுற்றுவார்….”

அவர் தனியாக நிலாவிற்கே போகட்டுமே…  நீங்கள் தானே உங்கள் விசயமாக அழைத்து வந்தீர்கள், அப்போ நீங்கள் தான் போய் விட வேண்டும்….” என அழுத்திச் சொன்னாள்.

அவன் தாத்தாவைப் பெருமையோடு பார்க்க,

அவர் சிரித்தபடி,  “நான் டிரைவ் செய்யவில்லை,   டிரைவர் வந்திருப்பார். பயப்படாதேம்மா…” எனக் கிளம்பினார்.

பின் இருவரும் கிளம்ப,  அமைதியாக வந்த இனியா சற்று தூரம் சென்றவுடன், “தேங்க்ஸ் விக்ரம்…” எனத் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவன் மௌனமாகப் பார்த்தபடியே, மென்மையாகச் சிரித்தான்.

 “எப்படி என் மனது புரிந்தது?”  என ஆச்சரியமாகக் கேட்க,

 கண்களில் காதல் வழிய, “நீ என் உயிர். என் வாழ்க்கை, உன் கண்கள் பேசும் பாஷை புரியாது என நினைக்கிறாயா ஜில்லு…?” எனப் பதில் கேள்வி கேட்டான்.

அவனுடைய பதிலில்,  பார்வையில் உருகி இருந்த இனியா, தன்னை அறியாது அவனை நெருங்கிக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

கார் சற்றுத் தடுமாற, பின் ஒரங்கட்டி நிறுத்தப்பட்டது. இந்தத் தடுமாற்றத்தில் இனியா மேலும் அவனை நெருங்கி அணைத்திருக்க,  சற்று நேரம் காரில் இருவரும் அசைவின்றி அமர்ந்திருந்தனர்.

முதலில் சுய உணர்வு பெற்ற விக்ரம், “இனியா…” என அழைக்க,

 

“ம்ம்…” எனக் கண்னைத் திறக்காமலே பதில் அளிக்க,  அந்த அழகில் மயங்கி, அவள் கண்களில் முத்தமிட்டான்.

உணர்வு பெற்ற இனியா,  வெட்கப் பார்வையோடு, சற்று நகர்ந்து அமர்ந்தாள்.

நிலைமையைச் சகஜமாக்கும் பொருட்டு, “மிஸ் பண்ணிட்டியே விக்ரம்….” எனத் தலை கோதினான்.

 இனியா புரியாமல் பார்க்க, அவன் உதட்டை குவித்து,  அவளின் இதழைப் பார்க்க,

 

 ‘ உதை‘ எனக் கோபப் பார்வைப் பார்க்க,

உடனே சிரித்த விக்ரம், “எப்படி ஜில்லு?  சிறிது நேரத்திற்கு முன் அமைதியான ஆழ்கடலைப் போல் பார்த்தாய்,  இப்போதோ மின்னல் வெட்டுகிறதே இன்னும் புயல், மழை, இடியெல்லாம் வருமா?”  எனக்  கேட்க, 

“விக்ரம்…” எனச் சிணுங்கியபடி, அவன் தோளில் அடிக்க,

அப்படியே அவள் கையைப் பிடித்து இழுத்தவன்,  அப்போது மிஸ் செய்ததைச் செவ்வனே பெற்று கொண்டான்.

“ஜில்லு,   நீ பார்ப்பதை வைத்தே,  நீ எந்த மனநிலையில் இருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்வேன்,  அப்படி இருக்கும் போது,  நேற்று உன் கண்களில் இருந்த கவலையையும்  பதட்டத்தையும் கவனிக்காமலா இருந்திருப்பேன்?” எனச் சிரித்தான்.

 

“ஓ….!  நான் அப்படியெல்லாம் கவனித்ததில்லை…” எனச் சற்று வருத்ததுடன் சொல்ல,

“ஜில்லு,  இதில் நீ கவலைப்பட ஒன்றும் இல்லை,  நீ பயங்கர எக்ஸ்பிரஸிவ், அதனால் என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. நான் அப்படி இல்லை…. 

மேலும் வியாபார உலகில் நம்மை யாரும் படித்து விடக் கூடாது என்பதால்,  மிகவும் கவனமாக இருப்பேன்,  அதனால் உனக்குக் கொஞ்சம் கஷ்டம் தான்….” என்று சிரித்தான். பின் காதலாகப் பார்த்தபடி, “மேலும் உன் கண்கள் இப்போது என்ன பேசுது தெரியுமா?” எனக் கொஞ்ச,

“என்ன?”

“அப்படியே என்னை உன்னோட கூட்டிட்டுப் போ எனச் சொல்லுது…” எனக் கிறங்கினான். 

“ம்ம்….”  என அவளும் ஏங்கிப் பார்க்க,

 

“ ஜில்லு…” 

“ஐ ஆம் டெரிப்ளி மிஸ்ஸிங் யூ விக்ரம்….” என அவன் கைகளோடு தன் கைகளை இணைத்துக் கொண்டாள்.

“இப்படிப் பேசினால் எப்படி ஜில்லு?எல்லாம் கொஞ்ச நாள்தான்….” எனக் கைகளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

அத்தியாயம் 56

நேரமானதை உணர்ந்த விக்ரம், “ஜில்லு,  நான் சொல்வதைக் கவனி,  நீ வீட்டுக்குப் போனதும், அம்மா அப்பாவிடம் இன்று தாத்தாவைப் பார்த்ததையும்,  நம்மைப் பற்றியும் பேசி விடு.”

அவள் குழப்பத்தோடு பார்க்க, “நம் காதல் என்றும் சந்தோஷத்தைத் தான் தர வேண்டும், குற்ற உணர்வை இல்லை, புரியுதா?”

“நீ என்னுடைய சூழ்நிலை,  இப்போதைய நிலைமையை எடுத்துச் சொல். மூன்று, நான்கு மாதத்தில் என் பெற்றோருடன் வந்து பேசுகிறேன் என்று சொல்.”

இனியா தலையாட்ட,

 “அதற்கு முன் அவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது பிளான் செய்து வந்து பார்க்கிறேன்” என உறுதி அளித்தான்.

“லவ் யூ விக்ரம்…” எனக் காதல் பொங்கச் சொன்னாள்.

அவன் ஆச்சரியத்துடன், “முதல் தடவை ஜில்லு…” 

“ எனக்காக,  நமக்காக, நம் காதலுக்காக…. , இவ்வளவு யோசித்துச் செயல்படும் இந்த தருணத்தை, விடச் சிறந்த தருணம் வேறில்லை…” என்றவாறு நெகிழ்ந்து மேலும் இறுக்கிக்  கொண்டாள்.

“ஜில்லு , ஜில்லு….” என்பதைத் தவிர அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அப்படியே ஒரு ஏகாந்த நிலையில் சஞ்சரித்தனர். பின் மனசேயில்லாமல் கிளம்பினர்.

 வீடு திரும்பிய இனியா,  காவியா இல்லாதைக் கவனித்து, அடுப்படியில் இருந்த அம்மாவிடம்,  “பத்து நிமிடத்தில் ரெஃப்ரெஷ் ஆகி விட்டு வருகிறேன்.  கொஞ்சம் பேச வேண்டும் அம்மா. அப்பாவோடு ஹாலில் இருங்கள்…” என்றவாறு உள்ளே சென்றாள்.

 மனதிற்குள், எப்படிச் சொல்வது? என ஒத்திகை பார்த்த பின்  ஹாலுக்கு வந்தாள்.

 அம்மாவின் காலடியில் அமர்ந்து, கையைப் பிடித்தபடி, அப்பாவை நோக்க, 

“அப்பா… , எனக்கு விக்ரமைப் பிடித்திருக்கிறது.  நானும் விக்ரமும் விரும்புகிறோம்…” என ஒருவாறு தன்னைத் தைரியபடுத்திக் கொண்டு சொல்லி விட்டாள்.

இருவரும் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டு, ‘மேலே சொல்…’ என்பதைப் போல் அவளையே பார்த்தனர்.

“முதலில் இத்தனை நாள் சொல்லாததற்கு, என்னை மன்னித்து விடுங்கள்,  ஸாரிம்மா… ஸாரிப்பா…”

“நீங்கள் ஏற்கனவே கொஞ்சம் கெஸ் செய்து இருப்பீர்கள் எனத் தெரியும். எங்களுக்குள் ஒரு தெளிவு வந்தபின் பேசலாம் என்பதால் தான் இந்தக் கால தாமதம்…” என முடித்தாள்.